வஜ்ஜி நாடு

வஜ்ஜி நாடு

வஜ்ஜி அல்லது விரிஜ்ஜி நாடு (Vajji or Vrijji) பண்டைய வட இந்தியாவின் 16 மகாஜனபத நாடுகளில் ஒன்றாகும். வஜ்ஜி நாட்டின் தலைநகராக வைசாலி நகரம் விளங்கியது. மகாவீரர் மற்றும் கௌதம புத்தர் தங்கள் வாழ்வில் பல முறை வைசாலி நகரத்திற்கு வருகை தந்தனர். வைசாலி நகரத்தில் அசோகரின் தூண் உள்ளது.

பௌத்த சமயத்தின் அங்குத்தர நிகாயம் மற்றும் சமணய சமயத்தின் பகவதி சூத்திர நூல்களில், வட இந்தியாவில் இருந்த 16 மகாஜனபத நாடுகளில் ஒன்றாக வஜ்ஜி நாடு அல்லது விரிஜ்ஜி நாடு குறித்து விளக்கப்பட்டுள்ளது.[1] விரிஜ்ஜி குலத்தினர் இநாட்டை ஆண்டதால் இந்நாட்டிற்கு வஜ்ஜி அல்லது விருஜ்ஜி நாடு என அழைக்கப்பட்டது. இது ஒரு குடியரசு நாடாக விளங்கியது. வஜ்ஜி குலத்தவர்கள் குறித்து பாணினி, சாணக்கியர், யுவான் சுவாங் ஆகியோர் தமது நூல்களில் குறித்துள்ளனர்.[2]

புவியியல்

வஜ்ஜிகளின் தலைநகரான வைசாலியில் அசோகரின் தூண்

தற்கால பிகார்-நேபாளம் எல்லையில் இருந்த வஜ்ஜி நாடு, மல்ல நாட்டிற்கு கிழக்கிலும்; அங்க நாட்டிற்கு வட மேற்கிலும் அமைந்திருந்தது. வஜ்ஜி நாட்டிற்கு மேற்கே நேபாள நாட்டின் கண்டகி ஆறும், கிழக்கில் கோசி ஆறும், மகாநந்த ஆறும் பாய்ந்து கொண்டிருந்தது. வஜ்ஜி நாட்டின் தலைநகராக வைசாலி விளங்கியது.[3]

வஜ்ஜி குலத்தவர்கள்

வஜ்ஜி நாட்டை எட்டு அரச குலத்தினர் ஆண்டனர். அவர்களில் சிறப்பு மிக்க நான்கு குலங்கள் வஜ்ஜிகள், லிச்சாவிகள், விதேகர்கள், ஜனத்திரிகர்கள் ஆவர். மற்ற நான்கு குல அரசரகள் குறித்த குறிப்புகள் கிடைக்கவில்லை. லிச்சாவி குல மன்னர் மனுதேவன், நாட்டிய மங்கை அம்பாபாலியை அடைய நினைத்தான். [4] வஜ்ஜி மற்றும் லிச்சாவி குலத்தவர்கள் மகாவீரர் மற்றும் புத்தரை பின்பற்றுபவர்களாக இருந்தனர்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Raychaudhuri Hemchandra (1972), Political History of Ancient India, Calcutta: University of Calcutta, pp.85-6
  2. Raychaudhuri Hemchandra (1972), Political History of Ancient India, Calcutta: University of Calcutta, p.107
  3. Raychaudhuri Hemchandra (1972), Political History of Ancient India, Calcutta: University of Calcutta, pp.105, 107
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-05-17. பார்க்கப்பட்ட நாள் 2016-05-02.