பாடாங் செராய்

பாடாங் செராய்
Padang Serai
கெடா
கூலிம் மாவட்டம்
பாடாங் செராய் is located in மலேசியா
பாடாங் செராய்
      பாடாங் செராய்
ஆள்கூறுகள்: 5°30′N 100°34′E / 5.500°N 100.567°E / 5.500; 100.567
நாடு மலேசியா
மாநிலம் கெடா
மாவட்டம்கூலிம்
நாடாளுமன்றம்பாடாங் செராய் (மக்களவை தொகுதி)
நகரத் தோற்றம்1950-களில்
நேர வலயம்மலேசிய நேரம்
 • கோடை (பசேநே)கண்காணிப்பு இல்லை
மலேசிய அஞ்சல் குறியீடு
10xxx
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்K

பாடாங் செராய் (மலாய்: Padang Serai; ஆங்கிலம்: Padang Serai; சீனம்: 巴东士乃) மலேசியா, கெடா மாநிலத்தில், கூலிம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். பாடாங் செராய் நகரம் கோலா கெட்டில்; லூனாஸ் நகரங்களுக்கு இடையில் அமைந்து உள்ளது.

இந்த நகரைச் சுற்றிலும் பல செம்பனைத் தோட்டங்கள் உள்ளன. அந்த வகையில் அதிகமான தமிழர்களும் பாடாங் செராய் சுற்றுப் பகுதிகளில் வாழ்கிறார்கள். 2018-ஆம் ஆண்டு வாக்காளர்கள் பதிவின்படி மலாய்க்காரர்கள் 59.05 விழுக்காடு; இந்தியர்கள் 20.74 விழுக்காடு; சீனர்கள் 19.8 விழுக்காடு.[1] சீனர்களைக் காட்டிலும் தமிழர்கள் சற்று அதிகமாக உள்ளனர்.

பாடாங் செராய் தமிழர்கள்

1890-ஆம் ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பாடாங் செராய்; கூலிம்; லூனாஸ் பகுதிகளில் இருந்த காபி, ரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்காகத் தமிழகத்தில் இருந்து அழைத்து வரப் பட்டார்கள். அவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களை ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்று அழைத்தார்கள்.

அந்தக் காலக்கட்டத்தில் பாடாங் செராய் நகரத்தைச் சுற்றிலும் நிறைய ரப்பர் தோட்டங்கள் இருந்தன. 1990-ஆம் ஆண்டுகளில் பாடாங் செராய்; கூலிம் வட்டாரங்களில் தொழில்துறை மேம்பாடுகள் காணப்பட்டன.

அவற்றின் காரணமாக பல ரப்பர் தோட்டங்கள் மூடப்பட்டன. அந்தத் தோட்டங்களில் வேலை செய்த தமிழர்களில் பெரும்பாலோர் பாடாங் செராய் புறநகர்ப் பகுதிகளில் குடியேறினார்கள். மலேசியாவில் அதிகமாகத் தமிழர்கள் வாழும் இடங்களில் பாடாங் செராய் நகரமும் ஒன்றாகும்.

வளர்ச்சி வரலாறு

இந்த நகரம் 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோற்றுவிக்கப் பட்டது. இருப்பினும் 1910 - 1930-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கெடா மாநிலம் பிரித்தானியர்களின் பாதுகாப்பில் இருந்த போது அங்குள்ள கடை வீடுகள் கட்டப்பட்டன.

அந்தக் காலக் கட்டத்தில் சீனா; இந்தியா நாடுகளில் இருந்து குடியேறியவர்களும் உள்ளூர் மக்களில் பலரும் பிரித்தானிய நிறுவனங்களுக்குச் சொந்தமான ரப்பர் தோட்டங்களில் பணிபுரிந்தனர். அந்த வகையில் பாடாங் செராய் பகுதியில் மட்டும் நான்கு தமிழ்ப்பள்ளிகள் உள்ளன.

பாடாங் செராய் தமிழ்ப்பள்ளிகள்

இந்தப் புள்ளிவிவரங்கள் மலேசியக் கல்வியமைச்சு ஜனவரி 2020-இல் வெளியிட்டவை. கெடா மாநிலத்தின் 9 மாவட்டங்களில் 60 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 7,518 மாணவர்கள் பயில்கிறார்கள். [2]

ஹென்றிட்டா தோட்டத் தமிழ்ப்பள்ளி

ஹென்றிட்டா தோட்டத் தமிழ்ப்பள்ளி (SJKT Ladang Henrietta), பாடாங் செராய் பகுதியில் உள்ள தமிழ்ப்பள்ளியாகும். இந்தப் பள்ளியில் 296 மாணவர்கள் பயில்கிறார்கள்.

ஹென்றிட்டா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் முன்னெடுப்பு வாசகம்:

தமிழர் மாற்றமும் ஏற்றமும் மாணவரிடம் இருந்து தொடங்கட்டும்! சிந்திப்போம், சுதாக‌ரித்துக் கொள்வோம். தேவையான‌ மாற்ற‌ங்க‌ள் வ‌ரும் வ‌ரை செய‌லாற்றுவோம். இப்பொழுது இல்லை என்றால் எப்பொழுது? நாம் இல்லை என்றால் வேறு யார்? இதை உண‌ர்ந்து, ந‌ம் முன் உள்ள‌ ச‌வால்க‌ளைக் க‌ண்டெடுத்து, தீர்வுக்கு வ‌ழி காண்போம்!! [3]|[4]

ஹென்றிட்டா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் படங்கள்

புக்கிட் சிலாரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி

புக்கிட் சிலாரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி (SJKT Ladang Bukit Selarong), பாடாங் செராய் பகுதியில் உள்ள தமிழ்ப்பள்ளியாகும். இந்தப் பள்ளியில் 71 மாணவர்கள் பயில்கிறார்கள்.[5]

பாடாங் மேகா தோட்டத் தமிழ்ப்பள்ளி

அறிவே சக்தி துணை என்பது இந்தப் பள்ளியின் உறுதிமொழிச் சொல். பாடாங் மேகா தோட்டத் தமிழ்ப்பள்ளி (SJKT Padang Meiha) பாடாங் செராய் பகுதியில் உள்ள தமிழ்ப்பள்ளி. 115 மாணவர்கள் பயில்கிறார்கள். 17 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

பாடாங் மேகா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் படங்கள்

விக்டோரியா தோட்டத் தமிழ்ப்பள்ளி

விக்டோரியா தோட்டத் தமிழ்ப்பள்ளி (SJKT Ladang Victoria) பாடாங் செராய் பகுதியில் உள்ள தமிழ்ப்பள்ளி. 1947-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பள்ளி. 176 மாணவர்கள் பயில்கிறார்கள். 1991-ஆம் ஆண்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டது.

1994-ஆம் ஆண்டில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் இந்தப் பள்ளியின் தரம் ‘ஏ’ தகுதிக்கு உயர்த்தப் பட்டது. அப்போது அப்பள்ளியில் 12 வகுப்புகள் இருந்தன. 248 மாணவர்களும் 24 ஆசிரியர்களும் இருந்தார்கள்.[6]

விக்டோரியா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் படங்கள்

பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதியின் தமிழர்கள்

பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதியை 2008-ஆம் ஆண்டில் இருந்து, கடந்த 13 ஆண்டுகளாகத் தமிழர்கள் தக்க வைத்துக் கொண்டு வருகின்றனர். இந்தத் தொகுதியில் மலாய்க்காரர்களும், சீனர்களும் அதிகமான வாக்காளர்களாக இருந்தாலும் மூன்று முறை தமிழர்களைத் தேர்ந்து எடுத்து மலேசிய நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்து இருக்கிறார்கள்.

மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் 2008-ஆம் ஆண்டில் இருந்து 2021-ஆம் ஆண்டு வரையில் பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்த தமிழர்கள்:

பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
நாடாளுமன்றம் ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
12-ஆவது நாடாளுமன்றத் தொடர் 2008 – 2011 கோபாலகிருஷ்ணன் நாகப்பன் பி.கே.ஆர்.
2011–2013 சுயேச்சை
13-ஆவது நாடாளுமன்றத் தொடர் 2013 – 2018 ந. சுரேந்திரன் நாகராஜன் பி.கே.ஆர்.
14-ஆவது நாடாளுமன்றத் தொடர் 2018 – 16.11.2022 கருப்பையா முத்துசாமி பாக்காத்தான் ஹரப்பான் (பி.கே.ஆர்.)

2018-ஆம் ஆண்டு பாடாங் செராய் வாக்காளர்கள்




பாடாங் செராய் வாக்காளர்கள் இனவாரியாக:2018[7]

  மலாய்க்காரர்கள் (59.05%)
  இந்தியர்கள் (20.74%)
  சீனர்கள் (19.8%)
  மற்றவர்கள் (0.41%)

மேற்கோள்கள்