கனடாவின் அரசியலமைப்பு

ஒட்டாவாவில் நாடாளுமன்றக் குன்றின் மேற்கிலுள்ள கனடாவின் உச்சநீதி மன்றம்

கனடாவின் அரசியல் அமைப்பு (Constitution of Canada) கனடாவின் மீயுயர் சட்டமாகும்; நாட்டின் வரையறுக்கப்பட்ட ஆளும் மன்றத்தின் இயற்றுச் சட்டங்களையும் வரையறுக்கபடாத வழமைகளையும் அரசியல் வழக்கங்களையும் ஒன்றிணைத்த அரசியலமைப்புச் சட்டம் ஆகும். மாக்னா கார்ட்டாவை அடித்தளமாகக் கொண்ட இதுவே உலகின் மிகவும் பழைமையான, செயற்பாட்டில் உள்ள அரசியலமைப்புச் சட்டமாகும்.[1] இந்தச் சட்டம் கனடிய அரசு, கனடாக் குடிமக்களின் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் மற்றும் கனடாவில் வாழ்வோரின் உரிமைகளை வரையறுக்கின்றது. கனடாவின் அரசியலமைப்புச் சட்டம் அரசியலமைப்பை விளக்குவதுடன் அதன் செயற்பாட்டை விவரிக்கின்றது. கனடாவின் அரசியலமைப்பு சட்டம் அதன் மத்திய மாகாண அரசுகளின் அதிகாரங்களையும் கடமைகளையும் வரயறைசெய்து, சட்ட உருவாக்க வழிமுறைகளையும் விவரிக்கின்றது. மாகாண அரசுகள் உள்ளூர் அரசுகளின் அதிகாரங்களையும் கடமைகளையும் வரையறைசெய்கின்றன. அரசுகள் தகுந்த வழிமுறைகளுக்கமைய சட்டங்களை உருவாக்கி அமுல்படுத்துகின்றன.

கனடாவின் அரசியலமைப்பின் அங்கங்களை அரசியலமைப்புச் சட்டம் 1982, உபபிரிவு 52(2) விவரிக்கிறது; இதன்படி கனடாச் சட்டம், 1982, அட்டவணையிலுள்ள அனைத்துச் சட்டங்களும் குறிப்பாணைகளும் அரசியலமைப்புச் சட்டம் 1867இல் (முன்னாளைய பிரித்தானிய வட அமெரிக்கச் சட்டம், 1867) உள்ளதும், இவற்றிற்கான ஏதேனும் திருத்தங்களும் அடங்கும். கனடாவின் உச்சநீதி மன்றம் இந்தப் பட்டியல் முழுமையானதல்ல என்றும் கூட்டமைப்பு உருவானதிற்கு முன்பிருந்த சட்டங்களும் எழுதப்படாத அங்கங்களையும் உள்ளடக்கியது என்றும் கூறியுள்ளது.[2]

கனடாவின் நீதிமன்றயமைப்பு சட்டங்களை புரிந்து அமலாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அரசியல் அமைப்பு சட்டத்தை மீறும் சட்டங்களை செல்லுபடியாகாமல் செய்யும் அதிகாரம் நீதியமைப்புக்கு உண்டு. கனடாவின் உச்ச நீதி மன்றமே சட்ட கட்டமைப்பின் அதி உயர் அதிகாரம் கொண்டது.

மேற்சான்றுகள்

  1. Tidridge, Nathan (2010), Canada's Constitutional Monarchy: An Introduction to Our Form of Government, Toronto: Dundurn Press, p. 54, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781459700840 {citation}: Invalid |ref=harv (help)
  2. New Brunswick Broadcasting Co. v. Nova Scotia [1993] 1 S.C.R. 319

வெளி இணைப்புகள்