சார்லசு-அகஸ்டின் டெ கூலும்
சார்லசு-அகஸ்டின் டெ கூலும் | |
---|---|
இப்போலைட் லெகோட்டின் ஓவியம் | |
பிறப்பு | ஆங்கூலேம், ஆங்கூமொவா, பிரான்சு | 14 சூன் 1736
இறப்பு | 23 ஆகத்து 1806 பாரிஸ், பிரான்சு | (அகவை 70)
தேசியம் | பிரெஞ்சு |
துறை | இயற்பியல் |
அறியப்படுவது | கூலும் விதி |
சார்லசு-அகஸ்டின் டெ கூலும் (Charles-Augustin de Coulomb, பிரெஞ்சு மொழி: [kulɔ̃]; 14 சூன் 1736 – 23 ஆகத்து 1806) பிரான்சிய இயற்பியலாளர் ஆவார். இவர் நிலைமின்னியலை வரையறுக்கும் கூலும் விதியை உருவாக்கியதற்காக மிகவும் அறியப்படுகிறார். உராய்வு குறித்தும் முக்கிய ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். மின்மத்திற்கான அனைத்துலக அலகு கூலும் இவர் நினைவாகவே பெயரிடப்பட்டுள்ளது.
வாழ்க்கை
சார்லசு அகஸ்டின் டெ கூலும் பிரான்சின் ஆங்கூலேமில் என்றி கூலும் கத்தரீன் பாஜெ இணையருக்கு மகனாகப் பிறந்தார். பாரிசிலுள்ள காத்தர்-நாசியோன் கல்லூரியில் (நான்கு நாடுகள் கல்லூரி) மெய்யியல், மொழி, இலக்கியம் பயின்றார். தவிரவும் கணிதம், வேதியியல், வானியல்,தாவரவியல் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றார். இவர் மிகுந்த சுட்டியான, செயலாற்றல் மிக்க இளைஞராக இவரது பேராசிரியர்கள் விவரிக்கின்றனர்.
1761இல் பட்டம் பெற்று பல இடங்களில் அடுத்த இருபதாண்டுகளுக்கு பொறியியலாளராகப் பணியாற்றினார். கட்டமைப்பு, வலுப்படுத்தல், மண் இயக்கவியல் போன்ற பொறியியல் துறைகளில் வல்லமை பெற்றார். 1764இல் மார்ட்டினிக்கில் புதிய போர்போன் கோட்டையைக் கட்ட மேற்கிந்தியத் தீவுகளுக்கு அனுப்பப்பட்டார். இங்கு 1772 வரை பணியாற்றினார்.
பிரான்சிற்குத் திரும்பிய பிறகு பயன்பாட்டு விசையியலில் ஆய்வுக்கட்டுரைகள் எழுதத் தொடங்கினார்; 1773இல் தமது ஆக்கத்தை அறிவியல் அகாதமியில் வழங்கினார். 1779இல் பிரான்சின் தென்மேற்குப் பகுதியில் அத்திலாந்திக்குப் பெருங்கடலோரத்தில் அமைந்திருந்த ரோச்போர்ட்டில் முழுமையும் மரத்தினாலான கோட்டையை கட்டமைக்க அனுப்பப்பட்டார். அங்கிருந்தபோது அங்கிருந்த கப்பல் பட்டறைகளில் தமது சோதனைகளைத் தொடர்ந்தார். இவற்றின் ஊடாக மின்மங்களுக்கிடையேயான விசைக்கும் அவற்றிற்கிடையேயுள்ள தூரத்தின் வர்க்கத்திற்கும் எதிர்மறை தொடர்பு இருப்பதை கண்டறிந்தார்;இதுவே பின்னாளில் கூலும் விதி என அவர் பெயரால் அழைக்கப்பட்டது.
1781இல் பாரிசுக்கு பணிமாற்றம் பெற்றார். 1789இல் நடந்த பிரெஞ்சுப் புரட்சியின்போது பதவி விலகி தமது சிறிய பண்ணைக்கு ஓய்வெடுக்கத் திரும்பினார். புதிய புரட்சி அரசால் பழைய எடைகளும் அளவுகளும் தவறானவையாக அறிவிக்கப்பட புதிய வரைமுறைகளை தீர்மானிக்க மீண்டும் பாரிசுக்கு அழைக்கப்பட்டார். 1802இல் பொதுக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டார். ஆனால் இவரது உடல்நலம் குன்றியதால் நான்காண்டுகள் கழித்து பாரிசில் மரணமடைந்தார்.
Coulomb leaves a legacy as a pioneer in the field of நிலத்தொழில்நுட்பப் பொறியியல் துறையில் தமக்கெனத் தனி இடம் பிடித்துள்ள கூலும் தாங்குச் சுவர் வடிவமைப்பிலும் பெயர்பெற்றவர்.ஈபெல் கோபுரத்தில் பொறிக்கப்பட்டுள்ள 72 பெயர்களில் இவருடையதும் ஒன்றாகும்.
வெளி இணைப்புகள்
- Théorie des machines simples (1821)
- Collection de mémoires relatifs à la physique (1884)
- French National Library The Mémoires of Coulomb available in pdf format.
- O'Connor, John J.; Robertson, Edmund F., "சார்லசு-அகஸ்டின் டெ கூலும்", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.