குங்கோலிம் கிளர்ச்சி

1583 சூலை 25 இல் ஐந்து இயேசு சபைக் குருக்கள் படுகொலை செய்யப்பட்டதைக் குறிக்கும் 17-ஆம் நூற்றாண்டு ஓவியம்

குங்கோலிம் கிளர்ச்சி (Cuncolim Revolt) என்பது இந்தியாவின் கோவாவில் 1583 சூலை 25 அன்று குடியேற்றக்கால போர்த்துக்கீச அரசு நிருவாகம் இந்துக் கோவில்களை அழித்தும், உள்ளூர் இந்துக்களை கட்டாயமாக கிறித்தவத்திற்கு மதமாற்றம் செய்யும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் உள்ளூர் இந்துக்கள் ஈடுபட்ட கிளர்ச்சியைக் குறிக்கிறது.[1] இக்கிளர்ச்சியின் போது குங்கோலிம் நகரில் கிறித்தவ குருமார்களும் பொதுமக்களும் படுகொலை செய்யப்பட்டனர். கத்தோலிக்க திருச்சபை இந்நிகழ்வை குங்கோலிம் தியாகம் (Cuncolim martyrdom) என அழைக்கிறது.[2]

இந்நிகழ்வில் ஐந்து இயேசு சபை மதப்பரப்புனர்களும், ஒரு ஐரோப்பியரும், 14 இந்தியக் கிறித்தவர்களும் கொல்லப்பட்டனர்.[2] கிளர்ச்சியில் ஈடுபட்ட உள்ளூர்த் தலைவர்கள் பலரும் போர்த்துக்கீச அரசினால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் எதுவுமின்றித் துக்கிலிடப்பட்டனர்.[3]

1510 ஆம் ஆண்டில் போர்த்துக்கீசர் கோவாவைக் கைப்பற்றிய பின்னர் அவ்வரசுக்கெதிராக உள்ளூர் மக்களால் நடத்தப்பட்ட முதலாவது எதிர்ப்புப் போராட்டம் இதுவாகும்.[4]

பின்னணி

1510 ஆம் ஆண்டில் போர்த்துக்கீசத் தளபதி அபோன்சோ டி அல்புக்கேர்க் கோவாவைக் கைப்பற்றியதை அடுத்து, திருத்தந்தையின் ஆணை ஓலைப் பிரகடனத்தை ஏற்றுக் கொண்டு ஆசியாவில் கத்தோலிக்கத்தைப் பரப்பும் நோக்கோடு போர்த்துகல்லில் இருந்து இயேசு சபை மதப்பரப்புனர்கள் கோவாவுக்கு அனுப்பப்பட்டனர். போர்த்துகீசியக் குடியேற்ற அரசு கிறித்தவர்களாக திருமுழுக்கு செய்பவர்களுக்கு ஊக்கம் அளித்து வந்தது. ஏழைகளுக்கு இலவசமாக அரிசி வழங்கியும், நடுத்தரக் குடும்பங்களுக்கு அரசுப் பணிகளை வழங்கியும், உள்ளூர் தலைவர்களுக்கு இராணுவ உதவிகளை வழங்கியும் ஊக்கம் கொடுத்தது.[5]

வடக்கு கோவாவில் 300 இந்துக் கோவில்கள் இடித்து அழிக்கப்பட்டன. 1567 டிசம்பர் 4 இல் கடுமையான சட்டங்கள் அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்துச் சடங்குகளுக்குத் தடை விதிக்கப்பட்டன. 15 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் கிறித்தவப் போதனைகளைக் கேட்கவேண்டும் எனவும் மீறுவோருக்குக் கடும் தண்டனை வழங்கப்படும் எனவும் சட்டம் கொண்டுவரப்பட்டது. 1583 ஆம் ஆண்டில் படையினரால் அசோல்னா, குன்கோலிம் நகர்களில் பல கோவில்கள் அழிக்கபட்டன.[6]

படுகொலைகள்

1583 சூலை 15 இல் கொன்சாலோ உரொட்ரீகசு மற்றும் 14 உள்ளூர் கிறித்தவர்களுடன் இயேசு சபையைச் சேர்ந்த ஐந்துக் குருக்கள் குங்கோலின் நகரில் கிறித்தவக் கோவில் ஒன்றைக் கட்டுவதற்கு உகந்த நிலம் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டு அங்கு சென்றனர். அதேவேளையில், குன்கோலிம் நகர மக்கள் பலர் வாள்கள், மற்றும் பிற ஆயுதங்களுடன் கிறித்தவர்கள் கூடிய இடத்தை நோக்கிச் சென்று அவர்களை வாள்களால் வெட்டிக் கொலை செய்தனர்.[2] இவர்களின் உடல்கள் அங்கிருந்த கிணறு ஒன்றினுள் வீசப்பட்டன.[3]

இதனை அடுத்து, அசோல்னா கோட்டையில் பணியில் இருந்த போர்த்துக்கீசத் தளபதி இப்படுகொலைகளை புரிந்தவரக்ளைப் பழி வாங்கத் தீர்மானித்தான்.[7] போர்த்துக்கீச இராணுவம் அக்கிராமத்தில் இருந்த பழத்தோட்டங்களை அழித்து, உள்ளூர் மக்களைத் துன்புறுத்தினர்.[3] குங்கோலிம் கிராம சத்திரியத் தலைவர்கள் அசோல்னா கோட்டையில் பேச்சுவார்த்தைக்காக அழைக்கப்பட்டனர். அங்கு வைத்து இவர்களில் 16 பேர் எவ்வித விசாரணைகள் இன்றி ஆட்சியாளர்களால் கொலை செய்யப்பட்டனர். ஒருவர் அங்கிருந்து அசோல்னா ஆற்றில் குதித்து அண்டைய கர்வார் (இன்றைய கருநாடக மாநிலத்தில் உள்ள) கிராமத்துக்குத் தப்பிச் சென்றார்.[8] இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட தலைவர்களுக்கான நினைவகம் குங்கோலின் நகரில் 2003 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.[3][9]

குருக்கள் அருளாளராக்கப்படல்

கொல்லப்பட்ட இயேசு சபை குருக்களின் உடல்கள் வீசப்பட்ட கிணறு இப்போதும் அங்குள்ள குங்கோலின் புனித பிரான்சிசு சேவியர் தேவாலயத்தின் அருகில் உள்ளது. இக்கிணறு ஆண்டிற்கு ஒரு தடவை பிரான்சிஸ் சவேரியார் நாளன்று மக்களின் பார்வைக்குத் திறந்து விடப்படுகிறது.[3]

1741 ஆம் ஆண்டில் திருத்தந்தை பதினான்காம் பெனடிக்டு இந்த ஐந்து குருக்களும் தியாகிகளாக அறிவித்தார். 1893 ஏப்ரல் 16 இல் இவர்கள் அருளாளர்களாகப் புனிதப்படுத்தப்பட்டனர்.[2] இவர்களின் திருநாள் சூலை 26 ஆம் நாள் கோவாவில் கொண்டாடப்படுகிறது.[2]

இதனையும் காண்க

உசாத்துணைகள்

  • D'Souza, Oriente Conquistado;
  • Goldie, First Christian Mission to the Great Mogul, The Blessed Martyrs of Cuncolim;
  • Gracias, Uma Donna Portuegueza na Corte do Grao-Mogol (1907).
  • Teotonio R. de Souza: Why Cuncolim martyrs? An historical re-assessment, in Jesuits in India in historical perspective, Macao, 1992.

குறிப்புகள்

  1. "Goa History -WHY CUNCOLIM MARTYRS?". Archived from the original on 2008-05-02. பார்க்கப்பட்ட நாள் 2016-07-24.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4  D'Souza, A. X.Z (1913). "Martyrs of Cuncolim". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம். 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 Goa's First Revolt Against Portuguese Rule in 1583 பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்.
  4. Oheraldo Goa's complete online news edition :: Cuncolim-Revolt-not-religious-one-Adv-Radharao பரணிடப்பட்டது 2012-04-06 at the வந்தவழி இயந்திரம்.
  5. Daus, Ronald (1983). Die Erfindung des Kolonialismus. Wuppertal/Germany: Peter Hammer Verlag. p. 33. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-87294-202-6. (இடாய்ச்சு)
  6. Goa Inquisition.
  7. Rowena Robinson, Cuncolim: Weaving a Tale of Resistance, Economic and Political Weekly Vol. 32, No. 7 (Feb. 15–21, 1997), pp. 334–340.
  8. Cuncolim revolt of 1583- First resistance against foreign rule in India பரணிடப்பட்டது 2014-01-07 at the வந்தவழி இயந்திரம்.
  9. Church-Cuncolim Gaunkars clash over martyrs' memorial – November 13, 1999, Goa News.

வெளி இணைப்புகள்