தேவசகாயம் பிள்ளை
தேவசகாயம் | |
---|---|
கோட்டாறு, புனித சவேரியார் பேராலயத்தில் உள்ள தேவசகாயம் திருவுருவம் | |
மறைசாட்சி, பொதுநிலையினர் | |
பிறப்பு | நீலகண்டன் 23 ஏப்ரல் 1712 நட்டாலம், கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கூர் |
இறப்பு | 14 சனவரி 1752 ஆரல்வாய்மொழி, திருவிதாங்கூர் | (அகவை 39)
கல்லறை | கோட்டாறு, நாகர்கோவில், இந்தியா |
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்க திருச்சபை |
அருளாளர் பட்டம் | 2 திசம்பர் 2012, புனித சவேரியார் பேராலயம், கோட்டாறு by கர்தினால் ஆஞ்செலோ அமாத்தோ (திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்டின் பதிலாள்) |
புனிதர் பட்டம் | 15 மே 2022, புனித பேதுரு சதுக்கம், வத்திக்கான் நகர் by திருத்தந்தை பிரான்சிசு |
முக்கிய திருத்தலங்கள் | புனித சவேரியார் பேராலயம், கோட்டாறு |
திருவிழா | சனவரி 14[1] |
சித்தரிக்கப்படும் வகை | சங்கிலியால் பிணைக்கப்பட்டவாறு மரணதண்டனைக்கு முன் முழங்கால்களில் இறைவேண்டல் செய்வது போல |
பாதுகாவல் | இந்தியா துன்புறுத்தப்படும் கிறித்தவர்கள் |
புனிதர் தேவசகாயம் (Saint Devasahayam, 23 ஏப்ரல் 1712 – 14 சனவரி 1752) இந்தியக் கத்தோலிக்கப் புனிதர் ஆவார். இவர் கன்னியாகுமரியில் இந்துக் குடும்பம் ஒன்றில் 18-ஆம் நூற்றாண்டில் பிறந்தவர். நீலகண்டன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் திருமுழுக்குப் பெற்றபோது, "லாசரசு" (Lazarus) என்பதன் தமிழ் பதமான "தேவசகாயம்" என்ற பெயரைப் பெற்றார். உயர் வகுப்பைச் சேர்ந்த இந்துக்கள் கிறித்தவத்தை தழுவக்கூடாது என்ற அன்றைய திருவாங்கூர் மன்னரின் கட்டளையை மீறி மதம் மாறியதால் இவர் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.[2] தேவசகாயம் இறந்த இடம் இன்று தேவசகாயம் மவுண்ட் என்றும், ஆரல் குருசடி என்றும் அழைக்கப்படுகிறது. கத்தோலிக்கத் திருச்சபை 2012 திசம்பரில் இவருக்கு அருளாளர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.[3][4] திருத்தந்தை பிரான்சிசு தேவசகாயத்தை 2022 மே 15 அன்று ஒரு புனிதராக அறிவித்தார்.
இளமைப் பருவம்
மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை இன்றைய குமரி மாவட்டத்திலுள்ள நட்டாலம் என்னும் கிராமத்தில் 1712ஆம் ஆண்டு, ஏப்பிரல் 23ஆம் நாளன்று நாயர் குலத்தில் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்டப் பெயர் நீலகண்டன் என்பதாகும். சிறுவயதிலேயே சமசுகிருதம், கலை ஆகியவற்றை படித்து அறிந்தார். பெரியவர் ஆனதும் வில் வித்தை, வர்ம கலைகள், போரிற்கான ஆயுதங்களைப் பயன்படுத்தும் முறைகளையும் படித்து அறிந்தார். அதன் பின்னர் இவர் மார்த்தாண்ட வர்மாவின் அரண்மனையான பத்மநாபபுரம் கோட்டையில் கருவூல அதிகாரியாக பணியில் சேர்ந்தார். அதன் பின்பு இவருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இலந்தவிளை அருகே உள்ள குஞ்சு வீட்டு நாயர் சமுதாயத்தை சார்த்த பார்கவி அம்மாளுக்கும் திருமணம் நடைபெற்றது. அவ்வேளையில், அவரது குடும்பத்தில் ஏற்பட்ட பொருளாதார இழப்புகள் நீலகண்டனை மனதளவில் மிகவும் பாதித்தன.[5]
மனமாற்றம்
இது தொடர் கட்டுரைகளில் ஒன்றாகும் |
இந்தியாவில் கிறித்தவம் |
---|
பின்னணி |
Nasrani St. Thomas Christians Ancient Crosses of India(history) Synod of Diamper Coonan Cross Oath |
நபர்கள் |
தோமா (திருத்தூதர்) பிரான்சிஸ் சவேரியார் கொன்சாலோ கார்சியா அல்போன்சா முட்டத்துபடத்து Thomas of Cana Fr. Kuriakose Elias Chavara Fr. Varghese Palakkappillil Mar Augustine Kandathil Mar Sapor and Prodh Marthoma Metrans St. Baselios Eldho St. Gregorios of Parumala St. GeevargheseMar Dionysius Alvares Mar Juliusவில்லியம் கேரி தேவசகாயம் பிள்ளை அன்னை தெரேசா |
திருச்சபைகள் |
Andhra Evangelical Lutheran Chaldean Syrian Church of North India தென்னிந்தியத் திருச்சபை Jacobite Syrian கத்தோலிக்க திருச்சபை Malankara Malankara Orthodox Syrian Malabar Independent Syrian Mar Thoma Presbyterian St. Thomas Evangelical Syro-Malabar Catholic Syro-Malankara Catholic The Pentecostal Mission |
கிறித்தவம் வலைவாசல் |
இந்நிலையில் 1741இல் குளச்சல் துறைமுகத்தைப் பிடிக்க வந்த டச்சு படைகள் மார்த்தாண்ட வர்மாவின் படைகளால் தோற்கடிக்கப்பட்டன. டச்சு படைத்தலைவரான கத்தோலிக்க மதத்தைச் சார்ந்த பெனடிக்டுஸ் தே டிலனாய் (Benedictus De Lennoy), அவருடைய படைகளுடன் சிறைப்பிடிக்கப்பட்டார். பின்னர் டிலன்னாயை தமது படையின் ஆலோசகராக மார்த்தாண்ட வர்மா நியமித்ததால், அவர் நீலகண்ட பிள்ளையின் நண்பரானார். ஒருநாள் நீலகண்ட பிள்ளை மிகுந்த கவலையில் இருந்ததைக் கண்ட டிலன்னாய், அதற்கான காரணத்தைக் கேட்டார். அதற்கு நீலகண்டன், தமது குடும்பத்துக்கு சொந்தமான கால் நடைகள் இறந்து போவதும், பயிர்கள் நாசம் அடைவதும் தொடர்கதையாகி பொருளாதார ரீதியாகப் பெரும் இழப்பை சந்தித்து வருவதாக தெரிவித்தார்.[5]
அப்போது திருவிவிலியத்தில் உள்ள யோபுவின் கதையை டிலன்னாய் சொல்லி, நீலகண்டனுக்கு கிறித்தவ சமயத்தை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து இயேசு கிறிஸ்துவைப் பற்றி அவரிடம் கேட்டு தெரிந்துகொண்ட நீலகண்டன், நாளடைவில் திருமுழுக்குப் பெற்று கிறித்தவராக விருப்பம் கொண்டார்.[6] திருநெல்வேலி மாவட்டத்தின் வடக்கன்குளம் கத்தோலிக்க தேவாலயத்தின் பங்குத்தந்தையாகப் பணிபுரிந்த ஜோவான்னி பத்தீஸ்தா புத்தாரி (Giovanni Battista Buttari) நீலகண்ட பிள்ளைக்குத் திருமுழுக்கு வழங்கி, "இலாசர்" (Lazarus) என்பதற்கு நிகரான "தேவசகாயம்" என்னும் பெயரைச் சூட்டினார்.[6] கத்தோலிக்க மதத்திற்கு மாறியதும் தேவசகாயம் பிள்ளை பலரிடமும் இயேசு கிறித்துவை பற்றிப் போதித்து, பலரை கிறிஸ்தவ மதத்திற்கு மனம் மாற்றினார். இவரது மனைவி இலந்தவிளை அருகே உள்ள குஞ்சு வீட்டு நாயர் சமுதாயத்தை சார்த்த பார்கவி அம்மாள் ஆவார். அவரும் "ஞானப்பூ" எனும் பெயருடன் திருமுழுக்கு பெற்று கத்தோலிக்க கிறித்தவர் ஆனார்.
எதிரிகளின் சூழ்ச்சி
"தேவசகாயம்" என்ற பெயருடன் கிறித்தவரான நீலகண்டன், கடவுள் முன்னிலையில் மனிதர்கள் அனைவரும் சமம் என்ற உண்மையை நிலைநாட்ட பெரிதும் விரும்பினார். நாயர் குலத்தைச் சேர்ந்த இவர், ஏற்கனவே கிறித்தவ சமயத்தைப் பின்பற்றி வந்த தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்த மக்களுடன் உறவாடி வந்தார். இதன் காரணமாக, உயர் வகுப்பைச் சேர்ந்த மற்ற அரச அதிகாரிகள் தேவசகாயத்தை வெறுப்புடன் நோக்கினர்.[5] உயர் வகுப்பைச் சேர்ந்த இந்துக்கள் கிறித்தவத்தை தழுவக்கூடாது என்ற அன்றைய திருவாங்கூர் அரச கட்டளையைச் சுட்டிக்காட்டி, அவரை மீண்டும் இந்து மதத்தை ஏற்க வலியுறுத்தினர். அதைப் புறக்கணித்ததால், தேவசகாயம் மதம் மாறிய விவகாரம் மன்னரிடம் சென்றது.[5]
திருவாங்கூர் அரசில் கிறித்தவ மக்களுக்கு பொதுவாக பாதுகாப்பு இருந்தாலும், புதிதாக மதம் மாறுவதற்கு சில தடைகள் இருந்தன.[சான்று தேவை] நீலகண்டன் என்கிற தேவசகாயம் உயர் வகுப்பைச் சேர்ந்தவராகவும், அரச அதிகாரியாகவும் இருந்ததால் அவர் கிறித்தவராக மாறியதை மன்னர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.[5] தமது மனதை மாற்றிக் கொள்ளுமாறு மன்னர் விடுத்த அழைப்பை தேவசகாயம் பிள்ளை முழுமனதோடு நிராகரித்தார்.[சான்று தேவை] இதனால் ஆத்திரமடைந்த மன்னர் மார்த்தாண்ட வர்மா, தேவசகாயத்தை சிறையில் அடைக்குமாறு ஆணையிட்டார். இந்த தண்டனை மூலம், அவரை மனம் மாற்றி கிறித்தவ மதத்தைக் கைவிடச் செய்யலாம் என்பது மன்னரின் நம்பிக்கையாக இருந்தது.[6]
மரண தண்டனை
பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்ட பிறகும் தேவசகாயம், கிறித்தவ நம்பிக்கையில் உறுதியாக இருந்தார். இதனால் நம்பிக்கை இழந்த மன்னர், தேவசகாயத்தின் கீழ்ப்படியாமையை அரசத் துரோகமாக கருதி அவருக்கு மரண தண்டனை விதித்தார். அவரைக் கொல்லும் முன், மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக அமையும்படி அவரை எருமை மாடு மீது அமர்த்தி பல ஊர்களுக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லவும் ஆணையிட்டார். இதையடுத்து, அவரது உடல் முழுவதும் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தப்பட்டது. அவரது கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டு கழுத்தில் எருக்கம் பூ மாலை அணிவிக்கப்பட்டு எருமை மாட்டின் மீது பின்னோக்கி அமர வைத்து அவரை ஊர்ஊராக அழைத்துச் சென்றார்கள்.[5]
தேவசகாயம் பிள்ளை சென்ற இடங்களில் எல்லாம் அவரிடம் ஆசி பெறச் சென்ற கிறித்தவர்களுக்கு அற்புதங்கள் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.[சான்று தேவை] அவரைக் கட்டி வைத்திருந்த பட்டுப்போன வேப்பமரம் ஒன்று மீண்டும் தளிர்த்து வளர்ந்ததாகவும் வரலாறு பதிவு செய்கிறது. இதன் காரணமாக, தேவசகாயம் பிள்ளையின் புகழ் மக்களிடையே வேகமாக பரவியது. ஆகவே, அவரை ரகசியமாக கொலை செய்து விடுமாறு மன்னரிடம் இருந்து கட்டளை வந்தது. மக்கள் அனைவரும் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையில், 1752 சனவரி 14ந்தேதி குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் உள்ள காற்றாடி மலையில் தேவசகாயம் சுட்டுக் கொல்லப்பட்டார்.[6]
மறைசாட்சி
தேவசகாயம் பிள்ளையின் உடலை காட்டிலேயே எரித்து தீ வைத்துவிட்டுச் சென்றனர் மன்னரின் படைவீரர்கள். சில நாட்களுக்கு பிறகு இதுகுறித்து அறிந்த அப்பகுதி கத்தோலிக்க கிறித்தவர்கள், தேவசகாயம் பிள்ளையின் உடல் பகுதிகளை எடுத்துச் சென்று நாகர்கோவிலில் உள்ள கோட்டாறு புனித சவேரியார் ஆலய வளாகத்தில் அடக்கம் செய்தனர். அவரை மறைசாட்சியாக கருதியதாலேயே, ஆலய வளாகத்தில் அவருக்கு கல்லறை அமைக்கப்பட்டது. அப்பொழுது கொச்சி மறைமாவட்டத்தின் ஆயராக இருந்த கிளெமென்சு யோசப், "நமக்கொரு மறைசாட்சி கிடைத்து விட்டார்" என்று கூறி சிறப்பு வழிபாடு நடத்தியதாக குறிப்புகள் உள்ளன.[5]
தேவசகாயம் பிள்ளையின் கல்லறையில் செபித்ததால் பல்வேறு அற்புதங்கள் நிகழ்ந்ததாக குமரி மாவட்ட மக்கள், கத்தோலிக்க திருச்சபை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். இதையடுத்து, கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டே தேவசகாயம் பிள்ளை கொல்லப்பட்டார் என்னும் செய்தி அடங்கிய அறிக்கையை அப்போது கொச்சி ஆயராக இருந்த கிளெமென்சு யோசப் (Clemens Joseph) 1756ல் ரோமில் திருத்தந்தையிடம் கையளித்தார். இலத்தீன் மொழியில் எழுதப்பட்ட அந்த அறிக்கையும் அதன் ஆங்கில, தமிழ் மொழிபெயர்ப்புகளும் உள்ளன.[7] அப்பொழுது, மறைசாட்சி கட்டுண்டிருந்த சங்கிலியும் ரோமுக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிகிறது. இதுவே, அவரை புனிதராக உயர்த்துவதற்கான முதல் முயற்சியாக கருதப்படுகிறது.[5]
மாற்றுக் கருத்துகள்
அதே சமயம் இது கட்டுக்கதை என இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் (ICHR) தலைவராக இருந்த எம்.ஜி.எஸ்.நாராயணன் ஆகியோர் கருத்துரைக்கின்றனர், நீலகண்டம்பிள்ளை என்ற பெயரிலோ தேவசகாயம்பிள்ளை என்ற பெயரிலோ மார்த்தாண்டவர்ம மகாராஜா காலத்தில் ஒரு ராணுவத் தளபதி இருந்ததில்லை என்கின்றனர்.[8][9][9]
அதே நேரத்தில் இந்தத் தகவல் கட்டுக்கதை என்ற கருத்தும் நிலவுகிறது. சனவரி 14 இந்துத் தமிழர்களின் பொங்கல் விழாவினை சீரழிக்கும் விதமாக இம்மதிரியான கற்பனை நிகழ்வுகள் எடுத்தியம்பும் படுவதாகவும் இக் கருத்துடையோர் கூறுகின்றனர்.[சான்று தேவை] ஏனெனில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஈழவர்கள், கிறுத்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் படை வீரர்களாக பணியாற்றியுள்ளனர்.[10] எனவே கிறுத்துவராக மாறியதால்தான் இவர் கொல்லப்பட்டார் என்பது கட்டுக்கதை என வரலாற்று ஆய்வாளர்கள் ஏ. ஸ்ரீதர மேனன் மற்றும் நாகம் ஐயா ஆகியோர் கூறுகின்றனர்.[11] மேலும் மார்த்தாண்ட வர்மா இராஜா வரப்புழா தேவாயத்திற்கு வரியின்றி நிலம் கொடுத்திருப்பதால் நீலகண்டன் பிள்ளையை கிறுத்துவராக மாறியதால் இராஜா கொன்றிருக்க வாய்ப்பில்லை.[12] திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மரண தண்டனையானது ராஜதுரோகக் குற்றம், கொலை மற்றும் வழிப்பறி போன்ற குற்றங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.[13] நீலகண்டப் பிள்ளை அரசு ஆவணங்களை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில், தண்டனை வழங்கப்பட்டிருக்கலாம். இது, அவர் மதம் மாறிய சில ஆண்டுகளுக்குப் பின்னர்தான் நடந்திருக்க வேண்டும். இந்த தண்டனைக்கும் மதம் மாற்றத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என வரலாற்று ஆய்வாளர் நாகம் ஐயா குறிப்பிடுகிறார்.[14]
அருளாளர்
இருநூற்று நாற்பது ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு, 1993ஆம் ஆண்டில் தேவசகாயம் பிள்ளைக்குப் புனிதர் பட்டம் அளிக்க முயற்சி மேற்கொள்வது பொருத்தம் என்று கருதி அதற்கான நடவடிக்கைகளைக் கோட்டாறு மறைமாவட்ட ஆயர் லியோன் தர்மராஜ் மீண்டும் தொடங்கினார். அவரின் வேண்டுகோள்படி, 2004ஆம் ஆண்டு தமிழ்நாடு கத்தோலிக்க ஆயர் பேரவை, அகில இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையுடன் இணைந்து, தேவசகாயம் பிள்ளைக்குப் புனிதர் பட்டம் அளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, கத்தோலிக்க தலைமைப் பீடத்துக்கு வேண்டுகோள் விடுத்தது. இதனையடுத்து அவர் இறை ஊழியர் என அறிவிக்கப்பட்டார்.
2012 ஜூன் மாதத்தில் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், தேவசகாயம் பிள்ளை உறுதியான விசுவாச வாழ்வு (heroic virtues) வாழ்ந்தார் என அறிக்கையிடும் புனிதர் பட்ட நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பேராயத்தின் (Congregation for the Causes of Saints) ஆவணத்தில் கையொப்பம் இட்டு இவரை வணக்கத்திற்குரியவர் நிலைக்கு உயர்த்தினார்.[15][16] தேவசகாயம் பிள்ளையின் மறைசாட்சிய (martyr) வாழ்வின் அடிப்படையில், அவருக்கு அருளாளர் பட்டம் வழங்கவும் ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து நாகர்கோவில் கார்மேல் மேனிலைப் பள்ளி வளாகத்தில் 2012 திசம்பர் 2ந்தேதி நடைபெற்ற விழாவில், தேவசகாயம் பிள்ளையை அருளாளராக உயர்த்தும் அறிவிப்பை திருத்தந்தையின் பிரதிநிதியான கர்தினால் ஆஞ்செலோ அமாத்தோ வெளியிட்டார்.[17]
மறைசாட்சி பட்டம் அளிக்கும் விழா
2012ஆம் ஆண்டு, திசம்பர் மாதம் 2ஆம் நாள், தேவசகாயம் பிள்ளை அடக்கம் செய்யப்பட்டுள்ள கோட்டாறு மறைமாவட்ட சவேரியார் முதன்மைக் கோவிலை அடுத்துள்ள கார்மேல் மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியின்போது தேவசகாயம் பிள்ளை "மறைச்சாட்சி" (martyr) என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். அப்போது அவருக்கு "முத்திப்பேறு பெற்றவர்" (Blessed) என்னும் பட்டமும் அளிக்கப்பட்டது. இது தொடர்பாகத் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் வெளியிட்ட அறிக்கையைத் திருத்தந்தை பதிலாளாகச் செயல்பட்ட கர்தினால் ஆஞ்செலோ அமாத்தோ வாசித்தளித்தார்.
இச்சிறப்பு நிகழ்ச்சிக்குத் தலைமைதாங்கிய கர்தினால் ஆஞ்செலோ அமாத்தோ என்பவர் உரோமையிலிருந்து கோட்டாற்றுக்கு வருகை தந்தார். அந்நிகழ்ச்சியில் தமிழகத்திலிருந்தும் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் பல கத்தோலிக்க சமயத் தலைவர்களும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களும் கலந்துகொண்டனர். தேவசகாயம் பிள்ளை பக்தி கிறித்தவர் அல்லாத பிற சமயத்தினர் நடுவிலும் நீண்ட காலமாக இருந்துவருவதைத் தொடர்ந்து பல சமயத்தினர் சிறப்பு விழாவில் பங்கேற்றனர்.
மறைச்சாட்சி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டோர்
கத்தோலிக்க சமயத் தலைவர்களுள் 40க்கும் மேலான ஆயர்களும், நூற்றுக்கணக்கான குருக்களும் கன்னியரும் துறவியரும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றனர்.[17] விழாவில் பங்கேற்ற தலைமைப் பணியாளர்களுள் கீழ்வருவோர் அடங்குவர்:
- கர்தினால் ஆஞ்செலோ அமாத்தோ (திருத்தந்தைப் பதிலாள்)
- கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ் (மும்பை பேராயர்)
- கர்தினால் தெலஸ்போர் தோப்போ (ராஞ்சி பேராயர்)
- கர்தினால் ஜோர்ஜ் ஆலஞ்சேரி (சீரோ-மலபார் கத்தோலிக்க சபை தலைமைப் பேராயர்)
- தலைமைப் பேராயர் பசேலியோஸ் கிளீமிஸ் கத்தோலிக்கோஸ் (சீரோ-மலங்கரை கத்தோலிக்க சபை தலைமைப் பேராயர்)
- பேராயர் சால்வத்தோரே பென்னாக்கியோ (திருத்தந்தைத் தூதர், புது தில்லி)
- ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் (கோட்டாறு மறைமாவட்ட ஆயர்)
மேலே குறிப்பிடப்பட்ட கத்தோலிக்க சமயத் தலைவர்கள் தவிர, கன்னியாகுமரி மாவட்டத்தின் அரசியல் தலைவர்கள் பலரும் மறைச்சாட்சி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டனர். அவர்களுள் கே.டி. பச்சைமால் (வனத்துறை அமைச்சர்), ஜே. ஹெலன் டேவிட்சன் (கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர்), ஏ. நாஞ்சில் முருகேசன் (நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர்) உள்ளடங்குவர்.
விழாவின் சிறப்புக் கூறுகள்
தேவசகாயம் பிள்ளைக்கு முத்திப்பேறு பெற்ற பட்டமும் மறைச்சாட்சி நிலையும் வழங்கப்பட்ட விழாவின் சில சிறப்பு அம்சங்கள்[18]:
- கோட்டாறு மறைமாவட்டத்தின் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் மற்றும் முத்திப்பேறு பட்டத்திற்கான தயாரிப்புக் குழுவின் தலைவர் அருள்திரு ஏ. கபிரியேல் ஆகிய இருவரும் உரோமையிலிருந்து வருகை தந்து விழாவுக்குத் திருத்தந்தை பெயரால் தலைமை ஏற்றக் கர்தினால் ஆஞ்செலோ அமாத்தோவை அணுகி, பட்டமளிப்பு விழாவை நடத்துமாறு வேண்டினர்.
- ஆயர் ரெமிஜியுஸ் தேவசகாயம் பிள்ளையின் வாழ்க்கைக் குறிப்புகளை வாசித்தளித்தார்.
- திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் கையொப்பமிட்டு அனுப்பியிருந்த அதிகாரப்பூர்வ இலத்தீன் மொழித் திருத்தூது மடலை (apostolic letter) அவரது பதிலாளாக வந்திருந்த கர்தினால் அமாத்தோ மக்கள் முன்னிலையில் வாசித்தார். அப்போது இதுவரை வணக்கத்துக்குரியவர் (Venerable) என்னும் பட்டம் கொடுக்கப்பட்டிருந்த தேவசகாயம் பிள்ளை இனிமேல் "முத்திப்பேறு பெற்றவர்" (அ) "அருளாளர்" (Blessed) என்று அழைக்கப்படுவார் என்றும், அவர் கத்தோலிக்க திருச்சபையில் அதிகாரப்பூர்வமாக "வேத சாட்சி" (அ) "மறைச்சாட்சி" (Martyr) பட்டம் பெறுகிறார் என்னும் அறிவித்தார்.
- முத்திப்பேறு பெற்ற தேவசகாயம் பிள்ளையின் வாழ்க்கையோடு தொடர்புடைய தலத் திருச்சபைகளில் (கோட்டாறு மறைமாவட்டம் உட்பட) அவரது ஆண்டுத் திருவிழா சனவரி 14ஆம் நாள் கொண்டாடுவதற்குத் திருச்சபைத் தலைவர்கள் ஏற்பாடு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
- உரோமையிலிருந்த பெறப்பட்ட அதிகாரப்பூர்வ மடலின் தமிழ் மொழிபெயர்ப்பு கோட்டாறு ஆயர் ரெமிஜியுசால் வாசித்தளிக்கப்பட்டது.
- அதைத் தொடர்ந்து "தே தேயும்" (Te Deum) எனத் தொடங்குகின்ற இறைநன்றிப்பாடல் கத்தோலிக்க மரபுக்கு ஏற்ப இலத்தீன் மொழியில் பாடப்பட்டது.
- அப்போது தேவசகாயம் பிள்ளையின் முழு உயர உருவப்படமும் அவரது திருப்பண்டங்கள் சிலவும் பீடத்திற்குப் பவனியாகக் கொண்டுவரப்பட்டன. அவை பீடத்துக்கு அருகில் எரியும் மெழுகுதிரிகள் சூழ மக்களின் வணக்கத்திற்கு வைக்கப்பட்டன.
- திருப்பலிக்குத் தலைமை தாங்கிய கர்தினால் அமாத்தோ தேவசகாயம் பிள்ளையின் திரு உருவத்திற்கும் திருப்பண்டங்களுக்கும் வணக்கம் செலுத்தும் வகையில் தூபம் காட்டினார். அப்போது மறைச்சாட்சியின் புகழ் சாற்றும் பாடல் பாடப்பட்டது.
- தேவசகாயம் பிள்ளை பிறந்து வளர்ந்த நிலமாகிய கோட்டாறு மறைமாவட்டத்தின் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தேவசகாயம் பிள்ளைக்கு முத்திப்பேறு பெற்ற பட்டம் அளித்து, அவரை மறைச்சாட்சியாக அறிவித்த திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டுக்கு மறைமாவட்டத்தின் பெயரால் நன்றி நவின்றார்.
முத்திப்பேறு பெற்ற தேவசகாயம் பற்றித் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் உரை
கோட்டாறு மறைமாவட்டத்தின் நாகர்கோவில் நகரில் தேவசகாயம் பிள்ளை முத்திப்பேறு பெற்ற அறிவிப்பு 2012, திசம்பர் 2ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை நிகழ்ந்துகொண்டிருந்த வேளையில், வத்திக்கான் நகரில் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் தாம் வழக்கமாக ஆற்றுகின்ற ஞாயிறு நண்பகல் உரையைத் தொடர்ந்து இத்தாலிய மொழியில் பின்வருமாறு கூறினார்:
"அன்பு சகோதரர்களே, சகோதரிகளே! பொதுநிலை சார்ந்த கிறித்தவ நம்பிக்கையாளராக 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைச்சாட்சியாக உயிர்நீத்த தேவசகாயம் பிள்ளை "முத்திப்பேறு பெற்றவர்" என்று இன்று இந்திய நாட்டின் கோட்டாறு மறைமாவட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது. இந்தியாவின் திருச்சபையோடு அதன் மகிழ்ச்சியில் நாமும் பங்கேற்கிறோம். புதிதாக முத்திப்பேறு பெற்ற அவர் அந்தச் சீர்மிகு பெரு நாட்டில் வாழ்கின்ற கிறித்தவ மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறோம்."
தொடர்ந்து, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் ஆங்கிலத்தில் பின்வருமாறு கூறினார்[19]:
"இங்கே குழுமியிருக்கின்ற உங்கள் அனைவரையும் என்னோடு சேர்ந்து இறைவேண்டல் செய்ய அழைக்கின்றேன். இன்று தேவசகாயம் பிள்ளை முத்திப்பேறு பெற்ற நிகழ்ச்சியைக் கொண்டாடுகின்ற கோட்டாறு மக்கள் அனைவருக்கும் எனது தனிப்பட்ட வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இன்று நாம் திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறைக் கொண்டாடுகிறோம். இயேசு கிறிஸ்து நம்மிடையே வருகின்றார் என்பதை அது நினைவூட்டுகின்றது. இயேசு கிறிஸ்துவின் வருகையை நாம் எப்பொழுதும் கருத்தில் கொண்டிருக்க வேண்டும். கிறிஸ்துவுக்குச் சாட்சி பகர்ந்த தேவசகாயம் பிள்ளை இதில் நமக்கு முன்மாதிரியாய் இருக்கின்றார். நமது நம்பிக்கையாய் உள்ள கிறிஸ்து நமது வாழ்வின் மையமாக அமைந்திட இப்புனித காலம் நமக்குத் துணைசெய்ய வேண்டும். கடவுள் உங்கள் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக!"
தேவசகாயம் பிள்ளையின் கல்லறை புதுப்பிக்கப்படல்
தேவசகாயம் பிள்ளைக்கு மறைச்சாட்சி பட்டம் அளிக்கும் நிகழ்வை முன்னிட்டு, கோட்டாறு மறைமாவட்ட சவேரியார் முதன்மைக் கோவிலில் தேவசகாயம் பிள்ளையின் கல்லறை புதுப்பிக்கப்பட்டுள்ளது. 2012, திசம்பர் 2ஆம் நாள் அக்கல்லறையைச் சந்தித்து அங்கு இறைவேண்டல் நிகழ்த்திட ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர்.
புனிதர் பட்டம்
திருத்தந்தை பிரான்சிசு, அருளாளர் தேவசகாயம் பிள்ளையைப் புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்கு ஒப்புதல் தெரிவித்து அதிகாரப் பூர்வமான ஆவணத்தில் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் நாள் கையெழுத்திட்டார்.[20]
தேவசகாயம் பிள்ளைக்கு 15 மே 2022 அன்று புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது.[21]
மேற்கோள்கள்
- ↑ Terry Jones, Blessed Devasahayam Pillai, Star Quest Production Network. Retrieved 4 December 2012.
- ↑ Decrees of the Congregation for the Causes of Saints பரணிடப்பட்டது 2015-09-24 at the வந்தவழி இயந்திரம், Syro Malabar Church, 1 July 2012. Retrieved 4 December 2012.
- ↑ முத்திப்பேறு பெற்ற பட்டம் பரணிடப்பட்டது 2012-12-02 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ Kumar, Suresh; Kumar, Suresh (2 December 2012). "Beatification of Martyr Devasahayam Pillai to be celebrated today" – via www.thehindu.com.
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 5.7 மறைசாட்சி தேவசகாயம் பிள்ளையின் வீர வரலாறு, சே.ரோ.நற்சீசன்
- ↑ 6.0 6.1 6.2 6.3 இலக்கியங்கள் போற்றும் தியாகச் செம்மல் தேவசகாயம் பிள்ளை, அருட்சகோதரி முனைவர் ஜோ. ரோசல்லா FMA
- ↑ "தேவசகாயம் பிள்ளை கிறித்தவ நம்பிக்கை பொருட்டு கொல்லப்பட்ட முதல் அறிக்கை". Archived from the original on 2012-04-23. பார்க்கப்பட்ட நாள் 2012-06-30.
{cite web}
: Unknown parameter|dead-url=
ignored (help) - ↑ Travancore Manual Vol II page 129-130, M.Nagam Aiya
- ↑ 9.0 9.1 Travancore (Princely State) n 81035198; Aiya, V. Nagam (11 June 2018). "The Travancore state manual". Trivandrum : Travancore government press – via Internet Archive.
{cite web}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ Travancore Manual, Vol-IV page 122, T.K.Veluppillai
- ↑ 20. சனவரி 2004 - பயோனியர் பத்திரிகை
- ↑ Travancore Manual, Vol-I page 16, T.K.Veluppillai
- ↑ Travancore Manual, Vol-IV page 77, T.K.Veluppillai
- ↑ Travancore Manual Vol-II page 130, M.Nagam Aiya
- ↑ "மறைச்சாட்சி பட்டம் வழங்க வத்திக்கான் ஆணை". Archived from the original on 2012-07-13. பார்க்கப்பட்ட நாள் 2012-06-30.
{cite web}
: Unknown parameter|dead-url=
ignored (help) - ↑ "News from the Vatican – News about the Church – Vatican News". www.news.va. Archived from the original on 2012-07-01. பார்க்கப்பட்ட நாள் 2012-06-30.
{cite web}
: Unknown parameter|dead-url=
ignored (help) - ↑ 17.0 17.1 "Page not found News" – via www.thehindu.com.
{cite web}
: Cite uses generic title (help) - ↑ "Devasahayam Pillai beatified".
- ↑ பதினாறாம் பெனடிக் உரை
- ↑ புனிதர் பட்டம் வழங்க ஒப்புதல் அறிக்கை
- ↑ Kerala: Hindu converted to Christianity to be first layman to be canonised
வெளி இணைப்புகள்
- Official Website பரணிடப்பட்டது 10 திசம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம் (Bibliography பரணிடப்பட்டது 13 ஏப்பிரல் 2008 at the வந்தவழி இயந்திரம்)