புருவாஸ்

புருவாஸ்
Beruas
பேராக்
புருவாஸ் அருங்காட்சியகம்
புருவாஸ் அருங்காட்சியகம்
புருவாஸ் is located in மலேசியா
புருவாஸ்
      புருவாஸ்
ஆள்கூறுகள்: 4°30′0″N 100°47′0″E / 4.50000°N 100.78333°E / 4.50000; 100.78333
நாடு மலேசியா
மாநிலம் பேராக்
உருவாக்கம்கி.பி. 500
பரப்பளவு
 • மொத்தம்192.8 km2 (74.4 sq mi)
மக்கள்தொகை
 (2015)
 • மொத்தம்9,691
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
இணையதளம்http://www.mpm.gov.my/

புருவாஸ் அல்லது பெருவாஸ், (மலாய்: Beruas; ஆங்கிலம்: Beruas; சீனம்: 木威) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில், மஞ்சோங் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம். ஈப்போ மாநகரத்தில் இருந்து 73 கி.மீ.; தைப்பிங் பெருநகரத்தில் இருந்து 53 கி.மீ.; தொலைவில் அமைந்து உள்ளது. இந்த நகரத்திற்கு அருகாமையில் உள்ள நகரங்கள் பந்தாய் ரெமிஸ்; பாரிட்.

1970-ஆம் ஆண்டில் பந்தாய் ரெமிஸ் முதன்மைச் சாலைக்கு ஜாலான் கங்கா நெகரா என பெயர் வைக்கப்பட்டு இருந்தது. ஒரு காலக் கட்டத்தில் டிண்டிங் ஆறு லூமுட்டில் இருந்து புருவாஸ் வரை நீண்டு இருந்தது. அந்த ஆற்றின் சுவடுகளை இன்றும் இங்கு காணலாம்.

புருவாஸ் பட்டணத்திற்கு 2 கி.மீ. தொலைவில் கம்போங் கோத்தா (Kg. Kota) எனும் கிராமப்பகுதி உள்ளது. அங்குள்ள பெயர்ப் பலகையில், 2007-ஆம் ஆண்டு வரையில் மாக்காம் ராஜா சோழன் (Makam Raja Cholan) என்று இருந்தது. தற்பொழுது மாக்காம் ராஜா புருவாஸ் (Makam Raja Beruas II) என்று மாற்றப்பட்டு உள்ளது.[1]

வரலாறு

பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர், தமிழ்நாட்டு வணிகர்களும் சீன நாட்டு வணிகர்களும் மலாக்கா நீரிணையில் இருந்து டிண்டிங்ஸ் ஆற்று வழியாக. புருவாஸ் நகரத்திற்கு வணிகம் செய்ய வந்தார்கள் எனும் வரலாற்றுத் தகவல்களும் உள்ளன.

முன்பு காலத்தில் தமிழர்கள் இந்த நகரைப் புருவாஸ் என்று அழைத்தார்கள். மலேசியா சுதந்திரம் அடைந்த பின்னர் புருவாஸ் எனும் சொல்லுக்கு மாறாகப் பெருவாஸ் எனும் சொல் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது. பள்ளிப் பாட நூல்களிலும் பெருவாஸ் எனும் சொல்லே பயன்படுத்தப் படுகிறது.

பெருவாஸ் மரம்

பெருவாஸ் எனும் பெயர் மங்குசுத்தான் (mangosteen) மரத்தைப் போன்ற ஓர் உள்ளூர் மரமான பெருவாஸ் மரத்தில் இருந்து பெறப் பட்டதாக நம்பப் படுகிறது (அறிவியல் பெயர்: கார்சீனியா ஹோம்பிரோனியா - Garcinia hombroniana).[2]

புருவாஸ் நகரம் மலேசிய வரலாற்றில் மிகப் பழைமை வாய்ந்த நகரமாகும். இங்கு வாழ்ந்த கிராமவாசிகளும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் கங்கா நகரம் தொடர்பான பல அரிய கலைப் பொருட்களைக் கண்டுபிடித்து உள்ளனர். இந்தப் பொருட்கள் தற்போது புருவாஸ் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன.

பல்லவர்களின் கலைப்பொருட்கள்

கங்கா நகரம் அந்தக் காலத்தில் பேராக் மாநிலத்தின் புருவாஸ், டிண்டிங்ஸ், மஞ்சோங் பகுதிகளில் பரவி இருந்த ஒரு பேரரசு ஆகும். கங்கா நகரம் கோலோச்சிய இடங்களில் இருந்து பழம் பெரும் கலைப் பொருட்கள் கிடைத்து இருக்கின்றன.

பல்லவர்களின் கலைப்பொருட்கள். தமிழர்களின் தங்க ஆபரணங்கள். சீனர்களின் பீங்கான் மங்குகள். இந்தோனேசிய அரசுகளின் பின்னல் வேலைபாடுகள். அவற்றில் சில பொருட்கள் ஈப்போவிலும் இன்னும் சில பொருட்கள் பீடோர் பகுதிகளிலும் கிடைத்து இருக்கின்றன.

சிம்மோர் பள்ளத்தாக்கில் அகத்தியர் சிலை

பேராக், சிம்மோர் பள்ளத்தாக்கில் கண்டு எடுக்கப்பட்ட 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட அகத்தியர் வெண்கலச் சிலை.
கோலாலம்பூர் தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். 8-ஆம்; 9-ஆம் நூற்றாண்டின் புத்த அவலோகிதேஸ்வரர் வெண்கலச் சிலை. 1936-ஆம் ஆண்டில் பேராக், பீடோர், ஆங்கிலோ ஓரியண்டல் ஈயச் சுரங்கத்தில் கண்டு எடுக்கப்பட்ட 79 செ.மீ உயரச் சிலை.

1962-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பேராக், சிம்மோர் பள்ளத்தாக்கில் (Chemor Valley), ஜாலோங் (Jalong, Chemor, Perak) எனும் இடத்தில் ஓர் அகத்தியர் சிலையைக் கண்டு எடுத்தார்கள்.

அதன் எடை 34 பவுண்டுகள் (15.4 கிலோ கிராம்). உயரம் 1 அடி எட்டரை அங்குலம். 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்கலச் சிலை. மலேசியாவில் கண்டு எடுக்கப்பட ஓர் அரிய வரலாற்றுப் படிமம். இந்தச் சிலை இப்போது கோலாலம்பூர் மலேசிய அரும்பொருள் காட்சியகத்தில் உள்ளது.

கங்கா நகரத்து வரலாற்றில் ஓர் ஆழமான உறுதிப்பாட்டை இந்தச் சிலை வழங்கி உள்ளது. கங்கா நகரம் என்பது இந்து மதம் (சிவ வழிபாடு) சார்ந்த ஓர் அரசு என்பதை உறுதிப்படுத்தி உள்ளது. உலக வரலாற்று ஆசிரியர்கள் இதே கருத்தை இன்றும் வலியுறுத்தி வருகின்றனர்.[3]

கங்கா நகரப் பேரரசின் தலைநகரம் பேராக், புருவாஸ் சமவெளியில் இருந்து இருக்கிறது. கி.பி. 1025 - 1026-ஆம் ஆண்டுகளில் அந்தப் பேரரசு அழிந்து போனது. தமிழ்நாட்டில் இருந்து வந்த இராஜேந்திர சோழன் தொடுத்த தாக்குதல்களினால் கங்கா நகரம் அழிந்து போய் இருக்கலாம் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.[4]

புருவாஸ் அருங்காட்சியகம்

இந்த அருங்காட்சியகம் பொதுமக்களுக்கு இலவச நுழைவுடன் திறக்கப்பட்டு உள்ளது. 5-ஆம்; 6-ஆம் நூற்றாண்டுகளுக்கு முந்தைய கலைப்பொருட்கள் புருவாஸில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பல பொருட்கள் புருவாஸ் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன.

பெருவாஸ் தமிழ்ப்பள்ளி

மலேசியாவில் பழைமையான பள்ளிகளில் பெருவாஸ் தமிழ்ப்பள்ளியும் (SJK(T) Beruas) ஒன்றாகும். 16 ஆசிரியர்கள் கற்பிக்கும் இந்தப் பள்ளியில் ஏறக்குறைய 170 மாணவர்கள் பயில்கிறார்கள். தேசிய அளவிலும் மாநில அளவிலும் பல போட்டிகளில் கலந்து கொண்டு பற்பல சாதனைகளைப் படைத்து உள்ளது. [5] இப்பள்ளியின் தலைமையாசிரியை திருமதி இரகுமாதுனிசிசா பேகம் அப்துல் ரகுமான்.[6]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்