பிஜாசன் மாதா கோயில், சல்கான்பூர்

பிஜாசன் மாதா கோயில் சல்கான்பூர்
பிஜாசன் மாதா கோயில், சல்கான்பூர் is located in மத்தியப் பிரதேசம்
பிஜாசன் மாதா கோயில், சல்கான்பூர்
மத்தியப் பிரதேசத்தில் அமைவிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:மத்தியப் பிரதேசம்
மாவட்டம்:சல்கான்பூர் என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் செஹோர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராம ஊராட்சி ஆகும்.
அமைவு:சல்கான்பூர் ரெகிதி
ஆள்கூறுகள்:22°44′43″N 77°28′48″E / 22.745174°N 77.479939°E / 22.745174; 77.479939
கோயில் தகவல்கள்
இணையதளம்:https://sehore.nic.in/en/tourist-place/salkanpur-durga-temple/

விந்தியவாசினி மாதா கோயில் என்பது இந்தியாவின், மத்தியப் பிரதேச மாநிலம், ரெகிதிக்கு அருகிலுள்ள சல்கான்பூர் கிராமத்தில் 800 அடி குன்றின் உச்சியில் அமைந்துள்ள விந்தியவாசினி பீஜசன் தேவியின் (இந்து தெய்வமான துர்க்கையின் அவதாரங்களில் ஒன்று) ஒரு புனிதமான சித்பீடம் ஆகும். [1] [2] குன்றின் உச்சியை அடைய சுமார் 1400 படிகட்டுகள் ஏறவேண்டும். [3] [4] அடிவாரத்தில் இருந்து மேலே செல்ல சாலை வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும் கீழிருந்து மேலே செல்ல ரோப் கார் வசதியும் உள்ளது. ரோப் காரில் பத்து நிமிடங்களில் சென்றடையலாம்.[5]

தொன்மம்

இக்கோயில் குறித்து இரண்டு தொன்மக் கதைகள் நிலவுகின்றன. அதில் ஒரு கதையின்படி; சதியின் இடது மார்பகம் இங்கு விழுந்தது. ஆடுகளை மேய்க்கும் சிறுவன் ஒருவன் நாள்தோறும் குன்றின் மீது மேயவிடுவான். ஒரு நாள் மந்தையின் பாதி ஆடுகளைக் காணவில்லை. வீட்டுக்கு வந்த சிறுவன் நடந்ததைக் கூறினான்.

அன்றிரவு ஊர் பெரியவரின் கனவில் துர்கை தோன்றி என்னுடைய பிண்டி (கல்) ஒன்று ஒரு இடதில் விழுந்துள்ளது. அதை ஆடுகளைத் தேடும்போது நாளை கண்டடைவாய். அங்கே எனக்கு ஒரு கோயில் கட்டவேண்டும். அப்படி கட்டி வழிபட்டால் இந்த ஊரின் காவல் தெய்வமாக இருந்து காப்பேன் என்று கூறி மறைந்தாள்.

அடுத்த நாள் ஊர் மக்கள் ஆடுகளைத் தேடிச் சென்றபோது ஒரு இடத்தில் ஒளி வீசியபடி கல் ஒன்று இருந்தது. அதைச் சுற்றி ஆடுகள் அமர்ந்திருந்தன. கனவில் துர்க்கை கூறியபடி அந்தக் கல்லை அங்கேயே பிரதிட்டை செய்து வடிபடத் தொடங்கினர்.

இன்னொரு தொன்மக் கதையின்படி துர்க்கை மகிசாசூரனை வதம் செய்த பிறகு விந்திய மலையில் சிலகாலம் ஓய்வெடுத்தாள். அவள் ஓய்வெடுத்து திரும்பும்போது, தனக்குபதில் ஒரு பிண்டியை வைத்துச் சென்றாள். அதுவே பிரதிட்டை செய்யப்பட்டுளது. இதனால் இங்குள்ள துர்கைக்கு விந்தியவாசினி என்ற பெயர் உண்டானது.

இங்கு பத்ரானந்த சுவாமி என்பவர் நீண்டகாலம் தவம் புரிந்தார். அவருக்கு விந்தியவாசினி காட்சியளித்தாள். அதனால் அவர் ஏற்கனவே இருந்த சிறிய கோயிலை புதுப்பித்தார். [5]

கோயில் அமைப்பு

இந்தக் கோயிலுக்கு எளிமையான நுழைவாயில் உள்ளது. அதைத் தாண்டி உள்ளே சென்றால் நன்கு விரிந்த முன்னறை உள்ளது. அதையடுத்து நடு மண்டபமும், அதையடுத்து கருவறையும் உள்ளன. கருவறையின் மையத்தில் விந்தியவாசினி பிண்டி வடிவில் உள்ளாள். விந்தியவாசினியின் வலப்பக்கம் காளியும் இடப்பக்கம் கலைமகளும் சிறிய வடிவில் உள்ளனர்.[5]

வழிபாடு

இக்கோயிலில் மக மாதத்தில் சிறப்பு பூசை நடக்கும். இங்கு இரு அணையா விளக்குகள் எரிந்து வருகின்றன. இவை சுமார் சுமார் 400 ஆண்டுகளாக எரிந்து வருவதாக கூறப்படுகிறது. ஒன்று தேங்காய் எண்ணெய்யிலும் மற்றோன்று நெய்யிலும் ஏற்றபடுகிறது. இதற்காக மக்கள் எண்ணையையும், நெயையும் காணிக்கையாக அளித்து வருகின்றனர்.[5]

அமைவிடம்

சல்கான்பூரானது மத்தியப் பிரதேசத்தின் தலைநகரான போபாலில் இருந்து 70 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. [6] இந்த கோயில் மிகவும் புனிதமான கோவில்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

மேற்கோள்கள்