ஒடுக்கி

பிற தனிமங்களின் ஆக்சிசனேற்ற நிலையைக் குறைக்கக் கூடிய பொருள் ஒடுக்கி (இலங்கை வழக்கு: தாழ்த்துங் கருவி) '(reductant) எனப்படும். வேதிவினையில் ஒடுக்கி எலக்ட்ரானை இழப்பதால் ஆக்சிசனேற்றம் அடைகிறது. அதனுடன் வினைபுரிந்த பிற தனிமம், ஒடுக்கம் அடைகிறது. ஒடுகக்கி பிற தனிமங்களுக்கு எலக்ட்ரானை வழங்குகிறது. எனவே இது எலக்ட்ரான் ஈனி எனவும் அழைக்கப்படும்.

லித்தியம், சோடியம், மக்னீசியம், இரும்பு, அலுமினியம், கார்பன் போன்றவை நல்ல ஒடுக்கிகளாகும் (எதிர்மின் ஈனிகளாகும்).
(எ.கா): Na + F -> Na+F-
இவ்வினையில் சோடியம் ஒடுக்கியாக செயல்பட்டு, எலக்ட்ரானை ஃப்ளூரினுக்கு ஈனுகிறது. ஃப்ளூரின் ஒடுக்கமடைகிறது. சோடியம் ஆக்சிசனேற்றம் அடைகிறது.

ஒடுக்கிகள் - வகைப்படுத்துதல்

பொதுவாக எளிதில் எலக்ட்ரானை இழக்கும் பெரிய அணுக்கள், சிறந்த ஒடுக்கிகளாக செயல்படுகின்றன. பெரிய அணுக்களில் வெளிக்கூட்டில் உள்ள எலக்ட்ரான்கள் குறைவான அணுக்கரு ஈர்ப்பு விசையை உணருகின்றன. எனவே இவை எளிதாக பிற தனிமங்களால் கவரப்பட்டு, ஒடுக்கவினை நடைபெறுகிறது. கீழ்கண்ட அட்டவணையில் தனிமங்கள் அவற்றின் எலக்ட்ரான் கவர் திறனுக்கு ஏற்ப வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதிலிருந்து, லித்தியம்(Li), சோடியம்(Na) போன்றவை மிகச்சிறந்த ஒடுக்கிகள் எனத் தெரியவருகிறது.[1][2][3]

ஆக்சிசனேற்றி ஒடுக்கி ஒடுக்க மின்னழுத்தம் (V)
Li+ + e = Li −3.04
Na+ + e = Na −2.71
Mg2+ + 2e = Mg −2.38
Al3+ + 3e = Al −1.66
2H2O(l) + 2e = H2(g) + 2OH −0.83
Cr3+ + 3e = Cr −0.74
Fe2+ + 2e = Fe −0.44
2H+ + e = H2 0.00
Sn4+ + 2e = Sn2+ +0.15
Cu2+ + e = Cu+ +0.16
Ag+ + e = Ag +0.80
Br2 + 2e = 2Br +1.07
Cl2 + 2e = 2Cl +1.36
MnO4 + 8H+ + 5e = Mn2+ + 4H2O +1.49

ஒடுக்கியா? ஆக்சிசனேற்றியா?

ஒரு பொருள் ஒடுக்கியா, அல்லது ஆக்சிசனேற்றியா என்பதை நாம் தனியாகச் சொல்ல முடியாது. அது எந்தப் பொருளுடன் வினைபுரிகிறதோ அதைப் பொறுத்து ஒடுக்கியாகவோ அல்லது ஆக்சிசனேற்றியாகவோ செயல்படும். எடுத்துக்காட்டாக, ஐட்ரசன்(−0.83 V) தன்னைவிட குறைவான ஒடுக்க மின்னழுத்தமுடைய(−3.04 V) லித்தியத்துடன் வினைபுரியும் போது ஆக்சிசனேற்றியாகச் செயல்படுகிறது.

2 Li(s) + H2(g) → 2 LiH(s)

ஆனால் இதே ஐட்ரசன்(−0.83 V) தன்னைவிட அதிகமான ஒடுக்க மின்னழுத்தமுடைய ப்ளூரினுடன்(3.98 V) வினைபுரியும் போது ஒடுக்கியாகச் செயல்படுகிறது.

H2(g) + F2(g) → 2 HF(g)

ஒடுக்கிகளின் பண்புகள்

ஒடுக்கிகள் எளிதில் அரிமாணம் அடையக் கூடியவை. அதாவது இவை எளிதில் காற்றில் இருக்கும் ஆக்சிசனுடன் வினைபுரியக் கூடியவை. எனவே சிறந்த ஒடுக்கிகளான லித்தியம், சோடியம் போன்றவற்றைத் திறந்தவெளியில் வைத்தால் உடனே தீப்பற்றி எரிந்துவிடும்.

சில பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒடுக்கிகள்

  • லித்தியம் அலுமினியம் ஹைட்ரைடு (LiAlH4)
  • சோடியம் அமால்கம்
  • சோடியம் போரோஹைடிரைடு
  • ஹைடிரசைன்
  • துத்தநாக-மெர்க்குரி அமால்கம் (Zn(Hg))
  • லின்ட்லர் வினையூக்கி
  • ஆக்சாலிக் அமிலம் (C2H2O4)
  • ஃபார்மிக் அமிலம் (HCOOH)
  • அஸ்கார்பிக் அமிலம் (C6H8O6)

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. Garron, Anthony; Epron, Florence (2005). "Use of formic acid as reducing agent for application in catalytic reduction of nitrate in water". Water Research 39 (13): 3073–3081. doi:10.1016/j.watres.2005.05.012. பப்மெட்:15982701. Bibcode: 2005WatRe..39.3073G. 
  2. "Oxidizing and Reducing Agents". Purdue University.
  3. "Electrode Reduction and Oxidation Potential Values". www.EESemi.com. பார்க்கப்பட்ட நாள் 12 July 2021.