கண்ணாடியிழைப் பிளாஸ்ட்டிக்கு
கண்ணாடியிழை நெகிழி அல்லது கண்ணாடியிழைப் பிளாஸ்ட்டிக் (Glass fibre-reinforced plastic) என்பது கண்ணாடி இழையைப் பயன்படுத்தி வலுவூட்டப்பட்ட நெகிழி ஆகும். இது ஒரு கூட்டுப் பொருள் (composite material) என்பதுடன், இழைவலுவூட்டிய நெகிழி வகையைச் சேர்ந்தது. இதனை உருவாக்கப் பயன்படும் பிளாஸ்ட்டிக்குப் பொதுவாக பொலியெஸ்தர் அல்லது வைனைலெஸ்தர் ஆகும். இபொக்சி (epoxy) போன்ற பிளாஸ்ட்டிக்குகளும் இதற்குப் பயன்படுவதுண்டு. பயன்படுத்தப்படும் கண்ணாடி இழை, பெரும்பாலும் துண்டு துண்டாக வெட்டிய இழைகளிலாலான ஒரு பாய் வடிவில் இருக்கும். சில சமயங்களில் பின்னப்பட்ட துணி உருவிலும் இருப்பதுண்டு.
வரலாறு
பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே உருவாக்கப்பட்டிருந்தாலும், புருசியாவின் எர்மன் எம்மசுபர் 1880இல் முதன்முதலாகக் காப்புரிமை பெற்றார்.[1][2]
பயன்பாடு
கண்ணாடியிழை நெகிழி பல பயன்பாடுகளைக் கொண்ட ஒரு பொருளாகும். இரண்டாம் உலகப் போர்க் காலத்தில், ஒட்டுப்பலகைக்கு மாற்றீடாக வானூர்திகளில் பயன்படுத்தப்படுவதற்காக ஐக்கிய இராச்சியத்தில் உருவாக்கப்பட்டது. பின்னர் மக்கள் தேவைக்கான முதலாவது பயன்பாடாக படகுகள் கட்டுவதற்குப் பயன்படலாயிற்று. 1950 களில் இத்துறையில் பெரிதும் விரும்பப்படும் ஒரு பொருளாக ஆனது. தற்காலத்தில் படகு உற்பத்தியில் ஒரு முன்னணி மூலப்பொருளாக இது இருந்து வருகிறது. மோட்டார் வண்டி உற்பத்தி, விளையாட்டுப் பொருள்கள் உற்பத்தி ஆகியவற்றிலும் இது பெரும்பங்கு வகிக்கின்றது. கட்டிடத்துறையிலும் இதன் பயன்பாடு விரிவடைந்து வருகின்றது. பல வகையான கட்டிடக் கூறுகள், நீர்த்தாங்கி, குடிநீர், கழிவுநீர் போன்றவற்றைக் கடத்தும் குழாய்கள் என்பன இதனால் செய்யப்படுகின்றன.