உருசிய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம்
Российский университет дружбы народов | |
குறிக்கோளுரை | Scientia unescamus (அறிவால் ஒன்றுபடுவோம்) |
---|---|
வகை | பொது |
உருவாக்கம் | 5 பெப்ரவரி 1960 |
தலைமை ஆசிரியர் | அலெக் யாசுத்திரெபொவ் |
நிருவாகப் பணியாளர் | 5000 |
மாணவர்கள் | 21,484 |
அமைவிடம் | 117198, மாஸ்கோ, மிக்லுகோ-மக்லாயா சாலை. 6 |
வளாகம் | நகர |
சேர்ப்பு | பொது பல்கலைக்கழகங்களின் பன்னாட்டு மன்றம் |
இணையதளம் | www |
உருசிய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் (Peoples' Friendship University of Russia, உருசியம்: Российский университет дружбы народов, РУДН) என்பது உருசியாவின் தலைநகர் மாஸ்கோவின் தெற்கில் அமைந்துள்ள ஒரு பல்கலைக்கழகம் ஆகும். இக்கல்வி நிலையம் 1960 ஆம் ஆண்டில் பத்திரிசு லுமும்பா நினைவாக பத்திரிசு லுமும்பா மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. பனிப்போர்க் காலத்தில் ஆசியா, ஆபிரிக்கா, மற்றும் தென்னமெரிக்கா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் மாணவர்களுக்கு உயர் கல்வி, மற்றும் பயிற்சித் திட்டங்களை இலவசமாக வழங்கும் முகமாக இப்பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. சில வளர்ந்த நாடுகளில் இருந்தும் குறைந்தளவு மாணவர்கள் இப்பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கல்வி கற்றார்கள்.
வரலாறு
மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் சோவியத் அரசாங்கத்தால் 1960, பெப்ரவரி 5 இல் ஆரம்பிக்கப்பட்டது. கொங்கோவில் கொல்லப்பட்ட கறுப்பினத் தலைவர் பத்திரிசு லுமும்பாவின் நினைவாக பெப்ரவரி 22, 1961 இல் இப்பல்கலைக்கழகத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. முதலாம் ஆண்டில் 59 நாடுகளில் இருந்து மொத்தம் 539 வெளிநாட்டு மாணவர்களும் 57 சோவியத் மாணவர்களும் இப்பல்கலைக்கழகத்துக்கு சேர்க்கப்பட்டார்கள்.
1990களில் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பிற்குப் பின்னர் பெப்ரவரி 5, 1992 இப்பல்கலைக்கழகத்தின் பெயர் "ரஷ்ய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம்" என மாற்றப்பட்டது.
இன்று
இன்று, இப்பல்கலைக்கழகத்தின் 47,000 இற்கும் அதிகமான பட்டதாரிகள் உலகின் 165 நாடுகளில் பணியாற்றுகிறார்கள். தற்போது இங்கு பட்டப்பின்படிப்பு, மற்றும் தொழிற்பயிற்சி உட்பட 57 கல்வித்திட்டங்களில் 131 நாடுகளின் 450 இனங்களில் இருந்து கிட்டத்தட்ட 23,000 மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். இவர்களில் கிட்டத்தட்ட 3500 வெளிநாட்டினர் அடங்குவர்.
பழைய மாணவர்கள் சிலர்
- டானியல் ஒர்ட்டேகா, நிக்கராகுவா அரசுத்தலைவர்
- மிசேல் ஜொட்டோடியா, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு அரசுத்தலைவர்
- அலெக்சேய் நவால்னி, உருசிய அரசியல்வாதி
- ரோகண விஜயவீர, இலங்கை மார்க்சிய அரசியல்வாதி, புரட்சியாளர்
- வீரசிங்கம் துருவசங்கரி, இலங்கை அறிவியலாளர்