மாத்தூர் தொட்டிப் பாலம்

மாத்தூர் தொட்டிப் பாலம்
மாத்தூர் தொட்டிப் பாலம்
புனலின் நீளம் 1240 அடி (378 மீ)
அகலம் 7.5 அடி (2.3 மீ)
புனலின் உயரம் 7 அடி (2.1 மீ)
திசைவேகம் 5.1 அடி/s (1.55 மீ/s)
வெளிபோக்கு 204 கனஅடி/நொ (5.8 கனமீ/நொ)
தாங்கிகளின் எண்ணிக்கை 28
தாங்கி இடைத்தூரம் 40 அடி (12.2 மீ)
தொடக்கத்தில் அகலம் 91 அங் (2.31 மீ)
முடிவில் அகலம் 90 அங் (2.29 மீ)
கடல் மட்டத்திலிருந்து உயரம் 115 அடி (35 மீ)
கட்டுமானச் செலவு ரூ. 12.90 லட்சம் (ரூ. 12,90,000, அமெ$27,446.80) - 1966ல்
மாத்தூர் தொட்டிப் பாலம், மேற்பகுதி
மாத்தூர் தொட்டிப் பாலத்தின் பக்கவாட்டுத் தோற்றம்

மாத்தூர் தொட்டிப் பாலம் (Mathoor Aqueduct) என்பது தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள தெற்கு ஆசியாவிலேயே மிக உயரமான தொட்டிப் பாலமாகும். இது கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு பெயர்பெற்ற சுற்றுலாத் தலமுமாகும்.

பெயர் காரணம்

தொட்டி வடிவில் கட்டப்பட்டிருப்பதால் தொட்டிப் பாலம் எனவும், இரு மலைகளுக்கு நடுவே தொட்டில் போன்ற அமைப்பில் இருப்பதால் தொட்டில் பாலம் எனவும் அழைக்கப்படுகிறது.

கட்டுமானம்

வறட்சியை தீர்ப்பதற்காக 1962 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதல்வராக இருந்த காமராஜரால் தொடங்கப்பட்ட இப்பாலம் 1969இல் முழுமையாக கட்டப்பட்டு நிறைவுபெற்றது.

இதற்கான நீர் பேச்சிபாறை மற்றும் சிற்றாறு அணைகளிலிருந்து கோதையாறு கால்வாய் வழியாக கொண்டுவரப்படுகிறது.

இந்தப் பாலத்தின் கீழ் பரளியாறு என்ற சிற்றாறு பாய்கிறது.

தண்ணீரைக் கொண்டு செல்வதற்காக மலைப்பாங்கான காடுகளாக இருந்த மாத்தூர் பகுதியில் உள்ள கணியான் பாறை என்ற மலையையும், கூட்டுவாயுப்பாறை என்ற மலையையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

இரண்டு மலைகளை இணைக்கும் இந்தப் பாலம் நீளவாக்கில் 1,204 அடியாகவும், தரைமட்டத்திலிருந்து 104 அடி உயரத்திலும் கட்டப்பட்டு உள்ளது. இந்தப் பாலத்தைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு தூணின் சுற்றளவும் 32 அடியாகும். இவ்வாறு மொத்தம் 28 தூண்கள் உள்ளன. தண்ணீர் செல்லும் பகுதிகள் ஏழு அடி அகலமும், ஏழு அடி உயரமும் கொண்ட தொட்டிகளாக தொகுக்கப்பட்டுள்ளன.

பயன்பாடு

அணையிலிருந்து வரும் நீர் முதலில் மாத்தூர் பாலத்திற்கும் அதன்பின் செங்கோடி மற்றும் வடக்குநாட்டுப் பாலங்கள் வழியாக தேங்காய்ப்பட்டணம் கிராமத்திற்கும் செல்கின்றது. மாத்தூர் தொட்டிப் பாலம் வழியாகக் கொண்டுசெல்லப்படும் நீர் கன்னியாகுமரி மாவட்டத்தின் கல்குளம், விளவங்கோடு ஆகிய இரு வட்டங்களில் உள்ள ஊர்களின் நீர்ப்பாசனத்திற்குப் பயன்படுகிறது.

அமைவிடம்

கன்னியாகுமரி மாவட்டம், அருவிக்கரை ஊராட்சி மன்றப் பகுதியில் மாத்தூர் தொட்டிப் பாலம் அமைந்துள்ளது. இது திருவட்டாரிலிருந்து 3 கி.மீ தொலைவிலும் இந்தியாவின் தென்முனையாகிய கன்னியாகுமரியிலிருந்து 60 கி.மீ. தொலையிலும் உள்ளது[1] இவ்வூர் குழித்துறை இரயில் நிலையத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும், திருவனந்தபுரம் வானூர்தி நிலையத்திலிருந்து 70 கி.மீ. தொலைவிலும் அமைந்திருக்கிறது.

மேற்கோள்கள்

  1. "Mathur Hanging Bridge". Archived from the original on 20 July 2006. பார்க்கப்பட்ட நாள் 28 October 2006.

வெளி இணைப்புகள்