தஞ்சோங் காராங்

தஞ்சோங் காராங்
Tanjung Karang
தஞ்சோங் காராங் is located in மலேசியா
தஞ்சோங் காராங்

      தஞ்சோங் காராங்       மலேசியா
ஆள்கூறுகள்: 3°25′N 101°11′E / 3.417°N 101.183°E / 3.417; 101.183
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
மாவட்டம்கோலா சிலாங்கூர் மாவட்டம்
நிர்வாக மையம்கோலா சிலாங்கூர்
உருவாக்கம்1920-களில்
அரசு
 • ஊராட்சிகோலா சிலாங்கூர் ஊராட்சி
(Kuala Selangor District Council)
பரப்பளவு
 • மொத்தம்438 km2 (169 sq mi)
மக்கள்தொகை
 (2015)
 • மொத்தம்33,932
நேர வலயம்மலேசிய நேரம்
ஒ.ச.நே +8
அஞ்சல் குறியீடு
45500[1]
தொலைபேசி எண்கள்+603-3289
போக்குவரத்துப் பதிவெண்கள்B
இணையதளம்www.mdks.gov.my

தஞ்சோங் காராங், (மலாய்: Bandar Tanjung Karang; ஆங்கிலம்: Tanjung Karang; சீனம்: 丹绒加弄); என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் (Kuala Selangor District) உள்ள ஒரு நகரம். மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் இருந்து 65 கி.மீ. வட மேற்கே உள்ளது.

தஞ்சோங் கராங் ஒரு முக்கிம்; ஒரு நகரம்; மற்றும் நெல் வளரும் பகுதியாகும். 1936--ஆம் ஆண்டில் ஒரு தேசிய வேளாண் திட்டத்தின் மூலம் இங்கு நெல் சாகுபடி தொடங்கப்பட்டது.[2]

உள்ளூர் சிறுபான்மை சீனர்களும் இந்தியர்களும் நகர்ப்புற மற்றும் கடலோரப் பகுதிகளில் வாழ்கின்றனர். பெரும்பாலான மலாய்க்காரர்கள் கிராமப் புறங்களில் வாழ்கின்றனர்; மற்றும் விவசாய நடவடிக்கைகளை, குறிப்பாக நெல் சாகுபடிகளை மேற்கொள்கின்றனர்.[3]

பொது

தஞ்சோங் காராங்கில் இருந்து தொடங்கும் ஒரு பெரிய கால்வாய் இந்தப் பகுதியில் உள்ளது. இதனை பான் கால்வாய் Ban Canal என்று அழைக்கிறார்கள். இந்தக் கால்வாய் சபாக் பெர்ணம் மாவட்டத்தில் (Sabak Bernam) முடிவடைகிறது.

நெற்பயிர்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய போதுமான தண்ணீரை வழங்குவதும்; சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வழங்குவதும் இந்தக் கால்வாயின் முக்கியச் செயல்பாடுகள். அத்துடன் கிராம மக்களிடையே நன்னீர் மீன் வளர்ப்புக்கான இடமாகவும் இந்தக் கால்வாய் பயன்படுத்தப்படுகிறது.

தஞ்சோங் காராங் நீர்ப்பாசனத் திட்டம்

1953-ஆம் ஆண்டில், தஞ்சோங் காராங் நீர்ப்பாசனத் திட்டத்தின் (Tanjong Karang Irrigation Scheme Project) ஒரு பகுதியாக, காலனித்துவ மத்திய அரசின் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறையால் (Department of Irrigation and Drainage) இந்தக் கால்வாய் கட்டப்பட்டது. அந்தத் திட்டம், மத்திய சிலாங்கூர் மாநிலத்தின் சதுப்பு நிலத்தை நெல் சாகுபடிக்கு மாற்றி அமைத்த ஒரு சீரமைப்புத் திட்டமாகும்.[4]

வரலாற்றுக் கட்டடம்

தஞ்சோங் காராங் நகரத்தின் நுழைவாயில்

கம்போங் சுங்கை காஜாங்கில் (Kampung Sungai Kajang) பராமரிப்பின்றி ஒரு பழைய வரலாற்றுக் கட்டடம் உள்ளது. இந்தக் கட்டடம் ஒரு காலத்தில் காலனித்துவ காலத்தில் கட்டப்பட்ட பனைச் சர்க்கரை பதப்படுத்தும் ஆலையாக இருந்ததாக நம்பப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் போது, இந்தத் தொழிற்சாலை கைப்பற்றப்பட்டு ஜப்பானிய இராணுவத் தளமாகப் (Japanese Military Base) பயன்படுத்தப்பட்டது.

போரின் அழிவுகளின் சில விளைவுகளை இன்றும் காணலாம். விவசாயம் மற்றும் நில மேம்பாடு காரணமாக, கிட்டத்தட்ட முழு தொழிற்சாலையும் அழிக்கப்பட்ட நிலையில் உள்ளது. கட்டமைப்பின் ஒரு சிறிய பகுதி மட்டுமே இன்றுவரை பராமரிக்கப் படுகிறது.

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்