அலையாத்தி (வெண் கண்டல்)
அலையாத்தி | |
---|---|
இந்திய சதுப்புநிலம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | ஆஸ்டிரிட்ஸ்
|
வரிசை: | லாமியேல்ஸ்
|
குடும்பம்: | அகான்தேசி
|
பேரினம்: | அவிஸின்னியா
|
இனம்: | அபிஸினாலிஸ்
|
இருசொற் பெயரீடு | |
அவிஸின்னியா அபிஸினாலிஸ் காரல் லின்னேயஸ் |
அலையாத்தி அல்லது வெண் கண்டல்(தாவரவியல் பெயர்:Avicennia officinalis) என்பது அகான்தேசி தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. கி.பி. 980 லிருந்து 1037 வரை வாழ்ந்த அரேபியா மருத்துவரான அவிசஸன்னா என்பவரது பெயரை நினைவூட்டுவதே அவிஸின்னியா என்ற முதற்பெயர். மருத்துவப் பலன்களைக் கொண்டது என்பதைக் குறிப்பதே அபிஸினாலிஸ் என்ற இணைப்பெயர். வட இந்தியாவில் இதனை பினா எனக் கூறுவர். கடல் அலைகளின் வேகத்தை ஆற்றுவதன் காரணமாக, இதற்கு அலையாத்தி என்று பெயர் ஏற்பட்டுள்ளது.[1]
பரவல்
இந்த வகை மரங்கள் பங்களாதேஷ், கம்போடியா, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், நியூ ஜெனிவா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. தமிழ்நாட்டில் பிச்சாவரம் மற்றும் பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள கடற்கரைப் பகுதிகளில் அடர்ந்த பெரும் காடுகளாக உருவாகியுள்ளன.
வளரியல்பு
ஆறுகளின் கழிமுகப் பகுதிகளிலும் சேறுபடிந்த சதுப்பு நிலக் கடற்கரைப் பகுதிகளிலும், கடலை ஒட்டிய நிலையில் காணப்படுகிறது. மரங்கள் நெருக்கமாக உள்ள இடங்களில் ஓங்கி உயர்ந்து 12-18 மீட்டர் உயரம் வளரக்கூடியது. நெருக்கமில்லா இடங்களில் சிறிது வளைந்து படர்ந்து இருக்கும்.[2]
தண்டு
சாம்பல் நிறச்சாயமுள்ள வெண்மை நிறப்பட்டையுடன் 30-45 செ. மீட்டர் கனத்துடன் அடிமரம் இருக்கும். பிச்சாவரத்தில் 2.5 மீட்டர் சுற்றளவுள்ள மரங்கள் உள்ளன. அடிப்பகுதியில் துளிர்க்காது; மடிந்து கட்டைகளாகவே இருக்கும்.
வேர்
மரத்தை ஒட்டி, சுவாச வேர்கள் தரையிலிருந்து 45-60 செ. மீட்டர் உயரத்தில் செங்குத்தாக வளர்ந்து அடர்ந்திருக்கும்.
இலை
இலைகள் 2 செ.மீட்டர், நீளக் காம்புகளில் 4 முதல் 9 செ.மீட்டர் நீளமும், 4 முதல் 6 செ.மீட்டர் அகலமும் உடைய கோள வடிவில் இருக்கும். துளிர் இலைகளில் மேற்புறம் பளபளப்பாக இருக்கும். முற்றிய நிலையில் பளபளப்பு இல்லாக் கரும்பச்சை நிறத்தைப் பெற்றிருக்கும். கீழ்புறம் வெள்ளையாக, வெள்ளைப்பொடி தூவியது போன்று காணப்படும். உப்பு படிந்திருக்கும். நீரில் இருந்து எடுத்த சோடியம் மற்றும் பொட்டாசியம் உப்புக்களை இலைகளின் மூலம் கசிவாக வெளியேற்றிவிடும். தேவைக்கு அதிகமாக உப்பு நீரை உறிஞ்சி இலைகளின் மூலம் கசிவாக வெளியேற்றிவிடும். தேவைக்கு அதிகமாக உப்பு நீரை உறிஞ்சி இலைகளின் மூலம் உப்பை வெளியேற்றுவதால்தான் இம்மரம் உப்பு நீரில் வளர முடிகிறது.
மலர்கள்
மரம் முளைத்தெழுந்த 1 முதல் 2 வருடங்களிலேயே பூக்கத் துவங்கிவிடும். கிளைகளின் நுனியில் மஞ்சள் துவரையைப் போன்ற மொட்டுக்களாகவும், ஒரு மஞ்சரியில் ஆறு மொட்டுகளாகவும் உருவாகும். பின்னர் மஞ்சள் நிறத்தில் சிறு பூக்களாக ஜூலையில் மலரும்.
நெற்று மற்றும் விதை
மலர்கள் மலர்ந்தபின் 2 x 1.5 செ. மீட்டர் அளவில் நீண்ட குட்டை வடிவ தட்டையான நெற்று உருவாகும். ஒவ்வொரு நெற்றிலும் ஒரு விதை இருக்கும். மரத்திலேயே இந்த விதை முளைத்திடும். அந்நிலையில் மழைக்காலத்தில் மரத்தினடியில் நீர்மட்டம் உயர்ந்ததும், நெற்றுக்கள் உதிர்ந்து கடல் நீரிலே மிதந்து சென்று, நீர் வடியும் பொழுது செடிகொடிகள் மற்றும் மண் திட்டுகள் உள்ள பகுதியில் முளைத்திடும். முளைக்கும் பொழுதே செங்குத்தாக வளரும். சுவாச வேர்களை வளர்த்துக் கொண்டு விடும். பின் அங்கேயே துரிதமாக வளர்ந்து நிலைத்துவிடும். உள்நாட்டுப் பகுதியை விட கடலை நோக்கியே இதன் பரவுதல் உள்ளது.
மேற்கோள்கள்
- ↑ Linnaeus, Carl (1775-11-05). "Avicennia officinalis L." Linnean herbarium. Stockholm: Department of Phanerogamic Botany, Swedish Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 2009-03-31.
- ↑ "Index Nominum Genericorum -- Avicennia". International Code of Botanical Nomenclature. Washington, D.C.: National Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 2009-03-31.
உசாத்துணைகள்
1. Mani P.S & Kamala Nagarajan (1994). Valamtharum marangal - Part - 1, 2nd Ed.,Chennai, New century book house pvt ltd.
வகைபிரித்தல் குறிப்புகள்
- Linnaei, Caroli; Salvii, Laurentii (1753). "Tetrandria Monogynia". Species plantarum: exhibentes plantas rite cognitas, ad genera relatas, cum differentiis specificis, nominibus trivialibus, synonymis selectis, locis natalibus, secundum systema sexuale digestas. Vol. Tomus I. Stockholm: Impensis Laurentii Salvii. p. 110. பார்க்கப்பட்ட நாள் 2009-03-31.
- Linnaeus, Carl (1775-11-05). "Avicennia officinalis L." Linnean herbarium. Stockholm: Department of Phanerogamic Botany, Swedish Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 2009-03-31.
- "Index Nominum Genericorum -- Avicennia". International Code of Botanical Nomenclature. Washington, D.C.: Smithsonian Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 2009-03-31.
வெளி இணைப்புகள்
- பொதுவகத்தில் Avicennia marina subsp. marina தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.