ஒற்றைச் சில்லு வண்டி

பொதுவான ஒற்றைச் சில்லு வண்டி

ஒற்றைச் சில்லு வண்டி (Wheelbarrow) என்பது ஒரு சில்லை மட்டும் கொண்ட மனித விசையினால் இயங்கும் சிறிய வண்டி ஆகும்.[1] பின்பக்கத்திலுள்ள இரு கைப்பிடிகளையும் பிடிப்பதன் மூலம் இவ்வண்டியைத் தனி ஒருவர் இயக்க முடியும்.[2]

பொதுவாக ஒற்றைச் சில்லு வண்டிகள் தோட்ட வேலைகளின்போதும் கட்டட அமைப்பு வேலைகளின்போதும் பயன்படுத்தப்படும்.[3]

பெயர் விளக்கம்

ஒரு சில்லைக் கொண்டுள்ள வண்டி என்பதால் இதற்கு ஒற்றைச் சில்லு வண்டி எனப் பெயர் வந்தது.

ஒற்றைச் சில்லு வண்டி என்பதற்கான ஆங்கிலச் சொல்லான Wheelbarrow என்பது இரண்டு சொற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அவை Wheel, Barrow என்பனவாகும். Wheel என்பது சில்லைக் குறிக்கும். Barrow என்பது சுமை சுமக்குங்கருவியைக் குறிக்கும் பண்டைய ஆங்கிலச் சொல்லான Bearwe என்பதிலிருந்து மருவியுள்ளது.[4]

வடிவமைப்பு

ஒற்றைச் சில்லு வண்டியானது இரண்டாம் வகை நெம்புகோலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.[5] பண்டைய சீன ஒற்றைச் சில்லு வண்டிகளில் சுமையைத் தாங்குவதற்காக நடுவிலும் ஒரு சில்லு அமைக்கப்பட்டிருந்தது. பொதுவாக, ஒற்றைச் சில்லு வண்டிகள் ஏறத்தாழ 170 இலீற்றர்க் கொள்ளளவை உடையவை.

நவீன ஒற்றைச் சில்லு வண்டிகள்

1970களில் சேம்சு இடைசன் கோள வடிவான சில்லுடன் ஒற்றைப் பந்து வண்டியொன்றை அமைத்தார்.[6]

1998இல் ஓண்டா எச். பி. இ. 60 என்ற மின்சாரத்தில் இயங்கும் ஒற்றைச் சில்லு வண்டியும் தயாரிக்கப்பட்டது.

மேற்கோள்கள்