பிலியஸ்

பிலியசின் அமைவிடம்

பிலியஸ் (Phlius, கிரேக்கம்: Φλιοῦς ) அல்லது Phleius ( Φλειοῦς ) என்பது பண்டைய கிரேக்கத்தின், பெலொப்பொனேசியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஒரு சுதந்திர நகர அரசாகும். ஃபிலியாசியா ( Φλιασία ) என அழைக்கப்படும் ஃபிலியசின் பிரதேசம், வடக்கே சிசியோனியா, மேற்கில் ஆர்காடியா, கிழக்கில் கிளியோனே, தெற்கில் ஆர்கோலிஸ் ஆகியவற்றை எல்லைகளாக கொண்டுள்ளது. இந்தப் பிரதேசம் கடல் மட்டத்தில் இருந்து 900 அடிகள் (270 m) உயரத்தில் உள்ள ஒரு சிறிய பள்ளத்தாக்கு ஆகும். இது மலைகளால் சூழப்பட்டுள்ளது. அதில் இருந்து ஒவ்வொரு பக்கத்திலும் ஓடைகள் பாய்ந்து, சமவெளியின் நடுவில் பாயும் அசோபஸ் ஆற்றுடன் கலக்கின்றன. சமவெளியின் தெற்குப் பகுதியில் உள்ள மலை, அசோபஸ் நீரூற்றுகளின் முக்கிய ஆதாரமாக இருந்தது. அது கார்னேட்ஸ் (Καρνεάτης) என்று அழைக்கப்பட்டது. ஃபிலியஸின் பிரதேசம் பழங்காலத்தில் அங்கு உற்பத்தியாகும் மதுவுக்காக கொண்டாடப்பட்டது. [1] இசுட்ராபோவின் கூற்றுப்படி, நாட்டின் பண்டைய தலைநகரம் செலோஸ் மலையில் உள்ள அரேதிரியா (Ἀραιθυρέα) ஆகும். இது ஓமரால் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பின்னர் மக்கள் அதை விட்டு வெளியேறி 30 ஸ்டேடியா தொலைவில் ஃபிலியசைக் கட்டினார்கள். எனினும், பௌசானியாஸ் எந்த இடம்பெயர்வு பற்றியும் பேசவில்லை. ஆனால் பண்டைய தலைநகரம் அராண்டியா (Ἀραντία) என்ற பெயரால் அழைக்கப்பட்டது என்று கூறுகிறார். அதன் நிறுவனர் அராஸ் என்பவராவார். பின்னர் அது அராசின் மகளால் அரேதிரியா என்று அழைக்கப்பட்டது. இது இறுதியாக சீசஸின் மகனும், டெமினஸின் பேரனான ஃபிலியாசினால் பிலியஸ் என்ற பெயரைப் பெற்றது என்று கூறுகிறார். பிலியஸ் சிசியோனிலிருந்து வந்த ரெக்னிடாசின் தலைமையில் டோரியர்களால் கைப்பற்றப்பட்டார். அதனால் இங்கு வசிப்பவர்களில் சிலர் சாமோசுக்கு குடிபெயர்ந்தனர், மற்றவர்கள் கிளாசோமெனேவுக்கு குடிபெயர்ந்தனர்; சமோசுக்கு குடியேறியவர்களில் ஹிப்பாசஸ் என்பவர் இருந்தார், அவரின் வம்சாவளியைச் சேர்ந்தவர் பித்தாகரசு ஆவார்.

ஃபிலியஸ் பிரபுக்களால் ஆளப்பட்டது. [2] ஃபிலியஸ் 200 வீரர்களை தெர்மோபைலே சமருக்கு அனுப்பியது. அடுத்து 1000 வீரர்களை பிளாட்டீயா சமருக்கு அனுப்பினார். புவியியல் ரீதியாக ஆர்கோசுக்கு நெருக்கமாக இருந்தாலும், இது எசுபார்த்தாவின் கூட்டாளியாகவும் பெலோபொன்னேசியன் கூட்டணியின் உறுப்பினராகவும் இருந்தது. பெலோபொன்னேசியப் போரின் முழு காலத்திலும் இது எசுபார்த்தாவுக்கு விசுவாசமாகவும் ஆர்கோசுக்கு எதிராகவும் இருந்தது.

குறிப்புகள்

  1. Athen. 1.27d.
  2. Diogenes Laërtius 1.12, 8.8; Cicero Tusc. 5.3