இராமேசுவரம்

இராமேசுவரம்
இராமேசுவரம்
அமைவிடம்: இராமேசுவரம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 9°16′47″N 79°17′59″E / 9.27972°N 79.29972°E / 9.27972; 79.29972
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராமநாதபுரம்
வட்டம் இராமேஸ்வரம் வட்டம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் சிம்ரன்சித் சிங் கக்லோன், இ. ஆ. ப [3]
நகராட்சி தலைவர்
மக்கள் தொகை 44,856 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

இராமேசுவரம் அல்லது இராமேஸ்வரம் (ஆங்கில மொழி: Rameshwaram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமேஸ்வரம் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும்.

இது பாம்பன் தீவில் அமைந்துள்ள நகர் ஆகும். தீபகற்ப பகுதியுடன் பாம்பன் பாலம் இத்தீவை இணைக்கின்றது. இங்கிருந்து இலங்கையின் மன்னார் தீவு 50 கிமீ தொலைவில் உள்ளது. சென்னை மற்றும் மதுரையிலிருந்து வரும் தொடர்வண்டிகளுக்கான முனையமாக இராமேசுவரம் அமைந்துள்ளது. வாரணாசிக்கு இணையான புனித வழிபாட்டுத் தலமாக இராமேசுவரமும் இந்துக்களால் கருதப்படுகின்றது. இந்தியாவின் நான்கு திசைகளில் உள்ள "சார் தாம்" எனப்படும் நான்கு புனிதத் தலங்களில் இதுவும் ஒன்றாகும்.[4]

இந்து தொன்மவியலில் இராமர் இலங்கையிலிருந்து தனது மனைவி சீதையை மீட்க இங்கிருந்துதான் பாலம் அமைத்ததாக நம்பப்படுகின்றது. நகரின் மையத்திலுள்ள இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் சிவனுக்குரிய கோவிலாகும். இராமர் இங்கு சிவனை வழிபட்டதாக நம்பப்படுகின்றது. இக்கோவில் இந்து சமயத்தின் பிரிவுகளான சைவம், வைணவம் இரு சமயத்தினருக்கும் முதன்மையாக உள்ளது.[5][6]

இலங்கையை அடைய மிக அண்மையான துறையாக இராமேசுவரம் உள்ளது. புவியியல் சான்றுகளின்படி ராமசேது பாலம் இருநாடுகளுக்கும் இடையே நிலவழி இணைப்பாக முற்காலத்தில் இருந்துள்ளது. எல்லை கடந்ததாக இந்திய மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம், கச்சத்தீவு மற்றும் இலங்கை ஏதிலிகள் தொடர்பான செய்திகளால் இராமேசுவரம் பரவலாக ஊடகங்களில் அறியப்படுகின்றது.[7] இராமேசுவர நகராட்சி 1994இல் நிறுவப்பட்டது. நகரப்பகுதி 53 கிமீ2 பரப்பளவில் 44,856 மக்கள் தொகையுடன் (2011 கணக்கெடுப்பு) அமைந்துள்ளது. சுற்றுலாவும் மீன்வளமும் முதன்மை பணிவாய்ப்புகளாக உள்ளன.

வரலாறு

இராமேசுவரத்தின் வரலாறு இராமநாதசுவாமி கோவிலையும் இலங்கை செல்வதற்கான வாயிலாக இருந்ததையும் மையமாக கொண்டுள்ளது. சோழ மன்னர் இராசேந்திர சோழன் (பொ.ஊ. 1012–1040) ஆட்சியில் சிலகாலம் இராமேசுவரம் இருந்து வந்துள்ளது.[8] பொ.ஊ. 1215–1624 காலப்பகுதியில் யாழ்ப்பாண அரசு கட்டுப்பாட்டில் இத்தீவு இருந்தது; யாழ்ப்பாண அரசர் சேதுகாவலன் என அழைக்கப்பட்டார்.[9] இந்து சமய மன்னர்களான அவர்களது ஆட்சியில் கோவிலை வளப்படுத்தினர்.[9] அவர்களது காசுகளிலும் இலச்சினைகளிலும் சேது என்ற அடையாளம் பயன்படுத்தப்பட்டு வந்தது.[9]

பதினான்காம் நூற்றாண்டில் தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சியின் படைத்தளபதி மாலிக் கபூர் பாண்டியர்களின் எதிர்ப்பை முறியடித்து இங்கு வந்தடைந்தார். [10][11][12] இசுலாத்தின் வெற்றியை நினைவுகூறுமுகமாக அலியா அல்-தின் கல்ட்ஜி என்ற மசூதியை நிறுவினார்.[10][11] பதினைந்தாவது நூற்றாண்டின் முற்பகுதியில் தற்கால இராமநாதபுரம், கமுதி, இராமேசுவரம் பகுதிகள் பாண்டிய இராச்சியத்தின் கீழ் இருந்தன.[8] பொ.ஊ. 1520 இல், விஜயநகரப் பேரரசு ஆட்சியின் கீழ் வந்தது.[8] மதுரை நாயக்கர்களிடமிருந்து பிரிந்த சேதுபதிகள் இராமநாதபுரத்தை ஆளத் தொடங்கினர். இவர்கள் இராமநாதசுவாமி கோவிலின் மேம்பாட்டிற்கு பெரிதும் உதவினர்.[8][6] முக்கியமாக முத்துக் குமார ரகுநாத சேதுபதியும் முத்து ராமலிங்க சேதுபதியும் கோவிலின் கட்டட வடிவமைப்பை மிகச்சிறப்பான கட்டடக்கலையாக அமைத்தனர்.[13] 18வது நூற்றாண்டில் இப்பகுதி அடுத்தடுத்து பலமுறை சந்தா சாகிப் (1740–1754), ஆற்காடு நவாப், மருதநாயகம் (1725–1764) ஆகியோரால் கையகப்படுத்தப்பட்டது.[14] பொ.ஊ. 1795யில் இராமேசுவரம் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் வந்தது. சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. 1947க்குப் பிறகு சுதந்திர இந்தியாவின் பகுதியாயிற்று.[8] இராமேஸ்வரம் நகரம் முந்தைய மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

சுற்றுலாப் பயணிகள் வருகை

ராமேஸ்வரம் தீவை மண்டபம் முகாமுடன் இணைக்கும் ரயில் பாலம்
ராமேஸ்வரம், இராமநாதசுவாமி கோயில்
இராமநாதசுவாமி கோயிலின் பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரம்

இது வங்காள விரிகுடாக் கடலின் கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள இராமநாதசுவாமி கோயில் இந்து சமயத்தின் ஒரு முக்கிய புனித வழிபாட்டிடமாதலால் பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். இங்கு பல தீர்த்தங்கள், பல கோவில்கள் அமைந்துள்ளன. புகழ் பெற்ற ஆலயங்களுள் இங்கு உள்ள ராமநாதசுவாமி ஆலயமும் ஒன்று. உலகில் மிக நீண்ட பிரகாரம் என்ற பெருமையை இந்த கோவிலுக்கு உண்டு. இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இங்குதான் பிறந்தார்.

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 21 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 10,579 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 44,856 ஆகும். அதில் 22,783 ஆண்களும், 22,073 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 82.61% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 969 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5022 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 10000 குழந்தைகள் வீதம் உள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 87.40%, இசுலாமியர்கள் 4.36%, கிறித்தவர்கள் 8.13% மற்றும் பிறர் 0.11% ஆகவுள்ளனர்.[15]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. Gwynne, Paul (2009), World Religions in Practice: A Comparative Introduction, Oxford: Blackwell Publication, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4051-6702-4[தொடர்பிழந்த இணைப்பு]
  5. Gibson 2002, ப. 42.
  6. 6.0 6.1 Ayyar 1991, ப. 492–495.
  7. Sunday Observer 13 May 2012.
  8. 8.0 8.1 8.2 8.3 8.4 Ramanathapuram district history 2011.
  9. 9.0 9.1 9.2 Gunasingam 1999, ப. 63.
  10. 10.0 10.1 Mehta 1986, ப. 157.
  11. 11.0 11.1 Sharon et al. 1987, ப. 271.
  12. Aiyangar 1991, ப. 112.
  13. Michell 1995, ப. 116.
  14. Harman 1992, ப. 30–36.
  15. இராமேஸ்வரம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்

வெளி இணைப்புகள்