பரோர்

பரோர் (ஆங்கிலம்: Baror, இந்தி மற்றும் ராசத்தானி: बरोर, பஞ்சாபி: ਬਰੋਰ) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள சிறீ கங்காநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள பண்டைய சிந்துவெளி நாகரீகத்தின் தொல்லியல் களமாகும். அரப்பா மற்றும் அரப்பாவுக்கு முந்தைய காலத்து மட்பாண்டங்கள் அகழ்வாராய்ச்சிக்குப் பின் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன [1].

அமைவிடம்

இராஜஸ்தான் மாநிலத்தின் தார் பாலைவனத்தில், இந்திய-பாகிஸ்தான் பன்னாட்டு எல்லைப்புறத்தில் உள்ள சிறீ கங்காநகர் மாவட்டத்தின் தெற்கு பகுதியில் அனுப்கார்-இராம்சிங்பூர் சாலையில் பரோர் தொல்லியல் தளம் அமைந்துள்ளது.

கண்டுபிடிப்பு

வரலாற்றுக்கு முந்தையத் தளமான பரோர் 1916-17 காலகட்டத்தில் லூய்கி பியோ டெசிடிட்டோரி (1887-1919) இத்தாலிய இந்தியவியல் அறிஞரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் அம்லானந்து கோசு (இந்தியாவின் தொல்பொருள் ஆய்வுக் கழகம், அல்லது ஏ.எசு.ஐ.யின் முன்னாள் இயக்குநர்) என்பவரால் இந்த தளத்தில் விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்டன. 2003-04 ஆம் ஆண்டில் இந்திய தொல்பொருள் ஆய்வக அகழ்வாய்வு கிளை -3, பாட்னா சரசுவதி மரபுரிமை திட்டத்தின் கீழ் அகழ்வாய்வைத் தொடங்கியது. 400 × 300 சதுர பரப்பளவுள்ள பகுதி அகழ்வாராய்ச்சிக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. 2006 – 2007 ஆண்டு காலத்தில் பளிங்குக்கல் வீடுகள், சாலைகள், தெருக்கள் முதலியன கண்டறியப்பட்டன.

அகழ்வாய்வுகள்

அரப்பா மற்றும் அராப்பாவுக்கு முந்தைய கால மட்பாண்டங்கள் தொல்பொருள் அறிஞர்களால் இங்கு கண்டறியப்பட்டன. வட்ட மற்றும் முக்கோண சுடுமண் சிலைகள், துளையிட்ட அலங்கார வட்ட மணிகள் மற்றும் இடைவெளி நிரப்பிகள் பீங்கான் அலங்காரப் பொருட்கள் போன்றவை சில உதாரணங்களாகும்.

  • 1. அலங்கார நகைகளுடன் இருந்த ஒரு மனித எலும்புக்கூடு இங்கு கிடைத்தது.
  • 2. இரண்டு கற்கள் உராய்வின் பின்னர் சிவப்பு நிற நீர்மம் உருவாவதாகக் கண்டறியப்பட்டது.
  • 3. 5 மீட்டர் நீளமும் 3 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு களிமண் அடுப்பு கண்டுபிடிக்கப்பட்டது.
  • 4. 8000 முத்துகளால் நிரப்பப்பட்ட ஒரு குடம் இங்கு காணப்பட்டது.[2]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "Baror". Archaeological Survey of India, Jaipur Circle. பார்க்கப்பட்ட நாள் 5 January 2013.
  2. "Baror near Ramsinghpur". Rajasthan Patrika newspaper. 19 June 2006.