சப்போரா கோட்டை
சப்போராக் கோட்டை (Chapora Fort) இந்தியாவின் கோவாவில் உள்ள பர்தேசு பகுதியில் அமைந்துள்ளது. இது சப்போரா நதியை அண்டி உயர்ந்து காணப்படுகிறது. 1510ல் போர்த்துக்கேயர் கோவாவுக்கு வருமுன்னர் இவ்விடத்தில் ஒரு முசுலிம் கட்டிடம் இருந்தது.[1] போர்த்துக்கேயர் பர்தேசு பகுதியைக் கைப்பற்றிய பின்னர் இக்கோட்டை பல முறை கைமாறியுள்ளது. கோவாவில் போர்த்துக்கேய ஆட்சிக்கு முடிவுகட்டும் நோக்கில், தனது தந்தையின் எதிரிகளான மராட்டியருடன் கூட்டுச் சேர்ந்த இளவரசர் அக்பர், 1683ல் இவ்விடத்தைத் தனது தளமாக ஆக்கினார். இது பழைய ஆக்கிரமிப்புப் பகுதிகளின் புறக் காவலரணாகச் செயற்பட்டது. மராட்டாக்களுடன் இடம்பெற்ற சண்டையொன்றில் இதை மீண்டும் கைப்பற்றிக்கொண்ட போர்த்துக்கேயர் இதனை வலுப்படுத்தினர்.
தற்போதுள்ள கோட்டை, முன்னர் இருந்த கட்டிடத்திற்குப் பதிலாக 1617ல் கட்டப்பட்டது. ஆற்றுக்கு அடுத்தகரையில் இருந்து போர்த்துக்கேயரின் நீண்டகால எதிரியும், பெர்னேமின் இந்து ஆட்சியாளருமான சாவந்த்வாடியின் மகாராசா, 1739ல் இக்கோட்டையைக் கைப்பற்றி இரண்டு ஆண்டுகள் தன்வசம் வைத்திருந்தார். புதிய ஆக்கிரமிப்பின் ஒரு பகுதியாக கோவாவின் வடக்கு எல்லை விரிவாக்கப்பட்டு பேர்னெம் பகுதியும் அதற்குள் அடங்கிய பின்னர் 18 ஆம் நூற்றாண்டின் இறுதி அளவில் இக்கோட்டை அதன் படைத்துறை முக்கியத்துவத்தை இழந்தது.
எல்லாத் திசைகளையும் பார்க்கக்கூடிய வகையில் இக்கோட்டையின் அமைவிடம் உள்ளது. அத்துடன் சுற்றியுள்ள நிலப்பகுதி எல்லாத் திசைகளிலும் மிகைச் சரிவுடன் காணப்படுகின்றது. மிகக்கூடிய சரிவுகளைப் பின்பற்றியே கோட்டையின் வெளிச்சுற்று உருவாக்கப்பட்டு இருப்பதால் இதன் வெளிப்புறச் சுவர் ஒழுங்கற்ற வடிவத்தில் அமைந்துள்ளது. இது நீரிலா அகழிகளைத் தோண்டுவதிலும் வாய்ப்பான ஒரு நிலை ஆகும்.
குறிப்புகள்
- ↑ சப்போரா கோட்டை - கோவா அரசு, சுற்றுலா வாரிய இணையத்தளம். 01 பெப்ரவரி 2014 அன்று பார்க்கப்பட்டது.
இவற்றையும் பார்க்கவும்
வெளியிணைப்புக்கள்
- Chapora fort ratings, reviews and photos on allaboutgoa.com பரணிடப்பட்டது 2011-08-11 at the வந்தவழி இயந்திரம்
- Chapora Fort's spherical panoramas 360°.