வெண்கழுத்துக் காக்கை

வெண்கழுத்துக் காக்கை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Passeriformes
குடும்பம்:
காக்கைக் குடும்பம்
பேரினம்:
காக்கைப் பேரினம் (கோர்வசு, Corvus)
இனம்:
C. albicollis
இருசொற் பெயரீடு
Corvus albicollis
Latham, 1790

வெண்கழுத்துக் காக்கை அல்லது சுவாகிலி மொழியில் குங்குரு என்று அழைக்கப்படும் காக்கை அண்டங்காக்கையைப் போல் கரிய பெரிய காக்கை. இதன் கழுத்திலும், தோள் தொண்டைப் பகுதியிலும் வெண்ணிறப் பட்டை உண்டு. இதன் அலகு தடித்து இருக்கும். அலகின் நுனியிலும் வெண்ணிறம் உண்டு. குங்குரு ஏறத்தாழ 50-54 செமீ நீளம் உடைய பறவை. இது பறக்கும் பொழுது இறக்கை அடிப்பதால் உசு உசு என்று ஒலி எழுப்புகின்றது. இப்பறவையின் அறிவியற் பெயர் கோர்வசு ஆல்பிக்கோலிசு Corvus albicollis என்பதாகும்.

உலகில் வாழிடப் பரப்பு. கிழக்கு, தெற்கு ஆப்பிரிக்காவில் மட்டுமே காணப்படுகின்றது

இது பெரும்பாலும் கிழக்கு, தென் ஆப்பிரிக்காவில் திறந்த புல் வெளிகளிலும், மலைகளிலும் காணப்படுகின்றது. பெரும்பாலும் கிழக்கு தென் ஆப்பிரிக்க மலைப்பகுதிகளில் காணப்படுவதால் இதனை வெண்கழுத்து மலை காக்கை என்றும் கூறலாம். மலைகளில் 4600 மீ உயரம் வரையிலும் காணப்படுகின்றது. இதன் இறைச்சியில் ஒரு நச்சுத் தன்மை உள்ளதால் இப்பறவை உண்ணப்படுவதில்லை என்று கிழக்கு ஆப்பிரிக்காவின் மக்கள் கூறுகின்றனர்[1].

இப்பறவை எல்லாம் உண்ணிகள் வகையைச் சேர்ந்தது. விதை, தானியம், நிலக்கடலை, மற்றும் இறந்த விலங்குகள் பூச்சிகள், சிறு ஊர்வன ஆகிய யாவற்றையும் உண்ணும். ஆமைகளையும் உண்ணும் என்று சிலர் கூறுகின்றார்கள்.

இதன் கூடுகள் பெரும்பாலும், உயரமான பாறைகளின் இடுக்குகளில் இருக்கும், ஆனால் சில நேரங்களில் இதன் கூடுகள் மரத்திலும் இருக்கும். கூட்டில் வழக்கமாக 3-5 முட்டைகள் இடும்.

இதன் கூவல் அண்டங்காக்கை போல இருந்தாலும் சற்று வேறாக ஒலிக்கும். காற்றொலி அதிகமாக இருக்கும்.

ஒளிப்பட இணைப்புகள்

நிகழ்பட இணைப்புகள்

மேற்கோள்களும் குறிப்புகளும்

  1. பயனர் செ.இரா. செல்வகுமார் தான்சானிய சஃவாரி வழிகாட்டிகள் கூறக்கேட்டது, பெப்ரவரி, 2009