தங்கசாலை தெரு, சென்னை
தங்கசாலை Mint Street | |
---|---|
பராமரிப்பு : | சென்னை மாநகராட்சி |
நீளம்: | 1.6 mi (2.6 km) |
ஆள்கூறுகள்: | 13°5′2″N 80°16′41″E / 13.08389°N 80.27806°E |
North முனை: | வடக்கு வால் சாலை - பழைய சிறைச்சாலை சந்திப்பு, வண்ணாரப்பேட்டை, சென்னை |
South முனை: | பூந்தமல்லி நெடுஞ்சாலை, பூங்கா நகர், சென்னை |
தங்கசாலை தெரு (Mint Street) என்பது தமிழ்நாட்டின், சென்னையில் உள்ள ஜார்ஜ் டவுனில் வணிக முக்கியத்துவம் கொண்ட பிரதான வீதிகளில் ஒன்றாகும். இது சென்னையின் பழைமையான வீதிகளில் ஒன்றாகும், இதுவே நகரத்தில் உள்ள மிக நீளமான தெரு என கருதப்படுகிறது. வடக்குத் தெற்காக உள்ள இந்தச் சாலையானது, தெற்கில் பூங்கா நகரில், பூந்தமல்லி நெடுஞ்சாலையையும் வடக்கில் வண்ணாரப்பேட்டையின், வடக்கு வால் சாலை - பழைய சிறைச்சாலை சந்திப்பு ஆகியவற்றை இணைக்கிறது. இச்சாலை வ. உ. சி சாலையை ஒட்டி நகரின் வேரொரு பழமையான வழித்தடமாகவும் பரபரப்பான தெருக்களில் ஒன்றாகவும் உள்ளது.
வரலாறு
பொ.ஊ. 17 ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசிய யூத வணிகர் ஜாக்வெஸ் டி பைவியா என்பவர் இங்கு யூதர்களுக்கான இடுகாட்டை உருவாக்கினார். பிறகு, இந்த இடுகாடு லாயிட்ஸ் சாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.[1]
18 ஆம் நூற்றாண்டில், கிழக்கிந்திய கம்பெனியினர் தங்களது துணி வணிகத்தை வளர்க்கும் நோக்கில் சலவைத் தொழிலாளிகளை இங்கே குடியமர்த்தினர். இதற்கு வாஷர்ஸ் ஸ்ட்ரீட் என்றும் பெயரிட்டனர். இங்கு குடியமர்த்தப்பட்ட சலவைத் தொழிலாளிகளில் பெரும்பாலானோர் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். சில ஆண்டுகளில் துபாஷி என்று அழைக்கப்பட்ட இரண்டு மொழி பேசும் இடைத்தரகர்களும் முக்கியமாக தெலுங்கு பேசும் கோமுட்டி மற்றும் பெரி செட்டியார்கள் போன்றோரும், குஜராத்தின் சவுராஷ்ட்ரா பகுதியைச் சேர்ந்த துணி வியாபாரிகளும் இங்கே குடியேறினர். இவர்களைத் தொடர்ந்து அடகு வியாபாரத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் மார்வாரிகளும் இங்கே குடியேறினர். இதன் மூலம் தொடக்கம் முதலே இந்தத் தெரு பல மொழி பேசுபவர்கள் வசிக்கும் பகுதியாக இருந்துவருகிறது.[2]
1841-42- களில் கிழக்கிந்திய கம்பெனி, தன் நாணயம் தயாரிக்கும் தொழிற்சாலையை இங்கு மாற்றியதிலிருந்து இந்தத் தெரு ‘மிண்ட் தெரு’ என்ற பெயரைப் பெற்றது. எனவே, தமிழில் இந்தத் தெரு நாணயச் சாலை என்றும் தங்க சாலை என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலேயர்களின் நாணயத் தொழிற்சாலை இருந்த கட்டிடம் பிறகு அரசின் அச்சகமாக மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து தெருவில் பல அச்சகங்கள் தொடங்கப்பட்டன. திரைப்பட ஊடகம் தமிழர்களிடையே பரவிய புதிதிலேயே இங்கு சில திரையரங்குகள் தொடங்கப்பட்டன. நகரின் பல்வேறு பகுதிகளில் கெயிட்டி மற்றும் குளோப் போன்ற திரையரங்குகளை உருவாக்கிய ரகுபதி வெங்கய்யா என்ற ஒளிப்படக் கலைஞரால் கட்டப்பட்ட நகரின் பழைய திரையரங்குகளில் ஒன்றான கிரீன் டாக்கீஸ் துவக்கப்பட்டது மேலும் இங்கு இருந்த கிரவுன் டாக்கிஸ் மற்றும் முருகன் திரையரங்குகளே மிகப் பழமையானவை. முருகன் திரையரங்கில்தான் 1931-ல் வெளியான தமிழின் முதல் பேசும்படமான ‘காளிதாஸ்’ வெளியிடப்பட்டது.[3]
1880-களில் இங்கிருந்த தொண்டை மண்டலம் துளுவ வெள்ளாளர் பள்ளியில் மகா வைத்தியநாத சிவன் என்பவரால் நடத்தப்பட்ட கச்சேரிதான் சென்னையில் முதல் முறையாக நுழைவுச்சீட்டு விற்பனை செய்து நடத்தப்பட்ட கர்னாடக இசைக் கச்சேரி.[4]
1889 இல் இங்கு இந்து இறையியல் பள்ளி நிறுவப்பட்டது, 1909 இல் இங்கு இந்தப் பள்ளியில் சி. சரஸ்வதி பாய் என்பவர் தனது முதல் ஹரிகதை நிகழ்ச்சியை நடத்தினார். ஒரு பெண் ஹரிகதை நடத்தியது இதுவே முதன்முறை என்பதால் கடுமையான எதிர்ப்பு இருந்திருந்தது. 1896 இல் இந்தப் பள்ளிக்கு மகாத்மா காந்தி வருகை புரிந்தார்.
இன்றைய தெரு
தொன்றுதொட்டு இங்கு குஜராத்தியர்களும் ராஜஸ்தான் மார்வாரிகளும் வசித்துவருவதால் ராஜஸ்தானிய உணவு வகைகளின் மையமாக அறியப்படுகிறது.[5]
ராமலிங்க அடிகளின் நினைவில்லமானது இந்தத் தெருவின் வடக்கு முனைக்கு அருகில் அமைந்துள்ள, வீராசாமி தெருவில் அமைந்துள்ளது.
1854 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட தொண்டை மண்டலம் துளுவ வெள்ளாளர் பள்ளி (TTV) , மற்றும் 1889 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்து இறையியல் பள்ளி ஆகியவை இத்தெருவின் இரண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளிகளாகும். தொண்டை மண்டலம் துளுவ வெள்ளாளர் பள்ளி வளாகத்தில் சென்னையின் பழமையான சங்கீத சபாவான தொண்டை மண்டல சபா இயங்கி வந்தது. 1905 ம் ஆண்டு இந்த இந்த சபாவில் நடந்த கூட்டத்தில் திருவையாருவில் பெரிய அளவில் தியாகராஜ ஆரதணை விழாவைக் கொண்டாட முடிவெடுத்தனர்.
சென்னையில் கருனாடக இசையின் பஜனை வடிவத்தை வளர்க்கும் நோக்கில் இந்தத் தெருவில் பல பஜனை மடங்கள் தொடங்கப்பட்டன. நுற்றாண்டைக் கடந்த இரண்டு மடங்கள் இப்போதும் இயங்கிவருகின்றன. தற்போது இந்தத் தெருவில் இருக்கும் சுமைதாங்கி ராமர் கோவில், முன்பு பஜனை மடமாக இருந்தது. இங்கு விநாயகருக்கு கட்டப்பட்ட பல கோவில்கள் உள்ளன. வள்ளலாரால் பாடப்பட்ட கந்தகோட்டம் முருகன் கோயில், இச்சாலையில் உள்ள ரேசப்ப செட்டி தெருவில் அமைந்துள்ளது. இந்தித் திணிப்புப் போராட்ட வீராங்கனை டாக்டர் சா. தருமாம்பாள் இந்த தங்கசாலை தெருவில் இருந்த 330 எண் கொண்ட வீட்டின் மாடியில தங்கி சித்தானந்த வைத்திய சாலை என்ற சித்த வைத்திய சாலையை நடத்திவந்தார்.[6]
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ Muthiah S. (3 September 2007). "The Portuguese Jews of Madras". The Hindu.
- ↑ Sriram, V. (12 June 2013). "A walk through the history of Mint Street, Chennai". Print Week India. PrintWeek.in. பார்க்கப்பட்ட நாள் 16 Mar 2014.
{cite web}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ TNN (29 August 2011). "Madras Week: Memories down the Mint Street". The Times of India (Chennai: The Times Group). http://timesofindia.indiatimes.com/city/chennai/Madras-Week-Memories-down-the-Mint-Street/articleshow/9777333.cms. பார்த்த நாள்: 16 Mar 2014.
- ↑ Sriram, V. (10 December 2011). "Mint Street, music and memories". The Hindu (Chennai: The Hindu). http://www.thehindu.com/features/friday-review/music/mint-street-music-and-memories/article2703706.ece. பார்த்த நாள்: 16 Mar 2014.
- ↑ Ramkumar, Pratiksha (27 August 2012). "Led by nose, group explores Mint St". The Times of India (Chennai: The Times Group). http://timesofindia.indiatimes.com/city/chennai/Led-by-nose-group-explores-Mint-St/articleshow/15797729.cms. பார்த்த நாள்: 16 Mar 2014.
- ↑ "ஆகஸ்ட் 23: டாக்டர் தருமாம்பாள் புறந்த நாள் தங்கச்சாலைத் தலைவி". இந்து தமிழ் திசை. பார்க்கப்பட்ட நாள் 20 ஆகத்து 2023.