அத்வைதம்

சங்கரரின் குருவாகிய கௌடபாதர்

அத்வைதம் (அ + துவைதம், அத்துவிதம்) (IAST Advaita Vedānta; சமஸ்கிருதம்: अद्वैत वेदान्त ) இரண்டற்ற நிலை என்று பொருள் தருகிறது. இது இந்து தத்துவத்தில் இறைவனின் தன்மை பற்றிய ஒரு கொள்கை ஆகும். சீவன் (ஜீவாத்மா) என்பதும் இறைவன் (பிரம்மம்|பரமாத்மா) என்பதும் ஒன்றுதான்; வேறல்ல என்றும் சகல உயிரினங்களுக்குள்ளும் பொதுவாக ஆத்மாவாக விளங்குகின்றது என்றும் இத்தத்துவம் கூறுகிறது.[1]

பொ.ஊ. 788-820-ம் காலத்தே வாழ்ந்த ஆதிசங்கரர் (இவரது காலம் பொ.ஊ.மு. மூன்றாம் நூற்றாண்டு எனவும் ஒரு வாதம் இருக்கின்றது) முதன்முதலில் அத்வைத தத்துவத்தைத் தொகுத்து எழுதி வைத்தார். இவர் யாருக்கும் உபதேசிக்கவோ பிரசாரம் செய்யவோ இல்லை.[2] இவர் கேரளத்திலுள்ள (அன்றைய சேர நாடு) காலடி எனுமிடத்தில் சிவகுரு - ஆரியாம்பாள் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். சங்கரரின் குருவின் பரமகுருவாகிய கௌடபாதர் எழுதிய மாண்டூக்ய காரிகை பிரம்மசூத்திரத்தினை விளக்க எழுந்தது. இதில் கூறப்பட்ட விளக்கங்கள் போதிய தெளிவுடன் காணப்படாமையால் அதனை மேலும் இலகுபடுத்தி விளக்கும் பொருட்டு எழுந்ததுவே சங்கரரின் அத்வைத சிந்தனையாகும்.

அத்துவிதத்தின் நான்கு அடிப்படைக்கொள்கைகள்

1. என்றும் நிலைத்திருக்கும் பொருள் ஒன்றே ஒன்றுதான். அதுதான் ‘ஸத்’ என்றும், (பரப்-)பிரும்மம் அல்லது பரமாத்மா என்றும் அழைக்கப்படுகிறது. அதைத்தவிர வேறு எதுவும் மெய்ப்பொருளல்ல.

2. பிரும்மம் என்பது பெயர் உருவம் ஆகிய எந்த குணங்களும் அற்றது. அதனால் அதை நிர்க்குணப் பிரும்மம் என்று சொல்லி, நாம் மனதால் நினைக்கக்கூடிய குணங்களுடன் சேர்ந்த கடவுள் என்ற பரம்பொருளை ஸகுணப்-பிரும்மம் என்றும் வேறுபடுத்தவேண்டும்.

3. அனைத்துயிர்களுக்கும் உயிருக்குயிராகவும் அறிவுக்கறிவாகவும் இருக்கும் ஜீவாத்மா, வெறும் தோற்றமான அகில உலகிற்கும் அடிப்படை மெய்ப்பொருளாக இருக்கும் பிரம்மம், ஆகிய இரண்டும் இரண்டல்ல, ஒன்றே.

4. உபநிடதங்கள் மெய்ப்பொருளை குணங்களுள்ளதாக விவரிக்கும்போது அதை (சகுனப் பிரம்மம்) ( உருவத்துடன் கூடிய இறைவன்) இடைநிலை விளக்கங்களாகவும், குணங்களற்றதாக விவரிக்கும்போது அதை (நிர்குணப் பிரம்மம்) [உருவம் அற்ற இறைவன்) கடைநிலை விளக்கமாகவும் கொள்ளவேண்டும்.

இதனையே சுருக்கமாகச் சொல்வதாயின்...

1. பிரம்மத்தின் இரண்டற்ற நிலை.
2. பிரம்மத்திலிருந்து ஆன்மா வேறுபடாத நிலை.
3. உலகத்தின் உண்மையற்ற நிலை.

எனக் கூறலாம்.

ஆன்மா குறித்த ஏனைய தத்துவங்கள்

சமணம், பௌத்தம், துவைதம், விசிஷ்டாத்வைதம் முதலியன ஆன்மா குறித்த ஏனைய தத்துவங்களாகும். இவற்றை முறையே மகாவீரர் புத்தர் மத்வர் இராமானுஜர் ஆகியோர் பிரதானமாக முன்மொழிந்தனர். மத்வரின் துவைதமும் புத்தரின் பௌத்தமும் இணைந்த கருத்துக்களை அத்வைதம் பறைசாற்றுகிறது. அத்வைதத்திற்கு இன்னும் தெளிவினைக் கொடுக்க விசிஷ்டாத்வைதம் இராமானுஜரால் முன்மொழியப்பட்டது.

துவைதம் விசிஷ்டாத்வைதம் மற்றும் அத்வைதம் இந்து சமய தத்துவங்களாக இன்று அடையாளங் காணப்படுகின்றன. ஆன்மீகம் என்பது அதன் உண்மைப் பொருளில் ஆன்மாவினை ஏற்றுக் கொள்ளும் இவையனைத்தையும் உள்ளடக்கியதாகும்.

மேற்கோள்கள்

  1. http://www.advaita-vedanta.org/avhp/ad_faq.html#1 Advaita Vedanta
  2. இந்து மதம் 1000 உண்மைகள் - சிங்காரவேலனார்

வெளி இணைப்புகள்