சுல்தான்

உதுமானியப் பேரரசின் சுல்தான்களில் மிகப் பிரபலமானவராகக் கருதப்படும் இரண்டாம் முகமது சுல்தான்.

சுல்தான் (Sultan, அரபி: سلطان‎) என்பது வரலாற்றில் பல்வேறு பொருள்களைத் தருகின்ற மதிப்புக்குரிய ஒரு பட்டம் ஆகும். இது வலிமை, வல்லமை, அதிகாரம் போன்ற பொருள்களைத் தருகின்ற அரபு மொழிச் சொல்லான சுல்த்தா (سلطة sulṭah) என்பதில் இருந்து வருவிக்கப்பட்ட ஒரு சொல். எனவே சுல்தான் என்பது, வலிமையுள்ளவர், அதிகாரம் உள்ளவர், ஆட்சியாளன் போன்றவற்றைக் குறிக்கப் பயன்பட்டது. பிற்காலத்தில் இது இசுலாமிய ஆட்சி உள்ள பகுதிகளில், முழு இறைமையுள்ள ஆட்சியாளர்களைக் குறித்தது. சுல்தான்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி சுல்தானகம் எனப்படுகிறது.

சுல்தான்' என்பதின் பெண்பாற் சொல் சுல்தானா என்பதாகும். இசுலாமிய வரலாற்றில் மிக அரிதாகக் காணப்படும் பெண் தலைவர்கள் சுல்தானா என்று குறிப்பிடப்படுகின்றனர்.

தற்காலத்தில், மரபுவழி முடியாட்சி கொண்ட இசுலாமிய நாடுகளில் பல ஆட்சித் தலைவர்கள் அரசன் என்னும் பொதுப் பெயரால் அழைக்கப்பட்டாலும், ஓமான், புரூணை போன்ற நாடுகளின் ஆட்சியாளரைச் சுல்தான் என்னும் வழக்கு இன்றும் உள்ளது.

தற்காலத்துச் சுல்தான்கள்

ஓமான் சுல்தான் மாட்சிமை தாங்கிய சுல்தான் கபூசு பின் சயித் அல் சயித்

அரச குடும்ப, மேட்டுக்குடிப் பட்டங்கள்

சுல்தானின் தாய், வலிடே சுல்தான்.

ஓட்டோமான் பேரரசின் வம்ச முறையில் ஆளும் பாதுசாவின் ஆண் வாரிசுகள் சுல்தான் என்னும் பட்டப்பெயரைக் கொண்டிருந்தனர். அரசுரிமைக்கு வாரிசாக இருப்பவர், முடிக்குரிய இளவரசர் என்னும் பொருளில் தௌலத்லு நஜாபத்லு வலி அகத்-இசுல்தானத் எபென்டி அசரெத்லெரி எனப்பட்டனர். வாரிசு உரிமையற்ற இளவரசர்கள் "இளவரசரின் மகன்" என்னும் பொருளில் சுல்தான் சாடா பே-எபென்டி என்றவாறான பட்டத்தைக் கொண்டிருந்தனர்.

தாத்தாரிய அசுட்ராகான் கானகம் போன்ற சில இசுலாமிய நாடுகளில் சுல்தான் என்பது மேட்டுக்குடியினருக்கு உரிய ஒரு பட்டமாக இருந்தது.

ஓட்டோமான் பேரரசில் ஆளும் சுல்தானின் தாய் வலிடே சுல்தான் என்றும், இளவரசர்களின் தாய் அசேக்கி சுல்தான் எனவும் அழைக்கப்பட்டனர்.

இவற்றையும் பார்க்கவும்

  • அமிர்
  • பாதுசா
  • கான்
  • மாலிக்