ஓ. ஏ. கே. தேவர்
ஓ. ஏ. கே. தேவர் எனப்படும் ஒத்தப்பட்டி ஐயத் தேவர் மகன் கருப்புத் தேவர் (இறப்பு: 1973) என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகில் உள்ள ஒத்தப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்.
வாழ்க்கை
இவரின் பள்ளிப்படிப்பு முடிந்தது 17வயதில் இராணுவத்தில் தந்தையின் வற்புறுத்தலால் இணைந்தார், நான்கு ஆண்டுகள் ராணுவச் சேவையை முடிந்திருந்த நிலையில் தந்தையார் இறப்புக்கு ஊருக்கு வந்தவர் மீண்டும் வேலைக்குப் போகவில்லை. இவரின் மனைவி நடிகை ஜெமினி செல்லம் இவர் உத்தமபுத்திரன் உட்பட 25 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.[1] இவர்களின் மகன் நடிகர் ஓ.ஏ.கே. சுந்தர் ஆவார்.
நாடக வாழ்க்கை
இவருக்கு இருந்த நடிப்பாசையின் காரணமாக ‘சக்தி நாடக சபா'வில் இணைந்தார். இந்த சக்தி நாடக சபாவில்தான் பின்னாளில் திரையில் பிரபலமான சிவாஜி கணேசன், எம். என். நம்பியார், எஸ். வி. சுப்பையா, கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோர் நடிகர்களாக இருந்தனர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒ.ஏ.கே. தேவரின் நெருங்கிய நண்பரானார்.
திரையுலகத்தில்
சக்தி நாடக சபாவின் நாடகங்கள் ஒவ்வொன்றாகத் திரைப்படமானதும், அதன் நடிகர்கள் சினிமாவில் நுழைய ஆரம்பித்தனர். ஆனால் கருப்ப தேவர்க்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வாய்ப்பு தேடி சென்னை சென்றவர் என்.எஸ். கிருஷ்ணனைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. தேவரின் வாட்டசாட்டமான உடல்வாகையும் தமிழ் உச்சரிப்பையும் கண்ட கலைவாணர், அவரை சேலம் மார்டன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோவில் மாதம் 10 ரூபாய் சம்பளத்துக்கு கம்பெனி நடிகராகச் சேர்த்துவிட்டார். அங்கே துணை நடிகராக இருந்தவருக்கு உருப்படியான வேடங்கள் எதுவும் அமையாததால் மார்டன் தியேட்டரை விட்டு விலகி, மீண்டும் சென்னை வந்தார். அங்கே தேவருக்கு கலைவாணர், படத்தொகுப்பாளர் ஆர்.எஸ். மணி தயாரித்து இயக்கிய ‘மாமன் மகள்’(1950) படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்தார். அப்படத்தில் வீராசாமி என்ற அடியாளாக நடித்தார். கலைவாணரின் பரிந்துரையின் காரணமாக ‘மதுரை வீரன்’ படத்தில் திருமலை நாயக்கர் மன்னன் வேடம் தேவருக்கு கிடைத்தது. மதுரை வீரனின் பெரிய வெற்றி தேவரைப் பிரபலப்படுத்தியது.[2]
மீண்டும் நாடகங்களில்
சிவாஜி கணேசனின் சிவாஜி மன்றம் நடத்திவந்த புகழ்பெற்ற நாடகங்களான வீரசிவாஜி, வீரபாண்டிய கட்டப்பொம்மன் போன்ற நாடகங்களில் சிவாஜி கணேசனுக்கு இணையான கதாபாத்திரங்களில் ஓ.ஏ.கே. தேவர் நடித்துவந்தார், இந்திலையில் எதிர்பாராமல் சிவாஜியுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் சிவாஜி நாடக மன்றத்திலிருந்து பிரிந்து ‘தேவர் நாடக மன்ற’த்தை தொடங்கினார் தனது நாடக மன்றம்மூலம் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘அன்பு வழி’ ‘சந்தனச் சிலை’ ‘காட்டு வழி’ போன்ற பல புகழ்பெற்ற நாடகங்களை நடத்திவந்தார். இக்காலகட்டத்தில் இளையராஜா சென்னையில் தனது சகோதரர்களுடன் தங்கி, திரைப்படங்களில் இசையமைக்க வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தார் இந்த நேரத்தில் ஓ.ஏ.கே. தேவர் தனது நாடக மன்றத்தின் புதிய நாடகமான மாசற்ற மனத்தை திருச்சியில் அரங்கேற்ற முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தார், அப்போது அந்த நாடகத்துக்கு இசை அமைக்க தேவரிடம் தேவர் நாடக மன்றத்தில் இருந்த சங்கிலி முருகன் ராசய்யாவை அறிமுகப்படுத்தினார் பாவலர் சகோதர்களின் இசையை பொதுவுடமை மேடைகளில் கேட்டிருந்த தேவர் வாய்ப்பளித்தார். பாவலர் சகோதரர்களின் இசையுடன் அரங்கேறிய அந்த நாடகத்தின் பாடல்கள் பாராட்டுப் பெற்றன. தேவரின் இந்த நாடகத்தில்தான் தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், கவுண்டமணி ஆகியோர் நடித்து பிற்காலத்தில் மிகவும் பிரபலமான நடிகர்களாகவும் ஆனார்கள்.
மார்டன் தியேட்டரில் பணியாற்றும்போதே மு. கருணாநிதி உடன் தோழமை கொண்டிருந்தார் கலைஞர் கதை, வசனம் எழுதி வெற்றிபெற்ற ‘குறவஞ்சி’, ‘பூம்புகார்’ உள்ளிட்ட பெரும்பாலான படங்களில் ஓ.ஏ.கே. தேவர் நடித்தார். 1972 ல் தனது 48-வது வயதில் மறைந்த ஓ.ஏ.கே. தேவர், கடைசி வரை திமுகவின் மேடைகளில் பிரச்சார நட்சத்திரமாகவும் விளங்கினார். தேவர் கடைசியாக நடித்த படங்கள் ‘வாழையடி வாழை’, ‘சிசுபாலன்’. அவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘பாக்தாத் பேரழகி ஆகும்.[3]
நடித்த திரைப்படங்களின் பட்டியல்
- ராஜா தேசிங்கு (1960)
- மரகதம்
- புதிய பறவை
- அன்புக்கரங்கள்
- தலைவன்
- ராமன் தேடிய சீதை
- மகேஸ்வரி
- மகாதேவி
- உத்தம புத்திரன்
- மாங்கல்ய பாக்கியம்
- உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
- குறவஞ்சி
- தந்தைக்குப்பின் தமையன்
- கப்பலோட்டிய தமிழன்
- வீரபாண்டிய கட்டபொம்மன்
- படித்தால் மட்டும் போதுமா
- தங்கச் சுரங்கம்
- அன்னை இல்லம்
- திருவிளையாடல்
- கல்யாணியின் கணவன்
- சியாமளா
- ராஜா ராணி
- எங்க மாமா
- எதிரொலி
- சொர்க்கம்
- எங்க பாப்பா
- பறக்கும் பாவை
- காத்தவராயன்
- நான்
- மூன்றெழுத்து
- நீயும் நானும்
- குங்குமம்
- பாக்தாத் பேரழகி
- கர்ணன்
மேற்கோள்கள்
- ↑ "ஓ.ஏ.கே. தேவரின் மனைவி மரணம்". நக்கீரன். 10 சூன் 2011. Archived from the original on 2011-06-12. பார்க்கப்பட்ட நாள் 3 ஏப்ரல் 2016.
{cite web}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "மறக்கப்பட்ட நடிகர்கள் 4: வெண்கலக் குரல் வித்தகர்! - ஓ.ஏ.கே. தேவர்". 1 ஏப்ரல் 2016. தி இந்து (தமிழ்). பார்க்கப்பட்ட நாள் 3 ஏப்ரல் 2016.
{cite web}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "மறக்கப்பட்ட நடிகர்கள் 4: இருபெரும் நடிகர்களின் ஒரே தேர்வு! - ஓ.ஏ.கே. தேவர் 2". தி இந்து (தமிழ்). 8 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 8 ஏப்ரல் 2016.
{cite web}
: Check date values in:|accessdate=
and|date=
(help)