இதழ்

இதழ்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இதழ் (ஒலிப்பு) அல்லது சஞ்சிகை (Magazine) என்பது அச்சிட்டு செய்திகளையும் கருத்துக்களையும் இயற்கலை படைப்புகளையும் அறியவும், பகிர்ந்து கொள்ளவும், பரப்பவும் வெளி வருகின்றவையாகும். (இணையத்தில் வெளியிடப்படும் இதழ்கள் மின்னிதழ்கள் ஆகும்.) அனைத்தையும் இதழ்கள் என்ற பொதுச் சொல்லால் குறிப்பிட்டாலும், அவை இயல்பாலும், வெளிவரும் காலம், அதில் இடம் பெற்ற உள்ளடக்கம் போன்றவைகளைக் கொண்டு வகைப்படுத்தப்படுகின்றன.

வரலாறு

இதழுக்கான முன்னைக்கால உதாரணமாக Erbauliche Monaths Unterredungen எனும் இதழை எடுக்கலாம். இது 1663 ஆம் ஆண்டில் செருமனி நாட்டில் தொடங்கப்பட்டது. அது இலக்கிய மற்றும் தத்துவ தகவல்களைக்கொண்ட ஓர் இதழ் ஆகும்.[1] ஆண்களுக்கான இதழ் (The Gentleman's Magazine) என்பது முதன் முறையாக 1731 ஆம் ஆண்டில் லண்டன் நகரில் வெளியிடப்பட்டது. இதுவே முதல் பொது நலன் பத்திரிகையாகக் கருதப்பட்டது. எவாட் கேவ் (Edward Cave) என்பவரே இவ்விதழின் எழுத்தாளர் ஆவார். இவர் Harry Potter எனும் பெயரிலேயே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

காலப் பகுப்பு

இதழ்களை வெளி வரும் கால அடிப்படையில் இரண்டாகப் பிரிக்கின்றனர்.

  1. நாளிதழ்கள்
  2. பருவ இதழ்கள்

நாளிதழ்கள்

ஒவ்வொரு நாளும் செய்திகளுடன் வெளிவரும் செய்தித் தாள்கள் நாளிதழ்கள் என்று அழைக்கப் பெறுகின்றன. இவை நாள்தோறும் வெளியாகும் நேரத்தைக் கொண்டு இரு வகையாகப் பகுக்கப்படுகின்றன. அவை;

  1. காலை நாளிதழ்
  2. மாலை நாளிதழ்

காலை நாளிதழ்கள்

ஒவ்வொரு நாளும் காலை நேரத்தில் வெளியாகும் நாளிதழ்கள் காலை நாளிதழ்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை இரவில் அச்சிடப்பட்டு காலை நேரத்தில் விற்பனைக்கு வருகின்றன. இந்த நாளிதழ்களில் முதல் நாள் நடைபெற்ற பல செய்திகள் அதிகம் இடம் பிடிக்கின்றன.

மாலை நாளிதழ்கள்

ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் வெளியாகும் நாளிதழ்கள் மாலை நாளிதழ்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை பகலில் அச்சிடப்பட்டு மாலை நேரத்தில் விற்பனைக்கு வருகின்றன. இந்த நாளிதழ்களில் முதல் நாள் மதியத்திற்குப் பின் நடைபெற்ற பல செய்திகள், சில காலை நேரச் செய்திகள் போன்றவை இடம் பிடிக்கின்றன.

பருவ இதழ்கள்

குறிப்பிட்ட கால அளவைக் கொண்டு வெளியாவன பருவ இதழ்கள் எனப்படுகின்றன. வாரம், மாதமிருமுறை, மாதம், காலாண்டு, அரையாண்டு, ஆண்டு எனும் கால அளவைக் கொண்டு வெளியாகும் இதழ்கள் அனைத்தும் பருவ இதழ்களாகும். இவை வெளியாகும் கால அளவைப் பொறுத்து இவ்வாறு வகைப்படுத்தலாம், அவை;

  1. வார இதழ்
  2. மாதமிருமுறை இதழ்
  3. மாத இதழ்
  4. காலாண்டு இதழ்
  5. அரையாண்டு இதழ்
  6. ஆண்டு இதழ்
வார இதழ்கள்

ஒரு வாரத்திலுள்ள எல்லா நாள்களின் செய்திகளையும் கொண்டு ஒரு நாள் வெளிவருவது வார இதழ்கள் எனப்படுகின்றன. வார இதழ்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியிடப்படும் இதழ் முக்கியத்துவம் பெறுகின்றது. அவ்வாரத்தில் நடந்த நிகழ்வுகள், ஒவ்வொரு தரப்பினருக்குமான சிறப்புப் பகுதிகள் (பெண்கள், சிறுவர்கள்) ஒவ்வொரு துறைக்குமான சிறப்புப் பகுதிகள் (அரசியல், அறிவியல், தொழினுட்பம்) எனப் பல்வேறு அம்சங்களும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியிடப்படும் இதழில் உண்டு.

உள்ளடக்கப் பகுப்பு

இதழ்களில் இடம் பெற்றிருக்கும் செய்திகள், படைப்புகள் அடிப்படையில இதழ்களைப் பல வகைகளில் பிரிக்கலாம்.

  • இலக்கிய இதழ்
  • அரசியல் இதழ்
  • கவிதை இதழ்
  • சிறுவர் இதழ்
  • அறிவியல் இதழ்
  • மருத்துவ இதழ்
  • கல்வி இதழ்
  • பெண்கள் இதழ்
  • தொழில் இதழ்
  • வணிக இதழ்
  • விளையாட்டு இதழ்
  • செய்தி இதழ்
  • சோதிட இதழ்
  • சமய இதழ்
  • திரைப்பட இதழ்
  • புலனாய்வு இதழ்
  • புதின இதழ்
  • பொழுதுபோக்கு இதழ்
  • இசை இதழ்
  • தலித் இதழ்கள்

தன்மைப் பகுப்பு

இதழ்கள் யாரை வாசகர்களாகக் கொண்டு வெளியிடப்படுகின்றன என்ற தன்மையின் அடிப்படையில் மூன்று வகையாகப் பிரிக்கலாம்.[சான்று தேவை]

  1. தரமான இதழ்கள் - பொருள் நிறைந்த தகவல்களைக் கொண்டு புலமைமிக்கவர்கள் படிக்கக்கூடிய வகையில் உள்ள இதழ்கள்
  2. மக்கள் இதழ்கள் - அனைத்து வகையான மக்களும் எளிதாகப் படிக்கக் கூடியதாக உள்ள அனைத்து இதழ்கள்
  3. நச்சு இதழ்கள் - படிக்கின்றவர்களின் மனத்தைப் பாதிக்கக் கூடிய செய்தி, கதை, கட்டுரைகளைக் கொண்ட இதழ்கள்.

இவை “மஞ்சள் இதழ்கள்” என்றும் சொல்லப்படுகின்றன.

தமிழ் இதழ் வரலாறு

முற்கால நாளிதழ்கள்

  • சுதேச பரிபாலினி (1904) பதிப்பாசிரியர்: ரங்கூன் பி. இ. முதலியாரால் சுதேச பரிபாலினி அச்சுக்கூடத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது
  • திராவிடன் (1916) ஆசிரியர்: சனக். சன்கர கண்ணப்பர், சென்னை
  • தமிழ்நாடு (1927) ஆசிரியர்:'சி. இராமச்சந்திர நாயுடு, சென்னை
  • வீரகேசரி (1930) ஆசிரியர்: எச். செல்லையா, கொழும்பு
  • சுதர்மம் (1933) ஆசிரியர்: ஆ. சக்திவேற்பிள்ளை, செட்டி நாடு
  • செயபாரதி (1936) ஆசிரியர்: எஸ். வேங்கட்டராமன், சென்னை
  • தந்தி (1942) சி. பா. ஆதித்தனார், மதுரை

முற்கால திங்கள் இதழ்கள்

  • சைவ உதயபானு (1882) ஆசிரியர்: சரவணமுத்துப் பிள்ளை, யாழ்ப்பாணம்
  • மகாவிகட தூதன் (1886)
  • தீனுல் இஸ்லாம் (1957) கொழும்பு
  • பறையன் (1893) சென்னை
  • ஒரு பைசா தமிழன் (1907-1932)
  • பூலோகவியாசன் (1903)

தற்கால சிறுவர்களுக்கான இதழ்கள்

  • விஜய் (2003 இல் ஆரம்பிக்கப்பட்டது), இலங்கை

என 346 திங்களிதழ்களையும் பிற இதழ்களையும் பற்றி திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக, சென்னை, பழந்தமிழ் இதழ்கள் - ஒரு பார்வை என ஒரு நூல் 2001 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.

பங்கீடு செய்தல்

இதழ்கள் அஞ்சல் மூலமாகவோ புத்தக விற்பனை நிலையங்கள் மூலமாகவோ விற்பனையாளர்கள் மூலமாகவோ விற்பனை அல்லது பங்கீடு செய்யப்படலாம். இவ்வாறு பங்கீடு செய்தல் மூன்று வகைப்படும் அவை கீழே தரப்பட்டுள்ளன.

  1. பணப் புழக்கத்துடன் கூடிய பங்கீடு
  2. பணப் புழக்கமற்ற பங்கீடு
  3. கட்டுப்படுத்தப்பட்ட பங்கீடு

மேற்குறிப்புகள்

  1. "History of magazines". Magazine Designing. 26 March 2013. பார்க்கப்பட்ட நாள் 10 October 2013.

இவற்றையும் பார்க்க

விக்கிமீடியா பொதுவகத்தில்,
இதழ்கள்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.