பிலடெல்பியா
பிலடெல்பியா Philadelphia | |
---|---|
City | |
பிலடெல்பியா நகரம் | |
அடைபெயர்(கள்): "சகோதரத்துவ நகரம்", "ஃபிலி" | |
குறிக்கோளுரை: "Philadelphia maneto" - "சகோதரத்துவம் நீடித்திருக்கவும்" | |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மாநிலம் | பென்சில்வேனியா |
மாவட்டம் | பிலடெல்பியா |
தோற்றம் | அக்டோபர் 27 1682 |
Incorporated | அக்டோபர் 25 1701 |
அரசு | |
• மாநகராட்சித் தலைவர் | மைக்கேல் நட்டர் (D) |
பரப்பளவு | |
• City | 369.4 km2 (142.6 sq mi) |
• நிலம் | 349.9 km2 (135.1 sq mi) |
• நீர் | 19.6 km2 (7.6 sq mi) |
• நகர்ப்புறம் | 4,660.7 km2 (1,799.5 sq mi) |
• மாநகரம் | 11,989 km2 (4,629 sq mi) |
ஏற்றம் | 12 m (39 ft) |
மக்கள்தொகை (2006) | |
• City | 14,48,394 (6வது) |
• அடர்த்தி | 4,201.8/km2 (10,882.8/sq mi) |
• நகர்ப்புறம் | 53,25,000 |
• பெருநகர் | 58,23,233 |
நேர வலயம் | ஒசநே-5 (EST) |
• கோடை (பசேநே) | ஒசநே-4 (EDT) |
இடக் குறியீடு(கள்) | 215, 267தொலைபேசிக் குறியீடு |
இணையதளம் | http://www.phila.gov |
பிலடெல்பியா (Philadelphia) ஐக்கிய அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் மிகப்பெரிய நகரம் ஆகும். இது ஐக்கிய அமெரிக்காவின் ஆறாவது பெரிய நகரமும் அந்நாட்டின் ஏழாவது பெரிய மக்கள்தொகை அடர்த்தி கொண்ட நகரமும் ஆகும். இது பிலடெல்பியா கவுண்டியின் தலைமை இடமாகவும் செயற்படுகின்றது. 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 1.44 மில்லியன் மக்களுக்கு மேல் இங்கே வாழ்கிறார்கள். இதனையும் உள்ளடக்கிய டெலாவெயர் பள்ளத்தாக்கு மெட்ரோபாலிட்டன் பகுதியின் மக்கள்தொகை 5.8 மில்லியன்களாகும். இது ஐக்கிய அமெரிக்காவின் 5 ஆவது பெரியதும் உலக நகரங்களின் வரிசையில் 45 ஆவது மக்கள்தொகையும் ஆகும். ஒரு காலத்தில் இது இலண்டனுக்கு அடுத்தபடியாக, பிரித்தானியப் பேரரசின் இரண்டாவது பெரிய நகரமாகவும் விளங்கியது. 18 ஆம் நூற்றாண்டில், அரசியல் மற்றும் சமூக அடிப்படையில் இந்நகரின் முக்கியத்துவம் நியூ யார்க் நகரினதைக் காட்டிலும் மேலோங்கியிருந்தது. அமெரிக்கப் புரட்சி தொடர்பான எண்ணக்கருக்களும், தொடர்பான செயற்பாடுகளும் இங்கேயே உருவானதன் காரணமாக தொடக்ககால அமெரிக்க வரலாற்றின் மையமாக இந்நகரம் விளங்கியது எனலாம்.
வரலாற்றுச் சிறப்பு
1682 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் நாள் வில்லியம் பென் என்பவரால் பிலடெல்பியா நகரம் நிறுவப்பட்டது. பிலடெல்பியா என்ற வார்த்தைக்கு கிரேக்க மொழியில் "சகோதர பாசம்" என்று பொருள்படும். குவேக்கர்களின் சிந்தனை வழி ஆட்சி அமைக்கப்பட்ட இந்த நகரம், ஆரம்பம் முதலே தனி மனித சுதந்திரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வந்தது. மத, இன வேறுபாடுகளை அனுமதிக்காத இந்நகரத்தின் சட்டங்கள் இதன் வெற்றிக்கு மிகப் பெரிய காரணங்களில் ஒன்று. 1701 ஆம் ஆண்டு பென் அவர்களால் "நகரம்" என அதிகாரப் பத்திரம் வழங்கப்பட்ட பின், பிலடெல்பியா மேன்மேலும் வளர்ந்து வணிகத்திலும் முக்கியமான இடமாக விளங்கியது. பொதுமக்கள் சேவையிலும் இந்நகரம் தலைசிறந்து இருந்தது: எடுத்துக்காட்டாக, இந்த நகரத்தின் பெயர்பெற்ற குடிமகரில் ஒருவரான பெஞ்சமின் பிராங்கிளின், அமெரிக்கக் குடியமைப்புகளின் முதன்முதல் மருத்துவமனையை இங்கு அமைத்தார். இப்படிப் பல சிறப்புகளைப் பெற்ற பிலடெல்பியா, 1790ஆம் ஆண்டு முதல் 1800ஆம் வருடம் வரை, அமெரிக்காவின் (முதல்) தலைநகரமாகச் சிறப்பு பெற்றது.
வர்த்தகச் சிறப்பு
பிலடெல்பியாவின் பொருளாதாரம் உற்பத்தி, எண்ணெய்ச் சுத்திகரிப்பு, உணவு பதப்படுத்துதல், உடல் நலச் சீரமைப்பு, உயிரித் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் வணிக சேவைகள் என்று பலவகைப்பட்ட தொழில் அமைப்புக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அமெரிக்கப் பொருளாதார ஆய்வு நிறுவன அறிக்கையின்படி, 2010 ஆம் ஆண்டில் 347 பில்லியன் டாலர்கள் மதிப்புடைய உற்பத்தித்திறத்துடன், அமெரிக்காவின் மாநகரங்களில் ஏழாவது இடத்தை பிலடெல்பியா கைப்பற்றி உள்ளது.
இன்றைய பிலடெல்பியா
"பிலடெல்பியா இன்குவைரர்" (Philadelphia Inquirer), "பிலடெல்பியா டெய்லி நியூஸ்" (Philadelphia Daily News) ஆகியன இந்நகரத்தின் இரண்டு முக்கியமான செய்தித்தாள்கள் ஆகும். ஈகிள்கள், பிளையர்கள், பில்லீக்கள், பிலடெல்பியா 76அர்ஸ் போன்ற பிரபலமான விளையாட்டுக் குழுக்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அமெரிக்காவின் முதன்முதல் விலங்குக் காட்சிச்சாலையும், மருத்துவமனையும் இந்நகரத்திலேயே அமைக்கப் பெற்றன. அமெரிக்க நாட்டின் மிகத் தொன்மை வாய்ந்து, விரிந்து பரந்த நகர்ப்புறப் பூங்காக்களுள் ஒன்றான பேர்மவுண்ட் பூங்கா (Fairmount Park) இந்நகரத்திற்கு இன்றும் எழில் சேர்க்கிறது.
புவியியல்
வரலாற்றுப் பெருமை மிக்க அருங்காட்சியகங்களுக்கும் பெயர் பெற்ற இடமாகும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் முப்பது கோடிக்கும் மேலான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பெருமை உடைய நகரம் இது. அமெரிக்காவில் தொள்ளாயிரம் அடிக்கு மேல் கட்டிடங்கள் உடைய நான்கே நகரங்களில் பிலடெல்பியாவும் ஒன்றாக உள்ளது.