கலப்பிரிவு

கலப்பிரிவின் மூன்று வகைகள்

கலப்பிரிவு அல்லது உயிரணுப்பிரிவு (cell division) என்பது உயிரணுக்கள் அல்லது கலங்கள் பிரிந்து பெருகும் செய்முறை ஆகும். கலப்பிரிவானது கலவட்டத்தின் ஒரு சிறிய பகுதியாகும். பல்கல உயிரினங்கள் வளர்ச்சியின் போது பருமனில் அதிகரித்துச் செல்லவும் புதிய இழையங்களை உருவாக்கவும் இழந்தவற்றை ஈடு செய்யவும் இனப்பெருக்கத்தின் போது புணரிகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வதற்காகவும் கலப்பிரிவு உதவுகின்றது.
ஒருகல உயிரினங்களில் எளிய கலப்பிரிவு மூலம் இனப்பெருக்கம் நடைபெறுகின்றது. இத்தகைய கலப்பிரிவு இருகூற்றுப்பிளவு (Binary fission) எனப்படும்.
பல்கல உயிரினங்களில் சில கலங்கள் கணிசமான அளவு காலப்பகுதியின் பின்னர் பிரியும் சக்தியை இழந்து விடுகின்றன. சில கலங்கள் தொடர்ந்து பிரியும் ஆற்றலுடையவையாக காணப்படுகின்றன. என்பு மச்சைக் குழியங்கள், மூலவுயிர் மேலணிக் கலங்கள் போன்றன இத்தகையனவாகும். நரம்புக் கலங்கள், தசைக்கலங்கள் போன்ற சில கலங்கள் பிரியுமாற்றல் அற்றவையாக அனேகமாக உயிரினத்தின் பெருமளவு வாழ்க்கைக் காலப்பகுதி முழுவதும் காணப்படுகின்றன.
மெய்க்கருவுயிரி வகை உயிரினங்களில் இழையுருப்பிரிவு, ஒடுக்கற்பிரிவு என்னும் இரண்டு பிரதான கலப்பிரிவு வகைகள் காணப்படுகின்றன. இவையிரண்டுமே இரண்டு தி்ட்டமான படிமுறைகளினூடாக நடைபெறுபவை. இழையுருப் பிரிவு, உயிரணுக்களிலுள்ள நிறப்புரிகளின் மடிய எண்ணிக்கையில் [1] மாற்றம் ஏற்படுத்தாத நிலையையும், ஒடுங்கற்பிரிவு மடிய எண்ணிக்கையை அரைவாசியாக மாற்றுவதாகவும் அமையும்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. Martin EA, Hine R (2020). A dictionary of biology (6th ed.). Oxford: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780199204625. இணையக் கணினி நூலக மைய எண் 176818780.
  2. Griffiths AJ (2012). Introduction to genetic analysis (10th ed.). New York: W.H. Freeman and Co. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781429229432. இணையக் கணினி நூலக மைய எண் 698085201.
  3. "10.2 The Cell Cycle – Biology 2e | OpenStax". openstax.org (in ஆங்கிலம்). 28 March 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-11-24.