சித்திரசேனன்


சித்திரசேனன் (Chitrasena), மகாபாரத இதிகாசத்தின் வன பருவத்தில் வரும் ஒரு கந்தர்வன் ஆவார்.

வரலாறு

வனவாசத்தின் போது துவைத வனத்தில் தங்கியிருந்த பாண்டவர்களை பொறாமைக் கொள்ளச் செய்வதற்காக, கர்ணனின் திட்டப் படி துரியோதனன், துச்சாதனன் உள்ளிட்ட அவர் தம்பியர்கள் மற்றும் சகுனி ஆகியோர் பெரும் படை திரட்டி, பாண்டவர்கள் தங்கியிருந்த துவைத வனத்திற்கு அருகில் தங்கி, அங்குள்ள அழகிய ஏரியில் குளிக்க நினைத்தனர்.

துரியோதனனைக் கைது செய்த சித்திரசேனன்

ஏற்கனவே அந்த ஏரியில் சித்திரசேனன் என்ற கந்தர்வன் தனது பரிவாரங்களுடன் குளித்துக் கொண்டிருந்ததைக் கவனியாது, துரியோதனன் தன் தம்பிமார்களுடன் ஏரியில் இறங்கி குளிக்கத் துவங்கினான். அப்போது சித்திரசேனனின் ஆட்கள், துரியோதனாதிகளை ஏரியில் குளிக்க அனுமதி மறுத்தனர்.

இதனால் கோபமுற்ற துரியோதனன் தனது படைவீரர்களுடன் கந்தர்வன் சித்திரசேனனின் படைகளுடன் மோதினான். போரின் முடிவில் சித்தரசேனன் துரியோதனனைப் பிடித்து கைதியாக்கிக் கொண்டான். [1]

துரியோதனனைப் பாண்டவர்கள் விடுவித்தல்

போரில் தப்பிப் பிழைத்த துரியோதனனின் சில போர் வீரர்கள், அருகில் தங்கியிருந்த தருமரிடத்தில் சென்று நடந்தவற்றைக் கூறினர். தருமன், துரியோதனனை கந்தர்வன் சித்திரசேனனிடமிருந்து விடுவிக்கும்படி மற்ற பாண்டவர்களுக்கு ஆணையிட்டார். தருமரின் ஆணையின் படி துரியோதனன் தங்கியிருந்த ஏரிக்கரைக்குச் சென்ற அருச்சுனன் முதலான பாண்டவர்கள் சித்திரசேனனுடன் போரிட்டு, துரியோதனனை விடுதலை செய்தனர்.[2]

அருச்சுனனின் குரு சித்திரசேனன்

அருச்சுனன் பிற தம்பியர்களிடம், தனக்கு ஏற்கனவே அறிமுகமான கந்தர்வன் சித்திரசேனன் என்றும், தனது இந்திரலோகத்து நண்பர் என்றும், அங்கு தனக்கு ஆடல் மற்றும் பாடல்களைக் கற்பித்த குரு என்றும் அறிமுகப்படுத்தினார்.

தற்கொலைக்கு துணிந்த துரியோதனன்

தனது பகைவர்களான பாண்டவர்களின் தயவால் தனக்கு கிடைத்த விடுதலையை எண்ணி எண்ணி, துரியோதனன் பெருந்துயர் கொண்டு உயிரைக் மாய்த்துக் கொள்ளும் வேளையில், தானவர்கள் எதிர் வரும் போரில் பாண்டவர்களை வெற்றிக் கொள்வோம் என உறுதியளித்ததால், துரியோதனன் மனம் மாறி உயிரை மாய்த்துக் கொள்ளும் செயலை நிறுத்தினான்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்