மரபு

மரபு அல்லது வழக்கம்(usual)எனப்படுவது பெற்றோர்கள் அல்லது முன்னோர்களிலிருந்து, சந்ததிகளுக்கு இயல்புகள் கடத்தப்படும் செயல்முறையாகும். சந்ததியின் உயிரணு அல்லது உயிரினம் உருவாகும்போதே, பெற்றோர் உயிரணு அல்லது உயிரினத்தில் இருந்து இயல்புகளைப் பெற்றுக் கொள்வது இந்த செயல் முறையினாலேயே ஆகும்.[1] இந்த பாரம்பரிய செயல்முறையின்போது, இயற்கையாகவும், சூழல் தாக்கத்தினாலும் உயிரினங்களில் வேறுபாடுகளும் தோன்றுவதனால், அவற்றில் புதிய இயல்புகள் உருவாகி புதிய இனங்களும் தோன்றும்.

உயிரியலில் பாரம்பரியம் பற்றிய கல்வி மரபியல் எனப்படும்.

வரலாறு

பாரம்பரிய இயல்புகள் சந்ததிகளூடாகக் கடத்தப்படும்போது, உயிரினங்கள் தமது வாழ்வைத் தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் அவற்றில் ஏற்படக்கூடிய மரபியல் வேறுபாடு (genetic variation) களாலும், அவற்றில் நிகழும் இயற்கைத் தேர்வு செயல்முறையாலும், உயிரினங்களில் கூர்ப்பு நிகழ்வதை தனது படிவளர்ச்சிக் கொள்கை மூலம் சார்ள்ஸ் டார்வின் விளக்கினார். ஆனாலும் அவர் 1859 ஆம் ஆண்டில் தனது படிவளர்ச்சிக் கொள்கை பற்றி அறிவித்தபோது பாரம்பரிய இயல்புகள் கடத்தப்படுவதற்கான பொறிமுறைகளை அறிந்திருக்கவில்லை.

பின்னாளில், 1865 ஆம் ஆண்டில், கிரிகோர் மெண்டல் என்பவர் தனது தோட்டத்தில் வளர்ந்த பட்டாணித் தாவரத்தில் செய்த சில எளிய ஆய்வுகள் மூலம் இந்த பொறிமுறைகளை விளக்க முற்பட்டார். ஆனால், அவரின் கண்டுபிடிப்புக்களும் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பின்னர் 1901 ஆம் ஆண்டில் அவரது ஆய்வுமுடிவுகள் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த மரபுப் பண்புகள் சில குறிப்பிட்ட விதிகளுக்கமையவே அடுத்த சந்ததிக்கு கடத்தப்படுகின்றன என கிரிகோர் மெண்டல் கூறினார். அந்த விதிகள் பின்னாளில் '''மெண்டலின் விதிகள்''' எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்படுகிறது. ஆனாலும், அவரின் ஆய்வு முடிவுகள் பண்புசார் (qualitative) வேறுபாடுகள் போன்ற பெரிய வேறுபாடுகளையே விளக்குவதாகக் கருதப்பட்டது. 1918 இல் Ronald A.Fisher என்பவர் வெளியிட்ட ஆய்வு முடிவுகள் அளவுசார் (quantitative) வேறுபாடுகளையும் விளக்கியது.

1800 ஆம் ஆண்டுகளில், சில அறிவியலாளர்கள், நுண்ணோக்கிகள் மூலம் நிறப்புரிகளைக் (chromosomes) கண்டறிந்தனர். 1880 ஆம் ஆண்டிலே ஆரம்பித்த சில பரிசோதனைகள் மூலம், Theodor Boveri நிறப்புரிகளுக்கும், பாரம்பரிய இயல்புகளுக்கும் இருக்கக்கூடிய தொடர்பு பற்றி கூறினார். கிரிகோர் மெண்டல் தனது முடிவுகளை விளக்குகையில், உயிரியல் வேறுபாடுகளைப் பாரம்பரிய முறையில் கடத்தும் அலகுகள் உயிரணுக்களில் இருப்பதைக் குறிப்பிட்டிருந்தார். பின்னாளில் அந்த அலகுகளுக்கு மரபணு (gene) எனப் பெயரிடப்பட்டது. கிரிகோர் மெண்டலின் ஆய்வு முடிவுகள் 1901 ஆம் ஆண்டில் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், அதனை அடிப்படையாகக் கொண்டு, Theodor Boveri நிறப்புரிகளுக்கும், பாரம்பரிய இயல்புகளுக்குமிடையிலான தொடர்பை விளக்க முற்பட்டார். அதன் பின்னர், பல அறிவியலாளர்களின் ஆய்வுகள் மூலம், நிறப்புரிகளில் உள்ள மரபணுக்களே பாரம்பரிய இயல்புகளுக்குக் காரணம் என்றும், குறிப்பிட்ட இயல்பைக் கட்டுப்படுத்தும் மரபணுக்கள், குறிப்பிட்ட நிறப்புரிகளில், நிலையான இடங்களைக் (மரபணு இருக்கை) கொண்டிருக்கிறதென்றும், ஒரு குறிப்பிட்ட மரபணுவில் வெவ்வேறு வடிவங்கள் (எதிருருக்கள்) இருக்கிறதென்றும், மரபணுக்களிலுள்ள டி.என்.ஏ ஒழுங்குபடுத்தப்படும் முறையினால் ஏற்படும் குறியாக்க வரிசைகளில் (coding sequence) உள்ள வேறுபாடுகளே உயிரினத்தின் இயல்புகளில் வேறுபாடுகளைக் கொண்டு வருகின்றதென்றும் அறியப்பட்டது.

மேற்கோள்கள்

  1. Sturm RA; Frudakis TN (2004). "Eye colour: portals into pigmentation genes and ancestry". Trends Genet. 20 (8): 327–32. doi:10.1016/j.tig.2004.06.010. பப்மெட்:15262401. 

வெளி இணைப்புகள்