பெருவிழுங்கி
பெருவிழுங்கிகள் (Macrophages) எனப்படுபவை வெண்குருதியணுக்களில் ஒரு வகையான ஒற்றை உயிரணுக்களில் ஏற்படும் இழைய வேறுபாட்டின் மூலம் உருவாகும் இன்னொருவகை வெண்குருதியணுவாகும். இவை சிதைந்த உயிரணுக்கள், தொற்றுநோய்களை உருவாக்கும், நோய்க்காரணிகள் போன்றவற்றை முழுமையாக விழுங்கி அழிக்கும் தன்மை கொண்டவை. மனிதரில் காணப்படும் பெருவிழுங்கிகள் கிட்டத்தட்ட 21 மைக்ரோமீற்றர் விட்டம் உடையவை[1].
ஒற்றை உயிரணுக்களும், பெருவிழுங்கிகளும் ஆபத்து விளைவிக்கக்கூடிய துணிக்கைகளை விழுங்கி, அவற்றை சமிபாடு அடையச் செய்வதன் மூலம் தொழிற்பாடு அற்றதாக்கிவிடும். வெளி துணிக்கைகள் நகராதனவாக இருந்தாலும், அல்லது நகருகின்றனவாக இருந்தாலும் பெருவிழுங்கிகள் அவற்றுக்கு எதிராகத் தொழிற்படும் ஆற்றல் கொண்டவை. பெருவிழுங்கிகள் பொதுவாக எல்லா வெளிப்பொருட்களையும் அழிக்கவல்ல நோயெதிர்ப்பு முறையிலும் (innate immune system), குறிப்பிட்ட நோய்க்காரணிக்கு எதிரான நோயெதிர்ப்பு முறையிலும் (adaptive immune system) தொழிற்பட வல்லது. குறிப்பிட்ட ஒரு நோய்க்காரணிக்கு எதிராகத் தொழிற்படும்போது, அதனை நினைவில் கொண்டு மீண்டும் இலகுவாகவும், தொடர்ந்தும் தொழிற்படும் இயல்பைக் கொண்டிருக்கும். அத்துடன் இப்பெருவிழுங்கிகள் நிணநீர்க் கலங்கள், வேறும் நோயெதிர்ப்பு கலங்களையும் நோய்க்காரணிகளுக்கு எதிராகத் தூண்டி, அவற்றைத் தொழிற்படச் செய்யும்.
இவை போலிக் கால்களை அசைப்பதன் மூலம் அமீபாக்கள் போன்று அசையும் திறனுடையவை. இவற்றை பாய்ம உயிரணுவிய அளவியம் (Flow cytometry), நோயெதிர்ப்பிழையவேதி சாயமூட்டல் (immunohistochemical staining) மூலம் குறிப்பிட்ட சில புரதங்களின் அடிப்படையில் அடையாளம் காணலாம்[2]. அப்புரதங்களில் சில CD14, CD11b, F4/80 (எலி)/EMR1 (மனிதன்), Lysozyme M, MAC-1/MAC-3, CD68 ஆகும்.
தொழிற்பாடு
தின்குழியமை (Phagocytosis)
தின்குழியமை என்பது விழுங்கி அழிக்கும் செயல்முறையைக் குறிக்கும். பெருவிழுங்கியின் முக்கியமான தொழில்களில் ஒன்று நுரையீரலில் முதிர்ச்சியடையாமலே புறக்காரணிகளால் இறந்து போகும் கலங்களை (necrotic cells) 'விழுங்கி அழித்தல்' மூலம் அகற்றுதல் ஆகும். நீடித்த அழற்சி நிலைகளில், இவ்வாறு இறந்த கலங்கள் அகற்றப்படுவது அவசியமாகும். பழுதுபட்ட கலங்கள், சிதைந்த கலங்களை, இப்படியான விழுங்கும் செயல்முறை மூலம், அகற்றும் தொழிலைச் செய்கின்றன. இவ்வாறான இறந்த கலங்கள் அகற்றும் தொழிலைச் செய்யும் பெருவிழுங்கிகள் பொதுவாக நிலையானவையாகும். அதாவது நுரையீரல், கல்லீரல், நரம்பிழையம், எலும்பு, மண்ணீரல், வேறு இணைப்பிழையம் போன்ற உறுப்புக்களில் நிலையாக இருந்து நோய்க்காரணி போன்ற வெளிப் பொருட்களை அழிப்பதுடன், தேவையேற்படின் புதிய பெருவிழுங்கிகளையும் உருவாக்கும்.
பெருவிழுங்கியானது நோய்க்காரணிகளை உள்ளெடுக்கும்போது தின்குழியம் (phagosome) உருவாகும். பின்னர் இது பிரியுடலுடன் (இலைசோசோம் = Lysosome) இணைந்து "தின்குழியப்பிரியுடல்" (phagolysosome) உருவாகும். இந்த தின்குழியப்பிரியுடலில் சுரக்கப்படும் நொதியங்கள், வேறு நச்சுப்பொருட்கள் போன்றவற்றால், நோய்க்காரணி சமிபாட்டுக்கு உட்படுத்தப்பட்டு அழிக்கப்படும். ஆனாலும் காசநோயை உருவாக்கும் Mycobacterium tuberculosis போன்ற சில பாக்டீரியாக்கள் இவ்வகையான அழிக்கும் முறைக்கு எதிர்ப்பாற்றலைப் (resistant) பெற்றுள்ளன. ஒரு பெருவிழுங்கியானது தன் வாழ்க்கைக் காலத்தில் கிட்டத்தட்ட 100 பாக்டீரியாக்களை இவ்வாறு விழுங்கி அழிக்கக் கூடியது. தொழிற்பாடு ஓய்ந்ததும், தனது சொந்த நொதியங்களின் தாக்கத்தாலேயே பெருவிழுங்கி இறந்து அழியும்.
குறிப்பிட்ட நோய்க்காரணிக்கான நோயெதிர்ப்பு (adaptive immune system)
பெருவிழுங்கிகள் ஒற்றை உயிரணுக்களுடன் இணைந்து நோய் எதிர்ப்பாற்றல் முறைமையை ஒழுங்குபடுத்துவதில் மிக முக்கிய பங்காற்றும். இதன்போது அழற்சியும் உருவாகும். பல நொதியங்கள், குறைநிரப்பு புரதங்கள் (complementary proteins), ஒழுங்குபடுத்தும் காரணிகள் (regulatory factors) போன்றவற்றை உருவாக்கும்.
கிளையி உயிரணுக்கள் போலவே, நோயெதிர்ப்பு செயல்முறையை தொடங்கி வைப்பதற்காக, பிறபொருளெதிரியாக்கியை முன்வைக்கும் அல்லது அறிமுகப்படுத்தும் தொழிலைச் செய்யும். ஒரு நோய்க்காரணியை விழுங்கி அழித்த பின்னர், நோய் எதிர்ப்பாற்றல் முறைமையால் அடையாளம் காணப்படக் கூடிய, நோய்க்காரணியின் மேற்பரப்பில் இருக்கும் ஒரு புரதத்தை, தனது கலமென்சவ்வில் இணைத்து T உதவி உயிரணுக்களுக்கு அறிமுகப்படுத்தும். இதனால் குறிப்பிட்ட பிறபொருளெதிரியாக்கிக்கு எதிரான, பிறபொருளெதிரி உருவாக்கப்படும். நிணநீர்க்கணுவில் உள்ள B உயிரணுக்களும் இதில் உதவும்.
பூஞ்சைகள், ஒட்டுண்ணிகள் போன்றவற்றின் தொற்றுக்கு உட்படும் கலங்கள், கட்டிகளிலும் நோயெதிர்ப்பைக் காட்டும். ஒரு T கலமானது தனக்குரிய பிறபொருளெதிரியாக்கியை பெருவிழுங்கியில் கண்டு கொண்டதும், செயல்திறன் உடையதாக்கப்பட்டு, பெருவிழுங்கியை தூண்டி, தீவிரமானதாக்கும். இவ்வாறு தூண்டப்பட்ட பெருவிழுங்கிகள் விழுங்கும் தொழிலை உடனடியாக்ச் செய்யும்.[3]. குறிப்பிட்ட ஒரு பிறபொருளெதிரியாக்கிக்கு எதிரான தொழிற்பாடு பெருவிழுங்கிகளில் காணப்படுவதில்லை. ஆனால் தான் செயல்திறனைப் பெற்ற இடத்திலுள்ள கலங்களை அழிக்கும்.[3].
தசை புத்துயிர்ப்பு/ மீளமைப்பு
பெருவிழுங்கிகளால் வெளியேற்றப்படும் கரையக்கூடிய சில பதார்த்தங்கள், தசையின் இழையப் பெருக்கத்திற்கும், வேறுபாட்டிற்கும், வளர்ச்சிக்கும், திருத்தங்களுக்கும், இவற்றின் மூலம் புத்துயிர்ப்புக்கும் உதவும். ஆனால் இந்த புத்துயிர்ப்பை அளிக்கும் பதார்த்தம் எதுவென அறியப்படவில்லை.[4]. தசை திருத்தங்களை மேற்கொள்ளும் பெருவிழுங்கிகள், அத்தகைய தொழிலுக்காக பிரத்தியாகமானவை அல்ல. காயங்கள் ஏற்படும்போது, இந்த பெருவிழுங்கிகள் பல வகையான இழையங்களிலும் காணப்படும்.
இழையப் பெருவிழுங்கிகள்
நுண்ணுயிர் கிருமிகள் தாக்குவதற்கும், திரட்டப்படுவதற்கும் சாத்தியம் அதிகமுள்ள இடங்களில் இந்த பெருவிழுங்கிகள் காணப்படும். பெருவிழுங்கிகள் இருக்கும் இடத்தைப் பொறுத்து, அவற்றின் பெயர்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கலத்தின் பெயர் | இடம்' |
தூசிக் கலங்கள் (dust cells) / காற்றறை பெருவிழுங்கிகள் (alveolar macrophages | நுரையீரலில் உள்ள நுரையீரல் சிற்றறை (pulmonary alveolus) |
இழைய அணுக்கள் (Histocytes) | இணைப்பிழையம் (connective tissue) |
குப்வர் கலங்கள் (Kupffer cells) | கல்லீரல் |
Microglia | நரம்பிழையம் (neural tissue) |
Epithelioid cells | granulomas |
Osteoclasts | எலும்பு |
Sinusoidal lining cells | மண்ணீரல் |
அசையும் படங்கள்
-
இயக்கத்திலுள்ள ஒரு J774 பெருவிழுங்கியானது 4 துகள்களை எடுக்கும் காட்சி
ஒளிப்படம் எடுக்கப்பட முன்னால் ஒரு இரவு 5 ng/ml interferon-γ யினால் பதப்படுத்தப்பட்ட J774 உயிரணுக்கள்.
இந்த அவதானிப்பு ஒவ்வொரு 30 செக்கன்களுமாக 2.5 மணித்தியாலம் நிகழ்ந்தது. -
துகள்களை உள்ளெடுக்கும், அதிகமான இயக்கத்திலுள்ள இரு நுண்குழிவுள்ள பெருவிழுங்கிகள்
.இந்த அவதானிப்பு ஒவ்வொரு 30 செக்கன்களுமாக 2.5 மணித்தியாலம் நிகழ்ந்தது.
மேற்கோள்கள்
- ↑ Krombach, F., Münzing, S., Allmeling, A. M., Gerlach, J. T., Behr, J., Dörger, M. (1 September 1997). "Cell size of alveolar macrophages: an interspecies comparison". Environ. Health Perspect. 105 Suppl 5: 1261–3. doi:10.2307/3433544. பப்மெட்:9400735.
- ↑ Khazen, W., M'bika, J. P., Tomkiewicz, C., et al. (October 2005). "Expression of macrophage-selective markers in human and rodent adipocytes". FEBS Lett. 579 (25): 5631–4. doi:10.1016/j.febslet.2005.09.032. பப்மெட்:16213494.
- ↑ 3.0 3.1 "The human immune system: The lymphocyte story". New Scientist (1605): 1. March 1988. http://www.newscientist.com/channel/health/hiv/mg11716050.100. பார்த்த நாள்: 2007-09-13.
- ↑ Schiaffino S, Partridge T (2008)). Skeletal Muscle Repair and Regeneration. Advances in Muscle Research. Vol. 3. p. 380.
{cite book}
: Check date values in:|year=
(help)