யாக்கோபு (நூல்)

"தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும் மாசற்றதுமான சமயவாழ்வு எதுவெனில், துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்களையும் கவனித்தலும்.உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக்கொள்வதும் ஆகும்" (யாக் 1:27). விவிலிய ஓவியம்.


யாக்கோபு அல்லது யாக்கோபு எழுதிய திருமுகம் (Letter [Epistle] of James) என்னும் நூல் கிறித்தவ விவிலியத்தின் இரண்டாம் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் இருபதாவது நூலாக அமைந்துள்ளது [1]. மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் Epistole Iakobou (Επιστολή Ἰάκώβου) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Epistula ad Iacobi எனவும் உள்ளது.

பழைய தமிழ் மொழிபெயர்ப்பில் இம்மடல் யாகப்பர் எழுதிய நிருபம் என்றிருந்தது. யாக்கோபு என்னும் பெயர் ஆங்கிலத்தில் James என்றாயிற்று.

யாக்கோபு திருமுகம்: கிறிஸ்தவ வாழ்வு நெறி

யாக்கோபு எழுதிய திருமுகம் உலகெங்கும் சிதறுண்டு வாழும் இஸ்ரயேலின் பன்னிரு குலத்தினருக்கும் எழுதப்பட்டுள்ளது. அவர்கள் யூதக் கிறிஸ்தவர்கள். ஆயினும் திருமுகம் தரும் போதனை யூதக் கிறிஸ்தவர்களுக்கும் பிற கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தவே அமைந்துள்ளது. இத்திருமுகம் கிறிஸ்தவ நடைமுறை வாழ்வுக்கான அறிவுரை எனினும், பழைய ஏற்பாட்டின் ஞான நூல்களின் தன்மையைக் கொண்டுள்ளது. இது எழுதப்பட்ட காலத்தைக் கணிப்பது கடினம். வெவ்வேறு விவிலிய அறிஞர்கள் கி.பி. 50இலிருந்து 100 வரையுள்ள வெவ்வேறு காலக் கணிப்புகளைக் கொடுக்கிறார்கள்[2].

யாக்கோபு திருமுகத்தின் ஆசிரியர்

யாக்கோபு திருமுகத்தின் ஆசிரியர் தம்மைப் பற்றிக் "கடவுளுக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் பணியாளனாகிய யாக்கோபு" என்று குறிப்பிடுகிறார் (யாக் 1:11). மரபுக் கருத்துப்படி யாக்கோபு ஆண்டவரின் சகோதரர்; எருசலேம் திருச்சபையின் தலைவர்; பவுலுடன் தொடர்புகொண்டிருந்தவர் (கலா 1:19; 2:9,12; திப 15:13).

ஆனால் இக்கருத்துகளைப் பல அறிஞர்கள் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள்; ஏனெனில் கடிதத்தின் நடை, கருத்துகள், இயேசுவோடுள்ள நெருக்கமான உறவு பற்றிய குறிப்பின்மை போன்றவற்றின் அடிப்படையில் இத்திருமுகத்தின் ஆசிரியர் வேறு ஒரு யாக்கோபாக இருக்கலாம் என எண்ணுகிறார்கள்.

யாக்கோபு நூலின் உள்ளடக்கம்

இத்திருமுகத்தின் உள்ளடக்கம் வருமாறு:

  • இந்நூலில் காணப்படும் முக்கியக் கருத்து கிறிஸ்தவர் ஒருவர் தம் அன்றாடக் கடமைகளைப் பிழையின்றிச் செய்து முடிக்க வேண்டும் என்பதாகும்.
  • உண்மையான கிறிஸ்தவ வாழ்வு தன்னல மறுப்பையும் தூய வாழ்வையும் உள்ளடக்கியது (யாக் 1:1-27).
  • நம்பிக்கை, பிறரன்பு போன்றவை செயல்களில் காட்டப்பட வேண்டும். செயலற்ற நம்பிக்கை செத்த நம்பிக்கை (யாக் 2:1-26).
  • நாவை அடக்குதல், அமைதி வாழ்விற்கான ஆர்வம் ஆகியவை ஒருவரை ஞானியாகவும், தூயவராகவும் மாற்றுகின்றன (யாக் 3:1-18).
  • பாவம் பிளவின் காரணம்.
  • திருமுகத்தின் இறுதியில் அனைவருக்கும் எழுச்சியுரை தரப்படுகிறது (யாக் 4-5).

யாக்கோபு திருமுகத்திலிருந்து சில பகுதிகள்

யாக்கோபு 2:1-9, 15-17

"என் சகோதர சகோதரிகளே,
மாட்சி மிக்க நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவினிடம் நம்பிக்கை கொண்டுள்ள நீங்கள்
ஆள்பார்த்துச் செயல்படாதீர்கள்.
பொன் மோதிரமும் பளபளப்பான ஆடையும் அணிந்த ஒருவரும்
அழுக்குக் கந்தையணிந்த ஏழை ஒருவரும்
உங்கள் தொழுகைக் கூடத்தினுள் வருகிறார்கள் என வைத்துக்கொள்வோம்.
அப்பொழுது நீங்கள் பளபளப்பான ஆடை அணிந்தவர்மீது தனிக் கவனம் செலுத்தி
அவரைப் பார்த்து, "தயவுசெய்து இங்கே அமருங்கள்" என்று சொல்கிறீர்கள்.
ஏழையிடமோ, "அங்கே போய் நில்" என்றோ
அல்லது "என் கால்பக்கம் தரையில் உட்கார்" என்றோ சொல்கிறீர்கள்.
இவ்வாறு உங்களுக்குள்ளே வேறுபாடு காட்டி,
தீய எண்ணத்தோடு மதிப்பிடுகிறீர்கள் அல்லவா?
என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, நான் சொல்வதைக் கேளுங்கள்:
உலகின் பார்வையில் ஏழைகளாய் இருப்பவர்களை,
நம்பிக்கையில் செல்வர்களாகவும்
தம்மீது அன்பு செலுத்துபவருக்கு வாக்களிக்கப்பட்ட அரசை
உரிமைப்பேறாகப் பெறுபவர்களாகவும் கடவுள் தேர்ந்து கொள்ளவில்லையா?
நீங்களோ ஏழைகளை அவமதிக்கிறீர்கள்.
உங்களைக் கொடுமைப்படுத்தி நீதிமன்றத்துக்கு இழுத்துச் செல்வோர் யார்? செல்வர் அல்லவா?
கடவுள் உங்களுக்குக் கொடுத்துள்ள நற்பெயரைப் பழிப்பவர்களும் அவர்களல்லவா?
"உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக!"
என்னும் இறையாட்சியின் சட்டம் மறைநூலில் உள்ளது. இதை நீங்கள் கடைப்பிடித்தால் நல்லது.
மாறாக, நீங்கள் ஆள்பார்த்துச் செயல்பட்டால் நீங்கள் செய்வது பாவம்;
நீங்கள் குற்றவாளிகளென அச்சட்டமே உங்களுக்குத் தீர்ப்பளிக்கும்."


"ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி போதிய உடையும் அன்றாட உணவும் இல்லாதிருக்கும்போது,
அவர்கள் உடலுக்குத் தேவையானவை எவற்றையும் கொடாமல்
உங்களுள் ஒருவர் அவர்களைப் பார்த்து,
"நலமே சென்று வாருங்கள்; குளிர் காய்ந்து கொள்ளுங்கள்;
பசியாற்றிக் கொள்ளுங்கள்;" என்பாரென்றால் அதனால் பயன் என்ன?
அதைப் போலவே, நம்பிக்கையும் செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாயிருக்கும்."

யாக்கோபு 3:7-12

"காட்டில் வாழ்வன, பறப்பன, ஊர்வன, கடலில் வாழ்வன
ஆகிய எல்லா உயிரினங்களையும் மனிதர் அடக்கிவிடலாம்; அடக்கியும் உள்ளனர்.
ஆனால் நாவை அடக்க யாராலும் முடிவதில்லை.
கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அது கொடியது;
சாவை விளைவிக்கும் நஞ்சு நிறைந்தது.
தந்தையாம் ஆண்டவரைப் போற்றுவது அந்நாவே;
கடவுளின் சாயலாக உண்டாக்கப்பட்ட மனிதரைத் தூற்றுவதும் அந்நாவே.
போற்றலும் தூற்றலும் ஒரே வாயிலிருந்து வருகின்றன.
என் சகோதர சகோதரிகளே, இவ்வாறு இருத்தலாகாது.
ஒரே ஊற்றிலிருந்து நன்னீரும் உவர் நீரும் சுரக்குமா?
என் அன்பர்களே, அத்திமரம் ஒலிவப்பழங்களையும்
திராட்சைச் செடி அத்திப் பழங்களையும் கொடுக்குமா?
அவ்வாறே, உப்பு நீர்ச் சுனையிலிருந்து நன்னீர் கிடைக்காது."

யாக்கோபு திருமுகத்தின் உட்பிரிவுகள்

பொருளடக்கம் - பகுதிப் பிரிவு அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. முன்னுரை (வாழ்த்து) 1:1 435
2. சோதனைகள் 1:2-18 435
3. அறிவுரையும் எச்சரிக்கைகளும் 1:19 - 5:20 435 - 440

ஆதாரங்கள்

  1. யாக்கோபு திருமுகம்
  2. கத்தோலிக்க கலைக் களஞ்சியம் - யாக்கோபு திருமுகம்