ஹன்னிபால்
ஹன்னிபால் | |
---|---|
ஹன்னிபாலைச் சித்தரிக்கும் ஒரு பளிங்கு மார்பளவுச் சிலை, இத்தாலியின் பண்டைய நகர அரசான கபுவாவில் கண்டெடுக்கப்பட்டது | |
சுதேசியப் பெயர் | 𐤇𐤍𐤁𐤏𐤋 |
பிறப்பு | கி. மு. 247 கார்த்திஜ், பண்டைய கார்த்தேஜ் (தற்கால தூனிசியா) |
இறப்பு | கி. மு. 183 – கி. மு. 181 (அகவை 64–66) லிபிச்சா, பித்தினியா (தற்கால கெப்சே, துருக்கி) |
சார்பு |
|
தரம் | கார்த்தேஜினிய இராணுவத்தின் தலைவர் |
போர்கள் |
|
துணை(கள்) | இமில்சே |
பிள்ளைகள் | ஒரு வேளை ஒரு மகன் இருந்திருக்கலாம் |
உறவினர் | கமில்கர் பார்கா (தந்தை) கசுதுருபால் (சகோதரர்) மாகோ (சகோதரர்) வெளிரிய கசுதுருபால் (மைத்துனர்) |
வேறு செயற்பாடுகள் | அரசியல்வாதி |
ஹன்னிபால் (/ˈhænɪbəl/; 𐤇𐤍𐤁𐤏𐤋 - ஹனிபால்; 247 – 183 மற்றும் 181 பொ. ஊ. மு. க்கு இடையில்)என்பவர் ஒரு கார்த்தேஜினியத் தளபதி மற்றும் அரசியல் மேதை ஆவார். இவர் இரண்டாம் பியூனிக் போரின் போது உரோமைக் குடியரசுக்கு எதிரான யுத்தத்தில் கார்த்தேஜின் படைகளுக்குத் தலைமை தாங்கினார். வரலாற்றின் மிகச் சிறந்த இராணுவத் தலைவர்களில் ஒருவராகப் பெரும்பாலானவர்களால் கருதப்படுகிறார்.
ஹன்னிபாலின் தந்தையான கமில்கர் பார்கா முதல் பியூனிக் போரின் போது ஒரு முன்னணிக் கார்த்தேஜினியத் தளபதியாக இருந்தார். இவரது தம்பிகள் மகோ மற்றும் கசுதுருபால் ஆகியோர் ஆவர். இவரது மைத்துனர் வெளிரிய கசுதுருபால் என்று அழைக்கப்படுகிறார். அவரும் கார்த்தேஜினிய இராணுவங்களுக்குத் தளபதியாக இருந்துள்ளார். நடு நிலக் கடல் வடிநிலப் பகுதியில் ஒரு மிகுந்த பதற்றமான காலத்தின் போது ஹன்னிபால் வாழ்ந்தார். முதலாம் பியூனிக் போரில் கார்த்தேஜைத் தோற்கடித்த பிறகு உரோமைக் குடியரசானது பெரிய சக்தியாக உருவானதால் இந்தப் பதட்டம் ஏற்பட்டது. இழந்த பகுதிகளை மீட்க வேண்டும் என்ற எண்ணம் கார்த்தேஜில் இருந்தது. இது ஹன்னிபால் தனது தந்தையிடம் "என்றுமே உரோமின் நண்பனாக இருக்க மாட்டேன்" என்று செய்து கொடுத்த சத்தியத்தால் அடையாளப்படுத்தப்படுகிறது.[1]
பொ. ஊ. மு. 218இல் ஹன்னிபால் இசுப்பானியாவில் இருந்த உரோமின் ஒரு கூட்டாளி நாடான சகுந்துமைத் (நவீன கால சகுந்தோ, எசுப்பானியா) தாக்கினார். இரண்டாம் பியூனிக் போர் ஏற்பட இது காரணம் ஆனது. வட ஆப்பிரிக்கப் போர் யானைகளுடன் ஆல்ப்சு மலைகளைக் கடந்து இத்தாலி மீது ஹன்னிபால் படையெடுத்தார். ஒரு கார்த்தேஜினிய மற்றும் பகுதியளவு கெல்ட்டிய இராணுவத்தின் தலைவராக இத்தாலியில் இவர் இருந்த முதல் சில ஆண்டுகளில் திசினசு, திரேபியா, திராசிமின் ஏரி, மற்றும் கன்னே யுத்தங்களில் இவர் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றார். உரோமானியர்களுக்குக் கடுமையான சேதத்தை விளைவித்தார். தன்னுடைய மற்றும் தன் எதிரிகளின் முறையே பலம் மற்றும் பலவீனத்தைக் கண்டறியும் திறனுக்காக இவர் மதிக்கப்படுகிறார். அதை வைத்து யுத்த திட்டங்களை இவர் திட்டமிடுவார். முன்னர் உரோமுடன் கூட்டணி வைத்திருந்த பல்வேறு இத்தாலிய நகரங்களை வெல்லவும், அந்நகரங்களுடன் கூட்டணி வைப்பதற்கும் இவரது நன்றாகத் திட்டமிடப்பட்ட உத்திகள் இவருக்கு அனுமதியளித்தன. ஹன்னிபால் பெரும்பாலான தெற்கு இத்தாலியை 15 ஆண்டுகளுக்கு ஆக்கிரமித்திருந்தார். பாபியசு மேக்சிமசால் தலைமை தாங்கப்பட்ட உரோமானியர்கள் இவருடன் நேரடியாக சண்டையிடுவதைத் தவிர்த்தனர். மாறாக உராய்வுப் போரை (பாபியன் உத்தி) நடத்தினர். இசுப்பானியாவில் கார்த்தேஜினியத் தோல்விகள் ஹன்னிபாலுக்கு வலுவூட்டல் படைகள் வருவதைத் தடுத்தன. இவரால் ஒரு தீர்க்கமான வெற்றியைப் பெற இயலவில்லை. வட ஆப்பிரிக்கா மீதான உரோமானியத் தளபதி சிபியோ ஆப்பிரிக்கானசால் தலைமை தாங்கப்பட்ட ஒரு பதில் படையெடுப்பால் இவர் கார்த்தேஜுக்குத் திரும்பி வரும் நிலைக்குத் தள்ளப்பட்டார். ஹன்னிபால் இறுதியாக சமா யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டார். ஓர் உரோமானிய வெற்றியில் இப்போரானது முடிந்தது.
போருக்குப் பிறகு ஹன்னிபால் வெற்றிகரமாக சுபெத் (சமூகத்தின் மூத்த தலைவர்) பதவிக்குப் போட்டியிட்டார். உரோமால் தீர்ப்பளிக்கப்பட்ட போர் இழப்பீட்டை செலுத்த அரசியல் மற்றும் நிதிச் சீர்திருத்ததங்களை இவர் கொண்டு வந்தார். இந்த சீர்திருத்தங்கள் கார்த்தேஜினிய உயர்குடி உறுப்பினர்கள் மற்றும் உரோமில் பிரபலமற்றதாக இருந்தது. பிறகு இவர் தப்பித்து நாடு கடந்து வாழ ஆரம்பித்தார். இந்நேரத்தில் இவர் செலூக்கிய அரசவையில் வாழ்ந்தார். உரோமுக்கு எதிரான மூன்றாம் அந்தியோகசின் போரில் இவர் இராணுவ ஆலோசகராகச் செயல்பட்டார். மெக்னீசியா போரில் அந்தியோகசு தோல்வியடைந்தார். உரோமின் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு அந்தியோகசு தள்ளப்பட்டார். ஹன்னிபால் மீண்டும் தப்பித்து ஓடினார். ஆர்மீனிய இராச்சியத்தில் நின்றார். இவரது ஓட்டம் பித்தினியா அரசவையில் நின்றது. இவர் உரோமானியர்களிடம் காட்டிக் கொடுக்கப்பட்டார். நஞ்சுண்டதன் மூலம் தற்கொலை செய்து கொண்டார்.
பேரரசர் அலெக்சாந்தர், சைரசு, யூலியசு சீசர், சிபியோ ஆப்பிரிக்கானசு, மற்றும் பிர்ரசு ஆகியோருடன் பண்டைக் கால மேற்குலகத்தில் மிகச் சிறந்த இராணுவ உத்தியாளர்கள் மற்றும் தளபதிகளில் ஒருவராக ஹன்னிபால் கருதப்படுகிறார். புளூட்டாக்கின் கூற்றுப் படி, "வரலாற்றின் மிகச் சிறந்த தளபதி யார்?" என்று சிபியோ ஹன்னிபாலைக் கேட்டார். "அலெக்சாந்தர் அல்லது பிர்ரசு, பிறகு நான்" என்று ஹன்னிபால் இதற்குப் பதிலளித்தார்.[1]
பெயர்க் காரணம்
ஹன்னிபால் என்பது ஒரு பொதுவான செமித்திய போனீசிய-கார்த்தேஜினிய தனி நபர் பெயர் ஆகும். இது கார்த்தேஜினிய ஆதாரங்களில் ḤNBʿL[2] (பியூனிக்: 𐤇𐤍𐤁𐤏𐤋) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஹன்னோ என்கிற பொதுவான போனீசிய ஆண் பெயர் மற்றும் வடமேற்கு செமித்திய கானானிய தெய்வமான பால் (பொருள்: "பிரபு") ஆகியவற்றின் இணைவு இதுவாகும். பால் என்பது மேற்கு ஆசியாவில் உள்ள கார்த்தேஜினியர்களின் பூர்வீகத் தாயகமான போனீசியாவின் ஒரு முக்கியக் கடவுள் ஆவார். இப்பெயரின் சரியான உச்சரிப்பு இன்றும் விவாதத்திற்குரியதாக உள்ளது. ஹன்னோபால்,[3] ஹன்னிபால்[4][5] என்ற உச்சரிப்புகள் பரிந்துரைக்கப்படுகின்றன. "பால்/இறைவன் கருணையுடையவன்", "பால் கருணையுடையவனாக உள்ளார்",[5][6] அல்லது "பாலின் கருணை" என இது பொருள்படுகிறது.[4] செமித்திய ஹீப்ரு பெயரான ஹனியேலுடன் இது ஒத்ததாக உள்ளது. கிரேக்க வரலாற்றாளார்கள் இப்பெயரை அன்னிபசு (Ἀννίβας ) என்று குறிப்பிட்டனர்.
போனேசியர்கள் மற்றும் கார்த்தேஜினியர்கள் ஆகியோர் பல மேற்கு ஆசிய செமித்திய மக்களைப் போலவே தங்களது மரபு வழிப் பெயர்களைப் பயன்படுத்தவில்லை. ஆனால், ஒரே பெயரைக் கொண்டவர்கள் பொதுவாக மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டப்படுவதற்காக தந்தை வழிப் பெயர்கள் அல்லது அடைமொழிகளுடன் குறிப்பிடப்பட்டனர். அனைத்து ஹன்னிபால்களிலும் இவர் மிகப் பிரபலமானவராக இருந்த போதிலும் மேற்கொண்ட விளக்கம் தேவைப்படும் போது இவர் பொதுவாக "ஹன்னிபால், கமில்கரின் மகன்" அல்லது "பர்சிய ஹன்னிபால்" என்று குறிப்பிடப்படுகிறார். இந்தப் பெயரானது இவரது தந்தை கமில்கர் பார்காவின் குடும்பத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. பார்கா என்பது ஒரு செமித்திய மூன்றாவது பெயர் ஆகும். இதன் பொருள் "மின்னல்" அல்லது "இடி" ஆகும்.[7] தனது தாக்குதல்களின் துரிதம் மற்றும் ஆக்ரோசத்தின் காரணமாக கமில்கர் இந்தப் பெயரைப் பெற்றார்.
இசுரயேலர், அசிரியர், பாபிலோனியர், அரமேயர், அராபியர், அமோரிட்டு மக்கள், மோவாப் மக்கள், ஏதோமிய மக்கள் மற்றும் பிற ஆசிய செமித்திய மக்கள் மத்தியில் மின்னலைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒத்த பெயர்களுடன் பார்கா என்ற பெயர் ஒத்துப் போகிறது.[8] இவர்கள் தங்களது பெயரை தந்தையிடமிருந்து பெறாமல் இருக்கும் போதிலும் கமில்கரின் வழித்தோன்றல்கள் பொதுவாக பர்சியர் என்று அறியப்படுகின்றனர்.[9] நவீன வரலாற்றாளர்கள் சில நேரங்களில் ஹன்னிபாலின் சகோதரர்களைக் கசுதுருபால் பார்கா மற்றும் மாகோ பார்கா என்று கசுதுருபால் மற்றும் மாகோ என்று பெயரிடப்பட்ட பிற ஏராளாமான கார்த்தேஜினியர்களிடமிருந்து வேறுபடுத்தி அறிவதற்காகக் குறிப்பிடுகின்றனர். இருந்தும் இந்தப் பழக்கமானது வரலாறு முழுவதும் காணப்படவில்லை. இது ஹன்னிபாலுக்கு அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது.
பின்புலமும், தொடக்க வாழ்வும்
ஒரு கார்த்தேஜினியத் தலைவரான கமில்கர் பார்காவின் மகன்களில் ஒருவர் ஹன்னிபால் ஆவார். இவரது தாயார் யார் என்று தெரியவில்லை. இவர் கார்த்தேஜ் நகரத்தில் பிறந்தார். இந்த நகரம் தற்கால வடக்கு துனீசியாவில் உள்ளது. போனீசியாவில் இருந்த தங்களது தாயகத்தில் இருந்து வந்த கானானியர்களால் காலனி மயமாக்கப்பட்ட பல நடு நிலக் கடல் பகுதிகளில் கார்த்தேஜும் ஒன்றாகும். தற்கால லெபனான் மற்றும் சிரியா நாடுகளின் நடு நிலக் கடல் கடற்கரைகளை ஒட்டிய ஒரு பகுதியாக போனீசியா அடையாளம் காணப்படுகிறது. இவருக்குப் பல சகோதரிகள் இருந்தனர். அவர்களின் பெயர்கள் தெரியவில்லை. கசுதுருபால் மற்றும் மாகோ என்ற பெயருடைய இரு சகோதரர்களும் இருந்தனர். இவரது மைத்துனர்கள் வெளிரிய கசுதுருபால் மற்றும் நுமிதிய மன்னனான நரவசு ஆகியோராவர். இவரது சகோதரிகளுக்குத் திருமணமான போது இவர் ஒரு குழந்தையாகவே இருந்தார். கூலிப் படைப் போரில் இவரது தந்தையின் போராட்டங்கள் மற்றும் ஐபீரிய மூவலந்தீவை பியூனிக்கியர் கைப்பற்றியது ஆகியவற்றின் போது இவருடைய தந்தைக்கு மிக நெருங்கிய ஆதரவாளர்களாக இவரது மைத்துனர்கள் திகழ்ந்தனர்.[11]
முதலாம் பியூனிக் போரில் கார்த்தேஜின் தோல்விக்குப் பிறகு தன்னுடைய குடும்பம் மற்றும் கார்த்தேஜின் எதிர் காலத்தை முன்னேற்ற கமில்கர் செயல்படத் தொடங்கினார். இதை மனதில் வைத்துக் கொண்டு மற்றும் காதேசுவால் ஆதரவளிக்கப்பட்ட கமில்கர் தற்போதைய எசுப்பானியா மற்றும் போர்த்துகலை உள்ளடக்கிய ஐபீரிய மூவலந்தீவின் பழங்குடியினங்களை அடிபணிய வைக்கத் தொடங்கினார். அந்நேரத்தில் இவரது இராணுவத்தைக் கொண்டு செல்ல ஒரு கடற்படையைக் கொண்டிருக்காத ஒரு வறிய நிலையில் கார்த்தேஜ் இருந்தது. மாறாக, கமில்கர் தன்னுடைய படைகளை நுமிதியாவைத் தாண்டி எர்குலசின் தூண்களை நோக்கி அணி வகுத்துச் செல்ல வேண்டியிருந்தது. பிறகு ஜிப்ரால்ட்டர் நீரிணையைக் கடக்க வேண்டியிருந்தது.[12]
பாலிபியசின் கூற்றுப் படி, ஹன்னிபால் பிற்காலத்தில் பின்வருவனவற்றைக் கூறினார். தன்னுடைய தந்தையை இவர் சந்தித்த போது, அவருடன் வருவதாக மன்றாடிய போது கமில்கர் ஹன்னிபாலைக் கூட்டிச் செல்ல ஒப்புக் கொண்டார். ஹன்னிபால் உயிருடன் இருக்கும் வரை என்றுமே உரோமின் நண்பனாக மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுக்குமாறு வேண்டினார். இவருக்கு மிகவும் இளம் வயதிலேயே (9 வயது) தன்னுடைய தந்தையிடம் இவர் அயல் நாட்டில் நடந்து கொண்டிருந்த ஒரு போருக்குத் தன்னைக் கூட்டிச் செல்லுமாறு மன்றாடியதாக ஒரு பதிவு கூட உள்ளது. அக்கதையில் ஹன்னிபாலின் தந்தை இவரைக் கூட்டிச் சென்றார். ஒரு பலியிடும் அறைக்குக் கொண்டு சென்றார். அந்த அறையில் எரிந்து கொண்டிருந்த நெருப்பின் மீது என்றுமே உரோமின் நண்பனாக இருக்க மாட்டேன் என்று ஹன்னிபாலை சத்தியம் செய்ய கமில்கர் கூறினார். பிற ஆதாரங்கள் ஹன்னிபால் தனது தந்தையிடம் கூறியதாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகின்றன, "எனது வயது எனக்கு அனுமதியளித்த உடனேயே... நெருப்பையும், எஃகையும் பயன்படுத்தி உரோமின் விதியை முடிப்பேன்".[13][14] பாரம்பரியப் படி ஹன்னிபாலின் சபதமானது எசுப்பானியாவின் வளன்சியான் மாநிலத்தின் ஒரு பகுதியாக தற்போது உள்ள பெனிசுகோலா என்ற பட்டணத்தில் எடுக்கப்பட்டது.[15]
இசுப்பானியாவை வெல்லும் தனது முயற்சியை ஹன்னிபாலின் தந்தை தொடர்ந்தார். யுத்தத்தில் இவரது தந்தை மூழ்கி இறந்த போது[16] ஹன்னிபாலின் மைத்துனர் வெளிரிய கசுதுருபால் இராணுவத்தின் தலைமைக்கு வந்தார். அப்போது 18 வயதாக இருந்த ஹன்னிபால் தனது மைத்துனருக்குக் கீழ் ஓர் அதிகாரியாகச் சேவையாற்றினார். ஐபீரியாவிலிருந்த கார்த்தேஜின் பகுதிகளை நிலைப்படுத்தும் ஒரு கொள்கையை கசுதுருபால் பின்பற்றினார். எசுப்பானியாவின் எப்ரோ ஆற்றுக்குத் தெற்கே உரோம் தனது நிலப்பரப்பை விரிவாக்கம் செய்யாத வரை கார்த்தேஜ் எப்ரோ ஆற்றுக்கு வடக்கேயுள்ள பகுதிக்கு நிலப் பரப்பை விரிவாக்கம் செய்யாது என்ற ஒப்பந்தத்தை உரோமுடன் இவர் கையொப்பம் கூட இட்டார்.[17] ஐபீரியாவின் பூர்வீகப் பழங்குடியினங்கள் மற்றும் வடக்கு ஆப்பிரிக்கக் கடற்கரைகளின் பூர்வீக மக்களான பெர்பெர்களுடன் தூதரக உறவு முறைகள் மூலமாக கார்த்தேஜின் சக்தியை நிலைப்படுத்தவும் கூட கசுதுருபால் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார்.[18]
பொ. ஊ. மு. 221இல் கசுதுருபாலின் அரசியல் கொலையைத் தொடர்ந்து தற்போது 26 வயதாகிய ஹன்னிபால் இராணுவத்தால் தலைமைத் தளபதியாக அறிவிக்கப்பட்டார். கார்த்தேஜினிய அரசாங்கத்தால் இவரது நியமிப்பானது உறுதி செய்யப்பட்டது. உரோமானிய அறிஞர் லிவி இந்த இளம் கார்த்தேஜினியனைப் பற்றிப் பின்வருமாறு விளக்குகிறார்: "இவர் அங்கு வந்தவுடனேயே பழைய வீரர்கள் இவரது தந்தை கமில்கர் தனது இளம் வயதில் அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்கப்பட்டது போல உணர்ந்தனர். அதே பிரகாசமான உருவம்; கண்களில் அதே நெருப்பு; அதே குறும்புத்தனமான முகபாவம் மற்றும் அம்சங்கள்; எதிரிகளைச் சந்திக்கவோ, சொற்படி நடப்பதற்கோ அல்லது ஆணையிடவோ ஒரே மனம் மற்றும் உத்வேகத்தை உடைய இவரை விட சிறந்த திறமைசாலி இல்லை[.]."[18]
கார்த்தேஜுடன் நெருக்கமாகக் கூட்டணியில் இருந்த ஒரு சக்தி வாய்ந்த எசுப்பானிய நகரமான கசுதுலோவில் இருந்து வந்த ஒரு பெண்ணை ஹன்னிபால் மணம் புரிந்து கொண்டார் என்பதையும் கூட லிவி பதிவிடுகிறார்.[18] உரோமானிய இதிகாசக் கவிஞரான சிலியசு இத்தாலிக்கசு இப்பெண்ணின் பெயரை இமில்சே என்று குறிப்பிடுகிறார்.[19] சிலியசி இமில்சேவுக்கு ஒரு கிரேக்கப் பூர்வீகத்தைப் பரிந்துரைக்கிறார். ஆனால், கில்பெர்ட் சார்லசு-பிக்கார்து ஒரு பியூனிக் பாரம்பரியத்திற்காக, செமித்திய வேர்ச் சொல்லான ம்-ல்-க் ('தலைவன்', 'மன்னன்') என்பதிலிருந்து சொற்பிறப்பியலை அடிப்படையாகக் கொண்டு வாதிடுகிறார்.[20] சிலியசு ஒரு மகன் இருப்பதையும் கூடப் பரிந்துரைக்கின்றார்.[21] லிவி, பாலிபியசு அல்லது அப்பியனால் இந்த மகன் இருப்பது உறுதிப்படுத்தப்படவில்லை. இம்மகனுக்கு ஹஸ்பர் அல்லது அஸ்பர்[22] என்ற பெயரிடப்பட்டு இருந்திருக்கலாம். எனினும், இது விவாதத்திற்கு உரியதாக உள்ளது.[23]
இவர் தளபதி பதவியைப் பெற்றதற்குப் பிறகு ஹன்னிபால் தன்னுடைய ஏற்கனவே இருந்த பகுதிகளை நிலை நிறுத்துவது மற்றும் எப்ரோவுக்குத் தெற்கே இருந்த எசுப்பானியாவை வெல்வதை முடிப்பது ஆகியவற்றுக்காக இரண்டு ஆண்டுகளைச் செலவழித்தார்.[24] தன் முதல் படையெடுப்பில் ஹன்னிபால் ஒல்கதேசு மக்களின் வலிமையான மையமான அலிதியாவைத் தாக்கி, புயெலெனப் புகுந்தார். அவர்கள் உடனடியாகச் சரணடைவதற்கு இது காரணமானது. தகுசு ஆற்றுக்கு நெருக்கமாகப் பியூனிக் அதிகாரத்தைக் கொண்டு வந்தார். பொ. ஊ. மு. 220இல் இவரது அடுத்த படையெடுப்பானது மேற்கே இருந்த வாக்கேயிக்கு எதிரானதாகும். எல்மாந்திசு மற்றும் அர்புகலா ஆகிய வாக்கேயியப் பகுதிகளுக்குள் இவர் புயலெனப் புகுந்தார். தாயகத்துக்குத் திரும்பி வரும் போது போரில் கிடைக்கப் பெற்ற பல பொருட்களுடன் இவர் வந்தார். கர்பேதனியால் தலைமை தாங்கப்பட்ட எசுப்பானியப் பழங்குடியினங்களின் ஒரு கூட்டமைப்பானது இவரைத் தாக்கியது. ஹன்னிபால் தன் முதல் முக்கியமான யுத்த கள வெற்றியைப் பெற்றார். தகுசு ஆற்று யுத்த களத்தில் தன்னுடைய உத்தி ரீதியிலான ஆற்றல்களை வெளிக் காட்டினார்.[25]
ஐபீரியாவில் ஹன்னிபாலின் வலிமை அதிகரித்து வருவதைக் கண்டு அச்சமடைந்த உரோம் எப்ரோ ஆற்றுக்குத் தெற்கில் ஒரு குறிப்பிடத்தக்க தொலைவில் அமைந்திருந்த சகுந்தம் நகரத்துடன் ஒரு கூட்டணியை ஏற்படுத்தியது. இந்நகரத்தைத் தன்னுடைய பாதுகாப்புப் பகுதியாகக் குறிப்பிட்டது. கசுதுருபாலுடன் கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தத்தை இது மீறியதாக மட்டும் கருதாமல், போரைத் தொடங்குவதற்கு மற்றொரு வழியாகவும் ஹன்னிபால் உணர்ந்தார். ஏனெனில், உரோம் மீது ஒரு தாக்குதலை நடத்த இவர் ஏற்கனவே திட்டமிட்டிருந்தார். எனவே இவர் சகுந்தம் நகரத்தை முற்றுகையிட்டார். எட்டு மாதங்களுக்குப் பிறகு நகரமானது வீழ்ந்தது.[26]
சகுந்தத்தில் கிடைக்கப்பட்ட பொருட்களை ஹன்னிபால் கார்த்தேஜுக்கு அனுப்பினார். அரசாங்கத்திடமிருந்து இவருக்குப் பரவலான ஆதரவை பெற்றுத் தந்த ஒரு சூச்சுமமான நகர்வு இதுவாகும். இரண்டாம் மகா ஹன்னோ மட்டுமே இவருக்கு எதிராக அங்கு பேசினார் என லிவி பதிவிடுகிறார்.[18] உரோமின் மூப்பவையானது வெளிப்படையாக இந்த ஒப்பந்தத்தை மீறிய செயலுக்கு எதிர் வினை ஆற்றியது. கார்த்தேஜிடமிருந்து வந்த ஆணைகளின் படியே சகுந்தத்தை ஹன்னிபால் அழித்தாரா எனக் கேட்பதற்காக கார்த்தேஜுக்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பியது. மீறப்பட்டதாகக் கூறப்படும் இந்த ஒப்பந்தத்தை இரு அரசாங்கங்களுமே உறுதிப்படுத்தியதாகச் சரியாகத் தெளிவில்லை என்ற சட்ட ரீதியான வாதங்களைக் கார்த்தேஜினிய மூப்பவையானது பதிலாகக் கூறியது.[27] உரோமானியத் தூதுக்குழுவின் தலைவரான குயிந்தசு பேபியசு மேக்சிமசு வெர்ருசோசுசு போர் மற்றும் அமைதியில் ஒன்றைத் தேர்ந்தெடுக்குமாறு கார்த்தேஜுக்குக் கூறினார். அங்கிருந்த அனைவரும் உரோமே அதைத் தேர்ந்தெடுக்கலாம் என்று கூறினார். பேபியசு போரைத் தேர்ந்தெடுத்தார்.[18]
இத்தாலியில் இரண்டாம் பியூனிக் போர் (218-204 பொ. ஊ. மு.)
இத்தாலிக்குத் தரை வழிப் பயணம்
இந்தப் படையெடுப்பானது உண்மையில் ஹன்னிபாலின் மைத்துனரான வெளிரிய கசுதுருபாலால் திட்டமிடப்பட்டிருந்தது. பொ. ஊ. மு. 229இல் ஐபீரியத் தீபகற்பத்தில் ஒரு கார்த்தேஜினியத் தளபதியாகக் கசுதுருபால் உருவாகியிருந்தார். பொ. ஊ. மு. 221 வரை எட்டு ஆண்டுகளுக்கு இப்பதவியை அவர் கொண்டிருந்தார். வடக்கு இத்தாலியில் கார்த்தேஜ் மற்றும் போ பள்ளத்தாக்கின் கெல்ட்டியருக்கு இடையிலான ஒரு கூட்டணி குறித்து உரோமானியர்கள் சீக்கிரமே அறிந்து கொண்டனர். போ பள்ளத்தாக்கிற்கு ஹன்னிபால் வந்த போது சுமார் 10,000 கெல்ட்டியப் பழங்குடியினத்தவர் இவருடைய இராணுவத்துடன் இணைந்து கொண்டனர்.[28]
இத்தாலியில் மேற்கொண்டு தெற்கே படையெடுக்க கெல்ட்டியர் படைகளைத் திரட்டிக் கொண்டிருந்தனர். கார்த்தேஜினியப் பின்புலத்துடன் படையெடுக்க முயன்றதாகத் தெரிகிறது. எனவே, உரோமானியர்கள் முன் கூட்டிய தாக்குதலாக பொ. ஊ. மு. 225இல் போ பகுதியின் மீது படையெடுத்தனர். பொ. ஊ. மு. 220 வாக்கில் உரோமானியர்கள் சிசால்பைன் கௌல் என்ற பெயரில் இப்பகுதியை இணைத்துக் கொண்டனர்.[29] பொ. ஊ. மு. 221இல் இதே நேரத்தின் போது கசுதுருபால் அரசியல் கொலை செய்யப்பட்டார். ஹன்னிபால் முன்னுக்குக் கொண்டு வரப்பட்டார். ஒரு கௌல்-கார்த்தேஜினியப் படையெடுப்பின் அச்சுறுத்தலைக் கையாண்டு விட்டதால் ஒரு பாதுகாப்பு ஏற்பட்டுவிட்டது என்ற ஒரு போலியான உணர்வில் உரோமானியர்கள் அமைதி கொண்டிருந்தனர். உண்மையான கார்த்தேஜினியத் தளபதி கொல்லப்பட்டுவிட்டதாக எண்ணிக் கொண்டிருந்தனர்.
பொ. ஊ. மு. 218ஆம் ஆண்டின் இளவேனில் காலத்தின் பிற்பகுதியில் ஹன்னிபால் எசுப்பானியாவின் கார்த்தேஜினாவில் (புது கார்த்தேஜ்) இருந்து புறப்பட்டார்.[30] பிரனீசு மலைத்தொடரின் அடிவாரத்திற்கு வடக்குப் பழங்குடியினங்களுடன் சண்டையிட்டவாறு தன் வழியே சென்றார். புத்திசாலித்தனமான மலைப்பகுதி உத்திகள் மற்றும் பிடிவாதமான சண்டையின் மூலம் பழங்குடியினங்களை அடிபணிய வைத்தார். புதிதாக வெல்லப்பட்ட பகுதியைக் காவல் காப்பதற்காக 20,000 துருப்புக்களை உடைய ஒரு பிரிவினரை விட்டுச் சென்றார். பிரனீசுவில் தங்களது தாயகத்தை விட்டு வரத் தயக்கம் காட்டிய 11,000 ஐபீரியத் துருப்புக்களை இவர் விடுதலை செய்தார். 40,000 காலாட்படையினர் மற்றும் 12,000 குதிரைப் படையினருடன் கௌலுக்குள் ஹன்னிபால் நுழைந்தார் என்று குறிப்பிடப்படுகிறது.[31]
தான் இன்னும் பிரனீசு மலைத் தொடர்கள், ஆல்ப்சு மற்றும் பல பெரிய ஆறுகளைக் கடக்க வேண்டிய தேவை இருந்தது என்று ஹன்னிபால் உணர்ந்தார்.[32] மேலும், கௌல் இனத்தவரிடமிருந்து வரும் எதிர்ப்பையும் இவர் சமாளிக்க வேண்டி இருந்தது. அவர்களின் நிலப்பரப்பு வழியாகவே இவர் பயணிக்க வேண்டியிருந்தது. பொ. ஊ. மு.218ஆம் ஆண்டில் இளவேனில் காலத்தில் தொடங்கி இவர் பிரனீசு மலைத்தொடரைக் கடந்தார். இவருடைய முன்னேற்றத்தைத் தடுக்க எந்த ஒரு நடவடிக்கையையும் உரோமானியர்கள் எடுப்பதற்கு முன்னதாகத் தனது வழியில் கௌல் இனத் தலைவர்களுடன் இணக்கமான செயல்பாட்டின் மூலம் கடந்தார். செப்தெம்பர் வாக்கில் ரோன் பகுதியை அடைய இவரால் முடிந்தது. ஹன்னிபாலின் இராணுவமானது 38,000 காலட் படையினர், 8,000 குதிரைப் படையினர் மற்றும் 38 யானைகளைக் கொண்டிருந்தது. கிட்டத் தட்ட இதில் ஒருவர் கூட ஆல்ப்சு மலையின் கடுமையான குளிர் சூழ்நிலைகளைத் தாக்குப்பிடித்துப் பிழைக்கவில்லை.[33]
இவருடைய பயணத்தைத் தடுக்க முயற்சித்த பூர்வீக மக்களைச் சுற்றி வளைத்து ஹன்னிபால் சென்றார். ரோன் பள்ளத்தாக்கு வரை தரை வழியாகப் பாதையை மாற்றிதன் மூலம் நடுநிலக்கடல் கடற்கரையிலிருந்து அணி வகுத்து ஓர் உரோமானியப் படையைத் தவிர்த்துச் சென்றார். அன்றிலிருந்து ஆல்ப்சு மலையை இவர் கடந்த துல்லியமான வழியானது அறிஞர்களின் விவாதத்திற்கு ஓர் ஆதாரமாக உள்ளது (ஹன்னிபாலின் படையெடுப்பு காலத்துக்கு நெருங்கிய, தற்போது எஞ்சியிருக்கும் பண்டைக் கால பாலிபியசின் நூலானது இவர் வந்த வழியானது ஏற்கனவே விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்ததாகக் குறிப்பிடுகிறது). திரோம் பள்ளத்தாக்கு வரையிலான ஓர் அணிவகுப்பு மற்றும் கோல் டி டே மாண்டிசெனவ்ரே தாண்டியுள்ள நவீன நெடுஞ்சாலையின் தெற்கே முதன்மையான மலைத்தொடரைக் கடந்த ஒரு கடப்பு அல்லது தற்போதைய கோல் டி மாண்ட் செனிசு அல்லது சிறிய செயின் பெர்னார்டு கணவாய்க்கு அருகில் இருந்த முதன்மை மலைத்தொடரைக் கடந்து இசேர் மற்றும் ஆர்க் பள்ளத்தாக்குகள் வரையிலான ஒரு தூர வடக்கு அணிவகுப்பு ஆகியவற்றில் ஒரு வழி என மிகத் தாக்கமுடைய நவீனக் கோட்பாடுகள் குறிப்பிடுகின்றன.[34]
சமீபத்திய நாணயவியல் ஆதாரங்களானவை ஹன்னிபாலின் இராணுவமானது மேட்டர்ஹார்ன் மலை பார்வையில் படும் படி இருந்த பகுதி வழியாகக் கடந்தன என்று பரிந்துரைக்கின்றன.[35] இசுடான்போர்டு பல்கலைக்கழகத்தின் புவித் தொல்லியலாளரான பேட்ரிக் ஹண்ட் ஹன்னிபால் கோல் டி கிளேப்பியர் மலைக் கணவாயைத் தேர்ந்தெடுத்தார் என்று வாதிடுகிறார். இவர் கடந்த வழியின் பண்டைக்கால விளக்கங்களை மிகத் துல்லியமாக கிளெப்பியர் பகுதியானது பூர்த்தி செய்வதாகக் குறிப்பிடுகிறார்: இத்தாலியின் ஓர் அகல் விரிவுப் பார்வை, ஆண்டு முழுவதும் அங்காங்கே இருக்கும் பனிப் பகுதிகள், மற்றும் ஒரு பெரிய முகாமிடும் மைதானம்.[36] பிற அறிஞர்கள் சந்தேகங்களைக் கொண்டுள்ளனர். பெடிட் மவுண்ட் செனிசு வழியாக ஓர் எளிதான வழியை ஹன்னிபால் தேர்ந்தெடுத்து இருக்கலாம் என்று பரிந்துரைக்கின்றனர். கார்த்தேஜினியத் தளபதியை வேண்டுமென்றே தவறான வழியில் ஹன்னிபாலின் கெல்ட்டிய வழிகாட்டிகள் கூட்டிச் சென்றனர் என்பதைப் பரிந்துரைப்பதன் மூலம் ஹண்ட் இதற்குப் பதில் அளிக்கிறார்.
மிகச் சமீபத்தில் டபுள்யூ. சி. மகனேய் என்ற வரலாற்றாளர் கோல் டி லா திராவெர்செட் மலைக் கணவாயானது பண்டைக் கால எழுத்தாளர்களின் பதிவுகளுடன் நெருக்கமாக ஒத்துப் போகிறது என்று வாதிடுகிறார்.[37] உயிரிய அடுக்கு புவித் தொல்லியல் தரவுகளானவை கோல் டி லா திராவெர்செட் மலைக் கணவாய்க்கான பரிந்துரைக்கு வலுவூட்டுகிறது. கணவாயின் மலை முகட்டுக்கு இரு பக்கங்களிலும் நீரோடைகளுக்கு அருகில் இருந்த இலையால் மக்கிய சகதிகளின் ஆய்வானது இந்தத் தரையானது "ஆயிரக்கணக்கான, அநேகமாக பத்தாயிரக்கணக்கான விலங்குகள் மற்றும் மனிதர்களால்" கடுமையாக ஆட்பட்டிருக்கிறது என்பதைக் காட்டியது. கழுதைகள் மற்றும் கோவேறு கழுதைகளின் செரிமான மண்டலத்துடன் தொடர்புடைய பாக்டீரியாவான குலோஸ்திரிதியாவின் தனித்துவமான நிலைகளின் தடையங்களை இம்மண்ணானது கொண்டிருந்தது.[38]
கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பானது நிகழ்காலத்திற்கு முன் 2168 அல்லது அண். பொ. ஊ. மு. 218ஆம் ஆண்டை ஹன்னிபாலின் அணி வகுப்பின் ஆண்டாகக் குறிப்பிடுகிறது. மகனேய் மற்றும் குழுவினர் இது மற்றும் பிற ஆதாரங்கள் 1954இல் கவின் டி பீரால் ஆதரவாக விவாதிக்கப்பட்ட "ஹன்னிபாலிய வழி" என்பது கோல் டி லா திராவெர்செட் என்பதற்கு வலிமையான ஆதரவு அளிப்பதாக முடிவு செய்தனர். யோவான் லாசன்பி மற்றும் சேக்கப் செயிபெர்ட் ஆகிய பிறருடன் சேர்த்து மூன்று விளக்கவுரையாளர்களில் டி பீரும் ஒருவர் ஆவார். ஆல்பைன் காலநிலையின் உயர் காணவாய்கள் அனைத்திற்கும் சென்ற மிக நம்பத்தக்கதாக இந்த வழியைக் குறிப்பிட்ட ஒரு பார்வையை இவர் முன் வைத்தார். பண்டைக் கால விளக்கங்களுடன் மிக நெருக்கமாக ஒத்துப் போகும் ஒரு வழியாகக் கோல் டி லா திராவெர்செட்டை டி பீர் மற்றும் செயிபெர்ட் ஆகிய இருவருமே தேர்ந்தெடுத்தனர்.[39]
ஆல்பைன் கணவாய்களிலேயே மிக உயரத்தில் இருந்த கோல் டி லா திராவெர்செட்டை ஹன்னிபால் கடந்தார் என பாலிபியசு எழுதியுள்ளார். மேல் கியில் பள்ளத்தாக்கு மற்றும் மேல் போ ஆற்றுக்கு இடைப்பட்ட மிக உயரமான கணவாய் இதுவாகும். மேலும், மிக தெற்கில் இருந்த கணவாயும் இதுவாகும். தன்னுடைய டீ ரே ருஸ்டிகா நூலில் வர்ரோ என்ற எழுத்தாளர் தொடர்புபடுத்துவதைப் போல மிகவும் தெற்கில் இது இருந்தது. மேற்கு ஆல்ப்ஸ் மலைகளில் மிக உயரமான இடத்திலும், மிகவும் தெற்கிலும் ஹன்னிபாலின் கணவாய் இருந்ததாக இவர் ஒப்புக் கொண்டுள்ளார். மகனேய் மற்றும் குழுவினர் கோல் டி லா திராவெர்செட்டுக்கு ஆதரவாக டி பீரால் பயன்படுத்தப்பட்ட காரணிகளை ஆதரிக்கின்றனர். இதில் "பண்டைக் கால இடங்களின் பெயர்களை நவீன பெயர்களுடன் ஒப்பிடுதல், முக்கிய ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்ட காலங்களைக் கூர்ந்து கவனித்தல் மற்றும் போ சமவெளிகளை தூரத்திலிருந்து கவனித்தல்" இவற்றுடன் "பெருமளவிலான கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு மற்றும் நுண்ணுயிரியியல் மற்றும் ஒட்டுண்ணி ஆதாரங்களைக்" கணவாயின் இரு பக்கங்களிலிருந்தும் பெறப்படும் வண்டல் சகதிகளில் இருந்து எடுத்தல் "ஹன்னிபாலின் படையெடுப்பு அந்த வழியாகச் சென்றது என்பதற்கு ஆதரவு அளிக்கும் ஆதாரங்களை எடுத்தல் உள்ளிட்டவை அடங்கும்.[40] ஹன்னிபால் கோல் டி லா திராவெர்செட் மீது ஏறிச் சென்றிருந்தால் போ பள்ளத்தாக்கானது உண்மையிலேயே இக்கணவாயின் உச்சியிலிருந்து கண்களுக்குப் புலப்படக் கூடியதாக இருந்திருக்கும். இது பாலிபியசின் குறிப்புகளில் இருக்கிறது.[41][42]
லிவியின் குறிப்புப் படி பெரும் கடினங்களுக்கு இடையில் இந்தப் பயணமானது முடிக்கப்பட்டது.[43] பாறைகள் விழுந்து பாதையை மறைத்த போது அப்பாறைகளை உடைப்பதற்காக அவற்றின் மீது நெருப்பைப் பற்ற வைத்து, பாறை நன்றாக சூடேறிய பிறகு திடீரென்று புளிப்புக் காடியை ஊற்றி அதை உடைத்தது போன்ற புத்திசாலித்தனமான செயல்களின் மூலம் ஹன்னிபால் தடைகளைக் கடந்து சென்றார்.[44] இத்தாலியில் 20,000 காலாட்படையினர், 4,000 குதிரைப்படையினர் மற்றும் வெகு சில யானைகளுடன் ஹன்னிபால் வந்தார் என்று பாலிபியசு குறிப்பிடுகிறார். விழுந்த பாறைகளை நெருப்பைக் கொண்டு உடைத்த நிகழ்வானது லிவியால் மட்டுமே குறிப்பிடப்படுகிறது. பாலிபியசு இது குறித்து அமைதி காக்கிறார். பாறை கரியானதற்கான எந்த ஓர் ஆதாரத்தையும் கோல் டி லா திராவெர்செட்டுக்குக் கீழ் அமைந்திருந்த மேற்கு ஆல்ப்ஸ் பகுதியில் இருந்த ஒரே இரு நிலைப் பாறை விழுந்ததும் எந்த ஓர் ஆதாரத்தையும் கொடுக்கவில்லை[45] (மகனேய் 2008). ரோன் பகுதியைக் கடந்ததற்குப் பிறகு ஹன்னிபாலின் தலைமையின் கீழிருந்த துருப்புகளின் எண்ணிக்கையைக் குறிப்பிடுவதில் பாலிபியசு சரியாக இருந்தார் என்றால் ஹன்னிபால் தனது படையில் கிட்டத்தட்ட பாதிப் பேரை இழந்திருக்க வேண்டும் என்பதை இது பரிந்துரைக்கிறது. இசுப்பானியாவில் இருந்து வெளியேறிய போது ஹன்னிபால் கொண்டிருந்த துருப்புகளின் எண்ணிக்கையின் நம்பகத் தன்மையை செர்கே லான்செல் போன்ற வரலாற்றாளர்கள் கேள்விக்குட்படுத்துகின்றனர்.[46] தொடக்கத்தில் இருந்தே இசுப்பானியாவிடம் இருந்து எந்த வித உதவியும் வராத நிலையில் தான் செயல்பட வேண்டும் என்பதை ஹன்னிபால் கணித்திருந்தார் என்றே தோன்றுகிறது.
தனது கிரேக்கப் பயிற்சி ஆசிரியர்களின் பயிற்றுவிப்பில் இருந்து ஹன்னிபாலின் இராணுவ விவகாரங்கள் குறித்த பார்வையானது ஒரு பகுதி அளவுக்கும், தன்னுடைய தந்தையுடன் சேர்ந்து போரிட்ட போது கிடைத்த அனுபவத்திலிருந்து ஒரு பகுதி அளவுக்கும் தருவிக்கப்பட்டதாககும். இவர் காலத்தில் எலனிய உலகத்தின் பெரும்பாலான பகுதி முழுவதும் இவர் அனுபவம் பெற்றிருந்தார். உரோமை நேரடியாகத் தாக்காமல் ஒரு வடக்குப் போர் முனையைத் திறந்து தீபகற்பத்தில் இருந்த கூட்டணி நகர அரசுகளை அடிபணிய வைத்ததன் மூலம் உரோமை வெல்லும் இவரது சிறந்த உத்திக்கு இவரது அகண்ட பார்வையானது காரணமாக அமைந்தது. இவரது தந்தை கார்த்தேஜினிய இராணுவத்திற்குத் தலைமை தாங்கிய போது முதலாம் பியூனிக் போரில் கார்த்தேஜின் தோல்விக்கு வழி வகுத்த வரலாற்று நிகழ்வுகளும் இத்தாலி மீதான படையெடுப்புக்கு ஆல்பைன் நில வழியில் பயணிக்க வேண்டும் என்ற திட்டத்தை ஹன்னிபால் இடுவதற்குக் காரணமானது. 60,000 முதல் 1,00,000 வரையிலான துருப்புக்களை இவர் ஒருங்கிணைத்தார். போர் யானைப் பிரிவுக்குப் பயிற்சி அளித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இச்செயல் இருந்தது. இவை அனைத்துமே செல்லும் வழியிலேயே உணவுகளைப் பெற வேண்டி இருந்தது. இத்தாலி மீதான ஆல்பைன் படையெடுப்பானது பொ. ஊ. மு. 218இல் நடு நிலக்கடல் உலகத்தை அதிர வைத்த ஓர் இராணுவ நடவடிக்கையாகும். இதன் பின் விளைவுகள் இரண்டு தசாப்தங்களுக்கும் மேல் நீடித்திருந்தன.[சான்று தேவை]
திரேபியா யுத்தம்
ஹன்னிபாலின் பேராபத்துக்குள்ளான அணி வகுப்பானது இவரை உரோமானிய நிலப்பரப்புக்குள் கொண்டு வந்தது. அயல் நாட்டு நிலத்தில் முதன்மையான படையைச் சண்டையிடும் எதிரியின் முயற்சிகளை விரக்தியடைய வைத்தது. போ பள்ளத்தாக்கின் கெளல்களுக்கு மத்தியில் இவரது திடீர்த் தோற்றமானது மேற்கொண்டு உரோமானியர்கள் கிளர்ச்சியைத் தடுக்க நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்னரே உரோமானியர்களுக்கு அவர்களது புதிய கூட்டணியிலிருந்து இந்தப் பழங்குடியினங்களைப் பிரிக்க இவரால் முடிந்தது. பப்ளியசு கார்னேலியசு சிபியோ ஹன்னிபாலை இடைமறிப்பதற்காக அனுப்பப்பட்ட உரோமானியப் படைக்குத் தலைமை தாங்கிய பேராளர் ஆவார். இவர் புகழ் பெற்ற உரோமானியத் தளபதி சிபியோ ஆப்பிரிக்கானசின் தந்தையும் கூட ஆவார்.[47]
உரோமானியர்கள் போரை ஐபீரியத் தீபகற்பத்தில் சண்டையிடத் தயாராகி இருந்ததால் ஆல்ப்சைக் கடக்கும் ஒரு முயற்சியை ஹன்னிபால் மேற்கொள்ளவதை அவர் எதிர்பார்க்கவில்லை. கெளலில் ஒரு சிறிய படைப் பிரிவு இன்னும் நிறுத்தப்பட்டு இருந்த போது ஹன்னிபாலை இடை மறிக்கும் ஒரு முயற்சியை சிபியோ நடத்தினார். சரியான முடிவு மற்றும் வேகமான இயக்கத்தின் மூலம் அவர் வெற்றியடைந்தார். கடல் வழியாகத் தனது இராணுவத்தை நேரத்திற்கு இத்தாலிக்கு இடம் மாற்றியதன் மூலம் ஹன்னிபாலைச் சந்திக்கச் சென்றார். போ பள்ளத்தாக்கின் வழியாக ஹன்னிபாலின் படைகளானவை நகர்ந்தன. திசினுசு யுத்தத்தில் இரு படைகளும் சண்டையிட்டன. லோம்பார்டி சமவெளியில் இருந்து வெளியேறும் நிலைக்கு உரோமானியர்களை ஹன்னிபால் தள்ளினார். இதற்குத் தன்னுடைய மேம்பட்ட குதிரைப் படையைப் பயன்படுத்தி இருந்தார்.[47] இந்த வெற்றியானது சிறியதாக இருந்தது. ஆனால், கௌல்கள் மற்றும் லிகுரியர்களை கார்த்தேஜினிய முயற்சியில் இணைய இது ஊக்குவித்தது. அவர்களது துருப்புகள் இவரது இராணுவத்தைச் சுமார் 40,000 வீரர்கள் என்ற நிலைக்கு வலிமைப்படுத்தியது. சிபியோ கடுமையாகக் காயமடைந்திருந்தார். தன்னுடைய வீழ்ந்த தந்தையை மீட்க யுத்த களத்திற்குத் திரும்பி குதிரையில் வந்த அவரது மகனின் வீரத்தால் மட்டுமே அவரது உயிர் காப்பாற்றப்பட்டது. திரேபியா வழியாக சிபியோ பின் வாங்கினார். பிளாசெந்தியாவில் முகாம் அமைத்தார். அவரது இராணுவம் பெரும்பாலும் சேதமடையாமல் இருந்தது.[47]
மற்றொரு உரோமானிய இராணுவமானது போ பள்ளத்தாக்குக்கு விரைவு படுத்தப்பட்டது. திசினுசுவில் அடைந்த தோல்வியின் செய்தி உரோமை அடைவதற்கு முன்னரே ஆட்சிப் பேரவையானது பேராளர் திபேரியசு செம்ப்ரோனியசு லாங்கசுவை சிசிலியிலிருந்து அவரது இராணுவத்தைத் திரும்பக் கொண்டு வந்து சிபியோவைச் சந்திக்குமாறும், ஹன்னிபாலை எதிர் கொள்ளுமாறும் கூறியது. தன்னுடைய திறமையான இராணுவ நகர்வுகளின் மூலம் ஹன்னிபால் அவரைத் தோற்கடிக்கும் நிலையில் இருந்தார். பிளாசெந்தியா மற்றும் ஆர்மினத்துக்கு இடையிலான நேரடிச் சாலையில் இவர் இருந்தார். இதன் வழியாகத் தான் செம்ப்ரோனியசு சிபியோவுக்கு வலுவூட்ட அணி வகுத்துச் செல்ல வேண்டும். பிறகு இவர் கிளாசுதிதியத்தைக் கைப்பற்றினார். தன்னுடைய வீரர்களுக்குப் பெரும் அளவிலான இராணுவப் பொருட்களை இங்கிருந்து பெற்றார். ஆனால், இந்த நன்மையானது இழப்புகள் இல்லாமலில்லை. ஹன்னிபாலின் கவனத்தைத் தவிர்த்த செம்ப்ரேனியசு ஹன்னிபாலின் பக்கவாட்டுப் படைகளைச் சுற்றி பிளாசெந்தியாவுக்கு அருகில் இருந்த திரேபியா ஆற்றுக்கு அருகிலிருந்த சிபியோவின் முகாமுக்குச் சென்று தன்னுடைய சக தளபதியுடன் இணைந்தார். அதே ஆண்டின் திசம்பர் மாதத்தில் திரேபியாவில் தன்னுடைய மிகச் சிறந்த இராணுவத் திறமையைக் காட்ட ஹன்னிபாலுக்கு அங்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. மேம்பட்ட உரோமானியக் காலாட்படையைக் களைப்படைய வைத்ததற்குப் பிறகு ஒரு திடீர்த் தாக்குதல் மற்றும் பக்கவாட்டுகளிலிருந்து பதுங்கித் தாக்கியது ஆகியவற்றின் மூலம் உரோமானிய இராணுவத்தை இவர் துண்டு துண்டாக்கினார். எனினும் இவரது போர் யானைகளில் பெரும்பாலானவை அல்லது அனைத்தும் காயங்கள் அல்லது அந்தக் குளிர்காலத்தில் குளிரால் இறந்தன. இதற்குப் பின் வந்த திரேசிமென் ஏரி மற்றும்/அல்லது கன்னே யுத்தங்களில் இவை பங்கெடுக்கவில்லை.[சான்று தேவை]
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 Plutarch, Life of Titus Flamininus 21.3–4. Plutarch adds that "when asked what his choices would be if he had beaten Scipio, he replied that he would be the best of them all". However, Plutarch gives another version in his Life of Pyrrhus, 8.2: "Pyrrhus, Scipio, then myself".
- ↑ Huss (1985), ப. 565.
- ↑ Brown, John Pairman. 2000. Israel and Hellas: Sacred institutions with Roman counterparts. pp. 126–128
- ↑ 4.0 4.1 Benz, Franz L. 1982. Personal Names in the Phoenician and Punic Inscriptions. pp. 313–314
- ↑ 5.0 5.1 Baier, Thomas. 2004. Studien zu Plautus' Poenulus. p. 174
- ↑ Friedrich, Johannes, Wolfgang Röllig, Maria Giulia Amadasi, and Werner R. Mayer. 1999. Phönizisch-Punische Grammatik. p. 53.
- ↑ Sullivan, Robert Joseph (1877), A Dictionary of the English Language, p. 489
- ↑ S. Lancel, Hannibal p. 6.
- ↑ Ameling, Walter Karthago: Studien zu Militär, Staat und Gesellschaft pp. 81–82.
- ↑ Sylloge Nummorum Graecorum, Great Britain, Volume IX, British Museum, Part 2: Spain, London, 2002, n° 102.
- ↑ Lancel, S. Hannibal p. 6.
- ↑ De Beer, Sir Gavin (1969). Hannibal: Challenging Rome's Supremacy p. 91.
- ↑ Dodge, Theodore Ayrault (1995). Hannibal: A History of the Art of War Among the Carthaginians and Romans Down to the Battle of Pydna, 168 BC. Da Capo Press.
- ↑ Reverse Spins Patton, the Second Coming of Hannibal.
- ↑ Hilowitz, Beverley (1974). A Horizon guide: great historic places of Europe. American Heritage Pub. Co., p. 119. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-028915-8
- ↑ "Hamilcar Barca". பார்க்கப்பட்ட நாள் 6 June 2011.
- ↑ De Beer, Sir Gavin (1969). Hannibal: Challenging Rome's Supremacy p. 94.
- ↑ 18.0 18.1 18.2 18.3 18.4 "The History of Rome: Vol III"., by Livy
- ↑ Silius Italicus, Punica, III, 97
- ↑ Picard, Gilbert Charles(1967), Hannibal p. 119
- ↑ Silius Italicus, Punica, III, 63–64
- ↑ Antichthon. Vol. 1–6. Sydney University Press. 1967.
- ↑ Pinder, North (1869). Selections from the less known Latin poets. Clarendon Press. p. 364.
- ↑ Dodge, Theodore Ayrault (2004). Hannibal: A History of the Art of War Among the Carthaginians and Romans Down to the Battle of Pydna, 168 B.C., with a Detailed Account of the Second Punic War. Da Capo Press. p. 143. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-306-81362-7.
- ↑ Hoyos, D. Hannibal's Dynasty: Power and Politics in the Western Mediterranean, 247–183 BC, pp. 89–91, 2003
- ↑ De Beer, Sir Gavin (1969). Hannibal: Challenging Rome's Supremacy pp. 112–113.
- ↑ De Beer, Sir Gavin (1969). Hannibal: Challenging Rome's Supremacy p. 113.
- ↑ Ellis, Peter Berresford (2003). A Brief History of the Celts (Revised Paperback ed.). London: Robinson. pp. 208. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84119-790-6.
- ↑ Fagan, Garret G. "The History of Ancient Rome". Lecture 13: "The Second Punic War". Teaching Company, "Great Courses" series.
- ↑ Lancel, Serge (1999). Hannibal. Wiley. p. 225. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-631-21848-7.
- ↑ Prevas, John (2009). Hannibal Crosses the Alps: The Invasion of Italy and the Punic Wars. Perseus Books Group. p. 86. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7867-3121-3.
- ↑ Mahaney, W. C. (2008). Hannibal's Odyssey: Environmental Background to the Alpine Invasion of Italia. Gorgias Press. p. 221. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59333-951-7.
- ↑ Lancel, Serge (1999). Hannibal. Wiley. p. 60. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-631-21848-7.
- ↑ Montgenèvre: Peter Connolly, Hannibal and the Enemies of Rome (1978); (extensive summary பரணிடப்பட்டது 23 பெப்பிரவரி 2014 at the வந்தவழி இயந்திரம்); Col de la Traversette: Gavin de Beer, Alps and Elephants and பிரான்சின் மூன்றாம் நெப்போலியன்; Mahaney 2008, "Hannibal's Odyssey; Environmental Background to the Alpine Invasion of Italia"; Mont Cenis: Denis Proctor, Hannibal's March in History. Other theories include the Col de Clapier (Serge Lancel, Hannibal (1995) and the Col du Petit Saint Bernard (Barthold Niebuhr).
- ↑ McMenamin, M. (2012). "Depiction of the Alps on Punic coins from Campania, Italy". Numismatics International Bulletin 41 (1–2): 30–33.
- ↑ Boser, Ulrich (2007). "Hiking with Hannibal". Archaeology 60 (1): 36–41.
- ↑ Mahaney, W.C., Allen, C.C.R., Pentlavalli, P., Dirszowsky, O., Tricart, P., Keiser, L., Somelar, P., Kelleher, B., Murphy, B., Costa, P.J.M., and Julig, P., 2014, "Polybius's 'previous landslide': proof that Hannibal's invasion route crossed the Col de la Traversette", Journal of Mediterranean Archaeology and Archaeometry, 14(2), 1–20.
- ↑ Mahaney, W. C.; Allen, C. C. R.; Pentlavalli, P.; Kulakova, A.; Young, J. M.; Dirszowsky, R. W.; West, A.; Kelleher, B. et al. (5 October 2017). "Biostratigraphic Evidence Relating to the Age-Old Question of Hannibal's Invasion of Italy, I: History and Geological Reconstruction". Archaeometry 59 (1): 164–178. doi:10.1111/arcm.12231. பன்னாட்டுத் தர தொடர் எண்:0003-813X.
- ↑ de Beer, S. G., 1974, Hannibal: The struggle for power in the Mediterranean, Book Club Associates, London.
- ↑ Mahaney, W. C.; Somelar, P.; West, A.; Dirszowsky, R. W.; Allen, C. C. R.; Remmel, T. K.; Tricart, P. (5 October 2019). "Reconnaissance of the Hannibalic Route in the Upper Po Valley, Italy: Correlation with Biostratigraphic Historical Archaeological Evidence in the Upper Guil Valley, France". Archaeometry 61 (1): 242–258. doi:10.1111/arcm.12405. https://onlinelibrary.wiley.com/doi/abs/10.1111/arcm.12405. பார்த்த நாள்: 5 October 2020.
- ↑ Polybius, History III:54
- ↑ de Beer, S. G., 1969, Hannibal: Challenging Rome's supremacy, Viking, New York, pp. 163–180 வார்ப்புரு:ISBN?
- ↑ Livy History of Rome book 21, 36
- ↑ Livy History of Rome, Book 21 section 37
- ↑ Mahaney, W.C., et al., 2009. "The Traversette rockfall: geomorphological reconstruction and importance in interpreting classical history." Archaeometry, v. 52, no. 1, pp. 156–172.
- ↑ S. Lancel, Hannibal (1995; English translation 1999), p. 60.
- ↑ 47.0 47.1 47.2 Dodge, Theodore. Hannibal. Cambridge Massachusetts: Da Capo Press, 1891; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-306-81362-9