ஆயிரத்தொரு இரவுகள்
ஆயிரத்தொரு இரவுகள் (One Thousand and One Nights அரபி: كتاب ألف ليلة وليلة) என்பது மையக்கிழக்கு மற்றும் தெற்காசியாவை சேர்ந்த எழுத்தாளர்களினதும், மொழிபெயர்ப்பாளர்களினதும் கதைகளைத் தொகுத்து ஆக்கப்பட்ட ஒரு நூலாகும். இந்நூலிலுள்ள கதைகளின் மூலங்கள் பண்டைய அரேபியா, யேமன், பண்டைக்கால இந்திய இலக்கியங்கள்[1], பாரசீக இலக்கியங்கள், பழங்கால எகிப்திய இலக்கியங்கள், மெசொப்பொத்தேமியத் தொன்மங்கள், பண்டைச் சிரியா, சின்ன ஆசியா, கலீபாக்கள் காலத்து மத்தியகால அராபிய நாட்டார் கதைகள் என்பவற்றிலிருந்து எடுக்கப்பட்டவை. இவை இசுலாமிய பொற்கால நேரத்தில் அரபு மொழியில் தொகுக்கப்பட்டன. இந்நூலின் எல்லாப் பதிப்புக்களிலும் உள்ள பொதுவான அம்சம், அரசர் சாரியார் மற்றும் அவர் மனைவி செகர்சதாவினதுமான முதன்மைக் கதையாகும். ஏனைய கதைகள் இம் முதன்மைக் கதையில் இருந்தே நகர்கின்றன. சில கதைகள் தனிக் கதைகளாகவும் வேறு சில கதைகள் பிற கதைகளில் கதைக்குள் கதையாகவும் அமைக்கப்பட்டுள்ளன. சில பதிப்புக்கள் 1001 இரவுகளை உள்ளடக்கியிருந்தாலும் வேறு சில பதிப்புக்களில் சில நூறு இரவுகள் மட்டுமே காணப்படுகின்றன.
இக்கதைகள் முதன் முதலாக 1704ல் இரவுகள் என்ற பெயரில் பிரெஞ்சு மொழியிலும், பின்னர் 1706ல் அரேபிய இரவுகள் என ஆங்கிலத்திலும் மொழிபெயற்கப்பட்டன. தொடர்ந்து பிற ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டன.
இந்நூலிலுள்ள கதைகளுள் பெரிதும் அறியப்பட்டவை அலாவுதீனும் அற்புத விளக்கும், அலிபாபாவும் நாற்பது திருடர்களும், சிந்துபாத் ஆகியவையாகும். இக்கதைகள் உண்மையான அரேபிய நாட்டார் கதைகளாக இருந்திருக்கக் கூடியன ஆயினும், இவை ஆயிரத்தொரு இரவுகள் கதைத்தொகுதியின் பகுதிகள் அல்ல. ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டபோது இவை இடைச் செருகல் செய்யப்பட்டன[2].
கதைச் சுருக்கம்
முதன்மைக் கதை பாரசீக அரசனையும் அவன் புதிய மனைவியையும் பற்றியது. அரசன் சாரியார், தனது முதல் மனைவி தனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்ததை அறிந்து அவளுக்கு மரணதண்டனை விதிக்கிறான். பின்னர் எல்லாப் பெண்களுமே நன்றிகெட்டவர்கள் என அறிவிக்கிறான். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அடுத்தடுத்துப் பல கன்னிகளை மணம் செய்து அடுத்த நாள் காலையில் கொன்று விடுவதை வழமையாகக் கொண்டான். நாளடைவில் அரசன் மணம் செய்வதற்குப் பெண்கள் இல்லாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், அரசனுக்குப் பெண்தேடும் பொறுப்பைக் கொண்டிருந்த அமைச்சனின் மகள் தான் அரசனை மணம் செய்வதாகக் கூறினாள். தயக்கத்துடன் ஒப்புக்கொண்ட அமைச்சன் தனது மகளை அரசனுக்கு மணம் முடித்து வைத்தான். மணநாள் இரவில் செகர்சதா என்னும் அப்பெண் அரசனுக்குக் கதை சொல்லத் தொடங்கினாள். ஆனால் அக்கதையை முடிக்கவில்லை. அக்கதையின் முடிவை அறிவதற்காக அரசன் அவளைக் கொல்லாமல் வைத்திருக்க வேண்டியதாயிற்று. அடுத்த நாள் இரவும் முதல் கதையை முடித்தபின் இன்னொரு கதையைத் தொடங்கி இடையில் நிறுத்திவிட்டாள். இவ்வாறு 1001 இரவுகள் சொல்லப்பட்ட கதைகளே இந் நூலில் காணும் கதைகளாகும்.
இதிலுள்ள கதைகள் பல்வேறு விதமானவை. இவை வரலாற்றுக் கதைகள், மிகுபுனைவு கதைகள், காதல் கதைகள், துன்பியல் கதைகள், நகைச்சுவைக் கதைகள், கவிதைகள் எனப் பலவாறானவையாக உள்ளன. ஏராளமான கதைகள் கற்பனை மனிதர்கள், இடங்கள் போன்றவற்றை உள்ளடக்கியிருப்பதோடு, இடையிடையே உண்மையான மனிதர்கள், இடங்களைப் பற்றியவையாகவும் இருக்கின்றன.
வரலாறு
மூலம்
ஆயிரத்தொரு இரவுகள், பல்வேரு கால கட்டத்தை சேர்ந்த பல காலாச்சார பிண்ணனியில் அமைந்த கதைகளின் தொகுப்பு ஆகும். எனவே இதன் மூலத்தை அறிவது இயலாததாக உள்ளது. இருப்பினும் பாரசீக மற்றும் இந்திய நாட்டார் கதைகளே இவற்றின் முக்கிய மூலமாக இருக்கக் கூடும் என்பது பெரும்பான்மையோரின் கருத்து. இவை எட்டாம் நூற்றான்டில், அலிஃப் லைலா (ஆயிரம் இரவுகள்) என்ற பெயரில் அரபு மொழியில் முதன் முதலாக தொகுக்கப்பட்டன. அடிப்படையில் இந்த தொகுப்பில் இருந்த கதைகள் மிகவும் சிறியதாக இருந்தன. ஒன்பது மற்றும் பத்தாம் நூற்றான்டுகளில் இவை விரிவுபடுத்தப்பட்டதோடு, பல புதிய கதைகளும் இணைக்கப்பட்டன. அப்பாசியக் கலீபாவான ஆருன் அல் ரசீத் மற்றும் அவரது அரசவை சார்ந்த கதைகள் இக்காலகட்டத்தில் இணைக்கப்பட்டவையே. தொடர்ந்து பலரால் தொகுக்கப்பட்ட இதில், எகிப்து மற்றும் சிரியாவை பல சேர்ந்த கதைகள் பதிமூன்றாம் நூற்றான்டுகளில் சேர்க்கப்பட்டன. கலவி, மாயம், ஏழ்மை போன்றவற்றை இந்த கதைகள் பேசின.
இந்திய தாக்கம்
இந்திய இலக்கியங்களின் தாக்கம் ஆயிரத்தொரு இரவுகளில் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. குறிப்பாக விலங்குகளின் கதைகளில் இந்திய நீதிக்கதைகளின் தாக்கம் மிகவும் அதிகம். பண்டைய சமசுகிருத நூல்களான பஞ்ச தந்திரக் கதைகள், பைதல் பச்சீசு (பைதலின் கதைகள் இருபத்தி ஐந்து), புத்தரின் பல பிறவிகளை விளக்கும் யடக்கா கதைகள் ஆகியவற்றில் உள்ள பல கதைகளின் மூலங்கள், இதன் கதைகளுடன் பெருமளவில் ஒத்துப்போகின்றன[3]. குறிப்பாக யடக்கா கதைகளில் வரும் எருமையும் கழுதையும் கதையும், ஆயிரத்தொரு இரவுகளில் வரும் வணிகனும் மனைவியும் கதையும் ஒத்த கருத்துடைய ஒரே கதைகளே[4].
பாரசீக தாக்கம்
ஆயிரத்தொரு இரவுகளின் முதன்மைக் கதையான சாரியார் மற்றும் அவரின் மனைவி செகர்சதாவின் கதை, பாரசீக இலக்கியத்தில் இருந்து எடுக்கப்பட்டது. குறிப்பாக சச்சானிய பேரரசின் காலத்தில் எழுதப்பட்ட யசர் அப்சான் (ஆயிரம் கதைகள்) எனும் நூல் இதே கதையமைப்பை கொன்டது. சாரியர் முதல் மனைவியின் துரோகம், அரசனின் பெண்கள் மீதான வெறுப்பு, தினம் ஒரு பெண்னை மணந்து மறுநாள் அவளை கொல்வது, மந்திரி மகளின் புத்திசாலித்தனம், அரசனுக்கு தினம் ஒரு கதை சொல்வது, அதை அன்றே முடிக்காமல் தொடரவிடுவது என ஆயிரத்தொரு இரவுகளின் முதன்மைக் கதையில் வரும் அனைத்தும் யசர் அப்சானில் இருந்து எடுக்கப்பட்டவையே. முதன்மைக் கதை மற்றுமின்றி வேறு பல கிளை கதைகளும் இதில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. இதை பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த இப்னு அல் நதீம் மற்றும் அல் மசூதி ஆகிய அரேபிய வரலாற்றாளர்கள் பதிவு செய்துள்ளார்கள். இருப்பினும் யசர் அப்சானின் மூலப் பிரதிகள் இன்று வரை கிடைக்கப்பெறாததால் இந்த கருத்தை ஏற்பதில் சிக்கல் நீடிக்கின்றது.
மொழிபெயர்ப்பு
ஆயிரத்தொரு இரவுகள் நூலின் முதல் ஐரோப்பிய மொழிபெயர்ப்பு பிரெஞ்ச் மொழியில் வெளியிடப்பட்டது. அந்தோனி கல்லேன்டு என்பவரால் Les Mille et une nuits, contes arabes traduits en français (ஆயிரத்தொரு இரவுகள்-அராபிய கதைகள் பிரெஞ்ச்சுக்கு மொழிமாற்றப்பட்டது) என்ற பெயரில், மொத்தம் 12 தொகுதிகளாக 1704ல் இருந்து 1717 வரை இது வெளியிடப்பட்டது. இதில் அராபிய மூல நூலில் உள்ள கதைகளுடன் அலாவுதீனும் அற்புதவிளக்கும், அலிபாபாவும் நாற்பது திருடர்களும் ஆகிய கதைகளும் சேர்க்கப்பட்டிருன்தன. இவ்விறு கதைகளை, அலெப்போ நகரைச் சேர்ந்த ஒரு கிருத்தவ பாதிரியார் தனக்கு சொல்லியதாக கல்லேன்டு பின்னர் அறிவித்தார். இவரின் இந்த மொழிபெயர்ப்பு ஐரோப்பாவில் மிகுந்த வரவேற்பை பெற்றதை அடுத்து தொடர்ந்த பதிப்புகள் அவரின் பெயரிலே வெளியிடப்பட்டன.
தொடர்ந்து ஆங்கிலம், போலியம் போன்ற மொழிகளிலும் இது வெளியிடப்பட்டு வெற்றி பெற்றது. இதில் சில ஆங்கில மொழிபெயர்ப்புகள், அதன் பாலியல் வர்னனைகளுக்காக தனிப்பட்ட முறையில் அச்சடிக்கப்பட்டு, குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் விற்கப்பட்டது[5]. ஆயிரத்தொரு இரவுகள் நூலின் முதல் அராபிய பதிப்பு, 1814ம் ஆண்டு பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. கொல்கத்தா நகரில் வெளியிடப்பட்ட இந்த பதிப்பை சேக் அகமது பின் முகம்மது என்பவர் தொகுத்திருந்தார்[6].
இலக்கிய முக்கியத்துவம்
ஆயிரத்தொரு இரவுகள், அராபிய இலக்கியங்களில் மிகவும் முக்கியமானது ஒன்று[7]. கதைக்குள் கதை எனும் இதன் பாணியானது பண்டைய இந்திய மற்றும் பாரசீக இலக்கியங்களில் ஏற்கனவே இருந்த ஒன்றே என்ற போதும், ஆயிரத்தொரு இரவுகள் நூலுக்கு பிறகே ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக தொடங்கியது. இதை தொடர்ந்து பல புதினங்கள் இதே நடையில் மேற்குலகில் எழுதப்பட்டன. குறிப்பாக அலாவுதீன், சிந்துபாத், அலிபாபா போன்ற கதை மாந்தர்களும் ஜின்கள், பகுமுத் மீன், பறக்கும் கம்பளம், மந்திர விளக்கு போன்ற தொன்மங்களும் பிற்காலத்திய மிகுபுனைவு நூல்களில் முக்கிய இடத்தைப் பிடித்தன. ஆங்கில இலக்கியத்திலும் ஆயிரத்தொரு இரவுகள் மிகுந்த வரவேற்பை பெற்றது. முக்கியமாக சாமுவேல் டெய்லர் கோல்ரிட்சு, தாமசு தி குயின்சி, வில்லியம் வேர்ட்வொர்த், ஆல்பிரட் டென்னிசன், சார்லசு டிக்கின்சு ஆகியோர் இதன் முக்கிய இரசிகர்களாக இருந்தனர்[8][9].
1982ல் பன்னாட்டு விண்வெளி ஆய்வு ஒன்றியம் சனியின் துணைக் கோள்களுக்கு ஆயிரத்தொரு இரவுகளின் கதை மாந்தர்கள் மற்றும் இடங்களின் பெயர்களை வைக்கத் திட்டமிட்டு, தொடக்கமாக என்சலடசு கோளுக்கு அந்த பெயரிட்டது[10].
பிற ஊடகங்கள்
ஆயிரத்தொரு இரவுகளை அடிப்படையாக வைத்து பல திரைப்படங்கள், சித்திரக் கதைகள், நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் வெளி வந்துள்ளன. இவற்றில் முதன்மையானது 1921ல் வெளிவந்த Der müde Tod (பொறுமையிழந்த மரணம்) எனும் திரைப்படம் ஆகும். இடாய்ச்சு மற்றும் ஆங்கில மொழியில் இது வெளியானது. இதைத் தொடர்ந்து 1924இல் தி தீஃப் ஆப் பாக்தாத் (பாக்தாத் திருடன்) எனும் திரைப்படம் ஆலிவுட்டில் வெளியானது. இதன் வெற்றியை அடுத்து, பல திரைப்படங்கள் ஆயிரத்தொரு இரவுகளையோ அல்லது அதன் கதை மாந்தர்களையோ அடிப்படையாக கொண்டு பல மொழிகளிலும் எடுக்கப்பட்டன. 1992ல் வால்ட் டிசினி நிறுவனம் வெளியிட்ட அலாவுதீன் எனும் இயங்குபடம் பெரும் வெற்றியடைந்தது.
தமிழ் நாட்டை பொருத்தவரை ஆயிரத்தொரு இரவுகளை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த முதல் திரைப்படம் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் ஆகும். 1941இல் வெளிவந்த இந்தப் படத்தில் என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் ஆகியோர் நடித்திருந்தனர். தொடர்ந்து அதே பெயரில் 1956இல் மற்றொரு திரைப்படம் எடுக்கப்பட்டது. எம்.ஜி. இராமச்சந்திரன் மற்றும் பானுமதி ஆகியோர் நடிப்பில் இது வெளிவந்தது. அதே போல 1957ல் அலாவுதீனும் அற்புத விளக்கும் எனும் திரைப்படம் ஏ. நாகேஸ்வரராவ் மற்றும் டி. எஸ். பாலையா நடிப்பில் வெளிவந்தது. பின்னர் அதே பெயரில் மற்றுமொரு படம் கமல் ஹாசன், ரஜினிகாந்த், நடிப்பில் 1979இல் வெளிவந்தது. இந்தத் திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் வெளியிடப்பட்டதோடல்லாமல், பின்னர் தெலுங்கு மற்றும் இந்திக்கும் மொழிபெயர்க்கப்பட்டது. ஆயிரத்தொரு இரவுகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட முதல் இந்தித் திரைப்படம் சிந்துபாத் அலிபாபா அவுர் அலாவுதீன் (சிந்துபாத் அலிபாபா மற்றும் அலாவுதீன்) ஆகும். 1965இல் இந்தத் திரைப்படம் வெளிவந்தது[11].
1993ல் சாகர் பிலிம்சு நிறுவனத்தினரால் தயாரிக்கப்பட்ட அலிப் லைலா (ஆயிரம் இரவுகள்) எனும் தொடர், டிடி நேசனல் (தூதர்சன்) தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து எசு.ஏ.பி (SAB TV), ஏ.ஆர்.ஒய் (ARY Digital - பாக்கிசுத்தான்), பி டிவி (BTV - வங்காளதேசம்), ஈ டிவி (ETV - வங்காளதேசம்) ஆகிய தொலைக்காட்சி நிலையங்களிலும் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது. மேலும் தினத்தந்தி நாளிதழில் 1960 முதல் கன்னித்தீவு எனும் சித்திரத் தொடர் வெளிவந்தது. இதுவும் ஆயிரத்தொரு இரவுகளை அடிப்படையாக கொண்ட ஒரு தொடரே ஆகும்.
இதையும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ Marzolph (2007), "Arabian Nights", Encyclopaedia of Islam (Leiden: Brill) I.
- ↑ John Payne, Alaeddin and the Enchanted Lamp and Other Stories, (London 1901) gives details of Galland's encounter with 'Hanna' in 1709 and of the discovery in the Bibliothèque Nationale, Paris of two Arabic manuscripts containing Aladdin and two more of the added tales Text of "Alaeddin and the enchanted lamp"
- ↑ Burton, Richard F. (2002). Vikram and the Vampire Or Tales of Hindu Devilry pg xi. Adamant Media Corporation
- ↑ Irwin, Robert (2003), The Arabian Nights: A Companion Tauris Parke Paperbacks பக். 65, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-86064-983-1
- ↑ Marzolph, Ulrich and Richard van Leeuwen. 2004. The Arabian nights encyclopedia, Volume 1. P.506-508
- ↑ Arabian Nights-muslimphilosophy.com
- ↑ Irwin, Robert (2003), The Arabian Nights: A Companion, Tauris Parke Palang-faacks, p. 290, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-86064-983-1
- ↑ Wordsworth in Book Five of The Prelude; Tennyson in his poem "Recollections of the Arabian Nights". (Irwin, pp.266-69)
- ↑ Irwin, Robert (2003), The Arabian Nights: A Companion Tauris Parke Paperbacks பக். 270, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-86064-983-1
- ↑ http://www.iau.org/static/publications/IB104.pdf
- ↑ Sinbad Alibaba Aur Aladin (1965) Part 1 - memsaabstory.com
வெளி இணைப்புகள்
- The Thousand Nights and a Night in several classic translations, including the Sir Richard Francis Burton unexpurgated translation, and John Payne translation, with additional material.
- Galland's French translation (an edition from 1822)
- The Journal of The 1001 Nights A comprehensive online resource for old, new and developing news, scholarship and info on The 1001 (aka The Arabian) Nights and its many manifestations.
- Interview with Claudia Ott: A New Chapter in the History of Arab Literature[தொடர்பிழந்த இணைப்பு]
- Arabian Nights Six full-color plates of illustrations from the 1001 Nights which are in the public domain
- 1001 Verses பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் Readings of short poems from The Thousand Nights and One Night (Mathers version)