டவ் செயல்முறை
டவ் செயல்முறை (Dow process) உப்புநீரிலிருந்து புரோமினைப் பிரித்தெடுக்கும் மின்னாற்பகுப்பு முறையாகும். இது புரோமினை வணிக ரீதியாகத் தயாரிப்பதற்கு எர்பர்ட்டு என்றி டவ் என்பவரின் இரண்டாவது புரட்சிகரச் செயல்முறையாகும்.
1891 ஆம் ஆண்டில் இந்தச் செயல்முறைக்கான காப்புரிமை பெறப்பட்டது. அசல் கண்டுபிடிப்பில், புரோமைடு கலந்துள்ள உப்புநீரோடு வெளுக்கும் தூள் மற்றும் கந்தக அமிலம் கலந்து வினைபுரிந்து புரோமைடு புரோமினாக ஆக்சிசனேற்றம் செய்யப்படுகிறது. அவ்வாறு கிடைக்கும் புரோமின் அப்போதும் நீர்க்கரைசலாக இருக்கிறது. அதை ஒரு சாக்குப்பையின் மீது சொட்டு சொட்டாக விழவைத்து அதன் மீது காற்றை வீசி புரோமின் ஆவியாக்கப்படுகிறது. புரோமின் நிறைந்த வளிமம் இரும்புத் துகள்களோடு கலக்கப்பட்டு, புரோமினானது பெரிக் புரோமைடு கரைசலாக மாற்றப்படுகிறது. இன்னும் அதிகமாக இரும்புத் துகளுடன் வினைபுரிந்து பெரிக் புரோமைடு பெரசு புரோமைடாக மாற்றப்படுகிறது. தேவைப்படும்போது பெரசு புரோமைடு வெப்பத்தின் மூலம் சிதைக்கப்பட்டு புரோமினாக மாற்றப்படுகிறது.[1]
புரோமின் வணிகத்திற்குள் டவ் நுழைவதற்கு முன் புரோமின் தயாரிப்புச் செயல்முறை மிகவும் சிக்கலானதாகவும் அதிகச் செலவு வைப்பதாகவும் இருந்தது. அதில், மரத்துகளை எரித்து உப்புநீர் சூடாக்கப்பட்டு, உப்புநீர் ஆவியான பின் படிகமாகும் சோடியம் குளோரைடு அகற்றப்பட்டது. அதன் பின்னர், ஆக்சிசனேற்றி சேர்க்கப்பட்டுக் கரைசலில் புரோமின் கிடைத்தது. பின்னர் புரோமின் காய்ச்சி வடிக்கப்பட்டது.
டவ்வின் செயல்முறை, பீனாலின் தயாரிப்பில் குளோரோபென்சீன் நீர்பகுப்பாய் முறையாகவும் குறிப்பிடலாம். எலக்ரோபிலிக் அரோமைட்டிக் பதிலீட்டு வினை மூலம் பென்சீன் எளிதில் குளோரோபென்சீனாக மாற்றப்படும். இது நீர்த்த சோடியம் ஐதராக்சைடோடு 350 °C வெப்பநிலை மற்றும் 300 பார் வளிமண்டல அழுத்தத்தில் வினை புரிந்து சோடியம் பினாக்சைடாக அமிலத்தோடு சேர்க்கப்படும் போது மாற்றப்படுகிறது.[2] ஆலசன் குழுவின் (-NO2 போன்ற) ஆர்த்தோ மற்றும் / அல்லது பாரா நிலையில் உள்ள இலத்திரன் ஏற்கும் குழுக்களுக்கு முன்னிலையில் இவ்வினையின் வேகம் பன்மடங்காகிறது.
மேற்கோள்கள்
- ↑ US 460370, H. H. Dow, "Process of Extracting Bromine", issued 1891-09-29
- ↑ http://www.britannica.com/EBchecked/topic/170398/Dow-process