கோர்சிகா

கோர்சிகா:நெப்போலியன் பிறப்பிடம்

கோர்சு (ஆங்கிலம்: Corsica; பிரெஞ்சு: Corse; இத்தாலியம்: Corsica; கோர்சு: Corsica) என்பது மத்தியதரைக் கடலிலுள்ள ஒரு தீவு. இத்தீவு இத்தாலியின் வடக்கு பகுதியிலும் பிரான்சின் தென்கிழக்கு பகுதியிலும் உள்ளது. இதன் பரப்பளவு 8,680 சதுர கி.மீ. ஆகும். இத்தீவின் மக்கட்தொகை 3,02,000 ஆகும். இதற்கு அருகில் உள்ள நிலப்பரப்பு சார்தீனியா தீவு ஆகும்.

இந்த தீவு பிரான்சின் நிர்வாகப் பகுதியாகும். ஹாட்-கோர்ஸ் மற்றும் கோர்ஸ்-டு-சுட் என இரண்டு நிர்வாகத் துறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கோர்சிகன் சட்டமன்றம் வரையறுக்கப்பட்ட நிர்வாக அதிகாரங்களைப் பயன்படுத்த முடியும். ஹாட்-கோர்ஸின் மாகாண நகரம் பாஸ்டியா ஆகும். இந் நகரம் கோர்சிகாவின் இரண்டாவது பெரிய நகரமாகும்.

1284 ஆம் ஆண்டு முதல் ஜெனோவா குடியரசால் ஆளப்பட்ட பின்னர் 1755 ஆம் ஆண்டில் கோர்சிகா ஒரு சுய-பிரகடனப்படுத்தப்பட்ட இத்தாலிய குடியரசாக மாறியது. இது கடன்களுக்கான உறுதிமொழியின் ஒரு பகுதியாக ஜெனோவாவால் அதிகாரப்பூர்வமாக லூயிஸ் XV க்கு வழங்கப்பட்டது. பின்னர் 1769 ஆம் ஆண்டில் இல் பிரான்சுடன் இணைக்கப்பட்டது. நெப்போலியன் பொனபார்ட் அதே ஆண்டு அஜாக்சியோவில் பிறந்தார். அவருடைய மூதாதையர் வீடு ( மைசன் பொனபார்ட் ) இன்று பார்வையாளர்களை ஈர்க்கும் மற்றும் அருங்காட்சியகமாக திகழ்கின்றது. இத்தாலிய தீபகற்பத்துடனான கோர்சிகாவின் வரலாற்று உறவுகள் காரணமாக தீவு பல இத்தாலிய கலாச்சார கூறுகளை பிரபலிக்கின்றது. மேலும் தாய்மொழி ஒரு பிராந்திய மொழியாக பிரெஞ்சு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

புவியியல்

இந்த தீவு தரைக்கடலில் சிசிலி , சார்தீனியா மற்றும் சைப்ரசுக்கு பிறகான நான்காவது பெரிய தீவாகும்.

200 க்கும் மேற்பட்ட கடற்கரைகளையும் கொண்டுள்ளது. மலைப்பாங்கான இத்தீவின் உயர்ந்த சிகரம் மான்டே சின்டோ ஆகும். இந்த சிகரம் 2,706 மீ (8,878 அடி) உயரமுடையது மேலும் 2,000 மீ (6,600 அடி) க்கும் அதிகமான 120 மலை உச்சிகளை கொண்டுள்ளது. மலைகள் தீவின் மூன்றில் இரண்டு பங்கைக் உருவாக்குகின்றன. தீவின் 20% வீதம் காடுகளை கொண்டுள்ளது.

இந்த தீவு இத்தாலியின் டஸ்கனியில் இருந்து 90 கிமீ (56 மைல்) தொலைவிலும், பிரான்சில் கோட் டி அஸூரிலிருந்து 170 கிமீ (110 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இந்த தீவு சார்தீனியா தீவில் இருந்து போனிஃபாசியோ நீரிணையால் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நீரிணை குறைந்தபட்சம் 11 கிமீ (6.8 மைல்) அகலம் கொண்டது.[1]

காலநிலை

கோப்பன் காலநிலை வகைப்பாட்டின் கீழ், கடலோரப் பகுதிகள் வெப்பமான-கோடைகால மத்திய தரைக்கடல் காலநிலையில் வகைப்படுத்தப்படுகின்றது. உள்நாட்டுப்பகுதியில் ஒரு சூடான-கோடைகால மத்திய தரைக்கடல் காலநிலை பொதுவானது. சில மிக உயரமான இடங்கள் உபவடதுருவ காலநிலையையும், (டி.எஸ்.சி, டி.எஃப்.சி) அரிதான குளிர்-கோடைகால மத்திய தரைக்கடல் காலநிலையையும் (சி.எஸ்.சி) கொண்டதாக வகைப்படுத்தப்படுகின்றன.

பொருளாதாரம்

கோர்சிகன் பொருளாதாரத்தில் சுற்றுலாத் துறை பெரும் பங்கை வகிக்கின்றது. தீவின் காலநிலை, மலைகள் மற்றும் கடற்கரையோரங்கள் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமானவை. இந்த தீவும் மத்தியதரைக் கடலின் பிற பகுதிகளைப் போலவே தீவிரமான வளர்ச்சியை அடையவில்லை. சுற்றுலாப் பயணிகள் குறிப்பாக தீவின் தெற்கே போர்டோ-வெச்சியோ மற்றும் வடமேற்கில் கால்வியின் போனிஃபாசியோ ஆகியவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஏராளமாக வருகை தருகின்றனர்.

கோர்சிகாவில் இருந்து பிரான்சின் பிரதான நிலப்பரப்பில் விற்பனை செய்வதற்கும், ஏற்றுமதி செய்வதற்கும் பாற்கட்டி, வைன், தொத்திறைச்சி மற்றும் தேன் ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும் கோர்சிகாவின் முக்கிய ஏற்றுமதிகள் கருங்கல், பளிங்குகள், டானிக் அமிலம், தக்கைகள், பாற்கட்டி, வைன், நாரத்தை பழங்கள், இடலை எண்ணெய் மற்றும் சிகரெட்டுகள் ஆகியவை ஆகும்.[2]

புள்ளிவிபரங்கள்

2013 ஆம் ஆண்டின் மதிப்பீட்டின் படி கோர்சிகாவில் 322,120 மக்கள் வசிக்கின்றனர்.[3] 2011 சனத் தொகை கணக்கெடுப்பின்படி கோர்சிகாவில் வசிப்பவர்களில் 56.3% பேர் கோர்சிகாவின் பூர்வீகத்தையும், 28.6% பேர் பெருநகர பிரான்சின் பூர்வீகத்தையும், 0.3% பிரான்சின் காலனித்துவ நாடுகளின் பூர்வீகத்தையும், 14.8% பிற வெளிநாடுகளின் பூர்வீகத்தையும் கொண்டிருந்தனர்.[4]

கோர்சிகாவில் வெளிநாடுகளில் இருந்து குடியேறியவர்களில் பெரும்பாலோர் குறிப்பாக மொராக்கோ நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். 2011 ஆம் ஆண்டின் சனத் தொகை கணக்கெடுப்பின்படி கோர்சிகாவில் குடியேறியவர்களில் 33.5% பேர் மொரோக்கவைச் சேர்ந்தவர்களும், 22.7% வீதமானோர் தெற்கு ஐரோப்பாவைச் (குறிப்பாக போர்த்துக்கல்)ஐ சேர்ந்தவர்களும், 13.7% வீதமானோர் இத்தாலியர்களும் ஆவார்கள்.[5]

சான்றுகள்