சுல்தான் அலாவுதீன் ரியாட் சா

சுல்தான் அலாவுதீன்
ரியாட் ஷா
Alauddin Riayat Shah
மலாக்காவின் 7-ஆவது சுல்தான்
ஆட்சிமலாக்கா சுல்தானகம்: 1477 – 1488
முன்னிருந்தவர்சுல்தான் மன்சூர் ஷா
பின்வந்தவர்சுல்தான் மகமுட் ஷா
துணைவர்1. ராஜா பத்திமா
Raja Fatimah
2. துன் சினாஜா
Tun Senaja
மரபுமலாக்கா சுல்தானகம்
தந்தைசுல்தான் மன்சூர் ஷா
இறப்பு1488
சமயம்இசுலாம்

சுல்தான் அலாவுதீன் ரியாட் சா (மலாய் மொழி: Sultan Alauddin Riayat Shah ibni Almarhum Sultan Mansur Shah; ஆங்கிலம்: Alauddin Riayat Shah of Malacca); என்பவர் மலாக்கா சுல்தானகத்தின் ஏழாவது அரசர். இவர் சுல்தான் மன்சூர் ஷாவின் மகன் ஆவார். 1477 முதல் 1488 வரை மலாக்காவை ஆட்சி செய்தவர்.[1]:246

தன் மக்களின் நல்வாழ்வைத் தனிப்பட்ட முறையில் சரிபார்க்க இரவில் இரகசியமாகச் செல்வதில் பிரபலமானவர். ஓர் இரவில் அவர் ஒரு திருடனைப் பிடிக்கப் பின்தொடர்ந்து ஓடியதாகக் கூட அறியப் படுகிறது.[2]

வரலாறு

சுல்தான் அலாவுதீன் ரியாட் ஷாவின் பதவி குறித்து அவரின் சகோதரர் ராஜா அகமது (Raja Ahmad) பொறாமைப் பட்டார். ஏனெனில் மலாக்காவின் சுல்தான் ஆட்சி தனக்குச் சேர வேண்டிய பதவி என்று ராஜா அகமது நம்பினார்.

அந்தக் கட்டத்தில், மலாக்கா ஆட்சியின் கீழ் இருந்த ஒரு பகுதியான பகாங்கின் ஆட்சியாளராக ராஜா அகமது இருந்தார்.

அரியணை வாரிசு உரிமை

சுல்தான் அலாவுதீனுக்கு அவரின் அரசவைக்கு உள்ளேயும் வெளியேயும் பல எதிரிகள் இருந்தனர். அவருக்கு மொத்தம் நான்கு குழந்தைகள் இருந்தனர். அவரின் இரண்டு மனைவிகளில் தலா இருவருக்கும் இரண்டு பிள்ளைகள்.

அதுவே அவரின் அரியணைக்கு வாரிசு உரிமை குறித்து அவரின் மனைவிகள் சண்டையிட வழிவகுத்தது. சுல்தானின் இரண்டாவது மனைவி இந்திய முஸ்லீம் வம்சாவளியைச் சேர்ந்தவர்.

மர்மமான முறையில் இறப்பு

இந்தக் காலக்கட்டத்தில், சுல்தான் அலாவுதீன் இந்திய முஸ்லீம் மக்களுடன் பிரச்சினைகளை எதிர்கொண்டார். மலாய்க்காரர்களுடன் ஒப்பிடுகையில் இந்திய முஸ்லீம் மக்களின் அதிகாரம் வளரத் தொடங்கியது. அத்துடன் அவரின் புதிய பெண்டகாரா ஸ்ரீ மகாராஜா (Bendahara Seri Maharaja) என்பவரும் இந்திய முஸ்லீம் இரத்தம் கொண்டவர்.

சுல்தான் அலாவுதீன் அரியணையில் 11 ஆண்டுகள் இருந்தார். அவர் மர்மமான காரணங்களால் இறந்ததாக வரலாற்றில் பதிவாகியுள்ளது. முதன்மையாக ராஜா அகமது, பெண்டகாரா ஸ்ரீ மகாராஜா மற்றும் சுல்தானின் இரண்டாவது மனைவி துன் சினாஜா (Tun Senaja) ஆகியோரை உள்ளடக்கிய ஒரு சதியில் சுல்தான் அலாவுதீனுக்கு விசம் கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்று அறியப்படுகிறது.

சதித் திட்டம்

அவரின் மகன், ராஜா மகமுது (Raja Mahmud) மற்றும் அவரது மைத்துனர் ராஜா மெர்லாங் (Raja Merlang) (துன் சினாஜாவின் சகோதரர்) ஆகியோரும் அந்தச் சதியில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

அவரது மறைவுக்குப் பிறகு, மலாக்காவின் சுல்தான் பதவி அவருடைய மகன் ராஜா மகமுதுவிடம் சென்றது. இவர் சுல்தான் அலாவுதீன் ரியாட் ஷாவின் இரண்டாவது மனைவி துன் சினாஜாவுக்குப் பிறந்தவர்.

முதல் மனைவி ராஜா பாத்திமா

மேலும் அரியணைக்கு உண்மையான வாரிசு என்று பரவலாகக் கருதப்பட்ட சுல்தான் அலாவுதீனின் முதல் மகனான ராஜா முனாவருக்கு (Raja Munawar) (முதல் மனைவி ராஜா பாத்திமாவுக்குப் பிறந்தவர்) பதவி மறுக்கப்பட்டது.

எப்படி இருந்தாலும், இறுதியாக மலாக்கா பேரரசின் மீது இந்திய முஸ்லீம்களின் அதிகாரம் கட்டுப்பாட்டைப் பெற்றது. இருப்பினும், ராஜா மகமுது மலாக்காவை 23 ஆண்டுகள் ஆட்சி செய்தார். 1511-இல் மலாக்காவின் மீது போர்த்துகீசியப் படையெடுப்பு நடந்தது. மலாக்காவின் சுல்தானிய ஆட்சியும் முடிவுக்கு வந்தது.

சுல்தான் அலாவுதீன் ரியாத் ஷாவின் கல்லறை ஜொகூர் மாநிலத்தில் பாகோ எனும் இடத்தில் உள்ளது.[3]

மலாக்கா சுல்தான்கத்தின் ஆட்சியாளர்கள்

மலாக்கா சுல்தான்கள் ஆட்சி காலம்
பரமேசுவரா
1400–1414
மெகாட் இசுகந்தர் ஷா
1414–1424
சுல்தான் முகமது ஷா
1424–1444
பரமேசுவரா தேவ ஷா
1444–1446
சுல்தான் முசபர் ஷா
1446–1459
சுல்தான் மன்சூர் ஷா
1459–1477
சுல்தான் அலாவுதீன் ரியாட் ஷா
1477–1488
சுல்தான் மகமுட் ஷா
1488–1511
சுல்தான் அகமட் ஷா
1511–1513
சுல்தான் மகமுட் ஷா
1513–1528

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

சுல்தான் அலாவுதீன் ரியாட் சா
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர் மலாக்கா சுல்தான் பின்னர்

மேலும் காண்க