தல்காய்
தல்காய் (Dalkhai) என்பது இந்தியாவிலுள்ள ஒடிசா மாநிலத்தின் [1] மிகவும் பிரபலமான நாட்டுப்புற நடனம் ஆகும். இதற்காகப் பாடப்படும் ஒவ்வொரு பாடலின் சரணத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் தல்காய் என்கிற வார்த்தை ஒரு பெண் நண்பரின் முகவரியாக பயன்படுத்தப்படுகிறது. அதனால், இது தல்காய் நடனம் என்று அழைக்கப்படுகிறது, முக்கியமாக இந்த நடனத்தின் கருப்பொருள்களாக, ராதா, கிருட்டிணன், மற்றும் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் காணப்படும் சம்பவங்கள் உள்ளது.
தல்காய் தோற்றம்
இந்த நடனம், பைஜூந்தியா, பாகுன் புனி, நுஹாய் போன்ற திருவிழாக் காலங்களில் மேற்கொள்ளப்படுகிறது. வழக்கமாக பின்ஜால், குடா, மிர்தா, சாமா மற்றும் சம்பல்பூர், பாலங்கீர், சுந்தர்கர், பார்கர் மற்றும் நுவாபா மாவட்டங்களில் உள்ள சில பழங்குடியினரைச் சேர்ந்த இளம் பெண்கள் இந்த நடனத்தில் பங்கேற்கின்றனர். தல்காய் நடனம் கிழக்கு இந்திய மாநிலமான ஒரிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தில் இருந்து உருவானதாக கருதப்படுகிறது. இது ஒரிசாவின் மேற்குப் பகுதியில் மிகவும் பிரபலமான நடன வடிவமாக உள்ளது. இந்த நடனத்தில், ஆண்கள் பாடலின் ஒவ்வொரு சரணத்தின் தொடக்கத்திலும் முடிவிலும். 'தல்காய் போ!' என்று சத்தமாக ஒலி எழுப்புகிறார்கள்.
தல்காய் கருப்பொருள்கள்
இந்த நடனத்தில், சிறுமிகளுடன் நடனமாடும் ஆண்கள், ஆட்டத்தின் போது அவர்களுடன் உரையாடுகிறார்கள். மேலும், அவர்களுடன் சேர்ந்து, சுற்றியாடுகின்றனர். ராதா மற்றும் பகவான் கிருட்டிணரின் நித்திய காதல் கதை, இந்து காவியங்களான, ராமாயணம் மற்றும் மகாபாரதத்தின் கதைகள் மற்றும் இயற்கையின் விளக்கம் ஆகியவை இந்த நடனத்தின் முக்கிய கருப்பொருள்களாக உள்ளன.
நடன அமைப்பு
தல்காய் ஒரு சடங்கு நாட்டுப்புற நடனமாக ஒரிசாவில் கருதப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் பாடிய பாடல்கள் தல்காய் பாடல்கள் என்று அழைக்கப்படுகின்றன. பின்ஜால்ஸ், சவுரா மற்றும் மிர்தா பழங்குடியினரின் இளம்பெண்கள் தசரா, பைஜூந்தியா மற்றும் பிற பண்டிகை சந்தர்ப்பங்களில் இந்த நடனத்தை நிகழ்த்துகிறார்கள். இருப்பினும், பழங்குடியினர் அல்லாதவர்களும் இந்த சடங்கு நடனம் மற்றும் பாடல்களில் தயக்கமின்றி பங்கேற்கிறார்கள், இது மேற்கு ஒடிசாவில் பழங்குடி மற்றும் பழங்குடியினர் அல்லாத தொடர்புகளின் அடையாளமாக உள்ளது. இந்த நடனத்தில், இளம் பெண்கள் நடனமாடும்போது ஒரு நேர் வரிசையிலோ அல்லது அரை வட்ட வடிவத்திலோ நிற்கிறார்கள்.[2]
நடனத்தில் பயன்படுத்தும் இசைக்கருவிகள்
இந்த நடனத்துடன் 'டோல்', 'நிசான்' (இரும்பினால் செய்யப்பட்ட ஒரு பெரிய அளவிலான முரசு), 'தம்கி' (ஒரு சிறிய ஒரு பக்க பறை 6 " விட்டம்; இரண்டு குச்சிகளால் ஆடப்படுகிறது), 'தாசா' (ஒரு பக்க முரசு) மற்றும் 'மஹூரி' போன்ற இசைக்கருவிகள் இசைக்கப்படுகின்றன. இருப்பினும், 'டோல்' கருவியை வாசிப்பவர், பெண்கள் முன் நடனமாடும்போது ஆட்டத்தின் போக்கை கட்டுப்படுத்துபவராக இருக்கிறார்.
உடை/அணிகலன்கள்
இந்த முறையில் நடனம் ஆடும் பெண்கள் வண்ணமயமான அச்சிடப்பட்ட சம்பல்பூரி சேலையை அணிவார்கள். இரு கைகளிலும் துணியின் முனைகளை வைத்திருக்கும்படியாக, தோள்களில் ஒரு தாவணியைக் கட்டுகிறார்கள். கழுத்தணி, வளையல்கள் போன்ற பல்வேறு பாரம்பரிய நகைகள் ஆடும் கலைஞர்களின் தோற்றத்தை நிறைவு செய்கின்றன.
ஊடகங்களில் செய்தி
புதுதில்லியிலுள்ள ராஜ்பத் என்னுமிடத்தில் இந்தியாவின் 67வது குடியரசு தின அணிவகுப்பின் போது, ஒடிசாவின் பாரம்பரிய நடனமான 'தல்காய்' காட்சிபடுத்தப்பட்டது. இதில், அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரெஞ்சு நாட்டின் குடியரசுத் தலைவர் பிராங்கோயிஸ் ஹாலண்ட் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்துகொண்டனர். [3] சிறப்பு விருந்தினர்களுக்கு மேற்கு ஒடிசாவின் சம்பல்பூரில் இருந்து வந்த நாட்டுப்புற நடனம் 'தல்காயின்' ஒரு பார்வை வழங்கப்பட்டது. தலைநகரைச் சேர்ந்த சுமார் 140 பள்ளி மாணவிகள் மாநிலத்தின் பிரபலமான நாட்டுப்புற இசையின் இசைக்கு ராஜ்பத்தில் ஒரு நடனத்தை வழங்கினர். 'தல்காய்' நடனம் பழங்குடி சிறுமிகளின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை சித்தரிக்கிறது.
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-02-16. பார்க்கப்பட்ட நாள் 2020-02-28.
- ↑ https://orissadiary.com/sambalpuri-dance-goes-global-dance-group-performed-sambalpuri-dance-backdrop-burj-khalifa-dubai/
- ↑ https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/67th-republic-day-tableaux-depict-ancient-odisha-bauls-of-bengal/articleshow/50729068.cms