பெல் ஹூக்சு
பெல் ஹூக்சு | |
---|---|
பிறப்பு | குளோரியா ஜீன் வாட்கின்சு செப்டம்பர் 25, 1952 ஆப்கின்சுவில், கென்டக்கி, அமெரிக்கா |
இறப்பு | திசம்பர் 15, 2021 பெரியா, கென்டக்கி, அமெரிக்கா | (அகவை 69)
தொழில் | எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | நான் பெண்ணில்லையா: கருப்பின மகளிரும் பெண்ணியமும் ஆல் அபவுட் லவ்: நியூ விசன்சு வீ ரியல் கூல்: கருப்பின ஆண்களும் ஆண்மையும் பெமினிஸ்ட் தியரி: ஃபிரம் மார்ஜின் டு சென்டர் |
பெற்றோர் | வியோடிசு வாட்கின்சு, ரோசா பெல் வாட்கின்சு |
பெல் ஹூக்சு என்ற புனைப்பெயரில் பரவலாக அறியப்படும் குளோரியா ஜீன் வாட்கின்சு (Gloria Jean Watkins, 25, செப்டம்பர், 1952 - 15, திசம்பர், 2021), ஆபிரிக்க-அமெரிக்க பெண்ணிய எழுத்தாளரும் பேச்சாளரும் ஆவார். கென்டக்கியில் உழைப்பாளர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் 1976இல் ஆசிரியப் பணியில் சேர்ந்தார். 1976இல் தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கற்பிக்கத் தொடங்கினார். 1995 முதல் நியூயார்க் நகரக் கல்லூரியில் சிறப்பான ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றுகிறார்.[1] முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தமது ஆக்கங்களில் வாட்கின்சு சமூகத்தை விமரிசித்து வருகிறார். அமெரிக்காவை ஓர் வெள்ளையராதிக்க, குடும்பத்தலைவராதிக்க, முதலாளித்துவ நாடாக விவரிக்கிறார்.
நூல்கள்
1978இல் முதல் புத்தகத்தை பதிப்பித்தார்; இது அவரது கவிதைகளைத் தொகுத்து அண்ட் தேர் வீ வெப்ட்: பொயம்சு என்ற தலைப்பில் கோலெமிக்சு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. 1981இல் ஆய்ன்ட் ஐ எ உமன்? பிளாக் விமென் அண்டு பெமினிசம் (நான் பெண்ணில்லையா: கருப்பின மகளிரும் பெண்ணியமும்) என்ற நூலை சௌத்எண்டு அச்சகம் பதிப்பித்தது. இதுவே அவரது முதல் ஆய்வு நூலாக அமைந்தது. இதனை எழுத ஆறு ஆண்டுகள் எடுத்துக் கொண்டார்; அச்சிட எட்டு ஆண்டுகள் ஆயிற்று. இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கையில் தமது 19வது அகவையில் இந்நூலை எழுதத் தொடங்கினார்.
1980களில் யேல் பல்கலைக்கழகத்தில் தன்னுடைய பெண் மாணாக்கர்கள் தங்கள் பிரச்சினைகளை எடுத்துரைக்க சிஸ்டர்ஸ் ஆஃப் தி யாம் என்ற குழுவை துவங்கினார். 1993இல் இதே பெயரில் நூல் வெளியிட்டார். உளவியல்சார் பிரச்சினைகளை விவாதிக்கும் அவரது முதல் நூலாக இது அமைந்தது.[1] பெல் ஹூக்சு சிறுவர்களுக்காக நான்கு புத்தகங்களை எழுதியுள்ளார். இதில் ஹாப்பி டு பி நாப்பி என்ற நூல் புகழ்பெற்றது.
புனைபெயர்
தனது கொள்ளுப் பாட்டி பெல் பிளையர் ஹூக்சிடமிருந்து தமது புனைப்பெயரைத் தெரிவு செய்தார்.[2] தமது புனைப்பெயரில் ஆங்கில மொழி மரபுக்கு மாறாக பெயர்ச்சொல்லில் பெரிய எழுத்துக்களைத் தவிர்த்தார். தம்மை விட தமது எழுத்துக்களே முக்கியமென்பதை உணர்த்தவே இவ்வாறு புனைப்பெயரை எழுதுவதாகக் கூறியுள்ளார்.
ஆவணப் படங்கள்
அரசியல் குறித்த பல ஆவணப்படங்களில் தோன்றியுள்ளார். இவரது சிறுவர் புத்தகமான ஹாப்பி டு பி நாப்பி ஆவணப்படமாக தயாரிக்கப்பட்டு 2004ஆம் ஆண்டின் சிறந்த ஆவணப்பட விருது பெற்றது.
மேற்சான்றுகள்
- ↑ 1.0 1.1 http://www.education.miami.edu/ep/contemporaryed/bell_hooks/bell_hooks.html
- ↑ hooks, bell. "Inspired Eccentricity: Sarah and Gus Oldham." Family: American Writers Remember Their Own. Eds. Sharon Sloan Fiffer and Steve Fiffer. New York: Vintage Books, 1996. 152.