செங்கிஸ் கானின் கல்லறை

செங்கிஸ்கான் கல்லறையின் பிரதான மண்டபம். கோயிலின் இடது பக்கத்தில் ஆன்ம பதாகை எனப்படும் திரிசூலம் நடப்பட்டுள்ளது.

செங்கிஸ் கானின் கல்லறை (Mausoleum of Genghis Khan) என்பது செங்கிஸ் கானுக்காகக் கட்டப்பட்ட கோயிலாகும். அங்கு இவர் மூதாதையராக, அரச மரபைத் தோற்றுவித்தவராக மற்றும் தெய்வமாக வணங்கப்படுகிறார். இந்த இடம் பாரம்பரியமாக மங்கோலியர்கள் மத்தியில் இறைவனின் உறைவிடம் (கோயில்) என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இந்த இடம் என்றுமே செங்கிஸ் கானின் உடலைக் கொண்டிருக்கவில்லை. செங்கிஸ் கானை வணங்குதலின் முக்கிய மையமாக இந்த இடம் உள்ளது. செங்கிஸ் கானை வழங்கும் பழக்கமானது மங்கோலியா மற்றும் இக்கோயில் அமைந்துள்ள உள் மங்கோலியா ஆகிய இரு இடங்களிலுமே மங்கோலிய ஷாமன் மதப் பழக்கவழக்கமாக வளர்ந்து வருகிறது.[1]

இக்கோயில் சீனாவின் உள் மங்கோலியா மாகாணத்தின் ஓர்டோஸ் பகுதியின் எஜின் ஹோரோ பதாகையில் சின்சியே பட்டணத்தின் கண்டேகூவோ அமைவிடத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலின் பிரதான மண்டபமானது உண்மையில் ஒரு நினைவுச் சின்னமாகும். இங்கு சவப்பெட்டி உள்ளது. ஆனால் அதனுள் தலைப்பாகைகள் மற்றும் பொருட்கள் மட்டுமே உள்ளன. ஏனெனில், செங்கிஸ் கானின் உண்மையான சமாதி என்றுமே கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்தக் கோயிலின் தற்போதைய கட்டட வடிவமைப்பானது 1954 மற்றும் 1956ஆம் ஆண்டுகளுக்கு இடையில் சீன மக்கள் குடியரசின் அரசாங்கத்தால் பாரம்பரிய மங்கோலிய வடிவத்தில் அமைக்கப்பட்டது. சீனப் பண்பாட்டுப் புரட்சியின் போது இக்கோயில் நாசப்படுத்தபட்டு இதில் இருந்த பொருட்கள் அழிக்கப்பட்டன. ஆனால் 1980களில் இக்கோயில் மாதிரிப் பொருட்களை வைத்து மீண்டும் புனரமைக்கப்பட்டது. இன்றும் செங்கிஸ் கான் வழிபாட்டின் மையமாகத் தொடர்ந்து வருகிறது. 2011ஆம் ஆண்டு சீனாவின் தேசிய சுற்றுலா நிர்வாகத்தால் இக்கோயில் AAAAA-தர சுற்றுலா இடமாக பெயரிடப்பட்டது.

மேற்கோள்கள்