மக்கா பள்ளிவாசல், ஐதராபாத்து
மக்கா பள்ளிவாசல் | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | ஐதராபாத்து |
புவியியல் ஆள்கூறுகள் | 17°21′37″N 78°28′24″E / 17.360305°N 78.473416°E |
சமயம் | இசுலாம் |
மாநிலம் | தெலங்காணா |
நிலை | பள்ளிவாசல் |
மக்கா பள்ளிவாசல் அல்லது மக்கா மஸ்ஜித் (Makkah Masjid), என்பது இந்தியாவின் தெலங்காணாலுள்ள ஐதராபாத்தில் அமைந்துள்ள பள்ளிவாசலாகும். 20,000 பேர் கூடி தொழுகை புரியும் திறன் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய பள்ளிவாசல்களில் இதுவும் ஒன்றாகும். இந்த பள்ளிவாசல் 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்டது. இது பழைய நகரமான ஐதராபாத்தின் மையத்தில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாகும் , இது சார்மினார், சௌமகல்லா அரண்மனை மற்றும் இலாட் பஜார் ஆகிய வரலாற்று முக்கிய அடையாளங்களுக்கு அருகில் உள்ளது.
குதுப் ஷாஹி வம்சத்தின் ஐந்தாவது ஆட்சியாளரான முஹம்மது குலி குதுப் ஷா , இசுலாத்தின் புனிதமான இடமான மக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட மண்ணிலிருந்து செங்கற்களை தயாரிக்கும்படி கட்டளையிட்டார். மேலும் அவற்றை பள்ளிவாசலின் மைய வளைவின் கட்டுமானத்தில் பயன்படுத்தினார். மேலும், இதற்கு "மக்கா பள்ளிவாசல்" என்ற பெயரும் வழங்கினார். இது முஹம்மது குலி குதுப் ஷா திட்டமிட்டபடி நகரின் மையமாக உருவாகியது. .[1]
வரலாறும் கட்டுமானமும்
மக்கா பள்ளிவாசல் கோல்கொண்டாவின் (இப்போது ஐதராபாத்து) ஐந்தாவது குதுப் ஷாஹி சுல்தானான முஹம்மது குலி குதுப் ஷாவின் காலத்தில் கட்டப்பட்டது. மூன்று வளைந்த முகப்புகள் கருங்கற்கலால் செதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியானது ஐந்து ஆண்டுகளில் முடிக்கப்பட்டது. 8,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதற்காக பணியாற்றினர். முஹம்மது குலி குதுப் ஷா தனிப்பட்ட முறையில் அடிக்கல் நாட்டி இதை கட்டினார். அவரது மரணத்திற்குப் பிறகு கட்டுமானம் கைவிடப்பட்டது.
ஜீன்-பாப்டிஸ்ட் டேவர்னியர், ஒரு பிரெஞ்சு ஆய்வாளர், தனது பயணக் குறிப்பில்:
"அவர்கள் நகரத்தில் ஒரு அற்புதமான பகோடாவைக் கட்டத் தொடங்கி சுமார் 50 ஆண்டுகள் ஆகின்றன. இது முடிந்ததும் அகில இந்தியாவிலேயே மிகப் பெரியதாக இருக்கும். கல்லின் அளவு சிறப்புச் சாதனைக்கு உட்பட்டது. மேலும் பிரார்த்தனைக்கான ஒரு முக்கிய இடமாக இருக்கும். இது மிகப்பெரிய அளவிலான ஒரு முழு பாறையாகும், அவர்கள் அதை குவாரி செய்வதில் ஐந்து ஆண்டுகள் கழித்தனர். மேலும், இதன் கட்டுமானத்தில் 500 முதல் 600 ஆண்கள் தொடர்ந்து ஈடுபட்டனர். கற்களை பகோடாவுக்கு உருட்டிக் கொண்டுவர அதிக நேரம் தேவைப்பட்டது; இதற்காக 1400 எருதுகள் பயன்படுத்தப்பட்டது."[2]
ஐதராபாத் நிசாம்கள் பலரும் (முதலாமவரும் கடைசி நிசாம் தவிர) இந்த வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
குண்டுவெடிப்பு
2007 மே 18 அன்று, ஒரு வெள்ளிக்கிழமை தொழுகையின் போது இந்த பள்ளிவாசலுக்குள் ஒரு குண்டு வெடித்தது. இது குறைந்தது பதிமூன்று பேரைக் கொன்றது. மேலும், பன்னிரெண்டுக்கும் மேற்பட்டவரைக் காயப்படுத்தியது. [3][4]
கல்லறைகள்
ஐதராபாத்து ஆட்சியாளர்களின் பளிங்கு கல்லறைகளைக் கொண்டிருக்கும் இது செவ்வக, வளைந்த, மற்றும் விதான கட்டிடத்துடன் கூடிய மிகவும் சிறப்பான அம்சங்களில் ஒன்றாகும். இந்த அமைப்பு நிசாம்களின் ஆட்சியின் போது உருவாக்கப்பட்டது. முதலாவது மற்றும் கடைசி நிசாம் தவிர மற்ற அனைத்து நிசாம்களின் கல்லறைகளும் இதில் உள்ளன, [5][6][7]
மேற்கோள்கள்
- ↑ "Mecca Mosque". Encyclopædia Britannica.
- ↑ Jean-Baptiste Tavernier, Travels in India (English translation), Oxford University Press, Humphrey Milford, translated by Ball, London 1925 pg 205. Both volumes translated from Le Six Voyages of J. B. Tavernier (2 vols. 4to, Paris, 1676)
- ↑ "Bomb hits historic India mosque". BBC News Online. 18 May 2007.
- ↑ "HuJI ban takes no note of 'terror' role". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 8 August 2010. Archived from the original on 4 November 2012.
- ↑ "Welcome to TCI".
- ↑ "50 years after Hyderabad Nizams death, kin say his contributions neglected". Feb 24, 2017.
- ↑ "Makkah masjid is dying! Does anyone in Hyderabad cares?? | Deccan Digest". Archived from the original on 2018-07-10. பார்க்கப்பட்ட நாள் 2021-05-06.