திருநெல்வேலி மாவட்டம்

திருநெல்வேலி மாவட்டம்
அடைபெயர்(கள்): Halwa City
Location in Tamil Nadu
Location in Tamil Nadu
Tirunelveli district
ஆள்கூறுகள்: 8°39′00″N 77°22′59″E / 8.65°N 77.383°E / 8.65; 77.383
Country இந்தியா
State தமிழ்நாடு
District formed on1 செப்டம்பர் 1790; 233 ஆண்டுகள் முன்னர் (1790-09-01)
Headquartersதிருநெல்வேலி
வட்டம் (தாலுகா)அம்பாசமுத்திரம், நாங்குநேரி, பாளையங்கோட்டை, இராதாபுரம், திருநெல்வேலி, சேரன்மகாதேவி, மானூர், Thisayanvilai
அரசு
 • வகைDistrict Administration
 • நிர்வாகம்Tirunelveli District Collectorate
 • CollectorK. P. Karthikeyan, IAS
 • Superintendent of PoliceP.Saravanan, I.P.S.
பரப்பளவு
 • மொத்தம்3,907 km2 (1,509 sq mi)
 • பரப்பளவு தரவரிசை1
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்16,36,438
 • அடர்த்தி410.5/km2 (1,063/sq mi)
Languages
 • OfficialTamil
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
PIN
627***
Telephone code0462
வாகனப் பதிவுTN-72 (Tirunelveli City) and TN-72A (Valliyur Region) and TN-76A (Ambasamudram)
Coastline48.9 கிலோமீட்டர்கள் (30.4 mi)
Largest cityதிருநெல்வேலி
Sex ratioM-49%/F-51% /
Literacy82.90% (2011)
Legislature typeelected
Legislature Strength5
பொழிவு814.8 மில்லிமீட்டர்கள் (32.08 அங்)
Avg. summer temperature37 °C (99 °F)
Avg. winter temperature22 °C (72 °F)
இணையதளம்tirunelveli.nic.in

திருநெல்வேலி மாவட்டம் (Tirunelveli district) இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் திருநெல்வேலி ஆகும். இந்த மாவட்டம் 3,876.06 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது.

மாவட்டப் பிரிப்பு

20 அக்டோபர்,1986இல் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து, சில பகுதிகளை பிரித்து தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு புதிய தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டது.

12 நவம்பர் 2019-இல் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து, சில பகுதிகளை பிரித்து,தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய தென்காசி மாவட்டம் நிறுவ தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு தற்பொழுது தென்காசி தனி மாவட்டமாக உருவாகியது.[2][3]

வரலாறு

"திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி" என சம்பந்தரும், "தண் பொருநைப் புனல்நாடு' எனச் சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி" என்று கம்பரும் பாடிய பூமி, திருநெல்வேலி ஆகும். 1790 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி[4][5] திருநெல்வேலி மாவட்டம் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியால் உருவாக்கப்பட்டது. (அன்றைய தினத்தில் திருநெல்வேலி மாவட்டத்துடன் இன்றைய தூத்துக்குடி மாவட்டமும், தென்காசி மாவட்டமும், விருதுநகர் மாவட்டத்தின் சில பகுதிகளும் இருந்தன.) செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி திருநெல்வேலி தினமாக கொண்டாடப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆதிச்சநல்லூரிலும், கொற்கையிலும் மேற்கொண்ட புதைபொருள் ஆய்வுகள்வழி தமிழர்களின் பழங்கால நாகரிகங்கள் உலகுக்குத் தெரியவந்தன. வேளாண்மை, தொழில் திறமை, பழக்க வழக்கங்கள் பற்றிய சிறப்பை இங்குக் கிடைத்த பொருட்களின் மூலம் உணரமுடிகிறது. கி.மு.1200-இல் நெல் பயிரிடப்பட்டதையும், தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், மேலைநாடுகளுக்கும் அனுப்புவதற்காக இரும்பு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்ட விபரங்களையும் இந்தப்புதைபொருள் ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. இம்மாவட்டத்து ஊர்ப் பெயர்கள் அனைத்தும் வரலாற்றுச் செய்திகளைக் கூறுவனவாகவே உள்ளன. பாண்டி நாட்டின் தென்பகுதியே திருநெல்வேலிச்சீமை. பாண்டியர்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து இப்பகுதியை ஆண்டதை வரலாறு மெய்ப்பிக்கிறது.

சோழர் பேரரசு உருவான காலத்தில் பாண்டியர் அவர்களின் ஆளுகையில் கீழ் இருந்தனர். சோழப்பேரரசை முடிவுக்குக் கொண்டு வந்தவன் ஜடவர்ம சுந்தரபாண்டியன். பின்னர் பாண்டியர்களுக்குள் சண்டை மூண்டதால், மாலிக்காப்பூர் மதுரையைச் சூறையிட்டான். பாண்டியர்களின் சந்ததியினர் மதுரையிலிருந்து, திருநெல்வேலியை அடைந்து 'நெல்லைப் பாண்டியர்'களாகக் காலங்கழித்தனர். 15-நூற்றாண்டு முதல் விஜயநகர, நாயக்கர் ஆட்சி மதுரையில் தொடங்கியது. பாண்டிய அரசு துண்டாடப்பட்டு தமிழ்நாடே 72 பாளையப்பட்டாக நாயக்கர் ஆட்சியில் பிரிக்கப்பட்டது. இந்தப் பாளையங்கள் உருமாறி 1910ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது 31 ஜமீன்கள் இருந்தன. அவற்றில் குறிப்பிட்டத்தன: நாங்குநேரி, சொக்கம்பட்டி, சிவகிரி, தலைவன் கோட்டை, நெற்கட்டும்சேவல், ஊத்துமலை, எட்டயபுரம். பாளையபட்டுகளை நிர்வகித்தவர்கள் அரியநாத முதலியாரும், வடமலையப்பன்பிள்ளையும் ஆவர்.

மாவட்ட நிர்வாகம்

இம்மாவட்டம் 2 வருவாய் கோட்டங்களும், 8 வருவாய் வட்டங்களும் கொண்டது.[6]

வருவாய் கோட்டங்கள்

  1. திருநெல்வேலி
  2. சேரன்மகாதேவி

வருவாய் வட்டங்கள்

  1. திருநெல்வேலி வட்டம்
  2. நாங்குநேரி வட்டம்
  3. பாளையங்கோட்டை வட்டம்
  4. ராதாபுரம் வட்டம்
  5. திசையன்விளை வட்டம்
  6. மானூர் வட்டம்
  7. சேரன்மாதேவி வட்டம்
  8. அம்பாசமுத்திரம் வட்டம்

உள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம்

இம்மாவட்டம் திருநெல்வேலி மாநகராட்சி, 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள்[7], 9 ஊராட்சி ஒன்றியங்கள்[8] மற்றும் 425 கிராம ஊராட்சிகள் கொண்டது.[9]

மாநகராட்சி

நகராட்சிகள்

நகராட்சி அந்தஸ்தை பெற உள்ள பேரூராட்சிகள்

சேரன்மகாதேவி

பணகுடி

கல்லிடைகுறிச்சி

திசையன்விளை

வடக்கு வள்ளியூர்

பேரூராட்சிகள்

ஊராட்சி ஒன்றியங்கள்

மக்கள் வகைப்பாடு

மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டும.தொ.ஆ. ±%
19019,82,363—    
191110,61,965+0.78%
192111,54,547+0.84%
193112,42,552+0.74%
194113,76,604+1.03%
195115,47,268+1.18%
196116,77,309+0.81%
197119,72,220+1.63%
198122,03,462+1.11%
199124,81,880+1.20%
200127,03,492+0.86%
201130,77,233+1.30%
சான்று:[10]

2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள்தொகை 30,77,233 ஆகும். அதில் ஆண்கள் 16,42,403 ஆகவும்; பெண்கள் 16,80,241 ஆகவும் உள்ளனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 82.50% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 3,21,687 ஆகவுள்ளனர்.

இம்மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 78.82% ஆகவும், கிறித்தவர்கள் 11.85% ஆகவும், இசுலாமியர்கள் 9.12% ஆகவும், மற்றவர்கள் 0.18% ஆகவும் உள்ளனர்.

அரசியல்

இம்மாவட்டம் 5 சட்டமன்றத் தொகுதிகளையும், ஒரு மக்களவைத் தொகுதியையும் கொண்டுள்ளது.

நாடாளுமன்றத் தொகுதிகள்

சட்டமன்றத் தொகுதிகள்

  1. திருநெல்வேலி (சட்டமன்றத் தொகுதி)
  2. பாளையங்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)
  3. அம்பாசமுத்திரம் (சட்டமன்றத் தொகுதி)
  4. இராதாபுரம் (சட்டமன்றத் தொகுதி)
  5. நாங்குநேரி (சட்டமன்றத் தொகுதி)

எல்லைகள்

இது, கிழக்கில் வங்காள விரிகுடா மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தையும்; மேற்கில் கேரளத்தையும்; வடக்கில் தென்காசி மாவட்டத்தையும், தெற்கில் கன்னியாகுமரி மாவட்டத்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

பொதுவிவரங்கள்

மழையளவு: 814.8 மி.மீ; புகைவண்டி நிலையங்கள்: 26; காவல் நிலையங்கள்: 80; சாலைநீளம்: 5,432 கி.மீ; பதிவுபெற்ற வாகங்கள்: 48,773; அஞ்சலகங்கள்: 553; தொலைபேசிகள்: 29,779.

பூவன்குறிச்சி ஏரியில் பொதிகை மலையின் பிரதிபலிப்பு

கல்வி

பள்ளிகள்: தொடக்கப்பள்ளிகள் 1,460 - நடுநிலை 411 - உயர்நிலை 90 - மேல்நிலை 129 - கல்லூரிகள் 14 உள்ளன. இவை தவிர தொழில் கல்வி நிறுவனங்கள்-3; அரசு மருத்துவக் கல்லூரி; அரசு சித்த மருத்துவக் கல்லூரி; தொழிற்பயிற்சி நிறுவனங்கள்-7; தொழிற் நுட்பக் கல்லூரிகள் 5; ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்-8.

மருத்துவம்

மருத்துவ மனைகள்-10; மருந்தகங்கள்-3; தொடக்க மருத்துவ நல நிலையங்கள்-55; துணை தொ.ம.நல நிலையங்கள்-385.

இந்து சமயக் கோயில்கள்

தென்பாண்டி நாட்டில் அதுவும் குறிப்பாக தாமிரபரணி நதிக்கரையின் இரு ஓரங்களிலும் 274 சிவாலயங்கள் சிறப்புற்று விளங்கி இருந்ததாக பல புராணங்கள் கூறுகின்றன. அத்தகைய புராணங்களில், தாமிரபரணி மகாத்மியம், நவசமுத்திர மகாத்மியம், சிவசைல மகாத்மியம், திருப்புடை மருதூர் மகாத்மியம், திருக்குற்றால தலபுராணம், தென்காசி தலபுராணம், கருவை தலபுராணம், திருச்செந்தூர் புராணம் போன்ற நூல்களில் தென்பாண்டி நாட்டில் உள்ள சிவாலயங்கள் திரி (3), பஞ்ச (5), அஷ்ட (8), நவ (9), தச (10) போன்ற எண்ணிக்கையில் பிரித்து நம் முன்னோர்கள் வழிபட்டுள்ளனர். குற்றாலத்தில் குற்றாலம் குற்றாலநாதர் கோயில் அமைந்துள்ளது.

காந்திமதி நெல்லையப்பர் கோவில்

இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவையாக ஐந்து தலங்கள் இருக்கின்றன. சிவபெருமானுக்கான ஐம்பெரும் சபைகளில் "தாமிர சபை" என்று போற்றப்படுவது திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில். இக்கோயில் தெற்கிலிருந்து வடக்குப் பக்கமாக 756 அடி நீளமும், மேற்கிலிருந்து கிழக்காக 378 அடி அகலமும் கொண்டதாக இருக்கிறது. மேலும் இது ஆசியாவின் மிகப்பெரிய சிவன் கோயில் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயிலில் நெல்லையப்பர், காந்திமதியம்மன் என்று இரண்டு சமமான பிரிவுகளில் சுவாமிக்கும் அம்மனுக்கும் தனித்தனிக் கோயில்கள் இருக்கின்றன. இந்தக் கோயில்கள் இரண்டும் அழகிய கல் மண்டபம் ஒன்றின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.

சபை சிவாலயங்கள்

இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவை என்று ஐந்து உள்ளன. இந்த ஐம்பெரும் மன்றங்களில் (சபைகள்) இரண்டு மன்றங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

முப்பீட தலங்கள்

பஞ்ச ஆசன தலங்கள்

  • ஏர்வாடி - திருவழுந்தீசர் திருக்கோயில்
  • களக்காடு - சத்யவாகீசர் திருக்கோயில்
  • நாங்குநேரி - திருநாகேஷ்வரர் திருக்கோயில்
  • விஜயநாராயணம் - மனோன்மணீசர் திருக்கோயில்
  • செண்பகராமநல்லூர் - இராமலிங்கர் திருக்கோயில்

தென்பாண்டி நாட்டின் பஞ்ச பூத தலங்கள்

காசிக்கு சமமான பஞ்ச குரோச தலங்கள்

இராமர் வழிபட்ட பஞ்சலிங்க தலங்கள்

  • களக்காடு- சத்யவாகீசர்
  • பத்தை - குலசேகரநாதம்
  • பத்மனேரி - நெல்லையப்பர்
  • தேவநல்லூர் - சோமநாதம்
  • சிங்கிகுளம் - கைலாசநாதம்

நவ சமுத்திர தலங்கள்

  • அம்பாசமுத்திரம்
  • ரவணசமுத்திரம்
  • வீராசமுத்திரம்
  • அரங்கசமுத்திரம்
  • தளபதிசமுத்திரம்
  • வாலசமுத்திரம்
  • கோபாலசமுத்திரம்
  • வடமலைசமுத்திரம் (பத்மனேரி)
  • ரத்னகாராசமுத்திரம் (திருச்செந்தூர்- இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)

பஞ்ச பீட தலங்கள்

பஞ்ச பீட தலங்களில் முதல் நான்கு தலங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன.

  • கூர்ம பீடம் - பிரம்மதேசம்
  • சக்ர பீடம் - குற்றாலம்
  • பத்ம பீடம் - தென்காசி
  • காந்தி பீடம் - திருநெல்வேலி
  • குமரி பீடம் - கன்னியாகுமரி. இது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது.

சிவ கைலாயங்கள் (ஆதி கைலாசம்)

  • பிரம்மதேசம் - கைலாசநாதர் திருக்கோயில்
  • அரியநாயகிபுரம் - கைலாசநாதர் திருக்கோயில்
  • திருநெல்வேலி (தென்கைலாயம்)- தென்கைலாசநாதர் (நெல்லையப்பர்) திருக்கோயில்
  • கீழநத்தம் (மேலூர்)- கைலாசநாதர் திருக்கோயில்
  • முறப்பநாடு - கைலாசநாதர் திருக்கோயில் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
  • தென்திருப்பேரை - கைலாசநாதர் திருக்கோயில் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
  • சேர்ந்தபூமங்கலம் - கைலாசநாதர் திருக்கோயில் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
  • கங்கைகொண்டான் - கைலாசநாதர் திருக்கோயில்
  • தச வீரட்டானத் தலங்கள் (மேற்கு சிவாலயங்கள்)
  • சிவசைலம் - சிவசைலப்பர் திருக்கோயில் - பக்த தலம்
  • வழுதூர் - அக்னீஸ்வரர் திருக்கோயில் - மகேச தலம்
  • கோடகநல்லூர் - அவிமுக்தீஸ்வரர் திருக்கோயில் - பிராண லிங்கத் தலம்
  • சிங்கிகுளம் - கைலாசநாதர் திருக்கோயில் - ஞானலிங்கத் தலம்
  • மேலநத்தம் - அக்னீஸ்வரர் திருக்கோயில் - சரண தலம்
  • ராஜவல்லிபுரம் - அக்னீஸ்வரர் திருக்கோயில் - சகாய தலம்
  • தென்மலை - திருப்பாத்தீஸ்வரமுடையார் திருக்கோயில் - பிரசாதி தலம்
  • அங்கமங்கலம் - நரசிங்கஈஸ்வரமுடையார் திருக்கோயில் - கிரியாலிங்க தலம்
  • காயல்பட்டினம் - மெய்கண்டேஸ்வரர் திருக்கோயில் - சம்பத் தலம் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
  • திற்பரப்பு - மகாதேவர் திருக்கோயில் (இது தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது)
  • இருக்கன்துறை - கைலாசநாதர் திருக்கோயில்

வாலி வழிபட்டத் தலங்கள்

  • திருவாலீஸ்வரம் - திருவாலீஸ்வரர் திருக்கோயில்
  • கீழப்பாவூர் - திருவாலீஸ்வரர் திருக்கோயில்
  • தென்காசி வாலியன்பத்தை - திருவாலீஸ்வரர் திருக்கோயில்

நவகைலாயங்களும் நவக்கிரகங்களின் ஆட்சியும்

  • பாபநாசம் - சூரியன்
  • சேரன்மகாதேவி - சந்திரன்
  • கோடகநல்லூர் - செவ்வாய்
  • குன்னத்தூர் - இராகு
  • முறப்பநாடு - குரு (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
  • ஸ்ரீவைகுண்டம்- சனி (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
  • தென்திருப்பேரை - புதன் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
  • ராஜபதி - கேது (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
  • சேர்ந்தபூமங்கலம் - சுக்கிரன் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)

தேவாரத் திருத்தலங்கள்

குற்றாலம் குற்றாலநாதர் திருக்கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில் என தேவாரம் பாடல் பெற்ற இரு சிவாலயங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளன.

வேறு சில ஆலயங்கள்

  • இது தவிர தென் காளஹஸ்தி என்று போற்றப்படும் கரிசூழ்ந்தமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயிலை சுற்றி அஷ்டலிங்க தலங்கள் உள்ளதாக திருநெல்வேலி தல புராணம் கூறுகிறது. துர்வாச முனிவர் வழிபட்ட இந்த கோயில்கள் பற்றி ஆய்வுகள் நடந்து வருகின்றன.
  • நெல்லையிலிருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கிருஷ்ணாபுரத்தில் திருவேங்கடநாதர் கோவில் உள்ளது.
  • நெல்லையிலிருந்து சுமார் 53 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது தென்காசி. தென்னிந்தியாவின் காசி (வாரணாசி) என்று அழைக்கப்படும் இந்நகர் சுமார் 400 ஆண்டுகால வரலாறு கொண்டது.
  • சங்கரன்கோவில் எனும் ஊரில் உள்ள சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில் தனிச்சிறப்பு பெற்று விளங்குகிறது. இந்நகர் கி.பி.11ஆம் நூற்றாண்டில் உருவானது.

கருப்பூந்துறை ஸ்ரீ சிவகாம சுந்தரி உடனுறை ஸ்ரீ அழியாபதி ஈஸ்வரர் திருக்கோயில் (மேலப்பாளையம் - வழி கருப்பூந்துறை திருநெல்வேலி மாநகரம்)

கிறிஸ்துவ ஆலயங்கள்

கித்தேரியம்மாள் திருத்தலம்.கூத்தன்குழி

  • புனித மூவரசர் தேவாலயம்
 கூத்தன்குழி

ஆற்றுவளம்

மேற்குத் தொடர்ச்சி மலை இருப்பதால் பல சிற்றாறுகளும், பேராறுகளும் இங்கு உற்பத்தியாகி நீர்வளத்தைத் பெருக்கியுள்ளன.

தாமிரபரணி

தாமிரபரணி

பொதியமலையில் பேயாறு, உள்ளாறு, பாம்பாறு, களரியாறு, சேர்வை ஆறு ஆகிய வற்றின் நீரால் தாமிரபரணி தோன்றுகிறது. இந்த ஆறு ஆழ்வார் திருநகரிக்கு 20 கி.மீ. தொலைவிலுள்ள புன்னைக் காயல் என்னுமிடத்தில் மன்னார் வளைகுடா கடலுடன் கலக்கிறது. தென்மேற்கு பருவமழையாலும், வடகிழக்குப் பருவ மழையாலும் இந்த ஆற்றுக்கு நீர் வருகிறது. இதனால் பயனடையும் பரப்பு 1,750 ச.கி.மீ. மைல்களாகும். இந்த ஆற்றின் நீளம் 121 கி.மீ. தான். இதிலும் 24 கி.மீ. தொலைவு மலைமீதே பாய்கிறது. மலைக்குக் கீழே இதன் ஓட்டம் 97 கி.மீ. தான்.

சிற்றாறு

இதன் நீளம் 62 கி.மீ. இந்த ஆற்றினால் தென்காசி-திருநெல்வேலி வட்டங்களில் 27,000 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன. குற்றாலமலை அருவியிலிருந்து ஆறாக உருப்பெறுகிறது. இது தவிர நம்பியாறு, பச்சையாறு, கொடுமுடியாறு, கடனாநதி முதலிய பல சிற்றாறுகள் இம்மாவட்டம் முழுவதும் உண்டு.

அணைகள்

மணிமுத்தாறு அணை

மணிமுத்தாறு அணை

அணையின் மொத்த நீளம் 3 கி.மீ. அதாவது 9,820 அடியாகும். அதன் நடுவேயுள்ள கல் அணையின் நீளம் 1,230 அடி. தேக்கம் கூடிய நீரின் பரப்பு மூன்றே கால் ச.மைல். சாதாரணமாக 406 கோடி கன நீரைத் தேக்கலாம். இதன் மூலம் 65,000 ஏக்கர் நிலங்கள் நீர்பாசன வசதி பெறுகின்றன.

பாபநாசம் அணைகள்

பாபநாசம் மலை மீது மேலணை-கீழணை என்ற 2 அணைகள் கட்டப்பட்டுள்ளன. மேலணை 2 மலைகளுக்கிடையில் கட்டப்பட்டுள்ளது. இங்கு 120 அடிவரை நீரைத் தேக்கி வைக்கலாம். மேலணையிலிருந்து இரு திறப்புக் குழாய்களின் வாயிலாக வெளி வரும் நீர் 40 அடி தொலைவில் விழுகிறது. அதன் அழுத்தத்தால் அந்நீர் 10 கி.மீ. தொலைவிலுள்ள கீழணையில் தேக்கி வைக்கப்பட்டு, 8 அடி விட்டமுள்ள இரு குழாய்களின் வாயிலாக நீரைக் கொண்டு சென்று மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஸ்ரீமுகப்பேரி அணை

தென்காசி வட்டத்திலிருந்து வரும் கறுப்ப நதி மூன்று மைல்கள் தூரம் ஓடி, பிறகு அனும நதியோடு இணைகிறது. இவ்விடத்தில் மோட்டை அணையும், ஸ்ரீமுகப்பேரி அணையும் உள்ளன. இராமாநதித்திட்டத்தின் மூலம் 1,500 ஏக்கரும், கருணையாற்றின் திட்டத்தால் 7,500 ஏக்கரும் பாசனம் பெறுகின்றன.

கடனா நதி (கருணை ஆறு) அணை

கடனாநதி (கருணை ஆறு)அணை

சம்பங்குளத்தில் உள்ளது கடனாநதி அணை.

மலைவளம்

திருநெல்வேலியிலுள்ள பணகுடிக்கு அருகில் இருந்து ஆரம்பிக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை மும்பை வரை செல்கிறது. சிவகிரியில் உள்ள மலையில் 20 மலை முகடுகள் உள்ளன. இவற்றின் சராசரி உயரம் 1,500 மீட்டர் ஆகும்.

அகத்தியமலை

பொதிகை மலை என்பது இதுதான். இதன் உயரம் 1,800 மீ. இங்குதான் தாமிரபரணி உற்பத்தியாகிறது. அகத்தியர் மலை மலைமுகடுகளால் போர்த்தப்பட்டே காட்சி தரும். இரண்டு பருவக்காற்றுகளாலும் இம்மலை நன்மை அடைகிறது.

ஐந்தலை பொதிகை

அகத்திய மலைக்குத் தெற்கே இம்மலை இருக்கிறது. சமவெளியிலிருந்து கிழக்கே நோக்கினால், வரிசையாக அணிவகுத்து நிற்கும் உருவத்தோற்றம் தென்படும். இங்கே தான் நாகமலையும் அதன் பக்க மலைகளும் உள்ளன. திருக்குறுங்குடிக்கப்பால் இம்மலைபகுதி 1,800 மீ. வரை உயர்ந்து காணப்படுகிறது. இதுவே திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையின் இறுதிக் கட்டமாகும்.

காட்டு வளம்

காடுகளின் பரப்பு 40,25,316 ஹெக்டேர்கள். இம்மாவட்டத்தின் காடுகள் அனைத்தும் மலைகளில்தான் காணப்படுகின்றன. மரங்களில் கோங்குதான் விலை மதிப்புடையது. இங்கு காடுகள் காணப்படும் வட்டங்கள்: நாங்குநேரி, அம்பா சமுத்திரம், தென்காசி வட்டங்கள். செங்கோட்டை வட்டத்துக் காடுகளில் இரயில் பாதை போடப்பயன்படும் 'ஸ்லீப்பர்' கட்டைகளுக்கு உதவும் மரங்கள் உள்ளன. அம்பாசமுத்திரம் காடுகளில், மயிலை, நெடுநாரி, மதகிரிவேம்பு, நங்குல், செங்குரஞ்சி மரங்களும், பிரம்பு வகை களும், ஈச்ச மரங்களும், தேக்கு, கோங்கு தோதகத்தி, நாங்கு மரங்களும் அடர்த்தியாக உள்ளன. நாங்குநேரி வட்டத்தில் ஒடை மரங்களும், மகிழ மரவகைகளும், எட்டி, வெள்ளத்துவரை போன்ற மரவகைகளும் உண்டு. செங்கோட்டை காடுகளில் காகிதக் கூழ் செய்ய உதவும் ஈடா ரீட் மரங்கள் ஆண்டுதோறும் 10,000 டன் அளவுக்குப் பயிராக்கப்படுகின்றன. மரங்களைத் தவிர பிசின் மரம், மஞ்சக்கடம்பன், கரையானால் அரிக்க முடியாத விடத்தேரை ஆகிய மரங்களும் மிகுதியாக வளர்கின்றன.

காட்டு விலங்குகள்

செங்கோட்டை காடுகளில் யானை, காட்டெருமை இன்னும் பல வகையான விலங்குகள் காணப்படுகின்றன. சங்கரன் கோவில், அம்பா சமுத்திரம் நாங்குநேரி காடுகளில் காட்டெருதுகள் காணப்படுகின்றன. புலிகள் மேற்குத் தொடர்ச்சி மலை முழுவதும் உள்ளன. சிறுத்தை, குறைவு. தேனுண்ணும் கரடி வகை அதிகம். தலை சிறுத்த சாம்பர் மானும், குற்றாலம், திருக்குறுங்குடி பகுதிகளில் மலையாடுகளும் உள்ளன. எலிமான்கள் போன்ற இவை கண்களுக்குத் தெரிவதில்லை. மான் போன்ற தோற்றம் கொண்ட மறிமான்களும், காட்டு நரிகள், நீண்டவால் குரங்குகள் போன்றவையும் காணப்படுகின்றன.

பறவைகள்

மணிப்புறா, கிளி, பெரிய அலகு கொம்புப்பறவை ஆகியவை இம்மலைகளில் காணப் படுகின்றன. சனவரி-பிப்ரவரியில் சாம்பல் நிறமுடைய பெலிக்கன் பறவைகள் இலங்கையில் இருந்து வந்து நாங்குநேரி வட்டத்திலுள்ள விஜய நாராயணபுரம் குளத்திற்கு அருகில் தங்கி தாயகம் செல்கின்றன. பருத்தி வாத்து என்ற ஓர் இனம் இங்கு நிரந்தரமாக வாழ்கிறது. உள்ளான்களும், மரஉள்ளான்களும் தாழ்ந்த மலைக் குன்றுகளில் அதிகமாக வாழ்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையில் பல்வேறு விதமாகப் பூச்சிகள் வாழ்கின்றன.

நிலவளம்

திருநெல்வேலி மாவட்டம் ஐவகை நிலங்களையும் ஒருங்கே கொண்டு திகழ்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் குறிஞ்சி நிலமாகவும், முல்லை நிலமாகவும் உள்ளன. மருதநில வளத்தைத் தாமிரபரணி பாயும் ஆற்றுப் பகுதிகளில் காணலாம். புன்செய் பயிர்கள் சங்கரன் கோவில், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி வட்டங்களில் விளைகின்றன. இவை கரிசல் காடுகள். மணற்பகுதிகளாக உள்ள பாலைப் பகுதிகளை 'தேரிக் காடுகள்' என்று அழைக்கின்றனர். நாங்குநேரி வட்டத்தின் தென் பகுதிகளில் இவற்றைக் காணலாம். இங்கு சில மணற் குன்றுகள் 200 அடிக்கும் மேல் உள்ளன. உவரி பகுதியில் கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலம் உள்ளது

தருவைகள்

பாலைவன ஊற்றுகளைப் போல இம்மணற்குன்றுகளில் தேங்கும் நீர் நிலத்தடி நீரோடு சேர்ந்து சிற்றேரிகளாக காட்சி தருகின்றன. இவற்றை இப்பகுதி மக்கள் 'தருவை'கள் என்று அழைக்கின்றனர்.

வேளாண்மை

திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் வட்டங்களில் நெல்லும், சங்கரன்கோயில் வட்டத்தில் பருத்தியும், மிளகாயும் மிகுதியாக விளைகின்றன. இம்மாவட்டத்து நெல் வகைகளுள், ஆனைக் கொம்பன் என்னும் வகை குறிப்பிடத்தக்கது. 19-ஆம் நூற்றாண்டில் பருத்தி விளைச்சல் அதிகம் இருந்தது. தற்போது குறைந்தளவே சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. புளியங்குடி பகுதியில் எலுமிச்சையும், வாசுதேவநல்லூர் பகுதியில் கரும்பும், தென்காசி வட்டத்தில் உளுந்து, சோளம் ஆகியவையும் சங்கரன்கோயில் நாங்குநேரி வட்டங்களில் மிளகாயும், தென்காசி வட்டத்தில் மிளகும் விளைகின்றன. இங்கு மாம்பழ விளைச்சலும் அதிகம். இவை எல்லாக் காலங்களிலும் இங்குக் கிடைக்கின்றன. இராதாபுரம், திசையன்விளை, வள்ளியூர் பகுதிகளில் பனைமரங்கள் மிகுதி.

பணப்பயிர்கள்

1884-ஆம் ஆண்டு இங்கு காப்பித் தோட்டங்கள் உண்டாக்கப்பட்டன. 1902-ஆம் ஆண்டு நாங்குநேரி வட்டத்தில் 27 காப்பி எஸ்டேட்டுகள் இருந்தன. 1915-இல் 13 தோட்டங்கள் மட்டும் தனியார் வசம் இருந்தன. சில தோட்டங்களில் பழங்களை விளைவித்தனர். இங்கு சீன-ஜப்பானிய வகைகள் பயிரிடப்பட்டன. குற்றாலத்திற்கு மேல் மலைப்பகுதியில் இருக்கும் தெற்குமலை எஸ்டேட்டுகளும், ஹோப் எஸ்டேட்டுகளும் குற்றாலத்துத் தேனருவிக்குச் செல்லும் வழியில் உள்ள தெற்குமலை எஸ்டேட்டுகளும் குறிப்பிடத்தக்கனவாகும்.

கனிமங்கள்

சுண்ணாம்புக்கல்

சிமெண்ட் தயாரிப்புக்குத் தேவையான இப்பொருள் நாங்குநேரி வட்டத்திலுள்ள வள்ளியூர், களக்காடு முதலிய ஊர்களில் கிடைக்கிறது.

கார்னர்டு மணல்

உப்புத்தாள் செய்ய உதவும் இவ்வகை மணல் கடலோரப் பகுதிகளில் கிடைக்கிறது.

அல்லனைட்

அணுசக்திக்குத் தேவையான இம்மூலப்பொருள் இம்மாவட்டத்தில் கிடைக்கிறது.

மோனசைட்

இது உலோகச் சத்து நிறைந்த பொருள். கடற்கரை மணலில் கிடைக்கிறது. விளக்குத்திரி, மென்மையான எரியும் கம்பிகள், சில மருந்துகள் ஆகியவை செய்வதற்கு இது பயன்படுகிறது.

மைக்கா

நாங்குநேரி வட்டம் மூலக்கரைப்பட்டியில் சிறிதளவு கிடைக்கிறது.

கிராபைட்

உருக்கு வேலைக்கு உதவும். சிறுகலங்கள் செய்வதற்கும், சிலவகை எண்ணெய் தயாரிக்கவும் இது பயன்படுகிறது. அம்பை வட்டத்திலுள்ள சிங்கம்பட்டிப் பகுதியிலும், சங்கரன் வட்டத்துக் குருவிக்குளம் பகுதியிலும் இது மிகுதியாகக் கிடைக்கிறது.

சுற்றுலாத் தலங்கள்

இம்மாவட்டத்தில் கட்டாயம் காணவேண்டிய இடங்களாக கீழேகண்ட இடங்களைக் குறிப்பிடலாம் : அ) பாபநாசம் நீர்வீழ்ச்சி ஆ) மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி இ) குற்றாலம் ஈ) கிருஷ்ணாபுரம் உ) திருக்குறுங்குடி ஊ) முண்டந்துறை புலிகள் புகலிடம் எ) களக்காடு புலிகள் புகலிடம் ஏ) கூந்தக் குளம் பறவைகள் புகலிடம் ஐ) அரியகுளம் பறவைகள் புகலிடம்.

பாபநாசம்

தமிழ் மொழியானது பொதிகை மலையில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் என்ற சிற்றூரில் உள்ளது. இந்து பழங்கதைகளின் படி சிவன் வியாசரையும் அகத்தியரையும் சமஸ்கிருதத்தையும் தமிழையும் உருவாக்க அனுப்பினார். அகத்தியர் பாபநாசம் வந்து தமிழை உருவாக்கினார். இங்கு அகஸ்தியர் அருவி என்கிற நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது.

மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி

குற்றாலத்திலிருந்து 48 கி.மீ. தொலைவில் உள்ளது. மலைமீது அருவி இருக்கிறது. இங்கு குளிக்கும் வசதியுள்ளது. ஆண்டு முழுவதும் அருவியில் நீர்வீழ்கிறது. அருவியின் உயரம் 25 அடி. குளிக்கும் இடத்தில் அருவியின் உயரம் 17 அடி. அருவிக்குக் கீழே 80 அடி ஆழத்துக்கு நீச்சல் குளத்தைப் போன்ற அமைப்புள்ளது. இங்கு மணிமுத்தாறு அணையையும் காணலாம். பெரிய மணிமுத்தாறு அணையில் பூங்கா, சிலைகள், மாந்தோப்பு, தென்னந்தோப்பு, செயற்கைக்குகை, கோழிப்பண்னை, மீன்பண்ணை, விதைப்பண்ணை முதலியவை உள்ளன. மலைமீது மாஞ்சோலைத் தோட்டங்களைக் காணலாம். மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி ஓர் அழகு தான்.

குற்றாலம்

பேரருவி
ஐந்தருவி

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் பொங்கும் சுற்றுச்சூழலில் அமைந்துள்ளது. தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் குற்றாலம் நகரும் ஒன்று. குற்றாலம் குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய நிலங்களை தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளது. இங்கு குளித்து மகிழ இயற்கையாக அமைந்த அருவிகளான பேரருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி, செண்பகாதேவி அருவி, பேரருவி, சிற்றருவி, புலி அருவி, பழைய குற்றால அருவி, தேனருவி என்று பல நீர்விழ்ச்சிகள் உள்ளன. இங்கு குளிப்பதால் உடலுக்குப் பல நன்மைகள் கிடைக்கின்றன என்று 1811 ஆம் ஆண்டில் ஆங்கில ஆட்சியாளர்களான கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் அனுப்பிய மருத்துவ குழுவினர் தங்களது ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளனர். தென்பொதிகைச் சாரலில் அமைந்துள்ள இந்த குற்றால மலையில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகள் உள்ளன. இந்த மூலிகைச் செடிகள் மீது பட்டு விழும் மழைத்துளிகள் பின்னர் அருவியாக ஓடி வருவதால் இதில் அனைத்து மூலிகை செடிகளின் மருத்துவ குணங்களும் கலந்துள்ளன என்கிறார்கள்.

இங்கு ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் அருவிகளில் குளிக்க திரளான மக்கள் கூடுவர். சில ஆண்டுகளில் இயற்கை மாற்றங்களினால் மே மாத துவக்கத்திலே அருவிகளில் நீர் கொட்டத் துவங்கிவிடும்.

குற்றாலத்தில் பல அருவிகள் உள்ளன. அதில் மிகவும் ஆபத்தானது தேனருவி; இங்கு தேன்கூடுகள் பல உள்ளதால் இப்பெயர் பெற்றுள்ளது. இங்கிருந்து இரண்டரை கி.மீ. கீழே செண்பகா தேவி அருவி உள்ளது. இங்கு செண்பகா தேவியம்மன் ஆலயம் இருக்கிறது.

தமிழகத்தில் நடராஜர் நடனமாடிய 5 சபைகளில், திருகுற்றாலநாதர் ஆலயம் சித்திர சபை என்று அழைக்கப்படுகிறது. இங்கு குறுமுனி என்றழைக்கப்பட்ட தமிழ் மாமுனிவர் அகத்தியர் வழிபட்ட குற்றாலம் குற்றாலநாதர் கோயில் சன்னதி உள்ளது.

கிருஷ்ணாபுரம்

திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில், திருநெல்வேலிக்கு 12 கி.மீ. தொலைவில், குமார கிருஷ்ணப்பா என்ற நாயக்க மன்னரால் இவ்வூரும் கோவிலும் அமைக்கப்பட்டன. வேங்கடாசலபதி கோவில் என அழைக்கப்படுகிறது. புரட்டாசி மாதப் பெருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இக்கோவிலுள்ள சிலைகளின் அழகைச் சொல்லி மாளாது. தொங்கு மீசையுடன் குறவன் அரசகுமாரியைத் தூக்கிக் கொண்டு செல்லும் போது, பெண்ணின் உடலில் இக்காலத்தில் அணியும் (பிரேசியர்) மார்ப்புக் கச்சை காணப்படுவது வியப்பான செய்தி. சீன முகத்துடன் தேவகணம் படைத்திருப்பது, இப்பகுதியில் சீனர்கள் இருந்ததைத் தெரிவிக்கிறது.

திருக்குறுங்குடி

இது நெல்லையிலிருந்து 43 கி.மீ. தொலைவில் உள்ளது. இயற்கை சூழ்ந்த மகேந்திர மலை அடிவாரத்தில், நம்பியாற்றின் கரையில் இருக்கிறது. பெருமாளுக்கு நம்பிராஜன் என்று பெயர். இத்தென்கலை வைணவக் கோயிலில் சிவபெருமானும் இருக்கிறார். நால்வர், பைரவர், சண்டிகேசுவரர் முதலிய பரிவார தேவதைகளும் இருப்பதால் சிவன் கோயில் வைணவத்தலமாக மாற்றப்பட்டிருக்கலாம் என்கிற கருத்து உண்டு. இங்குள்ள சிவனை "பக்கல் நின்றார்" என்று திருமங்கையாழ்வார் குறிப்பிட்டுள்ளார். இவ்வூர் பெருமாளைப்பற்றி பெரியாழ்வார், திருமழிசைஆழ்வார் நம்மாழ்வார், சடகோபர், பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் முதலியோரால் பாடல் பெற்ற தலமாகும். இங்குதான் நம்மாழ்வார் பிறந்தார். இக்கோவிலில் கார்த்திகை, பங்குனி, ஏகாதசித் திருவிழாக்கள் சிறப்பாக நிகழ்ந்து வருகின்றன. யாளி மண்டபம், இரத மண்டபம், ஜஂயர் மண்டபம், சித்திர கோபுரம், இசக்கியம்மன், ஆண்டாள், குறுங்குடிவல்லித் தாயார் சந்நிதிகள் உள்ளன.

முண்டந்துறை புலிகள் புகலிடம்

திருநெல்வேலியிலிருந்து 42 கி.மீ. தொலைவில் உள்ளது. இப்புகலிடம் புலிகளின் பாதுகாப்பு கருதி உண்டாக்கப்பட்டது. மேலும் இங்கு சிறுத்தை, சாம்பார் மான், பன்றிக் கரடி, நீலகிரி வகை குரங்கு, சிங்கவால் குரங்கு போன்றவைகளைக் காணலாம். முண்டந்துறையைக் காண ஏற்ற காலம் அக்டோபரிலிருந்து ஜனவரி வரை செல்லலாம். தங்குவதற்கு ஏற்ற வசதிகள் உண்டு. முன்னரே பதிவு செய்ய வேண்டும்.

களக்காடு விலங்குப்புகலிடம்

திருநெல்வேலியிலிருந்து 47 கி.மீ. தொலைவில் உள்ளது. தாவர வியலாளர்களுக்கும், விலங்கியலாளர்களுக்கும் ஏற்ற இடம். இங்கு பலவகையான தாவரங்களும், பறவைகளும் காணக்கூடியதாக இருக்கின்றன. இங்குப் புலி, சிறுத்தை, குள்ளநரி, காட்டு நாய்கள், ராஜநாகம் மலைப்பாம்பு, பலவகைப்பாம்புகள் ஆகியவை காணப்படுகின்றன. இப்புகலிடத்தைக் காண்பதற்கு ஏற்ற மாதங்கள்: மார்ச்சிலிருந்து செப்டம்பர் வரை; இங்கு சிங்கவால் குரங்குகள் பாதுகாக்கப்படுகின்றன. இம்மாவட்டத்தில் மேலும் காணத்தகுந்த இடங்களாக இருக்கும் பறவைகள் புகலிடங்கள் கூந்தக்குளம் பறவைகள் புகலிடம், மற்றும் அரியகுளம் பறவைகள் புகலிடம் முதலியவை.

சிறப்புகள்

பழம் பொருட்கள் கண்டுபிடிப்பு

சேரன்மாதேவிக்கு அருகே தோண்டி எடுக்கப்பட்ட கல் ஆயுதங்கள், ஜெர்மன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. சீவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த பகுதியான மருகால்தலையில் உள்ள பாறைக் குடைவுகளில் பாலிமொழியில் அசோகன் கல்வெட்டுகளும், பெளத்தர்களின் படுக்கைகளும் காணப்படுகின்றன. மொகலாயர் காலத்தில் கட்டப்பட்ட நாராயணம்மாள் சத்திரம் இவ்வூரில் இருக்கிறது. திருச்சிற்றம்பலம் என்னும் ஊரில் முதுமக்கள் தாழிகள் ஏராளமாக உள்ளன. உக்கிரபாண்டியன் கட்டிய கோட்டையும், அகழியும் இன்றும் உக்கிரன்கோட்டையில் காணலாம். வீரகேரளம்புதூரில் ஊற்றுமலை ஜமீன்களின் அரண்மனை இன்றுள்ளது. மலையடிக் குறிச்சியிலும் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பூவன்குறிச்சியில் முதுமக்கள் தாழி கண்டு எடுக்கப்பட்டது.

தமிழின் தோற்றம்

தமிழ் மொழியானது பொதிகை மலையில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் என்ற சிற்றூரில் உள்ளது. இந்து பழங்கதைகளின் படி, சிவன், பாணினியையும் அகத்தியரையும் சமஸ்கிருதத்தையும் தமிழையும் உருவாக்க அனுப்பினார். அகத்தியர் பாபநாசம் வந்து தமிழை உருவாக்கினார்.

பூலித்தேவன் நினைவகம்

ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக முதன்முதலாக போர் முரசு கொட்டியவன் மாவீரன் பூலித்தேவன். 1715 ஆம் ஆண்டு பிறந்த பூலித்தேவன் 1755 ஆம் ஆண்டு ஆங்கிலத் தளபதி ஆரோனுக்கு வரி தர மறுத்து சுதந்திரப் போராட்டத்தைத் தொடங்கினான். தொடர்ந்து ஆங்கிலேயருடன் போரிட்டு அவர்களை புறமுதுகு காட்டச் செய்தான். இத்தகைய மாவீரனை சங்கரன்கோயிலில் தனது இஷ்ட தெய்வத்தை வணங்கிக் கொண்டிருந்த போது வஞ்சகமாகப் பிடிக்க சுற்றி வளைத்தது ஆங்கிலேயப் படை. ஆனால் அவனோ அங்குள்ள குகை ஒன்றினுள் போனான். எதிரிகளிடம் சிக்கவும் இல்லை. என்ன ஆனான் என்று தெரியவும் இல்லை. இந்த மாவீரனுக்கென்று சிவகிரி வட்டம் நெற்கட்டும்செவலில் ஒரு நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.

அல்வா

திருநெல்வேலி, அல்வா எனப்படும் இனிப்புப் பண்டத்திற்கு மிகவும் புகழ்பெற்றது. திருநெல்வேலி அல்வாவின் சுவைக்கு தாமிரபரணி ஆற்றின் நீரும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.

இதேபோல், செங்கோட்டை அருகில் உள்ள பிரானூர் பார்டர் புரோட்டாவும் உலக அளவில் தமிழர்கள் மத்தியில் சிறப்புப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சங்கரன்கோவில் பிரியாணி

தமிழ்நாட்டின் சங்கரன்கோவில் பகுதியில் இந்த வகை ஆட்டிறைச்சி பிரியாணி மிகவும் பெயர் பெற்றது. இங்குள்ள ஆடுகளின் வளர்ப்பும் அரிசியின் தரமும் இதன் சிறப்புகளாக உள்ளன.தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் வளர்க்கப்படும் கன்னி என்ற வகையைச் சேர்ந்த ஆடுகள் சுவையில் சிறந்தவை. சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மட்டுமே அல்லாமல் வெளி ஊர் மற்றும் வெளிமாநில மக்களின் நல்லாதரவைப் பெற்றது.

பத்தமடை பாய்

திருநெல்வேலியிலிருந்து சேரன்மகாதேவி செல்லும் வழியில் உள்ள ஊர் பத்தமடை. இந்த பத்தமடை பாய் நெய்வதற்கு உலக அளவில் பெயர் பெற்ற ஊராகும். இங்குள்ள மக்கள் நெய்யும் பாய்கள் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஹென்றி பவர் கல்லறை

சீகன் பால்க் மொழிபெயர்ப்பு வழக்கொழிந்து மறக்கப்பட்டுப் போனதாலும், பப்ரிசியுசின் மொழி பெயர்ப்பிலும், இரேனியுஸ் மொழி பெயர்ப்பிலும் குறைபாடுகள் இருந்த காரணத்தாலும், சென்னை வேதாகமச் சங்கம், எல்லா புரோட்டஸ்தாந்து சபைகளும் ஏற்றுக் கொள்ளும் விதமாக ஒரு புதிய தமிழ் மொழி பெயர்ப்பை உருவாக்கும் எண்ணத்தில், ஹென்றி பவர் ஐயரைத் தலைமை மொழி பெயர்ப்பாளராகவும், அவருக்கு உதவியாக மற்ற சபைகளைச் சேர்ந்த ஏழு பேரைக் கொண்ட ஒரு குழுவையும் நியமித்தது. இந்தக் குழுவில், டாக்டர் கால்டுவெல், சார்ஜென்ட் ஐயர், திரேசி ஐயர், திரு. முத்தையா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்த மொழிபெயர்ப்புதான், இரண்டு முறை திருத்தப்பட்டுள்ளது. இன்று தமிழ் பேசும் கிறித்தவர்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் வேதாகமம் ஆகும். இவரின் மொழிபெயர்ப்பு, பவர் மொழிபெயர்ப்பு, அல்லது ஐக்கிய மொழிபெயர்ப்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த குழுவின் தலைவர் ஹென்றி பவர் ஐயரின் கல்லறை திருநெல்வேலி, பாளையங்கோட்டை மிலிட்டரி லைன், கிறிஸ்து ஆலயக் கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாடு

இந்த மாவட்டத்திற்கு உட்பட்ட மேலநீலிதநல்லூர், மானூர், பாப்பாகுடி, ஆலங்குளம், நாங்குநேரி,மற்றும் பாளையங்கோட்டை போன்ற பகுதியில் வளர்க்கப்படும் செவ்வாடுகள் உடற்கூறு மற்றும் மரபு அமைப்பின்படி சர்வதேச அங்கீகாரம் பெற்று விளங்குகிறது. இவற்றுள் அரிச்செவ்வாடு, கருஞ்செவ்வாடு என இவை இரண்டுவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[11]

அரசியல்வாதிகள்

இதையும் காண்க

மேற்கோள்கள்

  1. "Census Info 2011 Final population totals – Tirunelveli district". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  2. புதிய மாவட்டங்களின் எல்லைகள் வரையறை: அரசாணை வெளியீடு
  3. தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் ; அரசாணை வெளியீடு
  4. http://www.edreamsinetcafe.in/tirunelveli/history.htm[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-10-25. பார்க்கப்பட்ட நாள் 2009-11-18.
  6. மாவட்டங்கள் பிரிப்பு: அரசாணை வெளியீடு
  7. மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள்
  8. "திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". Archived from the original on 2015-07-08. பார்க்கப்பட்ட நாள் 2018-09-16.
  9. மாவட்ட ஊரக வளர்ச்சி அமைப்புகள்
  10. Decadal Variation In Population Since 1901
  11. உடற்கூறு, மரபு அமைப்பில் தனித்துவம்: சர்வதேச அங்கீகாரம் பெற்ற திருநெல்வேலி ‘செவ்வாடு’ தி இந்து தமிழ் நவம்பர் 6 2016

வெளி இணைப்புகள்