இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் | |
---|---|
காலம் | அக்டோபர் 11, 1962 முதல் டிசம்பர் 8, 1965 வரை |
ஏற்கும் சபை | கத்தோலிக்க திருச்சபை |
முந்திய சங்கம் | முதலாம் வத்திக்கான் சங்கம் (1869-1870) |
அடுத்த சங்கம் | இல்லை |
சங்கத்தைக் கூட்டியவர் | திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் |
தலைமை | திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் திருத்தந்தை ஆறாம் பவுல் |
பங்கேற்றோர் | கத்தோலிக்க சபை ஆயர்கள் 2625 பேர் வரை |
ஆய்ந்த பொருள்கள் | திருச்சபையின் இயல்பு; திருச்சபைக்கும் உலகுக்கும் உள்ள உறவு; கிறித்தவ ஒன்றிப்பு; பல்சமய உரையாடல், முதலியன |
வெளியிட்ட ஏடுகள்/அறிக்கைகள் | 4 கொள்கைத் திரட்டுகள், 9 விதித் தொகுப்புகள், 3 அறிக்கைகள்
|
பொதுச்சங்கங்களின் வரலாற்றுக் கால வரிசை |
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் (Second Vatican Council; Vatican II) என்பது இருபதாம் நூற்றாண்டுக் கத்தோலிக்க திருச்சபையில் நடந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒரு நிகழ்வு ஆகும்[1]. இப்பொதுச்சங்கம் 1962ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் நாளிலிருந்து 1965ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் நாள்வரை நடந்தேறியது.
திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் (ஆட்சி:1958-1963) இச்சங்கத்தைக் கூட்டி அதன் முதல் அமர்வுக்குத் தலைமை தாங்கினார்[2]. அவரது இறப்புக்குப் பின் திருத்தந்தை ஆறாம் பவுல் (ஆட்சி:1963-1978) சங்கத்தைத் தொடர்ந்து நடத்தி, தலைமைதாங்கி, அதை நிறைவுக்குக் கொணர்ந்தார்[3].
கத்தோலிக்க திருச்சபையில் நடந்த பொதுச்சங்கங்களுள் இப்பொதுச்சங்கம் 21ஆவதாகக் கருதப்படுகிறது. இதற்கு முன் வத்திக்கான் நகரில் 1869-1870இல் நடந்த பொதுச்சங்கம் முதலாம் வத்திக்கான் பொதுச்சங்கம் என்று அழைக்கப்படுகிறது.
இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில் பங்கேற்ற நால்வர் திருத்தந்தையர் ஆதல்
திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் கூட்டிய இச்சங்கத்தில் பங்கேற்ற நால்வர் பிற்காலத்தில் திருத்தந்தையராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களது பெயர்கள் வருமாறு:
- ஆறாம் பவுல் (ஆட்சி: 1963-1978) - (முன்னாளில் கர்தினால் ஜோவான்னி பத்தீஸ்தா மொந்தீனி)
- முதலாம் யோவான் பவுல் (ஆட்சி: 1978) - (முன்னாளில் ஆயர் அல்பீனோ லூச்சியானி)
- இரண்டாம் யோவான் பவுல் (ஆட்சி: 1978-2004) - (முன்னாளில் ஆயர் கரோல் வொய்த்தீவா)
- பதினாறாம் பெனடிக்ட் (ஆட்சி: 2004-2013) - (முன்னாளில் இறையியல் ஆலோசராகப் பங்கேற்ற அருள்திரு யோசப் ராட்சிங்கர்)
திருச்சபை வாழ்வில் பொதுச்சங்கம்
திருச்சபைச் சொல் வழக்கில் சங்கம் என்பது ஆங்கிலத்தில் Council (இலத்தீன்: Concilium) என வரும். இது கிரேக்க மொழி மூலத்திலிருந்து Synod என்றும் வழங்கப்படும். இணைந்து வழிநடத்தல் என்னும் பொருளும், ஒன்றுகூட்டப்படுதல் என்னும் பொருளும் இவ்வாறு பெறப்படுகின்றன.
வரலாற்றில் நடந்த சங்கங்களைப் பார்க்கும்போது சங்கம் என்பது திருச்சபையின் ஆயர்கள் திருச்சபையின் வாழ்வு பற்றி கலந்துரையாடி முடிவுகள் எடுக்க ஒன்றுகூடுகிற கூட்டத்தைக் குறித்துவந்துள்ளது. பொது என்னும் அடைமொழி Ecumenical என்னும் கிரேக்க வழிச் சொல்லின் பெயர்ப்பாகும். Oikumene என்னும் கிரேக்கச் சொல் மனிதர்கள் குடியேறியுள்ள உலகம் என்னும் பொருளையும் உலகளாவிய என்னும் பொருளையும் தரும். இவ்வாறு பார்க்கும்போது பொதுச்சங்கம் என்பது உலகில் பரவியுள்ள திருச்சபையின் தலைவர்களாகிய ஆயர்கள் ஒன்றுகூடி, திருச்சபையின் நலனுக்கென முடிவுகள் எடுத்துச் செயல்பட முனைவதைக் குறிக்கும்.
பொதுச்சங்கங்கள் குறித்த தொடர் கட்டுரைகள் |
---|
தொடக்க காலம் (அண். 50 – 451) |
|
முந்திய நடுக் காலம் (553–870) |
|
இடை மற்றும் பிந்திய நடுக் காலம் (1122–1517) |
|
தற்காலம் (1545–1965) |
கிறித்தவம் வலைவாசல் |
வரலாற்றில் நிகழ்ந்த பொதுச்சங்கங்களின் பட்டியல்
கத்தோலிக்க திருச்சபையில் இதுவரை 21 பொதுச்சங்கங்கள் நிகழ்ந்ததாக வரலாற்றாசிரியர்கள் கணிக்கின்றனர். இறுதியாக நடைபெற்ற இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் கலந்துகொள்ள உலகம் எங்கும் பரவியிருக்கின்ற கத்தோலிக்க திருச்சபையின் ஆயர்கள் அனைவரும் வத்திக்கான் நகருக்கு அழைக்கப்பட்டனர். நோய், முதுவயது, அரசியல் தடை போன்ற காரணங்களால் சிலரால் பங்கேற்க முடியாமற் போயினும், 2600க்கும் மேலான ஆயர்கள் சங்கத்தில் கலந்துகொண்டனர்.
சங்கத்தைக் கூட்டப்போவதாக திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் 1959ஆம் ஆண்டு, சனவரி மாதம் 25ஆம் நாள் உரோமையில் அமைந்த புனித பவுல் பெருங்கோவிலில் ஆற்றிய உரையின்போது அறிவித்தார். அந்நாள் புனித பவுல் மனமாற்றம் அடைந்த நினைவுப் பெருவிழாவும், கிறித்தவர் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவதற்காக மன்றாடுகின்ற நாளுமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இருபதாம் நூற்றாண்டு உலகில் திருச்சபையின் வாழ்வும் பணியும் எவ்வாறு அமையவேண்டும் என்பதைக் குறித்து ஆய்ந்து, முடிவுகள் எடுத்து அவற்றைச் செயல்படுத்த வேண்டும் என்னும் நோக்கத்தோடு திருத்தந்தை பொதுச்சங்கம் கூடப்போவதாக அறிவித்தார். அவர் திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற மூன்றே மாதங்களில் இந்த அறிவிப்பை வெளியிட்டதும் கருதத்தக்கதாகும்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் கத்தோலிகக திருச்சபையின் நீண்ட கால வரலாற்றில் மிகப் பெரியதாக அமைந்ததில் வியப்பில்லை. முதன்முறையாக, உலக நாடுகள் அனைத்திலுமிருந்து திருச்சபைத் தலைவர்கள் சங்கத்தில் பங்கேற்றனர். கத்தோலிக்க ஆயர்கள் மட்டுமே வாக்களிக்கும் உரிமை கொண்டிருந்தாலும் பார்வையாளர்களாக பிற கிறித்தவ சபைகளிலிருந்தும் சில தலைவர்கள் அழைக்கப்பட்டனர்.
கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான கிறித்தவ வரலாற்றில் நிகழ்ந்த பொதுச்சங்கங்களின் பெயர்களும், அவை நடைபெற்ற காலமும் இடமும் அவற்றில் விவாதிக்கப்பட்ட முக்கிய பொருள்களும் எடுக்கப்பட்ட சில முடிவுகளும் கீழே பட்டியலாகத் தரப்படுகின்றன.
வரிசை எண் | பொதுச்சங்கத்தின் பெயர்/ நடைபெற்ற இடம் |
காலம் | முக்கிய விவாதப் பொருள்/முடிவு |
---|---|---|---|
1. | நிசேயா 1 | 325 | இயேசு கிறிஸ்து உண்மையிலேயே கடவுளும் மனிதருமாவார். இயேசுவின் இறைத்தன்மையை மறுத்த ஆரியுசு என்பவரின் கொள்கை கண்டனம் செய்யப்பட்டது. கிறித்தவ நம்பிக்கை அறிக்கை தொகுக்கப்பட்டது. |
2. | காண்ஸ்தாந்திநோபுள் 1 | 381 | நிசேயா சங்கம் தொகுத்த நம்பிக்கை அறிக்கை உறுதிப்படுத்தப்பட்டது. தூய ஆவி இறைத்தன்மை கொண்டவர் என்னும் உண்மை அறிவிக்கப்பட்டது. |
3. | எபேசு பொதுச்சங்கம் | 431 | மரியா கடவுளும் மனிதருமான இயேசுவைப் பெற்றெடுத்ததால் கடவுளின் தாய் ஆவார். இயேசுவில் கடவுள் என்றும் மனிதர் என்றும் இரு "ஆள்கள்" உண்டு என்னும் நெஸ்தோரியக் கொள்கை கண்டனம் செய்யப்பட்டது. |
4. | கால்செதோன் பொதுச்சங்கம் | 451 | ஒரே "ஆள்" என விளங்கும் இயேசு கிறிஸ்து கடவுள் தன்மையும் மனிதத் தன்மையும் கொண்டவர். |
5. | காண்ஸ்தாந்திநோபுள் 2 | 553 | இயேசுவில் மனித இயல்பும் இறை இயல்பும் இசைவுற இணைந்துள்ளன. |
6. | காண்ஸ்தாந்திநோபுள் 3 | 680-681 | இயேசுவில் மனித இயல்பும் இறை இயல்பும் இணைந்திருப்பதால் மனித உளமும் இறை உளமும்கூட இசைவுற இணைந்துள்ளன. |
7. | நிசேயா 2 | 797 | இதற்கு முன் நிகழ்ந்த 6 பொதுச்சங்கங்களின் தொகுப்பு. கடவுளுக்கு மட்டுமே வழிபாடு (adoration) உரித்தானது; புனிதருக்கு "வணக்கம்" (veneration) செலுத்தப்படுகிறது. |
8. | காண்ஸ்தாந்திநோபுள் 4 | 869-870 | உரோமை ஆயருக்குத் திருச்சபை முழுவதின்மேலும் அதிகாரம் உண்டு என்னும் அறிக்கை வெளியிடப்பட்டது. |
9. | இலாத்தரன் 1 | 1123 | நாட்டு அதிகாரிகள் திருச்சபை ஆயர்களை நியமித்தல் தடைசெய்யப்பட்டது. குருக்களின் வாழ்க்கைமுறையில் சீர்திருத்தம் கொணரப்பட்டது. |
10. | இலாத்தரன் 2 | 1139 | இறைவழிபாடு சார்ந்த ஆன்மிக நலன்கள் விலைபேசுதலும், அநியாய வட்டி வாங்கலும் கண்டிக்கப்பட்டன. |
11. | இலாத்தரன் 3 | 1179 | திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்க மூன்றில் இரு பகுதி கர்தினால்மாரின் வாக்குகள் தேவை என்னும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. |
12. | இலாத்தரன் 4 | 1215 | திருத்தந்தையின் உலகுசார் அதிகாரத்தின் உச்சக்கட்டத்தில் பல சீர்திருத்தங்கள் கொணரப்பட்டன. |
13. | லியோன் 1 | 1245 | திருச்சபையின் உள்ளாட்சியில் தலையிட்ட மன்னர் 2ஆம் பிரடெரிக் பதவி நீக்கப்பட்டார். |
14. | லியோன் 2 | 1274 | மேற்கு சபையும் கிழக்கு சபையும் ஒன்றிக்க முயற்சி. |
15. | வீயேன் பொதுச்சங்கம் | 1311-1312 | திருத்தந்தை ஐந்தாம் கிளமெண்ட் உரோமை நகரை விட்டுத் திருச்சபைத் தலைமையகத்தை அவிஞ்ஞோன் என்னும் நகருக்கு மாற்றியதோடு பிரான்சில் உள்ள வீயேன் நகரில் பொதுச்சங்கத்தைக் கூட்டினார். சிலுவைப் போர்ச் செலவுக்காக வரிவிதிக்கப்பட்டது. குழந்தைகளுக்குத் திருமுழுக்கு அளிப்பதன் தேவை வலியுறுத்தப்பட்டது. |
16. | காண்ஸ்தான்சு பொதுச்சங்கம் | 1414-1418 | மேற்குத் திருச்சபையில் ஏற்பட்ட பெரும் பிளவை (1378-1417) நீக்க இச்சங்கம் கூட்டப்பட்டது. இதைக் கூட்டிய எதிர்-திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் உட்பட திருத்தந்தையாக உரிமை பாராட்டிய வேறு இருவரும் பதவியிறக்கப்பட்டனர். இச்சங்கம் ஜான் விக்ளிஃப், ஜான் ஹுஸ் என்னும் கிறித்தவ சீர்திருத்தவாதிகளைக் கண்டனம் செய்தது. சில தப்பறைக் கொள்கைகளை எதிர்த்து, இயேசு கிறிஸ்து அப்ப இரச வடிவங்களில் உண்மையாகவே உடனிருக்கின்றார் என்னும் கிறித்தவக் கொள்கை உறுதிப்படுத்தப்பட்டு, அறிக்கையிடப்பட்டது. |
17. | பெர்ராரா-புளோரன்சு பொதுச்சங்கம் | 1438-1445 | இச்சங்கம் முதலில் பெர்ராரா நகரிலும், பின்னர் புளோரன்சு நகரிலும் அதன்பின் உரோமையிலும் கூடியது. கிரேக்க சபை உட்பட கீழைச் சபைகள் பலவற்றோடு உரோமைச் சபை ஒன்றிப்பு ஏற்படுத்தியது. திருத்தந்தை அதிகாரப்பூர்வமாகக் கற்பிக்கும்போது வழுவாவரம் கொண்டுள்ளார் என்னும் கொள்கை பொதுவான முறையில் அறிவிக்கப்பட்டது. |
18. | இலாத்தரன் 5 | 1512-1517 | அறிவிக்கப்பட்ட சீர்திருத்தங்கள் பெரும்பாலும் நடைமுறையில் வரவில்லை. 1517இல் மார்ட்டின் லூதர் திருச்சபையில் சீர்திருத்தம் வேண்டும் என்று குரல் எழுப்பினார். |
19. | திரெந்து பொதுச்சங்கம் | 1545-1563 | மார்ட்டின் லூதர் போன்ற சீர்திருத்தவாதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு இப்பொதுச்சங்கம் பதில் வழங்கியது. திருச்சபையில் சீர்திருத்தம் கொணர்ந்தது. சங்கம் மூன்று அமர்வுகளாக (1545-47; 1551-52; 1562-63) நிகழ்ந்தது. இச்சங்கம் கொணர்ந்த சீர்திருத்தம் பல நூற்றாண்டுகள் பலனளித்தது. |
20. | வத்திக்கான் 1 | 1869-1870 | இச்சங்கத்தை திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் கூட்டினார். இத்தாலிய இராணுவம் உரோமை நகரைக் கைப்பற்றியதால் சங்கம் ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் கூடவில்லை. மனிதர் கண்களால் காண்கின்ற படைப்பிலிருந்து படைத்தவர் ஒருவர் உண்டு எனும் உண்மையை அறிந்துகொள்ள இயலும் என்று இச்சங்கம் கற்பித்தது. இறைநம்பிக்கை என்பது பகுத்தறிவுக்கு எதிரானதல்ல என்றும், பகுத்தறிவின் வழியாக மனிதர் கடவுள் பற்றி ஓரளவாவது அறிய முடியும் என்றும் அறிக்கையிட்டது. திருத்தந்தை இறைநம்பிக்கை பற்றியும் ஒழுக்கம் பற்றியும் அதிகாரப்பூர்வமாகக் கற்பிக்கும்போது தவறா வரம் கொண்டுள்ளார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிக்கையிடப்பட்டது. இச்சங்கம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளாமல் விடுத்த பொருள்கள் சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பின் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில் ஆய்வு செய்யப்பட்டன. |
21. | வத்திக்கான் 2 | 1962 அக்டோபர் 11 முதல் 1965 டிசம்பர் 8 வரை | இருபதாம் நூற்றாண்டுத் திருச்சபை உலகோடு உரையாடலில் ஈடுபட வேண்டும் என்றும், இயேசுவின் பெயரால் பிளவுபட்டுக் கிடக்கின்ற கிறித்தவ சபைகளுக்கிடையே ஒற்றுமை வளர வேண்டும் என்றும், சமயங்களோடு நல்லுறவு ஏற்படுத்த வேண்டும் என்றும், திருச்சபையில் புத்துணர்ச்சி கொணரவேண்டும் என்றும் இச்சங்கம் ஆய்ந்து பல முடிவுகளை அறிவித்தது. |
காட்சியகம்
-
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் இரண்டாம் அமர்வு துவக்கம்
-
இரண்டாம் வத்திக்கான் கவுன்சில் நிறைவு பெற்ற பின் புனித பேதுரு பேராலயத்திலிருந்து விடைபெறும் காட்சி
-
இரண்டாம் வத்திக்கான் கவுன்சில் நிறைவு பெற்ற பின் ஆயர்கள் புனித பேதுரு பேராலயத்திலிருந்து வெளிவரும் காட்சி
-
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்
-
முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆயர்கள் கலந்து ஆலோசனை செய்கிறார்கள்-இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்
-
ஆயர்களின் ஒளிச்சிதறல் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்