பெண்கள் மட்டும் பயணிக்கும் ஊர்தி

யப்பானிய இரயில் மேடையில் பெண்கள் மட்டும் பயனிக்கும் ஊர்திகளுக்கான விவரத்தைக் குறிக்கும் அறிவிப்பு பலகை

பெண்கள் மட்டும் பயணிக்கும் ஊர்தி (Women-only passenger car) என்பது இரயில்வே அல்லது சுரங்கப்பாதை ஊர்திகளில் பெண்கள் மட்டுமே பயணிக்கும் ஒரு வசதியாகும். அவை சில சமூகங்களில் பாலியல் பிரிவினையின் விளைவுகளாகும். ஆனால் அனுமதியின்றி பாலியல் முறையில் தொடுவது போன்ற பாலியல் துன்புறுத்தல்களைக் குறைப்பதற்கான முயற்சிகளின் விளைவாகவும் இருக்கலாம்.

ஆப்பிரிக்கா

எகிப்து

அனைத்து கெய்ரோ மெட்ரோ தொடர்வண்டி சேவைகளில், ஒவ்வொரு தொடர்வண்டியிலும், நடுத்தர இரண்டு பெட்டிகள் (4வதும் 5வதும்) பெண்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது (21 வது மணிக்கு பிறகு 5வது பெட்டி கலப்பு பயன்பாட்டுக்கு வருகிறது). ஒரே பெட்டியில் ஆண்களுடன் பயணம் செய்ய விரும்பாத பெண்களுக்கு இந்த பெட்டிகள் ஒரு விருப்பமாக பயன்படுத்தப்படுகின்றன; இருப்பினும், பெண்கள் இன்னும் சுதந்திரமாக மற்ற பெட்டிகளிலும் பயனிக்கலாம். ஆண்களின் பாலியல் தொல்லைகளிலிருந்து பெண்களைப் பாதுகாப்பதற்காக இந்தக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது.[1]

அமெரிக்கா

பிரேசில்

இரியோ டி செனீரோ மெட்ரோவில் பெண்களுக்கு மட்டுமான சுரங்கப்பாதை ஊர்தி.

ஏப்ரல் 2006 இல், இரியோ டி செனீரோ மெட்ரோ மாநில சட்டத்தால் நிறுவப்பட்ட ஆணையை அமல்படுத்தியது. பாலியல் துன்புறுத்தலைத் தவிர்ப்பதற்காக பெண்களுக்கு பிரத்யேக பயணிகள் பெட்டிகளை வழங்குவது முந்தைய மாதத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆறு பயணிகள் பெட்டிகளைக் கொண்ட சுரங்கப்பாதை தொடர்வண்டிகளில், ஒரு பெட்டி பெண்களுக்கென பிரத்யேகமாக இளஞ்சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டிருக்கும். மேலும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 6:00 முதல் 9:00 வரையிலும், 17:00 க்கும் 20:00 க்கும் இடையில் பெண்களுக்கு மட்டும் கட்டுப்பாடு பொருந்தும். ஆண்கள் பிரத்யேக பயணிகள் பெட்டியில் ஏறுவதைத் தடுக்க மெட்ரோ காவலர்கள் கண்கானிப்பும் உள்ளது. மேலும் மேடையில் பெண்களுக்கு மட்டுமான வண்டிகளின் விவரங்கள் அடங்கிய பலகையும் இருக்கும்.[2]

இதேபோன்ற கொள்கை சாவோ பாலோ மெட்ரோவில் அக்டோபர் 1995க்கும் செப்டம்பர் 1997க்கும் இடையில் செயல்படுத்தப்பட்டது.

ஆசியா

சப்பான்

தோக்கியோ மெட்ரோ வண்டிக்குள் "பெண்களுக்கு மட்டும்" என்ற அறிவிப்பு பலகை
தோக்கியோவில் சின்சுகு நிலையத்தில் பெண்களுக்கு மட்டுமான ஊர்தியில் ஏற காத்திருக்கும் பயணிகள்
பெட்டியின் கதவுக்கு அருகில் பெண்களுக்கு மட்டும் என்ற அறிவிப்பு

யப்பானில், பெண்களுக்கு மட்டுமான ஊர்திகள் அநாகரிகமான நடத்தையை குறிப்பாக அனுமதியின்றி பாலியல் முறையில் தொடுவதை எதிர்த்து அறிமுகப்படுத்தப்பட்டன. பெண்கள் மட்டும் என்ற கொள்கைகள் நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும்: சில அவசர நேரத்திலும், மற்றவை நாள் முழுவதும் நடைமுறையில் இருக்கும். சில பெண்களுக்கு மட்டுமான வண்டிகளை விரைவு சேவை வண்டிகளாக மட்டுப்படுத்தப்படுகின்றன. ஏனெனில் அவை அதிக நெரிசலாக இருக்கும் மற்றும் நிறுத்தத்திற்கு இடையில் ஒப்பீட்டளவில் நீண்ட தூரத்தைக் கொண்டிருக்கும். ஆனால் பொதுவாக, இந்த நடைமுறை விடுமுறை நாட்களில் தவிர வார நாட்களில் மட்டுமே செயல்படும். நடை மேடைகளிலும், தொடர்வண்டியின் கதவுகளிலும் ஏறும் இடங்கள், வண்டிகள் பெண்களுக்கு மட்டும் சேவை வழங்கும் நாட்கள், நேரங்களைக் குறிக்கும் அடையாளங்களால் குறிக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு பிரத்தியேகமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், யப்பானில் உள்ள பெரும்பாலான தொடர்வண்டி நிறுவனங்கள் ஆண் தொடக்கப் பள்ளி மாணவர்களையும் அனுமதிக்கிறார்கள். மேலும், மாற்றுத்திறனாளிகளும் அவர்களின் உதவியாளர்களும் பெண்களுக்கு மட்டுமான பெட்டிகளில் ஏறுவார்கள்.

இந்தியா

இந்தியாவில் பெண்களுக்கு மட்டுமான வண்டி

இந்தியா முழுவதும், அனைத்து தொலைதூர தொடர்வண்டி சேவைகளும் பெண்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட சிறப்பு பெட்டிகளைக் கொண்டுள்ளன. வணிக நகரமான மும்பையில், அனைத்து புறநகர் வண்டிகளும் பெண்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்ட பெட்டிகளைக் கொண்டுள்ளன. இருப்பினும் பள்ளி செல்லும் குழந்தைகளும் பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இரண்டு பெட்டிகள் பெண்களுக்கு 24 மணிநேரம் ஒதுக்கப்படும் அதே வேளையில், ஒரு பெட்டியில் குறிப்பிட்ட நேரங்களில் பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது.[3] மும்பை மெட்ரோ, தில்லி மெட்ரோ உள்ளிட்ட பல தொடர்வண்டி சேவைகள் பெண்களுக்கு மட்டுமான பெட்டிகளை வழங்குகின்றன.[4] மேலும், இது பெண்களுக்கு மட்டுமான இளஞ்சிவப்பு ரிக்சா போன்ற சேவைகளையும் உருவாக்கியுள்ளது.[5]

மேற்கோள்கள்

  1. "Cairo Journal; For Women Only: A Train Car Safe From Men". The New York Times. January 15, 1990.
  2. "Homens não respeitam vagão exclusivo para mulheres no Metrô no primeiro dia em vigor" (in pt-BR). Gazeta do Povo. 2006-04-25. http://www.gazetadopovo.com.br/vidapublica/conteudo.phtml?id=557967&tit=Homens-nao-respeitam-vagao-exclusivo-para-mulheres-no-Metro-no-primeiro-dia-em-vigor. 
  3. "The Times & The Sunday Times". பார்க்கப்பட்ட நாள் 3 October 2017.
  4. McCarthy, Julie (28 March 2013). "On India's Trains, Seeking Safety In The Women's Compartment". NPR. https://www.npr.org/2013/03/28/175471907/on-indias-trains-seeking-safety-in-the-women-s-compartment. 
  5. "Women form special cab service in Delhi -- catering exclusively to women". The World. Public Radio International. 24 January 2013. Archived from the original on 26 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 25 January 2013. {cite web}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Women-only passenger coaches
என்பதில் ஊடகங்கள் உள்ளன.