ஓ. இராசகோபால்
முனைவர் ஓ. இராசகோபால் | |
---|---|
கேரள சட்டமன்றத்தின் சட்ட மன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2 சூன் 2016 | |
முன்னையவர் | வி. சிவன்குட்டி |
தொகுதி | நேமம் |
பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள், நகர அபிவிருத்தி, சட்டம், நீதி மற்றும் நிறுவன விவகாரங்கள், இருப்புப்பாதை | |
பதவியில் 13 அக்டோபர் 1999 – 22 மே 2004 | |
பிரதமர் | அடல் பிகாரி வாச்பாய் |
மாநிலங்கவை உறுப்பினர் | |
பதவியில் 1992 –2004 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 செப்டம்பர் 1929 பாலக்காடு, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய பாலக்காடு, கேரளம், இந்தியா) |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | முனைவர். சாந்தா குமாரி |
பிள்ளைகள் | 2 |
வாழிடம் | திருவனந்தபுரம், கேரளம் |
ஓலஞ்சேரி இராசகோபால் (Olanchery Rajagopal) (பிறப்பு 15 செப்டம்பர் 1929) ஒரு இந்திய அரசியல்வாதியாவார். இவர் முன்னாள் மத்திய வெளியுறவு மந்திரியாகவும், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் முதலமைச்சர் வேட்பாளராகவும், நேமம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்ட மன்ற உறுப்பினராகவும், கேரள சட்டமன்றத்தின் முதல் பாஜகவின் உறுப்பினருமாவார்.[1] கேரளாவில் பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான இவர் அடல் பிகாரி வாச்பாய் அமைச்சரவையில் பாதுகாப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள், நகர அபிவிருத்தி, சட்டம், நீதி, நிறுவன விவகாரங்கள், இருப்புப்பாதை உள்ளிட்ட பல்வேறு அமைச்சரவை பதவிகளை வகித்துள்ளார். [2] 1992 முதல் 2004 வரை மாநிலங்களவையில் இரண்டு முறை உறுப்பினராக இருந்தார். [3] [4] கேரள மாநில அரசின் மனுக்கள் மற்றும் பொதுப்பணி, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு குழு தொடர்பான சட்டமன்ற பாடக் குழுவில் உறுப்பினராகவும் இருந்தார்.
மேலும், கேரளாவைச் சேர்ந்த முதல் பாஜகவின் மத்திய அமைச்சராக இருந்த இவர், மாநிலங்களவையில் பாஜக நாடாளுமன்றக் கட்சியின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார். முன்னாள் பாஜக தேசிய துணைத் தலைவராகவும், மாநிலத் தலைவராகவும் இருந்தார். திருவனந்தபுரம் தொகுதியில் 2014 மக்களவைத் தேர்தலில் 13000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். பல சட்டமன்றத் தேர்தல்களில் இவர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
ஆரம்பகால வாழ்க்கை
இவர் 1929 செப்டம்பர் 15 அன்று மாதவன் நாயருக்கும் பாலக்காட்டில் உள்ள புத்துக்கோடு அருகே ஓலாஞ்சேரி வீட்டைச் சேர்ந்த ஓ. கொஞ்ஞிக்காவு அம்மா ஆகியோரின் மகனாகப் பிறந்தார். இவரது ஆரம்பக் கல்வி கனக்கண்ணூர் தொடக்கப்பள்ளியிலும் மஞ்சபிரா மேல்நிலைப்பள்ளியிலும் இருந்தது. பின்னர் பாலக்காடு அரசு விக்டோரியா கல்லூரிக்குச் சென்றார்.
தனது சட்டக் கல்வியை சென்னையில் மேற்கொண்டார். பின்னர், 1956ஆம் ஆண்டில் பாலக்காடு மாவட்ட நீதிமன்றத்தில் சட்டப் பயிற்சியைத் தொடங்கினார். [5]
ஜனசங்கப் பணிகள்
தீனதயாள் உபாத்தியாயாவால் ஈர்க்கப்பட்ட இவர், படிப்பை முடித்த சிறிது காலத்திலேயே பாரதிய ஜனசங்கத்தில் பணியாற்றத் தொடங்கினார். 1968 இல் உபாத்யாயாவின் மரணம் இவரை பொது வாழ்க்கையை இன்னும் ஆழமாக தொடரத் தூண்டியது. 1974 வரை ஜனசங்கத்தின் மாநில பொதுச் செயலாளராக இருந்தார். இவர் 1977 வரை தலைவர் பதவியிலும் இருந்தார். [5]
நெருக்கடி நிலை காலங்களில் ஜனசங்கத்தின் பாலக்காடு மாவட்டத் தலைவராக இருந்த வி. வேலங்குட்டியுடன் சேர்ந்து இவர் வியூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு ஜனசகம் ஜனதா கட்சியுடன் இணைந்தது. இந்த காலகட்டத்தில் இவர் ஜனசங்கத்தின் மாநில பொதுச் செயலாளராக பணியாற்றி வந்தார்.
பாஜக பணி
1980இல் ஜனதா கட்சி பிரிந்து பாரதிய ஜனதா கட்சியாக உருவாக்கப்பட்டது. இவர் கட்சியின் கேரளத் தலைவராக 1985 வரை பணியாற்றினார். 1985க்குப் பிறகு அகில இந்திய செயலாளர், பொதுச் செயலாளர், துணைத் தலைவர் உட்பட பல பதவிகளை வகித்தார். [5] 1989இல் மழப்புறம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் தோற்றார். இவரது அடுத்த முயற்சி மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்தது. 1992, 1998ஆம் ஆண்டுகளில் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் . 1999ஆம் ஆண்டில் திருவனந்தபுரத்திலிருந்து இரண்டாவதாகப் போட்டியிட்டார். ஆனால் மீண்டும் தோல்வியடைந்தார். [2] இருப்பினும், இவர் மொத்தம் 1,58,221 வாக்குகளைப் பெற்றார். (20.9%) போட்டியிட்ட ஏழு பேரில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். [6] 1998இல் முந்தைய பாஜக வேட்பாளரை விட (94,303 வாக்குகள் பெற்றார். 12.3%) [7] இது, 1996 (74,904, 10.4%) மக்களவைத் தேர்தலில் இவர் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கையை விட மிக அதிகம். [8]
இவர், அருவிக்கரை இடைத்தேர்தலில் போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இருப்பினும் இவரது தனிப்பட்ட செல்வாக்கு போட்டியில் பாஜகவின் வாக்குகளை 7,694 லிருந்து 34,145 ஆக உயர்த்தியது. [9] கடைசியாக 2016 சட்டமன்றத் தேர்தலில் இவர் நெமம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து போட்டியிட்டு, அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் வி. சிவன்குட்டியை 8,671 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, அதன் மூலம் தனது 87 வயதில் முதல் முறையாக கேரள சட்டமன்றத்தில் நுழைந்தார்.
மேற்கோள்கள்
- ↑ "Kerala Assembly Results 2016: As it happened | Zee News". zeenews.india.com. பார்க்கப்பட்ட நாள் 2017-01-29.
- ↑ 2.0 2.1 Candidate Watch - 'O. Rajagopal, BJP candidate, Thiruvananthapuram Lok Sabha seat' பரணிடப்பட்டது 2004-06-27 at the வந்தவழி இயந்திரம் தி இந்து - 28 April 2004
- ↑ Diluting MLAs’ rights The Tribune, Chandigarh - 31 October 2001
- ↑ 18 outsiders in Rajya Sabha[தொடர்பிழந்த இணைப்பு] தி இந்து - 10 June 2004
- ↑ 5.0 5.1 5.2 Life & Career பரணிடப்பட்டது 2007-09-28 at the வந்தவழி இயந்திரம் - Keral.com
- ↑ "IndiaVotes PC: Trivandrum 1999". indiavotes.com. Archived from the original on 2016-05-25. பார்க்கப்பட்ட நாள் 2017-01-29.
- ↑ "IndiaVotes PC: Trivandrum 1998". indiavotes.com. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-01-29.
- ↑ "IndiaVotes PC: Trivandrum 1996". indiavotes.com. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-01-29.
- ↑ "In Aruvikkara, BJP produces five-fold increase in vote share at the cost of CPI(M)". The Indian Express (in ஆங்கிலம்). 2015-06-30. பார்க்கப்பட்ட நாள் 2020-09-18.