சச்சிதானந்த ராவுத்ராய்

சச்சிதானந்த ராவுத்ராய்
பிறப்பு(1916-05-13)13 மே 1916
குருஜங், குர்தா, ஒடிசா,  இந்தியா
இறப்பு21 ஆகத்து 2004(2004-08-21) (அகவை 88)
கட்டக்
புனைபெயர்சச்சி ரவுத்ரா
வகைகவிதை
குறிப்பிடத்தக்க படைப்புகள்பல்லீசிறி
குறிப்பிடத்தக்க விருதுகள்ஞானபீட விருது

சச்சிதானந்த ராவுத்ராய் (Sachidananda Routray) (1916 மே 13 - 2004 ஆகத்து 21) என்பவர். ஒடிசா மாகாண கவிஞரும், இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், மற்றும் இந்திய இலக்கியத்துக்காக வழங்கப்படும் ஒரு உயரிய விருதான ஞானபீட விருது, இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் நான்காவது உயரிய குடியியல் விருதான பத்மசிறீ, சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதான சாகித்ய அகாடமி, சோவியத் லேண்ட் நேரு விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவருமாகவும் அறியப்படுகிறார்.[1]

பிறப்பும் புரட்சியும்

சச்சி ரவுத்ரா, இந்தியாவின் கிழக்குப் பகுதியான ஒடிசா எனும் ஒரிசா (Orissa) மாநிலத்தின் குர்தா மாவட்டத்தில் உள்ள குருஜங் என்ற இடத்தில் 1916-ம் ஆண்டு மே 13-ம் நாள் பிறந்தார். வங்காள தேசம் இன்றைய கிழக்கு வங்காளத்தில் வளர்ந்து, அங்கேயே கல்வி பயின்றார். பள்ளிப் பருவத்திலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கிய சச்சிதானந்த ராவுத்ராய் 11-வது வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். சுதந்திரப் போராட்ட இயக்கங்கள் அனைத்திலும் தீவிரமாகப் பங்கேற்று பலமுறை சிறை சென்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கதாகும் மேலுமவர், தனது 16 வயதில் எழுதிய ‘பாதேய’ என்ற முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்தது, இவரது புரட்சிகர கருத்துகள் கொண்ட கவிதைகள் பிரித்தானிய அரசால் தடைசெய்யப்பட்டன.[1]

தொகுப்புகள் படைப்புக்கள்

பட்டப்படிப்பை முடித்து, கொல்கத்தாவில் 30 ஆண்டுகள் பணியாற்றிய ராவுத்ராய், அவரது நெடுங்கவிதையான ‘பாஜி ராவுத்’ 1939-ல் வெளிவந்த பிறகு பிரபலமானார். அப்படைப்பு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு வீரமரணம் அடைந்த ஒரு சிறுவனைப் பற்றியதாகும், இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்த அக்கவிதை சிறிய மகா காவியமாகப் போற்றப்பட்டது. மேலும், மிகவும் பாராட்டைப்பெற்ற மற்றொரு கவிதைத் தொகுப்பு ‘பல்லீஸ்ரீ’ இத்தொகுப்பு கிராமப்புறத்தின் எளிமை, கிராம வாழ்க்கையின் ஆனந்தம் ஆகியவற்றையும் இக்கவிதைகள் வெளிப்படுத்தின. சில கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பின்னர், ஒடிசாவுக்கு வெளியேயும் இவரது புகழ் பரவியது ‘பாண்டுலிபி’, ‘அபிஜான்’ போன்ற கவிதைத் தொகுப்புகள் வெளிவந்த பிறகு, ஒடிசா நவீன கவிதை யுகத்தின் முன்னணிக் கவிஞராகப் போற்றப்பட்டார். ஒடிசா கவிதைகளுக்கு புதிய மரபு, புதிய பாணியை வகுத்துத் தந்தார். கதைகளில் பேச்சுமொழியைப் பயன்படுத்தினார். ஓரளவு படித்தவர்கள்கூட புரிந்துகொள்ளும் விதத்தில் இவரது படைப்புகள் எளிமையாக இருந்தன. கதை, நாடகம், நாவல்கள் எழுதுவதிலும் சிறந்து விளங்கிய சச்சிதானந்த ராவுத்ராய், 18 கவிதைத் தொகுப்புகள், 4 கதைத் தொகுப்புகள், ஒரு நாவல், ஒரு காவிய நாடகம், 3 விமர்சன நூல்களைப் படைத்துள்ளார். 1935-ல் வெளியான இவரது ‘சித்ரக்ரீவ்’ நாவல் மிகவும் பிரசித்தி பெற்றது. ‘வசந்த் கே ஏகாந்த் ஜிலே மே’ காவியம் ஆங்கிலத்திலும் இந்திய மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டது. இவரது கதைகள் பெரும்பாலும் பாட்டாளிகள், விவசாயிகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், நலிவுற்றோரைப் பற்றியே இருந்ததால் வெகுசனங்களை அதிகம் கவர்ந்தன. மனித உரிமைகளை வலியுறுத்தும் விதமாகவும், மோசமான சமூக கட்டமைப்புக்கு எதிராகவும் இவரது படைப்புகள் திகழ்ந்தன.[2]

விருதுகள்

இலக்கிய பங்களிப்புகளுக்காக 1986-ல் இவருக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டது. மேலும், இந்த ஞானபீட விருது பெற்ற ஒடிசாவின் முதல் கவிஞர் என்ற பெருமைக்குரிய சச்சி ரவுத்ரா, பத்மசிறீ, சாகித்ய அகாடமி, சோவியத் லேண்ட் நேரு விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். ஆந்திரப் பல்கலைக்கழகம், பிரம்மபூர் பல்கலைக்கழகம், போன்ற பல்கலைகள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தன. பல்வேறு நாடுகளில் நடந்த இலக்கிய மாநாடுகளில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்துகொண்ட சச்சிதானந்த ராவுத்ராய் ‘ஒடிசா கலா பரிஷத்’ என்ற அமைப்பை உருவாக்க காரணமானவர்.[2]

மறைவு

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் கட்டக்கில் 2004-ம் ஆண்டு ஆகத்து 21-ம் நாளில் தனது 88-வது அகவையில் மறைந்த சச்சிதானந்த ராவுத்ராய், 50 ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியத்தின் அனைத்துத் துறைகளிலும் முத்திரை பதித்து, "சாமானிய சனங்களின் பாட்டாளி" என்று போற்றப்பட்டவராக அறியப்படுகிறார்.[2]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Sachidananda Routray Profile". veethi.com(ஆங்கிலம்). 22 November 2013. பார்க்கப்பட்ட நாள் 30 மே 2016.
  2. 2.0 2.1 2.2 "சச்சிதானந்த ராவுத்ராய் 10". tamil.thehindu(தமிழ்). May 13, 2016 10:46 IST. பார்க்கப்பட்ட நாள் 01 சூன் 2016. {cite web}: Check date values in: |accessdate= and |date= (help)