சிவசைலம் கோயில் (Sivasailam Temple) எனப் பொதுவாக அழைக்கப்படும் சிவசைலநாதர் பரமகல்யாணி அம்மன் கோயில் (Sivasailanathar Paramakalyani Amman Kovil), தமிழ்நாட்டிலுள்ளசிவசைலம் கிராமத்தில் அமைந்துள்ளது.[1][2] இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். [3]
அமைவிடம்
தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சியிலிருந்து சுமார் ஐந்து கிமீ தொலைவிலுள்ளது.[4][5] சிற்பங்களும் கல்வெட்டுகளும் கொண்ட இது ஒரு பழமையான மிகப்பெரிய சிவன் கோயிலாகும்.[6]கடனாநதிக்கருகில் அமைந்துள்ள சிவசைலம் வெள்ளி மலை, மேற்கு தொடர்ச்சி மலை, முள்ளி மலைகளால் சூழப்பட்டுள்ளது.
கோயிலமைப்பு
இக்கோயிலின் முதன்மைக் கடவுளான சிவன் சுயம்பு இலிங்க வடிவிலுள்ளார். முதன்மைக் கோபுரம் சிற்ப வேலைப்பாடுகளுடன் ஐந்து அடுக்கு கொண்டது. கோயிலின் தெற்கில் விநாயகர் சிலையும் வடக்கே முருகன் சிலையுமுள்ளது. 63 நாயன்மார்கள், சூரியன், சந்திரன், தட்சிணாமூர்த்தி ஆகியோரின் உருவச்சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. நர்த்த மண்டபம், மாமண்டபம், அர்த்த மண்டபம், மற்றும் மணி மண்டபங்கள் உள்ளன. மணி மண்டபத்தில் நடராசர் சன்னிதி அமைந்துள்ளது.
கல்வெட்டுகள்
1916 ஆம் ஆண்டு பூவன்குறிச்சி ஏரியில் இக்கோயிலின் கல்வெட்டு எண்.519 கண்டெடுக்கப்பட்டது. இக்கல்வெட்டில் ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, கடயம், கிருஷ்ணபுரம், பூவன்குறிச்சி சமீன்தார்கள் கோயிலுக்காக மக்களிடம் வரிவசூல் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
1916 ஆம் ஆண்டு கீழ ஆம்பூரில் மற்றொரு கல்வெட்டும் கண்டுபிடிக்கப்பட்டது. இது இக்கோயிலின் கல்வெட்டு எண் 518 ஆகும். இக்கல்வெட்டில் அரசன் இரவிவர்மன் குலசேகரன் பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது.