திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயில்

திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயில்

திருப்பிறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் திருப்புறம்பியத்தில் அமைந்துள்ளது. செட்டிப் பெண்ணுக்கு இறைவன் சாட்சிசொன்ன தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 46வது தலம் ஆகும். இக்கோயில் மதுரை ஆதினத்திற்குரிய கோயிலாகும்.

தல வரலாறு

பிற்கால சோழ பேரரசு உருவாக காரணமான சிறப்புமிக்க போர் நடந்த ஊர் இது. இப்போரின் வெற்றியின் நினைவாக முதலாம் ஆதித்த சோழன் இங்கிருந்த செங்கற்கோயிலை அழகிய கருங்கல் கோவிலாக கட்டினார். இங்குள்ள பிரளயம் காத்த விநாயகர் சிறப்பானவர். சிவபெருமான் கிருதயுக முடிவில் உண்டான பிரளயத்தில் இருந்து இவ்வாலயத்தை காக்கும் பொருப்பை விநாயகரிடம் ஒப்படைத்தார். ஆணையை ஏற்று ஓங்காரத்தைப் பிரயோகம் செய்து ஏழு கடலின் ஆக்ரோஷத்தை ஒரு கிணற்றுக்குள் அடக்கினார். திருக்குளத்தின் கிழக்கே இந்த ஏழு கடல் கிணறு அமைந்துள்ளது. இத்தலத்தை காத்த விநாயகபெருமானை வருணபகவான் கடல் பொருட்களான சங்கம், நத்தாங்கூடு, கிளிஞ்சல், கடல்நுரை ஆகியவற்றால் பிரதிஷ்டை செய்தார். பிரளயம் காத்த விநாயகருக்கு எப்போதும் தேன் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது இவ்வாலயத்தில் விநாயகர் சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. அன்று பெருந்திறளான மக்கள் கூடுவர். மதுரையைச் சேர்ந்த அரதனகுப்தன் என்னும் வணிகன் இவ்வாலய வன்னி மரத்தின் கீழ் பாம்பு தீண்டி இறந்தான். இவருடன் வந்த இளம் கன்னி ரத்தினாவளி இவ்வாலய ஈசனிடம் அழுது புலம்பினாள். ஈசன் காட்சி அளித்து வணிகனை உயிர்பித்து மடைப்பள்ளி, வன்னிமரம், கிணறு, ஆகியவற்றை சாட்சியாக வைத்து திருமணம் நடத்தி வைத்தார். மதுரை சென்ற வணிகனின் மூத்த மனைவி இவளை ஏற்காத நிலையில் இறைவன் சாட்சிகளுடன் அவர் முன் தோன்றி உண்மை உரைத்தார். மதுரை சுந்தரேசர் ஆலயத்தில், சாட்சியாக வந்த மடைப்பள்ளி, வன்னிமரம், கிணறு ஆகியன இன்றும் உள்ளது. இந்த வரலாறு திருவிளையாடல் புராணத்திலும், சிலப்பதிகாரத்திலும் வருகிறது. இக்கதையை ஒட்டியே புன்னைவனநாதர், சாட்சிநாதர் என அழைக்கப்படுகிறார். அகத்தியர், புலத்தியர், சனகர், சனந்தனர், விஸ்வாமித்திரர் ஆகியோர் வழிபட்ட லிங்கத்திருமேனிகள் இருக்கின்றன. ஆறுமுகனை குழந்தை வடிவில் தன் இடையில் தாங்கி நிற்கும் ஸ்ரீகுகாம்பிகை சந்நிதி சிறப்பு வாய்ந்தது. இந்த அன்னைக்கு சாம்பிராணி தைலம் மட்டுமே சாத்தப்படும். இது திருமண பரிகாரத் தலமாகும். நால்வர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை சந்நிதிகள் இங்கு விசேஷம்.

தீர்த்தம்

பிரம்மதீர்த்தம்(திருக்குளம்), ஸப்தசாகரகூபம்(ஏழு கடல் கிணறு).

இறைவன்,இறைவி

இங்குள்ள இறைவன் சாட்சிநாதர், சாட்சிநாதேசுவரர், புன்னைவனநாதர். இறைவி கடும்படுசொல்லியம்மை, இட்சுவாணி.

கோயில் அமைப்பு

கொடி மரம், பலிபீடம், நந்தியைக் கடந்து சென்றால் உள்ளே மூலவர் சன்னதிக்கு இடப்புறமாக குஹாம்பிகை சன்னதியும், அடுத்து கரும்படு சொல்லியம்மை சன்னதியும் உள்ளன. உள்ளே மூலவருக்கு முன்பாக நந்தியும், பலிபீடமும் உள்ளன. இரு புறமும் விநாயகர், முருகன் உள்ளனர். மண்டபத்தின் வலப்புறம் நால்வர் சன்னதி உள்ளது. அருகில் பிரசித்தி பெற்ற விநாயகர் உள்ளார். இடப்புறம் சூரியன், சந்திரன் உள்ளனர். நடராஜர் மண்டபமும், நவக்கிரக சன்னதியும் உள்ளன. கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் சோமாஸ்கந்தர் சன்னதி, சுப்பிரமணியர் சன்னதி, கஜலட்சுமி சன்னதி ஆகியவை உள்ளன. தொடர்ந்து லிங்க பானம், லிங்கங்கள், மூன்று நந்திகள் உள்ளன. தட்சிணாமூர்த்தி அமர்ந்துள்ள தளத்திற்கு மேல் தளத்தில் சட்டநாதர் சன்னதி உள்ளது. இக்கோயிலின் கருவறை கோஷ்டத்தில் புள்ளமங்கை கோயிலில் உள்ளது போன்று மிகச் சிறிய அளவிலான சிற்பங்கள் காணப்படுகின்றன.

ஞானசம்பந்தர் பாடல்

சம்பந்தர் 2ஆம் திருமுறையில் இத்தலத்து இறைவனைப் பின்வருமாறு போற்றுகிறார்.
‘மறம்பய மலைந்தவர் மதிற்பரி சறுத்தனை
நிறம்பசுமை செம்மையொ டிசைந்துனது நீர்மை
திறம்பய னுறும்பொரு டெரிந்துணரு நால்வர்க்
கறம்பய னுரைத்தனை புறம்பயம் அமர்ந்தோய்‘

பிரளயம் காத்த விநாயகர்

இங்கு தேனபிஷேகப்பெருமான் எனப் போற்றப்படும் பிரளயம் காத்த விநாயகர் தனி சன்னதியில் உள்ளார். இந்த விநாயகருக்கு ஆண்டு தோறும் விநாயக சதுர்த்தி தினத்தன்று இரவு மட்டுமே தேனால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இதைத் தவிர மற்ற நாள்களில் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. அபிஷேம் செய்யப்படும் தேன் முழுவதும் இந்த விநாயகர் திருமேனியில் உறிஞ்சப்படுவதும், அபிஷேக வேளையில் விநாயகர் செம்பவள மேனியராய் காட்சி தருவதும் வேறு எங்கும் காணமுடியாதது.[1]

குடமுழுக்கு

1972க்குப் பின் இக்கோயிலின் குடமுழுக்கு 18 மார்ச் 2016இல் நடைபெற்றது.[2]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

படத்தொகுப்பு