பாலியல் வன்முறை
பாலியல் வன்முறை எனப்படுவது பாலியல் வன்புணர்வு, பாலியல் நோக்குடன் அடிமைப்படுத்துதல், கட்டாய பாலியல் தொழில், வலிந்து கர்ப்பமாக்குதல், கட்டாய இனவிருத்தியை மேற்கொள்ளல், பாலியல் சார்ந்த கேலி,மிரட்டல், கட்டாயக் கருக்கலைப்பு என பல வகைக் குற்றங்கள் அடங்கும். ஒரு பெண் அல்லது ஆண், குடும்பம் விரும்பாத ஒருவருடன் காதல் அல்லது உடலுறவு கொண்டார் என்பதற்காக வன்முறைக்கு உட்படுத்துவதையும் ஒரு வகை பாலியல் வன்முறையே.
இந்தியாவில் பாலியல் வன்முறைகளின் போக்கு
தேசிய குற்றவியல் புலனாய்வு பிரிவின் புள்ளி விவரங்களின்படி, 1971 மற்றும் 2011ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில், பதிவு செய்யப்பட்ட பாலியல் பலாத்காரங்களின் எண்ணிக்கையானது கிட்டத்தட்ட 873.3 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த புள்ளிவிவரங்களை பரிசீலனை செய்து பார்க்கும் போது, பொருளாதார சீர்திருத்தங்களுக்குப் பிந்தைய காலகட்டத்தில் தான் பாலியல் வன்கொடுமைகளும் பாலியல் பலாத்காரங்களும் அதிகரித்து வந்துள்ளன என்பது ஊர்ஜிதமாகிறது. 1971 மற்றும் 1991ம் ஆண்டுகளுக்கிடையில் 1,15,414 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன. இதையே வருடத்திற்கு 6074 பாலியல் பலாத்கார வழக்குகள் இந்த கால கட்டத்தில் பதிவாகியுள்ளன என்று கூறலாம். ஆனால் 1992 மற்றும் 2001ம் ஆண்டுகளுக்கிடையில் பதிவாகியுள்ள பாலியல் பலாத்காரங்களின் எண்ணிக்கை 1,54,664 ஆகும். அதாவது ஆண்டிற்கு 15,466.4 பலாத்காரங்கள் பதிவாகியுள்ளன எனலாம். அதாவது பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் அமலாகத் தொடங்கிய முதல் பத்தாண்டுகளில் இந்த குற்றங்களின் விகிதம் அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. சீர்திருத்தக் காலகட்டத்தின் சமீபத்திய பத்தாண்டுகளில் அதாவது 2002 மற்றும் 2011ம் ஆண்டுகளுக்கிடையில் இந்த எண்ணிக்கை மிகவும் அபாயகரமான அள வில் அதிகரித்துள்ளது.இந்தக் காலகட்டத்தில் பதிவாகியுள்ள பாலியல் பலாத்காரங்களின் எண்ணிக்கை 1,98,139 ஆகும். அதாவது ஆண்டிற்கு 19,813.9 குற்றங்கள் சராசரியாகப் பதிவாகியுள்ளன. இதற்கு என்ன பொருள் என்றால், சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் மொத்தம் பதிவான பாலியல் பலாத்கார வழக்குகளில் 97.5 சதமான குற்றங்கள் 1991 மற்றும் 2011ம் ஆண்டுகளுக் கிடையில் நடைபெற்றுள்ளது என்பது தான். மேலும், கடந்த சில ஆண்டுகளில் இந்த குற்றங்களின் விகிதம் குறிப்பிடத்தகுந்த அளவில் அதிகரித்துள்ளது. 2009-2010ம் ஆண்டிற்கிடையில் பாலியல் பலாத்காரங்களின் எண்ணிக்கை என்பது 9.6 சதமானம் அதிகரித்துள்ளது. 2010-2011ம் ஆண்டிற்கிடையில் இந்த விகிதம் 9.2 சதமாக அதிகரித்துள்ளது.[1] 2012ல் 24923 பாலியல் வல்லுறவு வழக்குகள் பதியப்பட்டன. 2013ல் அது 33707 ஆக உயர்ந்தது. மாநகரம் என்று பார்த்தால், தில்லி, 1441 வழக்குகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. மாநிலம் என்றால், மத்திய பிரதேசம் 4335 வழக்குகளுடன் முதல் இடம் பெற்றுள்ளது. இதற்குப் பின்னால், ராஜஸ்தான் (3285), மஹாராஷ்டிரா (3063), உபி (3050) ஆகிய மாநிலங்கள் வருகின்றன. பதிவு செய்யப்பட்ட 33707 பாலியல் வல்லுறவு வழக்குகளில் 94 சதவிகித வழக்குகளில், குற்றவாளிகள் பாதிக்கப் பட்டவர்களுக்குத் தெரிந்தவர்களாக உள்ளனர் . அதாவது, பெற்றவரே செய்தது 539, உறவினர்கள் 2315, அண்டை வீட்டுக்காரர்கள் 10782, மற்றபடி தெரிந்தவர்கள் 18171. பாதிக்கப்பட்ட பெண்களின் வயது என்று பார்த்தால், 8877 பேர் 14-18 வயது வரம்பிலும், 15556 பேர் 18-30 வரம்பிலும் உள்ளனர்.[2]
தமிழகம்
தமிழகத்தில் 2013ல் 923 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது ஒரு நாளைக்கு 3 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகின்றனர். 2012ல் இந்த எண்ணிக்கை 737 ஆக இருந்து, ஓராண்டில் 19 சதவீதம் அதிகரித்துள்ளது.[2]
மேற்கோள்கள்
- ↑ "Contextualising the Delhi Protests against Rising Sexual Assaults". People's Democracy. December 30, 2012. பார்க்கப்பட்ட நாள் 31 அக்டோபர் 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 2.0 2.1 உ. வாசுகி (22 சூலை 2014). "பதற வைக்கும் பாலியல் கொடுமைகள்". தீக்கதிர் தமிழ் நாளிதழ். p. 4. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 22 சூலை 2014.