ஆகஸ்ட் சிலெய்ச்சர்

ஆகஸ்ட் சிலெய்ச்சர்

ஆகஸ்ட் சிலெய்ச்சர் (பெப்ரவரி 19, 1821 - டிசம்பர் 6, 1868) என்பார் ஒரு செருமானிய மொழியியலாளர் ஆவார். இந்திய-ஐரோப்பிய மொழிகளின் ஒப்பியல் இலக்கணத் தொகுப்பு (A Compendium of the Comparative Grammar of the Indo-European Languages) இவர் எழுதிய முக்கியமான நூலாகும். இந் நூலில் இவர் முந்து இந்திய-ஐரோப்பிய மொழியை மீட்டுருவாக்கம் செய்ய முயன்றார். மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட சொற்களையும், அதிலிருந்து அறயப்படத்தக்க இந்திய-ஐரோப்பியச் சமூகம் தொடர்பான அம்சங்களையும் எடுத்துக்காட்டி விளக்குவதற்காக சிலெய்ச்சரின் கதை எனப்படும் ஒரு சிறிய கதையையும் அவர் உருவாக்கினார்.

வாழ்க்கை

ஆகஸ்ட் சிலெய்ச்சர் மெய்னிங்கன் என்னும் இடத்தில் பிறந்தார். காச நோயால் பீடிக்கப்பட்டுத் தனது 47 ஆவது வயதிலேயே ஜெனா என்னுமிடத்தில் காலமானார்.

பணிகள்

ஆகஸ்ட் சிலெய்ச்சர் முதலில் இறையியலையும், இந்திய-ஐரோப்பிய மொழிகளையும், சிறப்பாக சிலாவிய மொழிகளையும் கற்றார். கேகலின் செல்வாக்குக்கு உட்பட்டு, மொழியானது, வளர்ச்சிக் காலம், முதிர்ச்சி, சிதைவு ஆகியவற்றுடன் கூடிய ஒரு உயிரினம் போன்றது என்னும் கோட்பாட்டையும் உருவாக்கினார். 1850 ஆம் ஆண்டில், இந்திய-ஐரோப்பிய மொழிகளை முறைப்படி விளக்கும் முறைப்படியான பார்வையில் ஐரோப்பிய மொழிகள் (The languages of Europe in systematic perspective) என்னும் ஒரு நூலை எழுதி முடித்தார். இவர் உயிரியலிலிருந்து பெறப்பட்ட சொற்களான பேரினம், இனம், வகை போன்ற சொற்களால் வசதியாக விளக்கக்கூடியதாக, மொழிகளை ஒரு முழுமையான உயிரினமாகவே எடுத்துக்கொண்டார்.

உசாத்துணைகள்

  • Salomon Lefmann: August Schleicher. Skizze. Leipzig (1870)
  • Joachim Dietze: August Schleicher als Slawist. Sein Leben und Werk in der Sicht der Indogermanistik. Berlin, Akademie Verlag (1966)
  • Konrad Körner: Linguistics and evolution theory (Three essays by August Schleicher, Ernst Haeckel and Wilhelm Heinrich Immanuel Bleek). Amsterdam-Philadelphia, John Benjamins Publishing Company (1983)
  • Liba Taub: Evolutionary Ideas and "Empirical" Methods: The Analogy Between Language and Species in the Works of Lyell and Schleicher. British Journal for the History of Science 26, S. 171–193 (1993)
  • Theodeor Syllaba: August Schleicher und Böhmen. Prague, Karolinum (1995). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 80-7066-942-X

வெளி இணைப்புகள்