தலைமுறை

பாட்டியும் பெயர்த்தியும்
ஒரு குழந்தை, அதன் தாய், தாய்வழிப் பாட்டி, கொள்ளுப்பாட்டி (அல்லது "பூட்டி"). ஒரு குடும்பத்தின் நான்கு தலைமுறையைச் சேர்ந்தவர்களைப் படம் காட்டுகிறது.

தலைமுறை என்பது உயிரினங்கள் ஒன்றிலிருந்து இன்னொன்று படிப்படியாகத் தோன்றி வளரும் முறையில் ஒவ்வொரு படியையும் குறிக்கும் சொல்லாகும். பெற்றோர் ஒரு தலைமுறையைச் சேர்ந்தவர்களாக இருக்கும்போது அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகள் அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் ஆகிறார்கள். அப் பிள்ளைகளுக்குப் பிறக்கும் பிள்ளைகள் அவ்விரு தலைமுறைகளினின்றும் வேறுபட்ட மூன்றாவது தலைமுறையினர் ஆகிறார்கள். ஒரு குறித்த மூதாதையிலிருந்து தோன்றும் ஒரு குடும்பக் கிளை அமைப்பில் இவ்வெவ்வேறு தலைமுறைகளை முதலாம், இரண்டாம் மூன்றாம் தலைமுறைகளாகத் தெளிவாக வரையறுக்க முடியும் என்று தோன்றினாலும் சில வேளைகளில் இது அவ்வளவு தெளிவாக இருப்பதில்லை. எடுத்துக்காட்டாகத் தாய்மாமனுக்குப் பெண்களை மணம் முடித்துக் கொடுக்கும் போது இரண்டு தலை முறைகளைச் சேர்ந்தவர்கள் இணைவதைக் காண முடிகிறது. இதனால் இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் எந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்பதில் குழப்பம் ஏற்படும்.

பொதுவாக ஒரு சமுதாயத்தில் தலைமுறைகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, அது சமகாலத்தில் ஏறத்தாழ ஒரு குறிப்பிட்ட வயதெல்லைக்குள் வாழும் குழுவினரை அது குறிக்கிறது. இரண்டு தலைமுறைகளுக்கு இடையே உள்ள கால வேறுபாடு சமுதாயத்துக்குச் சமுதாயம் மாறுபடக்கூடும். குறைந்த வயதிலேயே திருமணம் செய்து கொள்ளும் சமுதாயங்களில் தலைமுறைகளுக்கு இடையேயுள்ள காலவேறுபாடு குறைவாக இருக்கும். மேற்கத்திய சமூகங்களில் இந்த வேறுபாடு ஏறத்தாழ 35 ஆண்டுகள் எனக் கூறப்படுகின்றது. பெண்கள் பொதுவாக ஆண்களிலும் குறைந்த வயதில் மணம் செய்து கொள்வதால் பெண்கள் வழியாக வரும் தலைமுறைகளுக்கு இடையேயான கால இடைவெளி குறைவாக இருக்கும்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. "Definition of Generation". Oxford Advanced Learners' Dictionary.
  2. "Generational Insights and the Speed of Change". American Marketing Association (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-06-30. Archived from the original on 2021-04-11. பார்க்கப்பட்ட நாள் 2024-07-26.
  3. Jane Pilcher (September 1994). "Mannheim's Sociology of Generations: An undervalued legacy". British Journal of Sociology 45 (3): 481–495. doi:10.2307/591659. http://www.history.ucsb.edu/faculty/marcuse/classes/201/articles/94PilcherMannheimSocGenBJS.pdf. பார்த்த நாள்: 10 October 2012.